Thursday, January 20, 2011

பகுத்தறிவு

 சிதம்பரபத்தினி

 பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து இராமநாதன் விடுதியை நோக்கிச் சென்றால் சற்றுத் தூரத்திற்கப்பால், ஒரு வளைவு – வாழ்க்கையில் நிதானமாக – விழித்து நடவுங்கள் - இல்லையேல் வழுக்கி விழவேண்டி நேரிடும் என்று போவோரையும் வருவோரையும் எச்சரிப்பது போன்ற அமைந்த ஒரு வளைவு – ஒரு தெளிவு – ஒரு பள்ளம் அதன் வலப்புறத்தே நோக்கின் கண்கவர் கவின்பூங்கா. வாழ்க்கையே ஒரு ஓட்டப்பந்தயந்தான் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டே சலசலக்கும் சிற்றோடை. ஏழில்மிகு மலர்கள் பூத்துக்குலுங்கும் பூச்செடிகள், இனிய நறுமணம், இத்தனை அலங்காரம் செய்தும் எங்களின் இயற்கை அழகிற்கு ஈடாவீர்களா? என்று பெண்களை எள்ளி நகையாடுவது போன்றமைந்த வண்ண மிகு குறோட்டன்கள்.

 நடுவில் -

 ஒரு சுனை – சிறிய வட்டமான சுனை இத்தகைய சூழ்நிலையிலும் துறவிகள் வாழமுடியும் என்பதை எடுத்துக் கூறுவன போன்ற நிமிர்ந்த – நேர்கொண்ட பார்வையையுடைய நீருடன் ஒட்டியும் ஒட்டாமலிருக்கின்ற தாமரை இலைகள், கண் விழித்த கமலங்கள், இவ்வளவும் நிறைந்த அந்தப் பூங்காவிலே – தம்மை மறந்து, உலகையும் மறந்து, இன்பப் போதையில் மூழ்கி மௌன பரிபாiஷயில் சொல்லுக்கடங்காத ஆயிரம் வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருந்தனர் காதலர் இருவர்.

 அவர்கள் யார் என்று அறிய வேண்டாமா? பூரண பருவ வளர்ச்சியடைந்த காளையொருவன் மதுவுண்ட வண்டுபோல் இன்பப் போதையில் கிறங்கிக் கொண்டு நிற்பது போன்று மதர்த்து வளர்ந்து நின்றது ஒரு மரம். அதுதான் அந்தக் காதலன். ஆதவனின் ஒளிக்கிரணங்கள் பட்டு ஒளிவீசிய அதன் மஞ்சள் வர்ணமலர்கள் நெருங்கிவரும் தன் காதலியை அரவணைக்கும் ஆவலுடன் புன்னகை செய்து வரவேற்பது போன்று பிரகாசித்துக் கொண்டிருந்தன. காதலனை மகிழ்விக்கத் தலையில் பூச்சூடி ஒல்லி ஒசிந்து ஓயிலாகத் தவழ்ந்து வந்து மெல்ல அவனை அம்மரத்தைத் தழுவிக்கொண்டாள். அந்த நங்கை – அந்தக்கொடி – அதுதான் அந்தக்காதலி பெண்களிடத்து இயல்பாகவேயுள்ள நாணத்தை வெளிப்படுத்துவது போன்று அதனிடத்தே மலர்ந்த மலர்கள் குங்குமச் சிரிப்பாகத் திகழ்ந்தன. திடீரெனக் காற்று வேகமாக வீசியது. பயந்த கொடிமரத்தை இறுகத் தழுவிக்கொண்டது. எங்கிருந்தோ 'கல கல' என்ற சிரிப்பொலி தங்களைப் பார்த்துத்தான் நகைக்கிறார்களோ என்று எண்ணி நாணமடைந்த கொடி மரத்தைவிட்டு மெல்ல விலகியது. தன் காதலியை மிக நீணட நேரம் அணைத்திருக்க முடியவில்லையே என்று வருந்திய மரம் சிரித்தவர்களை அறிவதற்காகப் பார்வையைச் சுழற்றியது.

 அங்கே கல்லாசனம் ஒன்றில் - காதலர் இருவர் ஒருவரையொருவர் அணைத்தபடி காதலின்பத்தில் மெய்மறந்திருந்தனர். மரம் மெல்லக் கொடியைத் தொட்டு 'அங்கே பார்' என்று அவர்களைக் காட்டியது. ஒரு கணந்தான், கொடி உடனேயே பார்வையைத் திருப்பிக் கொண்டது.

 'ஏன் பார்வையைத் திருப்பிவிட்டாய்?'

 'போங்கள் அவர்களைப் பார்க்க எனக்கென்னமோ வெட்கமாயிருக்கிறது'

 'வெட்கமா? ஏன்?'

 'இப்படி வெட்டவெளியில்.......'

 'அதெல்லாம் இங்கு சர்வசாதாரணந்தான். உனக்குத்தான் இந்த மறைவில் கூட என்னைத்தழுவ நாணமாயிருக்கிறது'

 'அப்படி இடமென்றால் நான் உங்கள் கிட்டவே வரமாட்டேன்'

 'பின்னே எங்கே போய்விடுவாயாம்' என்று கூறிக்கொண்டே கொடியை மெல்லப் பற்றியது மரம்.

 'சீ சும்மா விடுங்கள் யாரும் பார்க்கப்போகிறார்கள்'

 'அதிருக்கட்டும். உங்களை ஒன்று கேட்கலாமா?'

 'என்ன கேளேன்'

 'இவர்களைப்போல் நாமும் இன்பமாயிருக்க முடியுமா?'

 'அடி பைத்தியமே! இவர்கள் மாலையில் மட்டுந்தான் ஒன்றாகச் சேர்ந்திருந்து மகிழமுடியும். மற்றநேரம் பிரிந்து விடுவார்கள். நாம் இருவரும் ஒன்றாகவே இருந்து எந்நேரமும் மகிழலாமே. நீ மட்டும் மனசுவைச்சால்.......'

 'அப்படியா' என்று மகிழ்ந்து கூவிய கொடி திரும்பவும் காற்று வேகமாக வீசவே மரத்தை அன்புடன் அணைத்துக் கொண்டது.

 ஒரு நாள்.

 என்றுமில்லாத திருநாளாக அப்பூங்காவிலே விசும்பல் ஒலி கேட்டது. அதிசயித்தகொடி காதலர் இருந்த புறம் நோக்கிற்று. அங்கே, அந்தக் காதலி கண்ணீர்விட்டுக் கொண்டிருந்தாள். காதலன் அவளைத் தேற்றிக் கொண்டிருந்தான். வியப்படைந்த கொடி மரத்தைக் கேட்டது.

 'அவள் சென்ற வருடந்தான் இங்கு படிக்க வந்தாள். அவனுக்கோ இன்றுடன் படிப்பு முடிந்துவிட்டது. அவன் அவளை விட்டுப்பிரியப் போகின்றான். காதலனைப் பிரியப் போகின்றேனே என்றுதான் அவள் அழுகிறாள்.'

 'ஐயோ அப்படியானால் நீங்களும் என்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிடுவீர்களா?' சிணுங்கியபடியே கோபமும் துன்பமும் பொங்கிவரக் கொடி எட்டப்போய் நின்றது. கொடியை மெல்ல அணைத்த மரம் 'என் கண்ணே! நான் உன்னை விட்டுப்பிரிவேனோ? அன்று நான் சொல்லியதை நீ அதற்குள் மறந்துவிட்டாயா? அவர்கள் இருவரும் எங்கோ ஒரு இடத்திலிருந்து இங்கு படிக்க வந்தார்கள். வந்தபடியே பிரிந்தும் செல்கிறார்கள். நாம் இருவருமோ என்றைக்கும் ஒரே இடத்தில் இருப்பவர்கள். எம்மை யாரும் பிரிக்க முடியாது.'

 'உண்மையாகவா?' என்று வியந்த கொடி மரத்தைத் தழுவி முத்தமிட்டது.

 காதலர் இருவரும் தனிமையில் இனிமை கண்டனர். கொடியும் இப்பொழுது யாரையுங் கண்டு நாணமடைவதில்லை. அந்தக் காதலர்கள் இப்பொழுது இல்லையல்லவா? அன்றும், அப்படித்தான். காற்று எதுவும் வீசாமலேயே கொடி மரத்தை அன்புடன் தழுவிக் கொண்டிருந்தது. அப்பொழுது. 'கல கல' என்ற சிரிப்பில்பொலி கேட்டது. ஆச்சரியமடைந்த கொடி மீண்டும் அந்தக்காதலர்கள் தான் வந்தார்களா? அல்லது புதுக்காதலர்கள் தான் யாராவது வந்தார்களா என்று அறிய ஆவல் கொண்டது. அங்கே வரும் பெண் - அவள் முன்புவந்த அதே பெண்தான். அவள் அருகில் வருபவன்? அவன் புதியவனாக அல்லவா இருக்கிறான். ஆம். அவன் புதியவனே தான். சந்தேகமில்லை.

 'இவன் புதியவன்தானே?' தனது சந்தேகம் தெளிவதற்காக மரத்தைக் கேட்டது கொடி.

 'புதியவன்தான்'

 'யார் அவளின் அண்ணாவா?'

 'இல்லை. அவளின் காதலன்.'

 'அப்படியானால் முன்பு வந்தவன்?'

 'அவனும் அவள் காதலன்தான்.'

 'ஒரு பெண்ணுக்கு இரண்டு காதலனா? ஆச்சரியமாயிருக்கே'

 'அம்மட்டோடு இருந்தாலாகுதல் பரவாயில்லை'

 'என்ன சொல்கிறீர்கள்?'

 'மனிதர்களில் ஒரே ஒருவரைக் காதலித்து மணம் புரிந்தவர்கள் மிகவும் அருமையே'

 'ஐயையோ! இப்படியெல்லாம் செய்வதற்கு இந்த மனிதர்களுக்கு அறிவே இல்லையா?'

 'ஏன் இல்லை. எனக்கும் உனக்கும் இருக்கிற அறிவிலும் பார்க்க கடவுள் அவர்களுக்கு ஒரு அறிவைக் கூடவும் கொடுத்திருக்கிறாரே'

 'அப்படியா? அது என்ன அறிவு?'

 'அதுதான் பகுத்தறிவு'

 'அப்படியென்றால்....'

 'நல்லதையும் தீயதையும் ஆராய்ந்து – பகுத்து அறியக் கூடிய அறிவு'

 'அத்தகைய பகுத்தறிவு இருந்துமா பண்பற்று நடக்கிறார்கள் இந்த மனிதர்கள்?'

 'இந்த பகுத்தறிவு இருந்தபடியால் தான் அவர்கள் கெட்டுப்போனார்கள்'

 'ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?'

 'இங்கே பார். எனக்கும் உனக்கும் பகுத்தறிவு இல்லை. அதனால் தான் நாம் வருந்தக் கூடாதென்றெண்ணிக் கடவுள் எங்களை ஒன்றாகவே படைத்துவிட்டார். நாங்களும் இறக்கும்வரை பிரியமாட்டோம். ஆனால் மனிதருக்குப் பகுத்தறிவைப் படைத்துள்ளார். அவர்கள் தம் பகுத்தறிவை உபயோகித்து தமக்கு விரும்பியவரைத் தெரிவுசெய்ய வேண்டும். அப்படித் தெரியும் பொழுதுதான் அவர்கள் பகுத்தறிவை உபயோகிக்கத் தெரியாமல் இத்தகைய தவறுகளைச் செய்கிறார்கள்.'

 'நீங்கள் சொல்வது எனக்கொன்றும் புரியவில்;லையே'

 'விளக்கமாய்ச் சொல்கிறேன் கேள். நீ என்னை விட்டு வேறு யாரையும் மணம்புரிவாயா? காதலிப்பாயா?'

 'ஊகூம். மாட்டவே மாட்டேன்'

 'உன்னை யாரும் வேறொருவருக்கு வலோற்காரமாக மணம் செய்தால்...'

 'நான் உங்களை இறுகத் தழுவிக் கொள்வேன.; உங்களிடமிருந்து என்னைப் பிரிக்க முயன்றால் நான் இறந்து விடுவேன்'

 'பார்த்தாயா? நாங்களாக இறந்தாலன்றி அல்லது வேறு யாராவது நம்மைக் கொன்றால் தான் எங்களைப் பிரிக்கலாம். அத்தனை உத்தம குணம் படைத்தவர்கள் நாங்கள். ஆனால் பகுத்தறிவு படைத்த மனிதர்களோ....'

 'வேண்டாம். சொல்லாதீர்கள். அந்தப் பகுத்தறிவை எங்களுக்குத் தராத கடவுளைப் போற்றுவோம்.' ஏன்று மகிழ்வுடன் கூறியது அந்தக் காதலிக்கொடி.

No comments:

Post a Comment