Thursday, January 20, 2011

சரிவு

வ. அ. இராசரத்தினம் 













 'அங்கிட்டு ஒசக்கத் தெரியிற உச்சி மலைக்கேறி பள்ளத்தில் எறங்கினா லுணுகலை வந்திடுங்க. சங்கு ஊதக்க பொறப்பட்டா தேத்தண்ணிக்கு அங்க போயிடலாங்க' என்றான் என் வழிகாட்டியான தோட்டத் தொழிலாளி.

 எனக்கு லுணுகலைக்குப் போகவேண்டிய அவசியத்தேவை ஏதுமே கிடையாது. மலைமுகட்டில் நான் தங்கியிருந்த அரசாங்க பங்களாவில் இருந்து யன்னல் வழியாக வெளியே பார்த்தால் தூரத்திலே முகில் படிந்து கம்பீரமாகத் தோற்றமளிக்கும் 'றோபெரிக்' குன்றுகள். அக்குன்றுகட்கும் என் இருப்பிடத்திற்கும் இடையே வரைவரையாய், மடிப்பு மடிப்பாய், படிப்படியாய் இறங்கிச் செல்லும் சரிவுகளிற் குத்திட்டு நிற்கும் தேயிலைச் செடிகள், அச்செடிகளில் மொய்க்கும் வண்ணாத்திப் பூச்சிகளாய்த் தோன்றும் கொழுந்துக்காரிகள், எல்லாமே அழகாய்த்தான் இருப்போம் என்று வரிந்து கட்டிக்கொண்டவை போலத் தோன்றும் மலை நாட்டின் அழகை இரசிக்கவென்று நீண்ட இடைக்காலத்தின் பின் நான் வதுளைப் பக்கமாக வந்திருந்தேன். உல்லாசப்பிரயாணி!

 பதினைந்து ஆண்டுகட்கு முன்னே சொல்லில் வடிக்க முடியாத மெல்லிசையின் நுண்ணிழையாய் உடலின் வேட்கையோ, தசையின் பிடுங்கலோ இன்றிப் பின்னிப் படர்ந்த வாலிபக்கனவுகளின் செழுமை வாய்ந்த பின்னணியாய்த் திகழ்ந்த மலைநாடு இன்றைக்கும் மெருகு குலையாத அதே அழகோடு.....

 நான்தான் நடுத்தரவயதினனாகி விட்டேன். ஆனால் அழகிற்கும் முதுமையுண்டா? என்றைக்கும் அவள் நித்ய கன்னிதானா?

 அக்கன்னிக் கட்டழகைப் பருகும் வெறியில் நான் கடந்த நான்கு நாட்களாக எங்கெல்லாமோ பகல் முழுவதும் சுற்றினேன். காடாய் அடர்ந்து சித்திரை மாதத்து வெய்யிலிலே விகசிக்கும் வண்ணமலர்கள், வழுக்கும் கற்பாறைகளின் சரிவிலே மலைநாட்டின் அழகே உருகிச் சொட்டுவது போன்று சலசலத்துக் கொட்டும் மலையருவிகள் எல்லாமே என் மனதுட் போதையை ஊட்டின. அப்போதையிற் தான் நான் இன்று லுணுகலைக்குப் புறப்பட்டேன்.

 வழிகாட்டி முன்னே நடந்தான்.

 மடுள் சீமைக்குன்றுகளிலே மதுரையை வளைத்து அரவமாய் வளைந்து வதுளைக்குச் செல்லும் பிரதான பாதையிலே சிறிது தூரம் நடந்து பின் தோட்டத்துக் குறுகிய பாதையிலே ஏறத்தொடங்கினோம்.

 'போயிடலாங்க. அந்தப் பக்கம் பணிவுதானுங்க' என்று வேலு தேற்றினான்.

 'சரி நட' என்று சொல்லிவிட்டு நான் அவன் பின்னால் ஏறத்தொடங்கினேன்.

 வழியிலே தேயிலைச் செடிகளைத் தாக்கும் கிருமிகட்கு மருந்து பீச்சியடிக்கும் தொழிலாளர்கள், தங்கள் தோளிற் கிடந்த இயந்திரத்தைக் கீழே இறக்கி வைத்து, அதன் கொள்கலத்தில் கரைத்த மருந்தை ஊற்றிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருத்தன் கேட்டான். 'எங்கபோறா வேலு?'

 'ஐயா பட்டிப்பளைக்குச் செல்லணுமாம்' என்றான் வேலு பெருமிதத்தோடு.

 'ஆமாம் வெத்தில வெச்சிரிக்கியா?'

 'ஏண்டா சவத்துப்பயலே. வேலைக்கு வரக்குள்ள வெத்தில இல்லாம வருவியா?'

 'சும்மா போய்யா. ஓங்கிட்ட இருந்தா கொடுங்களேன்'

 என் வழிகாட்டி வெற்றிலைப் பொட்டலத்தை அவிழ்த்தான். அவர்கள் நால்வரும் வெற்றிலை போட்டுக்கொண்டார்கள். பின்னால் வந்து கொண்டிருந்த நான் அவர்களை அணிமியதும் 'வெத்தில போடுங்க ஐயா' என்றான் வேலு. நான் உல்லாசப் பிரயாணி. வேலு எனக்கு வழிகாட்டி. வேலைக்காரனல்லன். எனினும் வெற்றிலை போடுவது எனக்குப் பழக்கப்பட்ட விவகாரமல்ல. அதிலும் அதிகாலையில் நான் வெத்திலை போட்டதே கிடையாது. ஆயினும் நான் என் வழிகாட்டியின் வேண்டுகோளை ஏற்று மலை ஏறினேன்.

 'இதெல்லாம் தமிழ்ப் பிளாசுதானுங்க' என்றான் வழிகாட்டி என்னைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே. யாரோ அந்தக் காலத்துத் 'தமிழ்துரை தவளம்பலஸ்' என்று தமிழும் ஆங்கிலமுமாய்க் கலந்து தன் தோட்டத்திற்குச் சூட்டிய பெயர்' இன்று எல்லார் வாயிலும் 'தமிழ்ப்பிளாஸ்' ஆகிவிட்ட இலக்கண விவகாரத்தில் ஈடுபட எனக்கு நேரமில்லை. மலையுச்சியிற் சாம்பற் புகாராய்ப் படர்ந்த முகிற்திரை கீழிறங்கி ஒரு கணம் எங்களைப் போர்த்து மூடிப்பின் விலகிக் கொண்டு செல்லும் அற்புதத்தைத் திரும்பி நின்று நான் பார்த்துக்கொண்டிருந்தேன். கீழே கீழே இறங்கிச் செல்லும் முகிற்திரையை காலைச் சூரியனின் செங்கிரணங்கள் தூர்தியடிப்பதைப் போலத் தோன்றியது எனக்கு.

 நான் களைத்து விட்டேன் என்று வேலு எண்ணிக்கொண்டான் போலும். 'சத்து நேரத்தில உச்சிக்குப் போயிடலாம்' வேலுதான் என்முன்னால் இப்போதும் சென்றுகொண்டிருந்தான். இப்போது குறுக்கு வழியில் ஆயினும் அவனுக்குப் பழக்கமான பாதையிற் தேயிலைப் புதர்களினூடே அவன் விறுவிறென்று நடந்தான். பச்சைப் பாக்கின் கிறக்கத்தில் நானும் அவனைப் பின் தொடர்ந்து இருவரும் மலை உச்சியை அடைந்துவிட்டோம்.

 மலையேறி வந்ததில் உடம்பெல்லாம் வியர்த்துக்கொட்டினாலும் இதமான குளுமை என் உடலைப் புல்லரிக்கச் செய்தது. உச்சியில் 'ட' வாய்வளைந்த கீழ் நோக்கிச் செல்லும் பாதையின் அருகே கடல் மட்டத்திலிருந்து ஐயாயிரத்துச் சில்லறை அடி என்பதைத் தெரிவித்துக்கொண்டிருக்கும் விளம்பரப் பலகை. அதன் அருகே நீட்டிநிற்கும் வேலாயுதத்தை உள்ளடக்கிய சின்னஞ்சிறிய கோயில்.

 'முருகன் கோயிலுங்க' என்று சொல்லிக் கையெடுத்துக் கும்பிட்டான் வேலு. நானும் சேவித்துக் கொண்டே திரும்பிப் பார்த்தேன்.

 நான் புறப்பட்டு வந்த இடமான அரசாங்க விடுதி இரண்டு மலை மடிப்புகளின் கீழே தீப்பெட்டிகளை அடுக்கிச் சிறுவர் கட்டிய பொம்மை வீட்டைப் போன்று சின்னஞ் சிறியதாய் தோன்றிற்று. வதுளை வீதியில் உருளும் வண்டுகளைப் போல மோட்டார் வண்டிகள் சென்று கொண்டிருந்தன. எனினும் பள்ளத்தாக்கு முழுமையையும் போர்த்து மூடியிருந்த மரகதப் பசுமை மட்டும் மாற்றம் ஏதுமே இன்றிக் கட்டுக்குலையமல் கண்களை வசீகரிக்க இடையிடையே காலையிள வெய்யிலின் பொன்னொளி பட்டு ஜ்வலிக்கும் மலை வீழருவிகள் கண்ணொளியைப் பறித்தன. 'உண்மையாகவே முருகன் அழகுத் தெய்வந்தான்! இந்தக் கண்கொள்ளா அழகை இரசிப்பதற்குச் சரியான மேட்டிற்தான் வந்து குடியிருக்கிறான்' என்று எண்ணியபோது என் உள்ளம் விம்மி நின்றது.

 நான் மெய்மறந்து நிற்கையில் இந்தப் பாதையால தானுங்க ஏறங்கிப் போகணும்' என்று கிழக்குத் திக்கைக் காட்டினான் வேலு. நான் அவன் காட்டிய திக்கிற் பார்த்தேன். அத்திக்கிற் தேயிலைச் செடிகளைக் காணவில்லை. செங்குத்தான சரிவாக இருப்பதும் புலப்பட்டது. மேலும் மலையைப் போர்த்துநின்ற மரகதப் பசுமையினூடே திட்டுத் திட்டாகக் கன்னங்கரிய கற்பார்படந்து வெறிச்சோடிக் கிடந்தது. அடிவாரத்திலே கித்துள் மரங்கள் தோகை விரித்த மயிலாகச் செழித்துத் தோன்றின.

 கித்துள் மரங்கள் தோன்றும் இடந்தான் என் இலக்காக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே 'அந்த ஊர் தான் லுணுகலையா? என்று கேட்டேன் நான்.

 'இல்லீங்க அந்த லெக்கிலே நீட்டுக்கும் போனாக் கொஞ்சத் தூரந்தானுங்க' என்றான் வேலு.

 'அப்போ புறப்படலாமே'

 'கொஞ்சம் நில்லுங்க ஐயா'என்ற வேலு தான் கையோடு கொண்டு வந்த சவர்க்காரத்தைப் பக்கத்துக் கற்சுவரில்; சொட்டிக் கொண்டிருந்த நீரிற் குழைத்து நுரையை என் பாதங்களில் கணுக்காலில் - முழங்கால்வரையும் பூசினான். அதற்கும் மேலால் யாழ்ப்பாணத்துத் தீன் புகையிலையும் நீரில் நனைத்துப் பூசியபடியே 'வழியெல்லாம் பில்லுக்காடுங்க. அட்டை ரொம்ப இருக்கும். சவுக்காரத்திற்கும் போயிலைக்கும் வராதுங்க' என்றான்.

 'அட்டைதானே கடிச்சாச் சாகமாட்டேனே' என்றேன் நான் சிரித்துக் கொண்டே.

 என் கால்கட்குப் பாதுகாப்புத் தேடிய வேலு, அதே பாதுகாப்பைத் தன் கால்கட்கும் அலட்சியத்தோடு செய்து கொண்டு மலைச்சரிவில் இறங்கி நடக்கத் தொடங்கினான்.

 நிர்மானுஷ;யமான மலைக்காட்டுப் பாதையில் நான் அவனைப் பின் தொடர்ந்தேன்.


 மலையில் ஏறுவதைவிட இறங்குவது தான் சிரமமாகத் தோன்றினாலும் நான் உற்சாகமாகவே நடந்தேன். மனதிலே போதை. நான் உல்லாசப் பிரயாணி!

 காலைச் சூரியனின் ஊசிக் கிரணங்கள் என் அங்க வஸ்திரத்தைப் பிரிமுண்டாசாகக் கட்டியிருந்த சிகைத்தலையிற் துணிபடாத இடத்திலே சுள்ளென்றடித்துக் கொண்டிருந்தன. நான் நடந்துகொண்டே இருந்தேன்.

 அரை மணித்தியால நடையின் பின்னர் செங்குத்தான இறக்கம் சற்று நிமிர்ந்து சமதரையாகி விட்டதாய்த் தோன்றிற்று. இரு மருங்கிலும் மார்புயரம் வளர்ந்திருக்கும் காட்டுப் புற்களின் நடுவே மனிதச் சுவடுகளின் தழுவலினால் வழுக்கலாகி விட்ட கற்களின் முதுகிலே, ஒற்றையடிப் பாதையில் நாங்கள் நடக்கத் தொடங்கிய போது மலை நாட்டிற் தன் படுவனாக வளர்ந்திருந்த பலாமரங்களிலிருந்த கனிகள் வீழ்ந்து கல்லிற் சிதறி நசுங்கின. மந்திக் குரங்குகள் மரத்துக்கு மரந்தாவின. காலிற் சதங்கையைக் கட்டிக் கொண்டு ஆடும் நர்த்தகியின் கலீரோடு பக்கத்திலே கானாறு குதித்துக் கும்மாளமிட்டு ஓடியது. குறும்பலவிலீசரின் குற்றாலத்தைச் சூசிப்பிக்கும்படியான அந்தச் சூழலில் என்னையறியாமலேயே என் உதடுகள் திரிகூடராசப் பக்கவிராயனின் குறவஞ்சியடிகளை முணுமுணுத்தன.

 'இனிமேல் ஒரு நாடு இருக்குங்க' என்றான் வேலு.

 தேயிலைத் தோட்டங்கட்குப் பக்கத்தில் உள்ள சிங்களக் கிராமங்களை நாடு என்று சொல்வது எனக்குத் தெரியும். எனவே 'இவ்வூருக்குப் பேரென்ன?' என்றேன் நான்.

 நாடுதானுங்க. இங்கிட்டிருந்து நம்மூருக்குத் தான் சாமானத்துக்கெல்லாம் வாறாங்க' என்றான் வேலு.

 ஊர்ப்பெயர் அவனுக்குத் தெரியவில்லை என்று நான் ஊகித்துக் கொண்டேன். பேர் எதற்கு? றோசாப்பூவை என்ன பெயரிட்டு அழைத்தாற்தான் என்ன? மணமாகுன்றிவிடும்? நான் மேலே நடந்தேன்.

 இடையிடையே மரவள்ளித் தோட்டங்கள் தென்பட்டன. அவற்றிடையே ஓரிரண்டு கோப்பிச் செடிகள். அவற்றிற்கும் மேலால் நிழல் கவித்து நிற்கும் பலாமரங்கள்.

 எங்கள் ஒற்றையடிப் பாதை சற்று சரிவாகி முன்னால் நீண்டு வளைந்து செல்கிறது. நாங்கள் நடந்து கொண்டேயிருந்தோம்.

 பாதையின் அருகே மலையிடுக்கில் மாட்டப் பெற்ற அர்த்த மூங்கிற் பிளவு வழியே ஸ்படிகமாய் ஒழுகும் தண்ணீரில் மலைநாட்டு இளம் மங்கையொருத்தி தலை முழுகிக்கொண்டிருந்தாள். நீண்டு கறுத்துக் கிடக்கும் அளகபாரம் என்ற மேகக் கற்றை அந்திச் செவ்வானமாய் மின்னும் அவள் முதுகிற் படிந்து மறைக்க பின்காட்டி நின்ற அப்பெண், எங்கள் காலடி ஓசை கேட்டுத் திரும்பிப் பார்த்தாள். வெடு வெடுக்கும் வைகறையின் குளுமையில் வெண்பனி தோய்ந்து இளநகை காட்டி நிற்கும் காட்டு ரோஜாப் பூப்போன்ற அவள் முகம் ஒழுகும் தண்ணீரிடையே பளிச்சிட்டது.

 மார்புக்கு மேலே நனைந்து உடலோடொட்டிக் கிடந்த ஆடைக்குள்ளிருந்து, இருளிலே விடலிடுக்குகளின் வழியாகப் புறங்கையிற் பீறிப்பாயும் விளக்கொளியின் கனிந்த செம்மையாய் அவள் நிறம் பளிச்சிட அவ்வொளிக்குத் திருஷ;டிக் கழிவாய் இரு பொட்டுக் கருமை... மின் வெட்டுத்தான்!

 மறுபடியும் திரும்பி ஒழுகும் நீரிற் தலையைக் கொடுத்துக்கொண்டாள்.

 என் இரசிகத்தன்மை என்ற பலவீனத்தையோ, அல்லது பலவீனம் என்ற இரசிகத்தன்மையையோ வேலு அவதானித்துக்கொண்டான் போலும்.

 'கள்ளு விக்கிற சிங்களப் பொண்ணு ஐயா' என்றான் வேலு.

 என் உல்லாசப் பிரயாண மயக்கிலும், அழகுக் கிறுக்கிலும் என்ன பேசுகிறேன் என்று தெரியாமலே 'கித்துள்கள்ளா? நான் ஒருமுறையும் குடிக்கவில்லை. இன்றைக்குக் குடித்துப் பார்க்க வேண்டும்' என்றேன்.

 வேலு அவளோடு சிங்களத்திற் பேச்சுக் கொடுத்தான். பிறகு என்னிடம் 'நாம அவ வீட்டுக்குப் போவோம் ஐயா. வாங்க' என்று முன்செல்ல நான் அவனைத் தொடர்ந்தேன்.

 நாங்கள் சற்றுத்தூரம் நடந்து ஒரு குடிசையை அடைந்தோம். புல்வேய்ந்த கூரை. குடிசை முன்றலில் ஒருசில வண்ணப் பூச்செடிகளிலே அழகு கொலுவிருந்தது.

 குடிசைக்குள்ளே பலகைக் கதிரையில் ஒரு கிழவன். அப்பெண்ணின் தந்தையாக இருக்கலாம். அவன் பக்கத்தில் எச்சிற்படிக்கம் ஒன்று. வெற்றிலையை மென்று 'புளிச்'சென்று அவ்வெச்சிற்படிக்கத்திற் துப்பியவாறே அவன் இருந்தான்.

 வேலு அக்கிழவனோடு பேச்சுக்கொடுக்க நான் அக்கட்டிலில் அமர்ந்து கொண்டேன். படை படையாய் அழுக்கேறியகட்டில் மெத்தையில் தென்னந்தும்புகள் பீறலின் வழியாய் வெளியே துருத்திக்கொண்டிருந்தன. ஆயினும் அவ்வழுக்கு மெத்தை எனக்கு ஹம்சதூளிகா மஞ்சமாய் - கிறங்க வைக்கும் மல்லிகையின் நறுமணம் பொருந்தியதாய்......

 நான் தேவலோகத்தில் இருக்கிறேன். தேவலோகத்து ரம்பை கிண்ணம் நிறைந்த சோமபானத்துடன் என் முன்னால் நிற்கிறாள். சோமபானத்தை மாந்தியதும் நித்ய இளமை பெற்றுவிட்ட அமரனாக, ரம்பையின் மென்னுடலைத் தழுவி.....

 ஓசை கேட்டுத்திரும்பியபோது எப்படியோ அங்கு வந்து உடை மாற்றிக் கொண்டும் விட்ட அப்பெண் என்னிடம் கித்துள் கள் நிறைந்த கிளாசை நீட்டுகிறாள். நான் வாங்கிக் கொள்கிறேன்.

 புதிய அனுபவம்!

 ஓன்று, இரண்டு.

 இனித்துக்கிடக்கிறது.

 மூன்றாவது கிளாஸ்!

 நான் கை நீட்டி வாங்குகிறேன். அவள் சிரிக்கிறாள். கொல்லும் சிரிப்பு! அந்த விழிகள் போதுமே ஆளை விழுங்க.

 நானும் சிரிக்கிறேன்.

 'தெக்காய் பனஹாய் மாத்தயா'

 நான் காசைக்கொடுக்கிறேன். அவள் அதை வாங்கிக் கொண்டு சிரிக்கிறாள்.
 வேலு எழுந்து நடக்கிறான். ஆகவே அவன் பின்னால் நானும் நடக்கிறேன்.
 படலையடியிற் தரித்து மீண்டும் அவளைப் பார்க்கிறேன். அதே சிரிப்போடு அவள் நிற்கிறாள்.
 வேலு வேகமாக முன்னே செல்கிறான். அவன் பின்னால் நான் இப்போது பறக்கிறேன்.

 புதிய பானத்தின் மகத்துவம்! மனதில் ஓராயிரம் எண்ணங்கள்.
 சுமார் ஒன்றரை மைல் நடந்து லுணுகலைக் கடை வீதியை அடைந்தோம். என் கற்பனைகளும், கனவுகளும், என் கூடவே வந்திருக்கின்றன. நான் உல்லாசப் பிரயாணி!

 கடைத் தெருவின் இரைச்சலில் நான் என் பிரயாண போதையிற் கிறங்கிக் கற்பனைகளில் மிதந்துகொண்டிருக்கிறேன். பெட்டிக் கடையில் தாம்பூலந்தரித்;து, சிகரட் புகைத்தது எல்லாமே கனவுலகத்தில் நடந்தவை போலத்தான்.

 அப்போது பஸ் ஒன்று வந்து கடைத்தெருவில் நிற்கிறது. அதிலிருந்து பிரயாணிகள் இறங்கித் தேனீர்க் கடைக்குட் செல்கிறார்கள். அது வதுளையிலிருந்து மட்டக்களப்புக்குச் செல்லும் வண்டி. அதுகூட எனக்கு அழகாகத் தான் தோன்றுகிறது.

 யாரோ என் தோளைத் தொடுவதை நான் உணர்கிறேன். திரும்பிப் பார்க்கிறேன். எங்களூரவர் ஒருவர்! பஸ்ஸில் வந்தவராயிருக்கலாம்.

 என் முன்னால் எனது கிராமம் முழுவதுமே வந்து நிற்பதைப் போன்றிருந்தது. எனக்கு வியர்த்துக்கொட்டுகிறது. என் பிரயாணப் போதை, கனவு மயக்கம், அழகுக் கிறக்கம் எல்லாமே நீர்க்குமிழ்களாக 'டப்'பென்று உடைந்து அழிகின்றன. என்கிராமமே என்னை ஓர் வெறியமான – காமியாகப் பார்த்து விட்டதைப் போன்ற உணர்வு. வழியிலே நான் சந்தித்த எப்பாவமும் அறியாத சிங்களப்பெண் இப்போது சாதாரணப் பெண்ணாகவே தோன்றுவாளா? ஊரிலே தம்வாழ்வுக்காக என்னையே நம்பியிருக்கும் என் மனைவியினதம் குழந்தைகளினதும் கலங்கிய கண்களை, என் ஊரவரின் முகத்திற் காண்கின்றேன்.

 'என்ன தம்பி இந்தப் பக்கம்' என்கிறார் ஊரவர்.

 இதற்குள் பஸ் ஹார்ண் அடித்து விட்டது. அவர் அதில் ஏறிக்கொண்டார். பஸ்சும் புறப்பட்டு விட்டது! பசறை செல்லும் அடுத்த பஸ்சிலேயே நானும் ஏறிவிட்டேன்.

 என் தங்குமிடத்தை அடைந்ததும் உடனேயே ஊருக்கும் புறப்பட்டுவிட்டேன். இரண்டு வாரங்களைக் கழிக்க என்று வந்தவன் இப்படித் திடுதிடுப்பென்று புறப்பட்டமைக்குக் காரணந்தெரியாமல் என் விருந்தினர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

No comments:

Post a Comment