Friday, February 6, 2015

கூடுகள் சிதைந்தபோது.........

அகில்                                          
கோடை வெயில் அனலாய்க் கொதித்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது விசிறி விட்டுப்போன காற்றில் மட்டும் லேசாய் ஈரப்பதன். வீட்டுக்குள் இருக்க அலுப்பாய் இருக்க இந்தப் பூங்காவில் வந்து அமர்ந்துகொண்டேன். எவ்வளவு நேரம்தான் அந்த நான்கு சுவர்களையும் பார்த்துக்கொண்டிருப்பது.....? கண்தொடும் தூரத்தில் பள்ளிச்   சிறுவர்கள் ஊஞ்சலாடிக்கொண்டு இருக்கிறார்கள். சற்றுத் தூரத்தில் இரண்டு இளவட்டங்கள் நெருக்கமாய் அமர்ந்து, கைகளைப் பிணைத்தபடி உலகையே மறந்து இருக்கின்றனர். அந்த மரத்திற்கு கீழ் அமர்ந்திருக்கும் சீனநாட்டுச் சோடி ஒவ்வொருநாளும் இதே நேரத்திற்கு இங்கே வந்து அமர்ந்து விடுகிறார்கள். அந்த வயது முதிர்ந்த ஆப்கான் கிழவனும், மொட்டாக்கணிந்த அவன் மனைவியும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். என்ன சந்தோசமான வாழ்க்கை! திருப்தி எல்லா முகங்களிலும் பிரதிபலிக்கின்றன. எல்லோரும் சந்தோசமாய்.... நிம்மதியாய்..... மகிழ்ச்சியாய்.....

நான் மட்டும்......?

நான் மட்டும் ஏன் இப்படி...?

உள்ளும் புறமும் ஏதோ அனல் என்னைச் சுட்டெரிப்பதாய் நெளிகிறேன்.

தனிமை...!

வெறுமை....!

நெஞ்சிலே கனம்...!

தேசந்தாண்டி வந்தாலும் இன்னும் அந்த அச்ச உணர்வுகள் என்னைவிட்டு விலகவில்லை. கனவிலும் நனவிலும் கரிய பிசாசுகள் என்னை துரத்துவதாய் ஏதோ பிரமை. 'ஓடு... ஓடு...' என்று ஏதோ ஒரு குரல் என்னை உந்தித்தள்ளுகிறது. மண்டைக்குள் வண்டு குடையுமாப்போல், ஏதோ வாகனம் ஓடுமாப்போல் சதா அதிர்வுகள்.....

கடந்து போன பலரும் தன்னந்தனியாய் உட்கார்ந்திருந்த என்னை ஒருவிதமாய்ப் பார்த்துவிட்டு நகர்ந்தனர். என் நெஞ்சுக்குள் வெடித்துச் சிதறும் ரணங்களின் வலிகள் அவர்களுக்கு எங்கே புரியப்போகிறது. சரியாக வாரப்படாத முடி..... சவரம் செய்யப்படாத முகம்.... கசங்கிப்போன உடை..... கையில் சிகரெட்டு..... நானா இது....? எனக்கே நம்பமுடியவில்லை!

அதுசரி. காலையில சாப்பிட்டனானோ......?

வெளிக்கிடேக்கை கதவை சரியாக பூட்டினனானோ......?

அது இருக்கட்டும்.

ம்.... என்ர வீடு எங்க இருக்குது?

'சீ.... நான் இங்க வந்திருக்கக் கூடாது.'

'நான் இங்க வந்திருக்கக் கூடாது'

என்னுள் வெறுப்பு மண்டுகிறது. புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை எறியத்தான் பார்த்தேன். அந்தச் சிறுமி மட்டும் என் குறுக்கே ஓடிவராமல் இருந்தால். பத்திரமாக சிகரெட்டுத் துண்டைக் கொண்டுபோய் அணைத்துவிட்டு மரநிழலில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு நடக்கிறேன்.

எங்கே போகிறேன்.....? 

என் கால்கள் நடக்கச் சொல்கின்றன.

நான் நடக்கிறேன்.

எவ்வளவு தூரம்......? எத்தனை மைல்.....?

நடக்க நான் தயார். இப்படி நடந்தே ஊர்கள் கடந்துவந்த அகதித் தமிழன் நான்.

சந்தடியற்று நீண்டுகிடக்கிறது அந்த வீதி. ஒன்றிரண்டு கார்கள் ஓசைபடாமல் ஊர்ந்து செல்கின்றன. குடிமனைகள் தெருவின் இருமருங்கும் நெருக்கமாக அமைந்திருக்கின்றன. எல்லா வீடுகளும் ஒரே மாதிரியாக அமைக்கப்பட்டிருக்கின்றன. எதிலும் என் மனம் ஒட்ட மறுக்கிறது. தெருவின் ஓரமாய் பாதசாரிகள் நடப்பதற்காகப் போடப்பட்டிருந்த சீமெந்துத் தரையில் என் வெறும் கால்கள் தம்போக்கில் நடக்கின்றன.

' செருப்பு அணியக்கூட மறந்து போனேனோ..!

எனக்குள் நானே சிரித்துக்கொள்கிறேன்.

என் மேலாடையின் வியர்வை நாற்றம் எனக்கே அருவருப்பாக இருக்கிறது.

'இன்றைக்காவது போய்க் குளிக்கவேணும்'

ரோட்டைக் கடந்து மறுபக்கம் செல்ல நினைக்கிறேன். ஏதே சிறு சத்தம் என்னை தலைநிமிர வைக்கிறது.

அந்தக் கார் திடீர் என்று 'பிரேக்' போட்டு நிற்கிறது. பிறகு கொஞ்சம் பின்னுக்கு எடுத்து, கொஞ்சம் விலத்தி, பிறகு வேகமாக முன் நகர்கிறது. நடுவீதியில் ஏதோவொன்று வேகமாக அசைவதாய் தெரிகிறது. என் கண்கள் அந்த இடத்தில் நிலைக்குத்தி நிற்கின்றன. படபடவென்று இறக்கையை அடிக்கிறது ஒரு சிறு குருவி.

வெறிச்சோடிக்கிடக்கும் தெருவின் நடுவுக்கு என்னையும் அறியாமல் வந்துவிடுகிறேன்.

முதுகில் கருமையும்;, வயிற்றுப்புறம் இளமஞ்சளுமாய் அந்தக் குருவி துடிதுடிக்கிறது. இன்னொரு குருவி, அதன் ஜோடியாக இருக்க வேண்டும் இந்தக் குருவியைத் தவிப்புடன் சுற்றிச் சுற்றி நடக்கிறது. விழுந்து கிடக்கும் குருவியோ தன் சிறிய செட்டைகளை படபடவென்று அடிக்கிறது. தலையை இரண்டொரு முறை தூக்கிப் பார்த்துவிட்டு அப்படியே தொப்பென்று சரிய இறந்துபோகிறது. அதன் உடல் நசிந்துபோய், மேல் இறகு பிய்ந்துபோய்க் கிடக்கிறது. லேசாக இரத்தம் கசிகிறது.

குருவியை அடித்துவிட்டுக் கார் தன் போக்கில் போய் விட்டது.

'கண் மண் தெரியாமல் ஓட்டுறான். விசரன்..... இவன் எங்க போய் பிரளப்போறானோ.....' என் உதடுகள் முணுமுணுக்கின்றன.

ஜோடிக் குருவியால் தன் இணையின் பிரிவைத் தாங்க முடியவில்லை. தன் இறகுகளை விரித்து விரித்துக் காட்டி அதைத் தன்னுடன் பறந்து வருமாறு அழைக்கிறது. இழப்பை உணர்ந்து வேதனையுடன் இரண்டடி தூரம் பறப்பதும் திருப்பி வந்து இறந்து கிடக்கும் தன் ஜோடியை அலகாற் தொட்டுப் பார்த்துச் சத்தம் போடுவதுமாக அந்தரிக்கிறது. அங்குமிங்கும் பார்த்து தலையை ஆட்டியபடி நடக்கிறது.

தூரத்தில் இன்னுமொரு கார் வருகிறது. அது வருகின்ற வேகத்தில், அதன் சக்கரங்களுக்குள் அகப்பட்டு இறந்து கிடக்கும் சிறுகுருவியின் உடல் மேலும் சிதைந்து சின்னாபின்னமாகப் போகிறதே...! என் நெஞ்சு பதறுகிறது. என்னைப் போலவே அந்தக் குருவியும் பரிதவிக்கிறது. அச்சிறுகுருவியால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தன் ஜோடியை விட்டுப் போக மனமில்லாமல் அருகில் இருந்த மரத்தில் அமர்வதுவும், பின் தன் ஜோடியின் அருகில் போய் அமர்ந்து கொள்வதுவுமாக அதன் நிலை இருக்கிறது.

நான் அவசரமானேன். தெருவோரமாய் கிடந்த கடதாசி அட்டையை எடுத்துக்கொண்டு இறந்துகிடந்த குருவியை நெருங்கினேன். என் இதயம் வெடித்துவிடும் போல இருந்தது. இரத்தமும் சதையுமாய் ஏதேதோ நினைவுகள்; என் மனதைச் சூழ்ந்துகொள்கின்றன. மரக்கிளையில் அமர்ந்தபடி  அந்தக்குருவி என் செயலைக் கண்டதும் பயத்துடன் ஆரவாரிக்கிறது. ஒரு பூவைப் போல அந்தக் குருவியை மெதுவாகத் தூக்கியெடுத்து அட்டைப் பெட்டியில் கிடத்தினேன். என் விழிகள் நீரைச் சொரிந்து கன்னங்களில் வழிந்தோடுகிறது. இரு கைகளிலும் தூக்கி, முகத்திற்கு அருகே கொண்டு வந்து அந்தக் குருவியைப் பார்க்கிறேன்.

'இப்பிடித்தான் என்ர சசியும்......'

என் ஆன்மாவுக்குள் அடக்க முடியாத வேதனை. குலுங்கிக் குலுங்கி அழுகிறேன்.

இழப்பின் வலி அறிந்தவன் நான்.

குருவியின் இழப்பில் என் இழப்பின் வேதனை!!  எவ்வளவு நேரம் அப்படியே நடுத்தெருவில் அமர்ந்திருந்து அழுதேனோ தெரியவில்லை 

என்னை விலத்திக் கொண்டு அந்தக் கார் மெதுவாக முன்னகர்கிறது. அதில் அமர்ந்திருந்த வெள்ளையின வயோதிபர் மென்முறுவலுடன், சிறு வியப்புமாய் என்னை அங்கீகரித்துத் தலையசைத்துவிட்டுப் போவது தெரிந்தது.

ஒரு குழந்தையைப் போல பத்திரமாக அந்தக் குருவியை எடுத்து தெருவோரமாய் நின்றிருந்த மரத்தடியில் வைத்துவிட்டு அப்பால் நடக்கிறேன். அதன் இணை என்னை நன்றிப் பெருக்கோடு பார்க்கிறது.

 நடந்து நடந்து என் கால்கள் வலிக்கின்றன. அதைவிட என் மனம் வலிக்கிறதே.

அது இறக்க முடியாத சுமை. என் உயிரை அணுவணுவாய்க் கொல்லும் வேதனை. கனவிலும், நினைவிலும் சதா அந்த நிழல் விம்பங்கள். என் நினைவுகளைச் சுமந்தவள், என் கனவுகளின் உருவாக கருவான என் குழந்தை, இருவரையும் இழந்த நடைபிணம் நான்.

'நான் இங்க வந்திருக்கவே கூடாது...'

'நான் விசரன்..... நான் பைத்தியக்காரன்......' ஓலமிடும் என் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் வேகவேகமாக நடக்கிறேன்.

'ஐயோ அம்மா எனக்கு பயமாயிருக்குதம்மா. என்னைக் கட்டிப்பிடியுங்கோ அம்மா' மூத்தக்காவின் நான்கு வயது மகன் கயன் அனுங்குவது இப்போதும் என் காதுகளில் கேட்கிறது. நாலாபுறமும் குண்டுச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. அக்கா மகனை அள்ளியெடுத்து அணைத்துக்கொள்கிறா. கயன் அவள் மார்போடு ஒட்டிக்கொள்கிறான். அவன் உடல் பயத்தில் நடுங்குகிறது. கண்கள் குழிவிழுந்து, எலும்பும் தோலுமாய் கயன்....

'தம்பி இனி இங்க இருக்கேலாது போல இருக்குது. சனமெல்லாம் வெளிக்கிடுதுகள். நாங்களும் அங்கால போவம்.  எல்லாத்தையும் இழந்திட்டம். இனி இதுகளையும் இழக்க ஏலாது. பார் பொடியன் பயத்தில நடுங்கிற நடுக்கத்தை' என்கிறா மூத்தக்கா.

 

இரணைமடுவில இருந்து வெளிக்கிட்டு இது மூன்றாவது இடம். சனத்தோட சனமா அள்ளுப்பட்டுப் போய்க்கொண்டிருக்கிறம். எங்கட இடப்பெயர்வுக்கு ஒரு முடிவு இல்ல. எனக்கு சசியை நினைச்சால் தான் பயமும், கவலையும். சசிக்கு இப்ப ஏழு மாதம். வயிறு நல்லா வெளியில தெரியுது. அவளைப் பார்க்க எனக்கு நெஞ்சு பகீர் எண்டு இருக்கும். அவள் சுகம் பெலமாகப் பிள்ளையப் பெத்தெடுக்க வேணும் என்றதுதான் என்ர பிரார்த்தனையாக இருந்தது.

'அவளால வரிசையில நிக்க ஏலுமா?'

நான்தான் பாணோ, பருப்போ வரிசையில நிண்டு என்னென்டாலும் அவளுக்கு வாங்கிக்குடுக்கிறது.

'எத்தினைநாள் நான் சாப்பிட்டிட்டன் எண்டு பொய் சொல்லி அவளச் சாப்பிடப் பண்ணியிருப்பன்'

கலியாணங்கட்டி  ரெண்டு வருஷத்துக்குப் பிறகுதான் சசிக்கு வயித்தில குழந்தை தங்கினது. அந்த செய்தி கேட்ட சந்தோசம் நீடிக்காமல் இந்த நாட்டுப் பிரச்சினையும் தொடங்கிற்றுது.  அந்த நாள்த் தொடக்கம் ஆன சாப்பாடு கூட இல்லை. பயம்... பசி.... பட்டினியோட.... பிள்ளை எப்பிடி பிறக்கப் போகுதோ எண்டு சில நேரங்களில யோசிக்க பயமாகத்தான் இருந்துது.

ஒவ்வொருக்காலும் அவளப் பத்திரமா பங்கருக்குள்ள இறக்கி, ஏத்தி.....

எப்பிடி இருக்க வேண்டியவள். நாரி நோ, முதுகு நோ எண்டுகொண்டு அந்த வெறும் தரையிலயும், மண்புழுதீக்கையும் படுத்தெழும்பேக்க எனக்கு செத்திரலாம் போல இருக்கும். அவளும்தான் எலும்பும் தோலுமாய்.... ஆன சாப்பாடு கூட இல்லாமல்.....

எத்தினை இரவுகளை அவள் பங்கருக்குள்ளயே கழிச்சிருக்கிறாள். குண்டுக்குப் பயப்படுகிறத விட அவளுக்குப் பாம்பு, பூச்சியளுக்குத்தான் கூடப் பயம்.

ஆனால் கடைசியில.....

 

அடுத்தநாள் ஆமிக்காரங்கள் நாங்க இருந்த முள்ளிவாய்க்கால் பகுதியைச் சுத்திவளைச்சுட்டாங்கள். அக்கா வெளிக்கிடுவம் எண்டு சொல்லியும் யோசிச்சுக்கொண்டிருந்தது எவ்வளவு பிழையெண்டு அப்பதான் தெரிஞ்சுது. பீரங்கி, பல்குழல்.... பத்தாததுக்கு பிளேனுகளும் விட்டுவைக்க இல்லை. இந்தத் தாக்குதல் கடைசித் தாக்குதலாம் என்று எல்லாரும் கதைக்கினம். சனம் காடு கரம்பையளுக்குள்ளாலயும், கடல் பக்கத்தாலயும் வெளியேறப் போறதாய்க் கதைச்சவை. சனத்தோட சனமா நாங்களும் வெளிக்கிட்டம்.

சசிக்கு நடக்க ஏலாமல் இருந்துது. எனக்கு சில நேரம் கோபம் கூட வந்தது. இந்தப் பயங்கரத்தைத் தாண்டினால் காணும் எண்டு இருந்துது எனக்கு.

'கெதியா நடவப்பா. இன்னும் கொஞ்சத் தூரம்தான்' எண்டு அவளை அவசரப்படுத்தினேன். குண்டுகள் நாங்க வந்த பாதைகளில் எல்லாம் விழுந்து வெடிச்சுது. செத்தவெ சாக மிச்சமான ஆக்கள் நடந்துகொண்டிருந்தம்.

'ஐயோ... என்ர பிள்ளை. என்ர பிள்ளை...' திடீரென்று பின்னால வந்துகொண்டிருந்த அக்கா கத்திக் குழறினா. அக்காவின்ர கையில இருந்து ரெத்தம் வடிஞ்சுது. அவா கயனைத் தூக்கிக்கொண்டு வந்தவா. கயனுக்கு மண்டையில காயம்பட்டிருந்துது. நான் சசியின்ர கையில இருந்த உர 'பாக்'கில இருந்து ஒரு சீலையக் கிழிச்சு கயனுக்கு கட்டுப்போட்டன். 

'சசி நீ இதுகளைப் பார்க்கக்கூடாது. அங்கால போ'; மெல்லிய குரலில நான்தான் சொன்னன். அவள் விறைத்துப் போய் பார்த்துக்கொண்டு நின்றாள். தலை இல்லாத முண்டங்கள், கை கால் இழந்த உடல்கள் என்று எத்தினையக் கடந்து அவள் வந்துட்டாள். இதென்ன பெரிசா.....!!!

கட்டியிருந்த துணியையும் மீறிக்கொண்டு கயனுடைய தலையில இருந்து இரத்தம் வந்துகொண்டிருக்குது. கயன் அப்பவும் மயக்கமாகத்தான் கிடக்கிறான். பேச்சு மூச்சில்லை. அக்கா மயங்கி விழுந்திட்டா. கொஞ்ச நேரத்தால தானே கண்ணை முழிச்சிட்டா.

 

'வவுனியாவுக்குள்ள போயிட்டால் பிள்ளைக்கு ஏதாவது மருந்துபோடலாம்' யாரோ சொல்ல அத்தான் கயனைத் தூக்கிக்கொண்டு வேகவேகமாக நடந்தார். அக்காவும் அவருக்குப் பின்னால ஓடினா.

துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கிட்டவாகக் கேட்குது. ரெண்டுபக்கமும் சரியான சண்டை நடக்கிறமாதிரி சத்தம் கேக்குது. சனத்தோட சனமா நாங்களும் நடந்தம். சசியும் மூச்சிரைக்க நடந்து வந்தாள். நடக்க ஏலாமல் கஷ;டப்பட்ட சசியைப் பத்திரமா பிடிச்சுக்கொண்டு நடந்ததில நான் அக்காவையளையும் தவறவிட்டுட்டன்.

கண் எட்டுற தூரத்தில மண் மூடை அடுக்கியிருக்கிறது தெரிஞ்சுது. அது கடந்தால் அங்கால ஆமியின்; 'காம்ப்'தான் என்டு யாரோ சொன்னது கேட்டுது. சசியின்ர முகத்திலும் கொஞ்சம் தெம்பு வந்தமாதிரித் தெரிந்தது. நேரமும் இருட்டிக்கொண்டு வந்துது. என்ன பாம்பு, பூச்சி எங்க கிடக்குதோ தெரியாது. நான்; புதர்களை விலக்கிக்;கொண்டு சசிக்கு முன்னால நடக்கிறன். அப்பத்தான் அந்த இடிமாதிரிப் பெரிய சத்தம்....

நான் ஒரு புதருக்குள்ள விழுந்துகிடந்தன். எனக்குக் கையில காயம் பட்டு ரெத்தம் ஓடிக்கொண்டிருந்துது. கண்ணைத் திறக்க முடியாமல் கண்ணுக்குள் மண்ணும், தூசியுமாய்.... புழுதி மண்டலம் அடங்க சில நிமிசங்கள் எடுத்துது. அழுகுரல்களும், ஓலமும் தான்.....

'சசி.....'

'என்ர சசி....' நெஞ்சு பதைபதைக்க சசியைத் தேடினேன்.

சசி ஒரு தென்னைமரத்தோடு குப்புறக்கிடந்தாள். அவள் கிடந்த தோரணை....?

'ஐயோ சசி....!'

'ஓம் என்ர சசி செத்துப்போயிட்டாள்'

'என்ர சசி என்னை விட்டுட்டுப் போயிட்டாள்...'

'சசியோட சேர்ந்து வயித்தில இருந்த பிள்ளையும்........'

 

சன்னங்கள் அவளின்ர கழுத்து, நெஞ்சு, வயிறு என்று எல்லா இடங்களிலையும் துளைச்சிருந்துது. அவளின்ர ஒரு கால்ல முழங்கால் மட்டும்தான் இருந்துது. ஒரே இரத்தவெள்ளம்.

'ஐயோ சசி... என்ர சசி....'

'நான் என்ர சசிக்காக அழவா? இல்ல வயித்திலயே அழிஞ்சுபோச்சுதே அந்த என்ர குழந்தைக்காக அழவா.....?' முகத்திலயும்;, தலையிலயும் அடிச்சுக்கொண்டு அழுகிறன்.

'டொக்டர் ஆம்பிளைப் பிள்ளை என்டு சொன்னவர்...'

'நான் கண்ட கனவெல்லாம் அழிஞ்சுபோச்சுது. எனக்கினி ஆரு.....'

ஆறுதல்ப்படுத்த யாருமில்லாமல் பைத்தியக்காரனைப் போல கொஞ்சநேரம் அவளை என்ர மடியில போட்டுக்கொண்டு இருந்தன். என்ர காயத்தின்ர வலியோ, அதில இருந்து ரெத்தம் வடிகிறதோ எனக்கு தெரியேல்ல.

'எவளின்ர மடியில என்ர உயிர் போகவேணும் என்டு நினைச்சனோ, இன்றைக்கு  அவள் பிணமா என்ர மடியில.....'

துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் இப்ப இன்னும் கிட்டத்தில கேட்குது.

ஆட்கள் ஏதோ சொல்லிக்கொண்டு போகினம். என்ர காதில எதுவுமே விழேல்ல. குண்டுகள் விழுந்து வெடிச்சுப் புழுதி கிளம்புது. சன்னச் சிதறல்கள் நெருப்புப் பொறிகளாத்; தெறிக்குது. துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கிட்டவாய்க் கேட்குது. நாய், நரியளின்ர ஊளைச் சத்தங்களும் தூரத்தில கேட்குது.

'தம்பி அழுதுகொண்டிருக்க இப்ப நேரமில்ல. எழும்புங்க தம்பி' யாரோ ஒரு வயதானவர்  என்னை நெருங்கி என்ர நிலமையைப் பார்க்கிறார். என்ர கைக்காயத்தைப் பார்த்து தன்ர இத்துப்போன சாரத்தின்ர ஒரு மூலையைக் கிழிச்சுக் கட்டுப்போடுறார்.

 

'என்ர ஆருயிர் மனைவி.... அவளை இப்படியே போட்டுவிட்டு எப்படி வரஏலும். ஏழுமாதக் குழந்தை அவள் வயிற்றுக்குள்ளேயே கருகிப்பேச்சுது. இவையள் இல்லாமல் நான் மட்டும் இருந்து என்ன செய்யப்போறன்....?'

கிழவர் எங்கேயோ இருந்து ஒரு தகரத் துண்டைக் கொண்டு வாறார்.

'தம்பி இதால கிடங்கைக் கிண்டு......' என்றபடி அவர் வேகமாக அந்த தகரத் துண்டால மண்ணை கிளறுறார். எனக்குள்ள ஒரு வேகம்... அவரிட்ட இருந்து  அதைப் பிடுங்கி வேகவேகமாக மண்ணைக் கிளறுறேன். காய்ந்து வறண்ட நிலம் அவ்வளவு லேசில் குழியைத் தோண்டமுடியேல்லை. கிழவனும் ஏதோ தடியை முறிச்சு தன்ர பங்குக்கு நிலத்தை குத்தி எனக்கு உதவுறார்.

துவக்குச் சூட்டுச் சத்தம் இப்ப நல்லாக் கிட்டக் கேட்குது. சனம் விழுந்தடிச்சு ஓடுதுகள். ஆமிக்காரங்கள் ஏதோ கத்திக் கதைக்கிற சத்தம் கூடக் கேக்குது. வாகனங்களின்ர உறுமலும் கேட்குது. சனங்கள் என்னையும் கிழவனையும் பார்த்து புறுபுறுத்துக்கொண்டு போகினம்.

'அவையளுக்காக என்ர மனுசியின்ரயும்;, பிள்ளையின்டயும் உடம்பை நாய், நரி தின்னவும், காக்காய் கொத்தவும் இப்பிடியே போட்டிட்டு வரேலுமே?'

அதுக்குள்ள எரிகுண்டொன்று எங்களுக்கு அருகில் விழுந்து வெடிக்குது. ஒரு குடும்பம், இரண்டு, மூன்று குழந்தைகள் என்ர கண்ணுக்கு முன்னாலேயே எரிஞ்சு துடிதுடிக்கியினம். அதைப் பார்த்ததும் என்ர உடம்பெல்லாம் பதறத் தொடங்கிற்றுது. மரண பயம் என்னைப் பிடிச்சுட்டுது. அந்தக் கோரச் சாவைப் பார்த்ததும் எனக்கு எல்லாமே மறந்து போனது. எப்பிடியாவது ஓடித்தப்பவேணும். எனக்கு உடம்பெல்லாம் பதறத் தொடங்குது. கிழவனையும் இழுத்துக்கொண்டு நான் ஓடுறன்.

உடம்பைக் குறுக்கியும், குனிந்தபடியும், ஊர்ந்தும், தவழ்ந்தும் அந்த சென்ரிபொயின்ட்டை நெருங்கி விட்டம். சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம்..... என்ர கையைப் பிடிச்சிருந்த கிழவரினர் கைபிடி நழுவிப்போச்சுது. அவர் விழுந்துட்டார். நான் மற்ற சனத்தோட சேர்ந்து கைகளை மேல தூக்கிக்கொண்டு நடக்கிறன். இராணுவம் அப்பிடியே எங்களச் சுத்திவளைச்சுது. ஏதேதோ விசாரணைகளுக்குப் பிறகு எஞ்சியிருந்த எங்களை தங்களின்ர வாகனங்களில ஏத்திக்கொண்டு  முகாமுக்கு கொண்டுவந்தவை.

அங்கதான் பெரியக்காவைப் பார்த்தன். தலையில் காயம்பட்டிருந்த கயனும் இறந்து போய் அத்தான்தான்; வழியில ஒரு பாழுங்கிணத்துக்குள்ள அவனை தூக்கிப் போட்டுட்டு வந்தவராம்.

'நரியள் குதறாமல் என்ர மகன் பத்திரமா இருப்பான்..' அத்தான்  தலையில் கைவைத்தபடி திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டு இருக்கிறார்;. சசியின்ர செய்தி கேட்டதும் அக்காவால அழக்கூட முடியேல்லை. யாருக்காக அழுகிறது? எதை நினைச்சு அழுகிறது எண்டு தெரியேல்ல.

பிறகு முகாம் வாழ்க்கை, விசாரணைகள் எண்டு தொடர, அக்காதான் முகாமுக்கு வெளியில போய் என்னை வெளிநாட்டுக்கு அனுப்ப வேணும் எண்டு காரியங்களைச் செய்தவா. என்ர அம்மாவும், பெரியண்ணன் குடும்பம், சின்னக்கா குடும்பம், தங்கச்சி எல்லாரும் இங்க கனடாவிலதானே இருக்கினம்.

'ஆரு இருந்தென்ன என்ர சசியும்... பிள்ளையும் எனக்கில்லையே.....'

மூத்தக்கா தான் என்னை சின்னன்னில இருந்து வளர்த்தவா. என்னில சரியான பாசம்.

'நான் பெத்த பிள்ளையத் தான் இழந்திட்டன். உன்னையும் இழக்க என்னால ஏலாது' எண்டு என்னோட பிடிவாதமா நிண்டு என்னை இங்க அனுப்பிவைச்சது அவாதான்.

என்ர மனம் முழுக்க அந்த முள்ளிவாய்க்கால் காட்டுக்குள்ள தான் சுத்திக்கொண்டு இருக்குது.

'என்ர சசி.... என்ர பிள்ளை...'

'இவ்வளவு காலமும் எனக்குச் சோறு போட்டுத் தாய்க்கு தாயாய் இருந்து என்னைப் பார்த்தவள். அவளின்ர உடம்ப நல்ல விதத்தில அடக்கம் செய்யக் கூட என்னால முடியேல்லையே...'

'பாவி...'

'நான் பாவி.... மகா பாவி. அந்தக் குழந்தைய கையில வைச்சுக் கொஞ்சத் தான் ஏலாமல் போச்சு. கடைசியா நாய் நரியள் தான்...'

'ஐயோ... நினைச்சால் எனக்குப் பைத்தியம் தான் பிடிக்குது'

'நான் ஏன் இங்க வந்தன். நான் சுயநலக்காரன், எனக்கு என்ர உயிர்தான் பெரிசாப்போச்சுது.... சீ.... நான் விசரன்...'

'நான் விசரன்...'

என் கால்கள் வலியெடுக்கின்றன. நான் நடக்கிறேன்.

நடந்துகொண்டே இருக்கிறேன்.

 

(2010 ஆம் ஆண்டு, 'ஞானம்' சஞ்சிகை நடாத்திய, புலோலியூர் . சதாசிவம்; ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் முதலாம் பரிசு பெற்ற கதை)

                                ஞானம், ஏப்ரல் 2011

                                             உயிரோசை, ஏப்ரல் 2011