நெல்லை க.பேரன்
'மீண்டும் அறிவிக்கின்றோம், இன்று மாலை 6.30 மணிக்கு விநாயகர் ஆலய முன்றிலில் நடைபெறவுள்ள பாலர் பாடசாலைக் கலைவிழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கவியரங்கும் பட்டி மன்றமும் நடைபெறும், கவியரங்கில் பிரபல கவஞர்கள் ஏகாம்பரமும், முடியரசன்.....'
தற்செயலாகத் தெருப்பக்கம் வந்த கவிஞர் ஏகாம்பரத்திற்குத் தூரத்தே அறிவிப்புச் செய்து கொண்டுபோன ஒலிபெருக்கி பூட்டிய கார் ஓடி, முடக்கில் திரும்பி ஊர் ஒழுங்கைக்குள் இறங்குவது தெரிகிறது. அவரது நெஞ்சம் பெருமிதத்தால் துள்ளுகிறது. சங்கக் கடையடியில் சாமான் வாங்க வந்த பலரும் இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் ஏகாம்பரத்தையும் திரும்பிப் பார்க்கிறார்கள். தன்னைப் பிரபல கவிஞர் என்று இந்த ஒலி பெருக்கியில் எத்தனை தரம் சொல்லப் போகிறார்கள்? இன்றிரவு மேடையில் வரவேற்புரை, நன்றியுரை, இடையில் சாப்பாடு, தைதட்டல்கள் என்று இத்யாதி நிகழ்ச்சிகளையும் மனதுள் அசை போட்டவாறே ஏகாம்பரம் வீட்டிற்குத் திரும்பினார். இரண்டொருத்தர், 'என்ன மாஸ்டர்.... உங்கட பேரும் சொல்லிக் கொண்டு போறாங்கள். என்ன கூட்டமாம்....' என்று கேட்டு வைத்தார்கள்.
நிமிர்ந்த நன்னடையுடன் வீடு சென்ற ஏகாம்பரம் மாஸ்ரர் நிலைக்கண்ணாடியின் முன்பாகக் கம்பீரமாக நின்று கொண்டு தான் எழுதி வைத்த கவிதையை வாசித்துப் பார்க்கிறார். தலைமை வகிக்கப்போகும் பிரபல கவிஞரைப் புகழ்ந்து எழுதிய வசனங்களை வாசித்து மகிழ்கிறார். இந்த அலங்காரம், இந்தச் சொல்லடுக்கு, எதுகை மோனையில் தலைவர் கிறங்கி இனி ஒவ்வொரு கவியரங்கிலும் தன்னை அழைக்கச் சொல்லிப் பொடியனிடம் சிபார்சு செய்ய வேண்டும் என்று நினைத்தார். தலைவர் ஊரில் செல்வாக்குள்ளவர். அவரைக் கவிதையில் வளைத்துப் போட்டுக் கொண்டால் பல காரியங்களைச் சாதிக்கலாம், என்ற நினைப்புடன் தலைவரின் கவிதைகள் கம்பனை ஞாபகமூட்டும் என்றும் புதுயுகக் கவிஞன் பாரதிகூடச் சில இடங்களில் தோற்றுவிடுவான் என்றும் வசனங்களை அடுக்கி இருந்தார்.
ஆள்பாதி ஆடைபாதி என்பதைப் புரிந்து கொண்ட மாஸ்ரர் விழாக்குழுவினர் சொன்னபடி இரவு எட்டு மணிக்கே புறப்பட ஆயத்தமாகிறார். அன்று பின்னேரம் முதலே அவரது புறப்பாட்டைப் பக்கத்து வீடுகளுக்குக் கதையோடு கதையாக விளப்பரம் செய்து கொண்டிருந்த அவரது மனைவி அவசர அவசரமாக இடியப்பம் அவித்துக்கொடுக்கிறார். இரவு உணவை முடித்துக்கொண்டு ஏற்கனவே கழுவித் துடைத்து வைத்திருந்த சைக்கிளையும் ரோச் லைற்றையும் எடுத்துக் கொண்டு புறப்படுகிறார். திருமணத்தின்போது வாங்கிய பட்டு வேட்டியையும் நேஷனலையும் பட்டுச் சால்வையையும் இன்னமும் பாதுகாத்து வைத்து அவற்றைக் கம்பீரமாக அணிந்து புது மாம்பிள்ளைபோலச் சைக்கிளில் ஏறிய மாஸ்ரரைக் குச்சொழுங்கை முடக்குத் திரும்பி மறையும் வரைக்கும் கனிவோடு பார்த்து வழியனுப்பி வைக்கிறார் மனைவி.
சுற்றிவர இராணுவ முகாம்கள் இருந்தாலும் பாதுகாப்பு வலைய எல்லையைத் தாண்டிச் சுமார் மூன்று மைல்கள் உள்ளுக்கே மாஸ்ரரின் வீடு. இந்த காரணத்தாலும் ஆமிக்காரர் இப்ப இரவில் வெளிக்கிட மாட்டினம் என்ற தளராத நம்பிக்கையிலும் மாஸ்ரர் எவ்வித பயமும் இல்லாமல் தெருவில் உள்ள பள்ளங்களை விலத்தி மெதுவாகச் சைக்கிளில் ஊர்ந்து சென்றார். மாஸ்ரரின் மனதுக்குள் உள்ளூர இப்படியான நிகழ்ச்சிகளுக்குக் காரில் போய் இறங்கவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் ஏற்பாட்டாளர்கள் இந்தக் காலத்தில் பஸ்ஸிலும் சைக்கிளிலும் வரக் கூடியவர்களாகப் பார்த்தே எல்லா விழாக்கள் - நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்கின்றார்கள் என்பதால் கார்விடச் சொல்லிக் கேட்டால், கிடைக்கும் மேடைச் சான்சும் இல்லாமல் போய்விடும் என்பதால் மறுக்காமல் சைக்கிளிலேயே செல்வதை அவர் வழக்கமாக்கி விட்டிருந்தார்.
கலைவிழா நடைபெறும் இடத்தை தூரத்திலேயே ஒலிபெருக்கியிலிருந்து வரும் நிகழ்;ச்சிகளின் ஓசை உணர்த்திக் கொண்டிருந்தது. வழியில் நிகழ்ச்சிகளைப் பார்க்க ஏராளமான பெண்கள் கூட்டங் கூட்டமாகச் செல்வதைக் கண்டு பெருமிதப்பட்டார். விநாயகர் ஆலயத்தின் முன்னால் ஆலமரங்களின் நடுவே அழகான மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையின் பின்னால் பிரமுகர்களுக்கும், பேச்சாளர்கள், கவிஞர்களுக்கும் கதிரைகள் போடப்பட்டிருந்தன. சனம் திரளாக வந்திருந்து கோவில் வீதியில் அமர்ந்திருந்தது. இரவு பதினொரு மணியாகியும் கலை நிகழ்ச்சிகள் மூடிந்தபாடில்லை. பாலர்கள் வேஷங்களைப் போட்டுக்கொண்டே நித்திரை தூங்கி விழுகிறார்கள் என்று அவசரம் அவசரமாக அவர்களை மேடைக்கு ஏற்றினார்கள். குறத்தி நடனம், நாடகம், பாட்டு, கோலாட்டம் என்று இரவு பன்னிரண்டு மணி வரைக்கும் நிகழ்ச்சிகள் நீண்டு விட்டன. இதைத்தொடர்ந்து பிரபல திரைப்பட நடிகரும் வானொலி புகழ் கலைஞரொருவரின் நிகழ்;ச்சியும் இடம் பெற்றது. இந்தக் கலைஞரைக் கடைசி வரைக்கும் நிறுத்தினால் சனம் இருக்குமே என்றும் இந்த மக்கள் கூட்டத்தில் தன் கவிதையைப் படித்துவிட வேண்டும் என்றும் ஏகாம்பரம் மாஸ்ரர் விரும்பினார். தலைவருடன் மெதுவாகக் கதைத்துப் பார்த்தார். பட்டிமன்றத்துக்கு வந்தவர்களும் நேரம் போகின்றது என்று முணுமுணுக்கத் தொடங்கினார்கள். அவர்கள் விஷயத்தில் முந்திக்கொண்டு கவியரங்கிற்கு முதல் பட்டிமன்றம் என்று செய்து விட்டார்கள்.
கலை நிகழ்சிகள் நடந்து கொண்டிருக்கும்போதே ஆலயத்தின் அருகில் உள்ள வீட்டிற்குக் கூட்டிச் சென்று பேச்சாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் சாப்பாடு கொடுத்தார்கள். வீட்டில் ஏற்கனவே சாப்பிட்டுவிட்டு வந்தாலும் சம்பிரதாயத்திற்காக மாஸ்ரர் நான்கு இடியப்பங்களைத் தின்றார். சூடாகப் பால் கிடைத்தது. விழா ஏற்பாட்டாளர்கள் உபசரிப்பில் குறையில்லாமல் இருந்ததை மாஸ்ரர் மனத்திறந்து பாராட்டினார்.
பட்டிமன்றத் தலைப்பு இன்றைய பிரச்சனைகளை ஒட்டியதாக இருந்தது. மாலை 7 மணிக்கே நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி விட்டதாலும் நிகழ்ச்சிகளின் பட்டியல் நீண்டு விட்டதாலும் திரைப்படக் கலைஞரின் நிகழ்ச்சி முடியவே சனம் மெல்ல மெல்லக் கலைய ஆரம்பித்து விட்டது. பட்டிமன்றம் முடிந்ததும் ஆலயத்திற்கு அருகில் வசிக்கும் சிலர் மட்டும் கண்களைக் கசக்கிக்கொண்டு விழித்திருந்தார்கள். சிறுவர்கள் மேடைக்கு முன்னால் நித்திரையாகி விட்டார்கள். கவியரங்கம் ஆரம்பமாகும்போது சில பெண்கள் தூங்கிக் கொண்டிருந்த பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு புறப்பட்டு விட்டார்கள். இதற்கிடையில் நிலைமை மோசமாவதைப் புரிந்துகொண்ட கவிஞர் முடியரசன் கவியரங்கத் தலைவருடன் காதுக்குள் ஏதோ குசுகுசுத்தார். அவரே முந்திக்கொண்டு முதற் கவிதையைப் படிக்க ஆரம்பித்தார். பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டு வந்து ஒவ்வொரு வரியையும் இரண்டு தடவைகள் திருப்பித் திருப்பி வாசித்தார். முன்னால் இருந்த நாலு பெண்களும் நித்திரையாகிவிட்டார்கள். மேடை அமைப்பாளர்கள் அவசரம் அவசரமாகப் பின்புறமாக மேடை அலங்காரங்களைக் கழற்றிக் கொண்டிருந்தார்கள். அண்மையில் உள்ள வீட்டுக்காரர் மாத்திரம் மேடையின் அருகே நின்று கொண்டிருந்தார். அவரும் நிகழ்;ச்சி முடிந்ததும் மேசையில் விரித்த தன்னுடைய கம்பளத்தை எடுத்துக் கொண்டு போவதற்காகவே நின்று கொண்டிருந்தார்.
நேரம் அதிகாலை ஒன்றரை மணியாகிவிட்டது. நிலைமையை அவதானித்த தலைவர் முடியரசனின் கவிதை முடிந்ததும், நிடீரெனக் கவியரங்கத்தை முடித்து வைத்தார். பிரபல கவிஞர் ஏகாம்பரத்திற்கு ஒரே ஏமாற்றம்... கடைசி கவிஞர்களும் ஏனைய கவிஞர்களும் ஒலிபெருக்கிச் சொந்தக்காரரும், கம்பளச் சொந்தக்காரருமாவது நமது கவிதையைக் கேட்டிருப்பார்களே என்று ஆதங்கபட்டார். மனதுள் தலைவரைச் சபித்தார். நிகழ்சியின் ஏப்பாட்டாளர்களையும் சபித்தார்.
ஒரு விழாவின் ஆரம்பத்தில் நடத்த வேண்டிய கவியரங்கு நிகழ்ச்சியைக் கடைசியாக அதுவும் விடிய ஒன்றரை மணிக்கு நடத்தினால் எவனய்யா உட்கார்ந்து கேட்பான்? கவிதை என்ன சிலுக்குவின் நடனம் மாதிரியா? அல்லது கமலஹாசனின் டிஸ்கோவா? என்று தலைவர் தமது வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்.
பிரபல கவிஞர் ஏகாம்பரம் தமது அரங்கேறாத கவிதைக் கட்டுகளை மடித்து மடியில் செருகினார். சைக்கிளில் ஏறி அமர்ந்தார். மங்கிய ரோச் வெளிச்சத்தில் சோர்வுற்ற மனத்தோடு அவர் பள்ளங்களை விலத்தி ஓடிக் கொண்டிருந்தார். வழியில் தனிமைப் பயத்தைப் போக்குவதற்காகத் தேவாரங்களை வாய்விட்டு மெதுவாகப் பாடிக்கொண்டே வந்தார். ஆனால் என்ன பரிதாபம்... நாற்சந்தி ஒன்றில் படுத்திருந்த தெரு நாய் ஒன்று ஊளையிட்டதுதான் தாமதம் சுமார் பத்துக்கும மேற்பட்ட தெருநாய்கள் கவிஞரைகச் சுற்றி வளைத்துக் கொண்டன. 'டிக்... அடிக்...டிக்...' என்று கத்திக் கொண்டே கவிஞர் விரைவாகச் சைக்கிளை உழக்கினார். வேகமாகப் பின்னால் வந்த நாய் ஒன்று அவரது வலது காலில் பலமாகக் கவ்வியது. மாஸ்ரர் சாக்கடை ஓடும் கானுக்குள் சரிந்து விழுந்தார். இன்னொரு நாயும் ஓடிவந்து கவ்வியது. பட்டு வேட்டி கிழிந்து விட்டது. காலில் இரத்தம் கசிந்தது. வேலி வரிச்சுத் தடியொன்றை உருவிக் கழற்றித் திரைப்படக் கதாநாயகன் போலச் சிலம்பம் சுழற்றினார். நாய்கள் விலகி ஓடினாலும் குரைப்பதை விட்டபாடில்லை. மடிக்குள் சொருகிய கவிதைத் தாள்கள் தெருவில் விழுந்து சிதறின. எப்படியோ சமாளித்துக்கொண்டு இரத்தக்கசிவையும் பாராமல் அதிகாலை இரண்டரை மணிக்கு வீடு வந்து சேர்ந்தார். கவிஞரின் கிழிந்த பட்டு வேட்டியையும் சாக்கடை அழுக்கடைந்த நேஷனலையும் ஈரலிப்பான சரிகைச் சால்வையையும் கண்ணாடி உடைந்துபோன ரோச் லைற்றையும் இரத்தம் கசியும் கால்களையும் கண்ட மனைவி ஐயோ என்று ஒப்பாரி வைத்தாள்.
யாரோ திருடர்கள் புகுந்து விட்டார்கள் என்ற பயத்தில் பக்கத்து வீட்டுகு;காரர்கள் கூட வந்து பார்க்கவில்லை. நன்றாக விடிந்ததும் மாஸ்ரரைத் தட்டிவான் ஒன்றில் ஏற்றிய மனைவி அரசினர் வைத்தியசாலையில் சேர்ப்பித்தார்.
பிரபல கவிஞர் ஏகாம்பரம் இப்போது விசர்நாய் கடிக்கு வைத்தியம் செய்வித்துக்கொண்டு இருக்கிறார்.
No comments:
Post a Comment