Saturday, January 29, 2011

பாற்கஞ்சி

சி.வைத்திலிங்கம்

'ராமு, என் ராசவன்னா குடிச்சுடுவாய், எங்கே நான் கண்ணை மூடிக்கொள்கிறேன். குடிச்சிடு பார்க்கலாம். நாளைக்குப் பாற்கஞ்சி...'

'சும்மாப்போம்மா. நாளைக்கு நாளைக்கென்று எத்தனை நாளா ஏச்சுப்பிட்டாய். என்னதான் சொல்லேன். கூழ் குடிக்க மாட்டேம்மா.'

'இன்னும் எத்தனை நாள் பஞ்சமடா? வயலிலே நெல் முத்தி விளைஞ்சு வருது. ஒனக்கு வேணாம்னா பாற்கஞ்சி தாரனே'

'கூழைப் பார்த்தாலே வவுத்தைப் புரட்டுதம்மா. முடியாதுன்னா முடியாது' என்று சொல்லி அழத் தொடங்கினான்.

'அப்பா பசியோட காத்துண்டிருப்பாரடா. வயல்லே கூழ் கொண்டு போகணும். என்ன பாடுபட்டும் நாளைக்குக் கஞ்சி தந்துடுறனே. ஆம்... என் கண்ணோல்லியோ?'

'நிச்சயமாய்ச் சொல்றயாம்மா? நாளைக்கு பாற்கஞ்சி தருவாயா?'

சட்டென்று பக்கத்திலிருந்து சிறுவர்கள் தம்பளப் பூச்சி விளையாடும் சப்தம் கேட்டது. அவதி அவதியாய்ப் பத்துவாய் கூழ் குடித்தான் ராமு. எல்லாவற்றையும் மறந்து விளையாட ஓடினான்.

அந்தக் கிராமத்தில் முருகேசனுடைய வயல் துண்டு நன்றாய் விளையும் நிலங்களில் ஒன்று. அதற்னகுப் பக்கத்திலே குளம். குளத்தைச் சுற்றிப் பிரமாண்டமான மருத மரங்கள். தூரத்திலே அம்பிகையின் கோயிற் கோபுரம். இவை எல்லாவற்றையும் சுற்றி வேலிபோட்டாற்போல தூங்கிக்கிடந்தன குடிமனைகள்.

மார்கழி கழிந்துவிட்டது. இப்பொழுது மேகத்திலே புகார் ஓடுவதில்லை. ஞான அருள் பெற்ற நாள் வெண்ணிறம் பெற்று வந்தது. ஆம் தைமாதம் பிறந்து துரிதமாய்  நடந்துகொண்டிருந்தது.

மாரிகாலம் முழுவதும் ஓய்ந்து தூங்கிக்கிடந்த ஜீவராசிகள் பாட்டுடன் வேலை தொடங்கிவிட்டன. முருகேசனும் வயலிலே வேலை செய்து கொண்டிருந்தான். பனியிலே ஒடுங்கிக் கிடந்த நரம்புகளிலே சூரிய ஒளி வெள்ளம் பாயவே, அவன் தேகத்தில் ஒரு சுறுசுறுப்பு உண்டானது. வலிந்து இறுகியிருந்த நரம்புகள் விண்போல் தெறித்தன. எழுந்து நின்று கண்களைச் சுழற்றித் தன் வயலைப் பார்த்தான். நெற்கதிர்கள் பால் வற்றி, பசுமையும், மஞ்சளும் கலந்து செங்காயாக மாறிக்கொண்டிருந்தன. 'இன்னும் பதினைந்து நாட்களில்...' என்று அவனை அறியாமல் அவன் வாய் முணுமுணுத்தது.

முருகேசன் மனத்திலே ஒரு பூரிப்பு. ஓர் ஆறுதல். ஒரு மன அமைதி. அவன் ஒரு வருஷமாயப் பாடுபட்டது வீண் போகவில்லையல்லவா? ஆனால் இவற்றுக்கிடையில் காரணமில்லாமல் 'சிலவேளை ஏதேனும்... யார் கண்டார்கள்?' என்ற இன்பமும் துன்பமும் கலந்த ஒரு மன ஏக்கம்...!

முருகேசனுக்கு வயலை விட்டுப் போக மனம் வரவில்லை. பொழுது உச்சிக்கு வந்துவிட்டது. பசி வயிற்றைக் கிள்ளியது. என்றாலும் பயிருக்குள் நுழைந்து ஒவ்வொரு கதிராக தன் கைகளால் அணைத்து தன் குழந்தைகள் போலத் தழுவிக்கொண்டிருந்தான்.

கண்ணை மின்னிக் கொண்டிருந்த அந்த வெயிலிலே காமாட்சி கூழுடன் அப்பொழுதுதான் வந்தாள். கூழ் குடித்துக்கொண்டிருக்கும் பொழுது முருகேசன் அவளைப் பார்த்து, 'போனவருசந்தான் மழை இல்லாமல் எல்லாம் சப்பையும், சாவியுமாய்ப் போயிருந்தது. காமு, அதோபார். இந்த வருசம் கடவுள் கண் திறந்திருக்கிறார். கருப்பன் செட்டி கடனைத் தீர்த்துப்புடலாம். நமக்கு ஒரு வருடத்துக்குச் சோத்துக்குக் குறைவு வராது. எங்க ராமனுக்கு ஒரு சோடி காப்பு வாங்கணும்...'

'எனக்கு ஒட்டியாணம்'

'ஏன், ஒரு கூறைச் சேலையும் நன்னாயிருக்குமே'

'ஆமாங்க, எனக்குத்தான் கூறைச் சேலை, அப்படின்னா ஒங்களுக்கு ஒரு சரிகை போட்ட தலப்பா வேணுமே'

'அச்சா, திரும்பவும் புதுமாப்பிள்ளை பொம்புளையாட்டம் ரெண்டு பேரும்.... ... ஒரே சோக்குத்தான்' என்று அவளைப் பார்த்து இளித்தான்.

காமாட்சி வெட்கத்தினால் தன் சீலைத் தலைப்பால் முகத்தை அரை குறையாய் மூடிக்கொண்டு 'அதெல்லாம் இருக்கட்டும்.... எப்போ அறுவடை நாள் வைக்கப் போறீங்க' என்றாள்.

இன்னிக்குச் சனிக்கிழமை, சனியோடு சனி எட்டு. மற்றச் சனி பதினைந்து ஆம் நல்ல நாள். அதே சனிக்கிழமை வெச்சிடுவமே'

'தாயே, இதுக்கிடையில் ஒரு விக்கினமும் வந்திடப்படாது' என்று மனதில் சொல்லிக்கொண்டாள் காமாட்சி.

ஒரு பெருநாளை எதிர்பார்ப்பது போல் காமாட்சியும் முருகேசனும் அறுவடை நாளை எதிர் நோக்கி இருந்தார்கள். காமாட்சி தன் வீட்டிலுள்ள களஞ்சிய அறையைக் கோலமிட்டு மெழுகி வைத்திருந்தாள். லக்சுமி உறையப் போகும் அந்த அறைக்கு ஒவ்வொரு நாளும் தீபம் ஏற்றி வந்தாள். மணையாகக் கிடந்த அரிவாளை;களைக் கொல்லன் பட்டடையிற் கொண்டுபோய்த் தேய்த்து வந்தான் முருகேசன். கதிர்ப்பாய்களை வெய்யிலிலே உலர்த்தி, பொத்தல்களைப் பனை ஓலை போட்டு இழைத்து வைத்தான். ஐந்தாறு நாட்களுக்கு முன்னரே அயல் வீட்டுக் கந்தையனிடமும் கோவிந்தனிடமும் 'அறுவடை வந்திட வேணும் அண்ணமாரே' என்று பலமுறை சொல்லி வந்தான். இருவருடைய மனதிலும்  ஓர் ஆவல் துடித்து நின்று இவற்றை எல்லாம் செய்து வந்தது.

அறுவடை நாளுக்கு முதல் நாள் அன்று வெள்ளிக்கிழமை. பகல் தேய்ந்து மறைய இன்னும் மூன்று நாழிகை தான் இருந்தது. நிஜகளங்கமாய் இருந்த வானத்திலே ஒரு கருமுகிற் கூட்டம் கூடியது. வரவரக் கறுத்துத் தென்திசை இருண்டு வந்தது. அந்த மேகங்கள் ஒன்று கூடி அவனுக்கு எதிராகச் சதி செய்வதாக முருகேசன் நினைத்தான். அந்தக் கருவானம் போல் அவன் மனதிலும் இருள் குடிகொண்டது. காமாட்சி மனதிற்குள் அம்பிகைக்கு நூறு வாளி தண்ணீரில் அபிசேகம் செய்வதாகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். சிறு நேரத்தில் ஒரு காற்று அடித்துக் கூடியிருந்த முகிற் கூட்டம் கலைந்து சிறிது சிறிதாய் வானம் வெளுத்துக்கொண்டு வரவே, முன்போல் ஆகாயம் தெளிவுடன் விளங்கியது. தன்னுடைய பிரார்த்தனை அம்பிகைக்கு கேட்டுவிட்டதென்று காமாட்சி நிளைத்தாள்.

முருகேசன் படுக்கப்போக முன் அன்றைக்கு பத்தாவது முறை கந்தையனுக்கும், கோவிந்தனுக்கும் காலையில் அறுவடையைப் பற்றி நினைப்பூட்டிவிட்டு வந்து படுத்துக்கொண்டான். அவன் படுக்கையிலேயே புரண்டு படுத்துக்கொண்டிருந்தான். நித்திரை அவனுக்கு எப்படி வரும்? அவனுடைய மனம் விழிப்பிற்கும், தூக்கத்திற்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருந்தது. ஆயிரஞ் சிந்தனைகள் பிசாசுகளைப் போல் வந்து அவன் மனதிலே ஓடிக்கொண்டிருந்தன.

அவன் வயலிலே நெல் அறுத்துக்கொண்டிருக்கிறான். பக்கத்திலே கோவிந்தனும், கந்தையனும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அறுத்து வைத்ததைக் காமாட்சியும், பொன்னியும், சின்னம்மாவும் கட்டுக்கட்டாய் அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். கிளிகளையும், காக்கைகளையும் துரத்திக்கொண்டு திரிகிறான் ராமு. அப்பொழுது காமாட்சி, 'பள்ளத்து பள்ளன் எங்கேடி போய்விட்டான்' என்று பள்ளு பாடத் தொடங்கினாள்.

அதற்குப் பொன்னி 'பள்ளன் பள்ளம் பார்த்துப் பயிர் செய்யப் போயிட்டான்' என்று சொல்ல, காமு, 'கொத்துங் கொண்டு கொடுவாளுங்கொண்டு...' என்று இரண்டாம் அடியைத் தொடங்கினாள்.

அதற்குப் பொன்னி 'கோழி கூவலும், மண்வெட்டியும் கொண்டு' என்று சொல்ல, இருவரும் சேர்ந்து, 'பள்ளன் பள்ளம் பார்த்துப் பயிர் செய்யப் போயிட்டான்' என்று முடித்தார்கள்.

உடனே காமு, 'ஆளுங் கூழை அரிவாளுங்கூழை' என்று சொன்னதும், முருகேசன் 'யாரடி கூழை!' என்று அரைத் தூக்கத்திலிருந்து கத்திக்கொண்டு எழுந்திருந்தான்.

முருகேசன் - ஆள் கூழை. பாவம். தன்னையே அவள் கேலி செய்வதாக நினைத்து அப்படிக் கோபித்துக்கொண்டான். இப்பொழுது நித்திரை வெறிமுறிந்ததும், தான் செய்ததை நினைக்க அவனுக்கு வெட்கமாயிருந்தது. தனக்குள்ளே சிரித்துக்கொண்டு திரும்பவும் படுத்துக்கொண்டான். அந்தக் கனவுதான் எவ்வளவு அழகான கனவு! அதன் மீதியையும் காணவேண்டும் என்று ஆவலாயிருந்தது. ஆனால் நித்திரை எப்படி வரப்போகிறது? கனவுதான் மீண்டும் காணப்போகிறானா? தன் கற்பனையிலே மீதியை சிருஷ;டித்துப் பார்த்து அவன் மகிழ்ந்துகொண்டிருந்தான்.

பாட்டுடன் அறுவடை சென்று கொண்டிருக்கிறது. வயலிலே நின்று நெல்மூட்டைகளை வண்டியிலே போடுகிறான். வண்டி வீட்டு வாசலிலே வந்து நிற்கிறது. அவனுடைய களஞ்சியம் நிறைந்து பரிபூரணமாய் விட்டது. ராமன் வயிறு நிறையப் பாற்கஞ்சி குடித்துக்கொண்டிருக்கிறான். காமு ஒட்டியாணத்துடன் வந்து அவனை....

அப்பொழுது வீட்டுக்கூரைக்கு மேலிருந்து ஒரு சேவல் கூவிற்று. முருகேசனுடைய கற்பனை அறுந்துவிட்டது. அக்கிராமத்திலுள்ள சேவல்கள் தொடர்ந்து ஒவ்வொன்றாகக் கூவிக்கொண்டு வந்தன. அவன் வீட்டுக்கு முன்னால் கட்டியிருந்த ஆட்டுக்குட்டி 'மேய் மேய்' என்று கத்தத் தொடங்கியது. எங்கிருந்தோ கள்ளத்தனமாய் உள்ளே நுழைந்த மெல்லிய காற்று அவன் மேல்படவே மீண்டும் குளிர்ந்தது. முருகேசன் பரபரவென்று எழுந்திருந்தான். வாசலை அடைந்து வானத்தை அண்ணாந்து பார்த்தான்.

அவன் படுக்கைக்கு போனபொழுது வானத்திலே பூத்திருந்த நட்சத்திரங்கள் ஒன்றையும் காணவில்லை. வானம் கறுத்துக் கனத்து எதிலோ தொங்கிக்கொண்டிருப்பது போல் தோன்றிற்று. வீட்டு முற்றத்திலே வந்து நின்றான். ஒரு மழைத்துளி அவன் தலைமேல் விழிந்தது. கையை நீட்டினான். இன்னும் ஒரு துளி! மற்றக் கையையும் நீட்டினான். இரு துளிகள் வீழ்ந்தன. அவன் தலையிலே வானமே இடிந்து விழும் போல் இருந்தது.

உக்கிப்போய்த் தன் வீட்டுத் திண்ணையிலே குந்திக்கொண்டான். பொலுபொலுவென்று மழை தொடங்கியது. இடி இடித்தது. மின்னி மழை சோனாவாரியாய்க் கொட்டிக் கொண்டிருந்தது.

காலை ஏழு மணியாகியும் மழை விடவேயில்லை. ராமு ஓடி வந்து தந்தைக்கு பக்கத்திலே குளிர் காய்ந்து கொண்டிருந்தான். காமாட்சி இடிந்துபோய் நின்றாள். மழையுடன் காற்றும் கலந்து 'ஹோ'வென்று இரைந்து கொண்டிருந்தது.

'அம்மா இன்னைக்கு பாற்கஞ்சி தாரதாய்ச் சொன்னியே, பொய்யாம்மா சொன்னாய்?' என்று தாயைப் பார்த்துக் கேட்டான் ராமு.

காமாட்சிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவள் வயிறு பற்றி எரிந்தது. பச்சைக் குழந்தையை எத்தனை நாட்களாய் ஏமாற்றிவிட்டாள்? மழையையும் பாராமல் பக்கத்து வீட்டிற்கு ஓடினாள். காற்படி அரிசி கடனாய் வாங்கிக்கொண்டு வந்தாள்.

முருகேசன் ஒன்றும் பேசாமல் வானத்தைப் பார்த்தபடி இருந்தான். அவனுடைய பார்வை வயல்வெளியை ஊடுருவிச் சென்று எங்கேயோ லயித்துப் போயிருந்தது.

'வெள்ள வாய்க்காலிலே தண்ணீர் கரை புரண்டோடிக்கொண்டிருக்கிறது. இப்பொழுது குளம் நிறைந்து தண்ணீர் பெருக்கெடுத்து விடும். தன்னுடைய நெற் பயிர்கள் கீழே விழுந்து உருக்குலைந்துவிட்டன. நெற் கதிர்கள் உதிர்ந்து வெள்ளத்துடன் அள்ளுண்டு போய்க்கொண்டிருக்கின்றன' என்று அவன் எண்ணி ஏங்கினான்.

காமாட்சி களஞ்சிய அறைக்குப் போனாள். அது வெறுமனே கிடந்தது. அதைப் பார்த்ததும் அவளுக்கு அழுகை விம்மிக்கொண்டு வந்தது. அங்கே நிற்க தாங்காமல் வெளியே வந்தாள். ராமு 'நாளைக்கும் தாரியாம்மா பாற்கஞ்சி' என்று கெஞ்சிக் கேட்டான். அவன் கஞ்சி குடித்த கோப்பை அவளுக்கு முன்னே காலியாகக் கிடந்தது.

அநேகநாள் பழக்கத்தினாலே 'நாளைக்....' என்று மட்டுமே அவளால் சொல்லமுடிந்தது. அந்த அரைகுறையான வார்த்தை முருகேசன் வயிற்றிலே நெருப்பை அள்ளிக்கொட்டியது.

No comments:

Post a Comment