Saturday, January 22, 2011

தாய்மை

எம்.ரிஷான் ஷெரீப்














ருள்ஜோதி தனது வலக்கை விரல்நுனிகளைக் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டாள். அந்தக் கன்னம் வீங்கிப் போயுமிருந்தது. பல் வலி மூன்று நாட்களாகத் தாங்கமுடியவில்லை. முன்பைப் போல ஏதாவது வருத்தமென்றால் விழுந்து படுத்துக் கிடக்கவாவது முடிகிறதா என்ன? விடிகாலையில்தான் எத்தனை வேலைகள். கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டும். வீட்டை, முற்றத்தைக் கூட்டித் துப்புரவாக வைத்துக் கொள்ளவேண்டும். மூத்தவளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பத் தயார் செய்யவேண்டும். அதிலும் அந்தப் பிள்ளை சோம்பேறிப் பிள்ளை. மெதுவாக எழுப்பி எழுப்பிப் பார்த்தும் எழும்பாவிட்டால் கொஞ்சம் சத்தம் போட்டுத்தான் எழுப்பவேண்டியிருக்கும். விடுமுறை நாளென்றால் ஜோதி அவளைக் கொஞ்சம் அவள் பாட்டிலே தூங்கவிடுவாள். அவள் எழும்பித்தான் என்ன செய்ய? வளர்ந்த பிறகு இப்படித் தூங்கமுடியுமா? அதற்கு இளையவள்.. ஜோதி எழும்பும்போதே எழும்பிவிடுவாள். இப்பொழுதுதான் நடக்கத் தொடங்கியிருக்கும் வயது. அவளை இடுப்பில் வைத்துக் கொண்டு வீட்டு வேலைகளைச் செய்யமுடியுமா? பாலைக் கொடுத்து, கொஞ்சம் இறக்கிவிட்டால் அது ஓடிப் போய் எதையாவது இழுக்கத் தொடங்கும். ஒரு முறை இப்படித்தான். குழந்தையின் சத்தமே இல்லையே என்று தேடிப் பார்த்தால் அது வாசலுக்கருகில் படுத்திருந்த பூனையினருகில் உட்கார்ந்து அதன் வாலை வாயில் போட்டுச் சப்பிக் கொண்டிருந்தது. ஜோதி சத்தம் போட்டு ஓடி வந்து பூனையைத் துரத்திவிட்டு குழந்தையைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டாள். பயந்துபோனது சத்தமாக அழத் துவங்கியது. பூனையின் மென்மையான மயிர்களெல்லாம் அதன் வாய்க்குள் இருந்தது. அவள் பூனையைத் திட்டித் திட்டி, அவளது சுட்டுவிரலை அதன் வாய்க்குள் போட்டுத் தோண்டித் தோண்டி பூனையின் முடிகளை எடுத்துப் போட்டாள். அது இன்னும் கத்திக் கத்தி அழத் தொடங்கியது. முருகேசு இருந்திருந்தால் அவள்தான் நன்றாக ஏச்சு வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பாள்.
 குழந்தை சிணுங்கினாலே அவனுக்குப் பிடிக்காது. அவளிடம் வள்ளென்று எரிந்துவிழுவான். அவள் அவனுடன் ஒன்றுக்கொன்று பேசிக் கொண்டோ, சண்டைக்கோ போக மாட்டாள். பொறுத்துக் கொண்டு போய்விடுவாள். என்ன இருந்தாலும் குழந்தைகள் மேலுள்ள பாசத்தால்தானே இந்த மாதிரி நடந்துகொள்கிறான். அந்த மீனாளுடைய கணவன் போல குடித்துவிட்டு வந்து சண்டை பிடிக்கிறவனென்றால் கூடப் பரவாயில்லை. பதிலுக்குச் சண்டை போடலாம். இவன் தன் பாட்டில் காலையில் எழும்பி, சாயம் குடித்துவிட்டு, அவள் அவித்துக் கொடுப்பதைச் சுற்றி எடுத்துக் கொண்டு தோட்டத்துக்கு வேலைக்குப் போனால் பொழுது சாயும்போது வந்துவிடுவான். அதன்பிறகு குழந்தைகளோடு வயல் கிணற்றுக்குப் போய் குளித்துக் கொண்டு வந்தானானால், அவள் இரவைக்குச் சமைத்து முடிக்கும் வரை, விளக்கைப் பற்ற வைத்துக் கொண்டு பிள்ளைகளுடன் கதைத்துக் கொண்டிருப்பான். மகன் பாலன் அப்பாவிடம் ஏதாவது கதை சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்பான். அவனையும் அடுத்தவருடம் பள்ளிக் கூடத்தில் சேர்க்க வேண்டும். மூத்தவளையும், இளையவளையும் போல இல்லை அவன். சரியான சாதுவான பையன். ஒரு தொந்தரவில்லை. வேலைகளும் சுத்தபத்தமாக இருக்கும். ஜோதியும் எப்பொழுதாவது பகல்வேளைகளில் அரிசி, பருப்பு, வெங்காயமென்று வாங்க சந்திக் கடைக்குப் போவதென்றால் தொட்டிலில் சின்னவளைக் கிடத்திவிட்டு மூத்தவளிடம் குழந்தையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு அவனைத்தான் கூட்டிப் போவாள். அவனும் ஒரு தொந்தரவும் தராமல் அவளோடு கடைக்கு வந்து அவள் சாமான்கள் வாங்கிமுடியும்வரை பார்த்திருப்பான். அங்கு கண்ணாடிப் போத்தல்களில் விதவிதமாக இனிப்புப் பொருட்கள் நிறைந்திருக்கும். அதையே பார்த்துக் கொண்டிருப்பான். அவளுக்குப் பாவமாக இருக்கும். அவனுக்கும் மற்றப் பிள்ளைகளுக்கும் சேர்த்து அதில் வாங்கிக் கொள்வாள். அவனது பங்கை அவனிடம் உடனே கொடுத்துவிடுவாள். எனினும் அவன் உடனே சாப்பிட்டு விடுவானா என்ன? அப்படியே எடுத்துக் கொண்டு வந்து அக்கா, தங்கையுடன் உட்கார்ந்து யார் கூட நேரம் சாப்பிடுகிறார்களெனப் போட்டிபோட்டுக் கொண்டு ஒன்றாய்ச் சாப்பிடுவதில்தான் அவனுக்குத் திருப்தி.
வர வர பல்வலி கூடிக் கொண்டே வருவது போல இருந்தது. 'பெரியாஸ்பத்திரியில் மருந்தெல்லாம் சும்மா கொடுக்கிறார்கள்... போய் மருந்து வாங்கு...ஒரே மருந்தில் வலி போய்விடும்' என்று பீலியில் தண்ணீர் எடுக்கப் போனபோது சுமனாதான் சொன்னாள். அவள் சொன்னால் சரியாகத்தானிருக்கும். அவள் பொய் சொல்லமாட்டாளென்று ஜோதிக்குத் தெரியும். அடுத்தது இந்த மாதிரி விஷயத்தில் பொய் சொல்லி அவளுக்கென்ன இலாபமா கிடைக்கப் போகிறது? அவள்தானே அயலில் இருக்கிறவள். அவசரத்துக்கு உடம்புக்கு முடியாமல் போனால், சின்னவளைத் தூக்கிக் கொண்டு பீலியடிக்குப் போயிருந்தால் அவள்தானே தண்ணீர் நிரம்பிய குடத்தை வீட்டுக்குக் கொண்டு வந்து தருகிறவள். பீலித் தண்ணீர் எப்பொழுதும் குளிர்ந்திருக்கும். அதனால் வாய் கொப்பளித்தபோதுதான் முதன்முதலாகக் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு பல் வலிக்கிறதென்று முகத்தைச் சுழித்துக்கொண்டு அப்படியே குந்திவிட்டாள். அயலில் முளைத்திருந்த வல்லாரை இலைகளைக் கிள்ளிக் கொண்டிருந்த சுமனாதான் அருகில் வந்துபார்த்தாள். வாயைத் திறக்கச் சொல்லிப் பார்த்தாள். கடைவாய்ப்பல்லில் ஒரு ஓட்டை. 'அடியே ஜோதி..எவ்ளோ பெரிய ஓட்டை..வலிக்காம என்ன செய்யும்? இப்பவே போய் மருந்தெடடி' என்றாள். உடனே போய் மருந்தெடுக்க காசா, பணமா சேர்த்துவைத்திருக்கிறாள் ஜோதி? அடுத்து இந்தக் காட்டு ஊருக்குள் இருக்கும் நாட்டுவைத்தியர் கிழமைக்கு நான்கு நாட்கள்தான் கசாயம், குளிகை, எண்ணெய்யென்று கொடுப்பார். எல்லா வியாதிகளுக்கும் ஒரே மருந்து. அதற்கும் வெற்றிலையில் சுற்றி எவ்வளவாவது வைக்கவேண்டும். கோயிலிலென்றால் ஒரு சாமியார் இருக்கிறார். ஏதாவது தீன்பண்டம் செய்து எடுத்துக் கொண்டு, ஒரு கொத்துவேப்பிலையும் கொண்டுபோனால் தீன்பண்டத்தை வாங்கிக் கொண்டு அந்த வேப்பிலைக் கொத்தால் வலிக்கிற இடத்தில் தடவிக் கொடுப்பார். வலி குறைந்தது மாதிரி இருக்கும்.
சுமனா நகரத்துக்குப் போகச் சொல்கிறாள். எம்மாம் பெரிய தூரம். அந்தக் கிராமத்திலிருந்து யாரும் முக்கிய தேவையில்லாமல் நகரத்துக்குப் போக மாட்டார்கள். நகரத்துக்குப் போவது அவ்வளவு லேசுப்பட்ட காரியமா? எவ்வளவு தூரம் நடக்க வேண்டியிருக்கிறது? போகும்போதென்றால் பரவாயில்லை. பள்ளமிறங்கும் வீதி. பத்துக் கிலோமீற்றரென்றாலும் நடந்துகொண்டே போகலாம். வரும்போதுதான் மேடு ஏறவேண்டும். அதுவும் தேயிலைத்தோட்டத்து வீதியில் நடக்கும்போது நிழலெங்கே இருக்கிறது? வெயிலில் காய்ந்து காய்ந்து மேலே ஏறி வீட்டுக்கு வந்துசேரும்போது உயிரே போய்விடுகிறது. நகரத்தில் காசு நிறையக் கொடுத்தால், குணமாக்கியனுப்பும் ஆஸ்பத்திரி கூட இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறாள். ஒரு முறை கங்காணியையா வீட்டு ஆச்சி, தோட்டத்தில் செருப்பில்லாமல் நடக்கும்போது கண்ணாடியோட்டுத் துண்டொன்றுக்கு காலைக் கிழித்துக் கொண்டு, இரத்தம் கொஞ்சம்நஞ்சமா போனது? தோட்டமே பதறிப் போனது கிழவி மயக்கம் போட்டதும். துரைதான் தனது காரில் ஏற்றி நகரத்துக்கு அனுப்பிவைத்தார். உயிரில்லாமல்தான் வீட்டுக்கு வரும் என்று தானே தோட்டமே பேசிக் கொண்டது? காயத்தில் பால் போல வெள்ளைப் பிடவையைச் சுற்றிக் கொண்டு ஆச்சி வந்து சேர்ந்தது. கங்காணி வீடு வரை கார் வந்து நின்றதும் ஆச்சி எதுவும் நடக்காத மாதிரி தானாகவே நொண்டி நொண்டி நடந்து வீட்டுக்குள் போனதுதானே அதிசயம். அதற்குப் பிறகும் ஆச்சி செருப்புப் போட்டுக் கொள்ளவில்லை எப்பொழுதும். அவர் மட்டுமல்ல தோட்டத்தில் யாருமே செருப்புப் போட்டுக் கொண்டு நடந்தால்தானே. அடுத்தது இந்தக் காடு மேடு பள்ளமெல்லாம் இந்தச் செருப்புப் போட்டுக் கொண்டு இலகுவாக நடக்க இயலுமா என்ன?
இரவெல்லாம் பல்வலியில் முனகினாள். கராம்பு, பெருங்காயம் எதையெதையோ எடுத்து வலிக்கும் இடத்தில் வைத்து கடித்துக் கொண்டு தூங்க முயற்சித்தாள். நித்திரை வந்தால்தானே? காலை எழும்பிப் பார்க்கும்போது கன்னத்தில் ஒரு பக்கம் வீங்கியுமிருந்தது. சுமனா சொன்ன மாதிரி உடனேயே ஆஸ்பத்திரிக்குப் போய்விட முடியுமா என்ன? எவ்வளவு வேலை இருக்கிறது? குழந்தைகள் பிறக்கும் முன்பென்றால் அவளும் தோட்டத்துக்கு கொழுந்து பறிக்கப் போய்க் கொண்டிருந்தாள். குழந்தை பிறந்த பிறகு பிள்ளையைப் பார்த்துக் கொள்ள ஒருவருமில்லையென்று அவளை வேலைக்குப் போகவேண்டாமென்று சொல்லிவிட்டான் முருகேசு. தோட்டத்துக்குப் போகாவிட்டால் என்ன? வீட்டில் எவ்வளவு வேலையிருக்கிறது? அவளது வீடு இருப்பது வீதியோடு காட்டுக்குப் போகும் மலையுச்சியில். கடைச் சந்திக்கு, கிணற்றுக்கு, பீலிக்கென்று கீழே இறங்கினால் திரும்ப வீட்டுக்கு வர ஒரு பாட்டம் மூச்சிழுத்து இழுத்து மேலே ஏறிவர வேண்டும். தினமும் தண்ணீருக்காக மட்டும் எத்தனை முறை இறங்கி ஏற வேண்டியிருக்கிறது? குடிசை வீடென்றாலும், சாணி பூசிய தரையென்றாலும் கூட்டித் துப்புரவாக வைத்துக் கொண்டால்தானே மனிதன் சீவிக்கலாம்? அத்தோடு தினமும் குழந்தை அடிக்கடி நனைத்துக் கொள்ளும் துணிகளையெல்லாம் துவைத்துக் காய்த்து எடுக்கவேண்டும். அந்தக் குளிரில் வெந்நீர் காயவைத்து குழந்தையைக் குளிப்பாட்டும் நாளைக்கு இன்னும் வேலை கூடிப் போகும். உடம்பில் தண்ணீர் பட்டதும் விளையாடும் குழந்தை, தண்ணீரிலிருந்து எடுத்ததும் ஒரு பாட்டம் அழும். மூத்தவள் இருக்கும் போதெனில், தங்கையைத் தூக்கிவைத்துக் கொள்வாள்தான். ஆனாலும் ஏழுவயதுப் பிள்ளையிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு அவளுக்கு ஒரு திருப்தியோடு வேலை செய்யமுடியாது.
முருகேசு காலையில் கொல்லைக்குப் போய் கை, கால் கழுவிக் கொண்டு வந்ததுமே சுடச் சுடச் சாயமும், உள்ளங் கையில் சீனியும் கொடுத்துவிட வேண்டும். அவன் குடித்து முடிப்பதற்கிடையில் அடுப்பில் வெந்திருப்பதை அது கிழங்கோ, ரொட்டியோ எடுத்து, ஒரு சம்பல் அரைத்துச் சுற்றிக் கொடுத்துவிடுவாள். ஒன்றும் கொடுக்காவிட்டாலும் அவன் ஒன்றும் சொல்லமாட்டான். ஆனால் வேலைக்குப் போகும் கணவனுக்கு ஒன்றும் சமைத்துச் சுற்றிக் கொடுக்காமல் அனுப்புவது எப்படி? பட்டினியோடு வேலை செய்யமுடியுமா? வீட்டில் சமைக்க ஒன்றுமில்லாவிட்டால் பரவாயில்லை. அவன்தான் வாரக் கூலி கிடைத்ததுமே ஒரு பை நிறைய சமையலுக்குத் தேவையான எல்லாமும் வாங்கிவந்து விடுகிறானே. குறை சொல்ல முடியாது. கொஞ்சம் கூடப் பணம் கிடைத்தால், பிள்ளைகளுக்கு பிஸ்கட்டுக்களும் கொண்டுவந்து கொடுப்பான். காலையில் அவன் கிளம்பிப் போனதற்குப் பிறகுதான் அவள் சாயம் குடிப்பாள். அதையும் முழுதாகக் குடித்து முடிப்பதற்கிடையில் குழந்தை அழத் தொடங்கும். ஓடிப் போய் அதைத் தூக்கிக்கொண்டு பாயில் படுத்திருக்கும் மூத்தவளைத் தட்டித் தட்டி எழுப்புவாள். பிறகு அவளை கிணற்றடிக்கு அனுப்பிவிட்டு, குழந்தைக்குப் பால் கொடுப்பாள். ஒரு வழியாக அதைத் தூங்க வைத்துவிட்டு, மூத்தவளுக்கு உணவைக் கட்டிக் கொடுப்பாள். இரவில் தண்ணீரூற்றி வைத்த எஞ்சிய சோற்றை, வெங்காயம், மிளகாய், ஊறுகாய் சேர்த்துப் பிசைந்து அவளுக்கு ஊட்டிவிடுவாள். பிள்ளையைப் பசியில் அனுப்ப முடியுமா? எவ்வளவு தூரம் நடக்கவேண்டும்? அவள் நன்றாகப் படிப்பதாக ஒரு முறை அவளது ஆசிரியையும் சொல்லியிருக்கிறார். அப்படியிருக்க தூரத்தைக் காரணம் காட்டி அவளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் இருக்கமுடியுமா? பிள்ளைகளை எப்படியாவது படிப்பிக்க வைத்து உயர்ந்த ஒரு நிலைக்குக் கொண்டு வரவேண்டுமென்றுதான் முருகேசுவும் அடிக்கடி சொல்வான். படிக்காவிட்டாலும் இந்தத் தோட்டத்தில் வேலை கிடைப்பது பிரச்சினையில்லைத்தான். ஆனாலும் படிப்பால் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் ஆயுள் முழுதும் தோட்டத்தில் கூலி வேலை செய்தாலும், கொழுந்து பறித்தாலும் கிடைத்துவிடுமா? அருள்ஜோதியின் சிறிய வயதில் இந்தத் தோட்டத்திலெங்கே பள்ளிக்கூடமொன்று இருந்தது? அதனால் ஒரு எழுத்துக் கூட அவளுக்குத் தெரியாது. முருகேசு பிறந்த தோட்டத்திலென்றால் ஐந்தாம் வகுப்பு வரை படிப்பிக்கக் கூடிய வைக்கோல் வேய்ந்த ஒரு சிறிய பள்ளிக் கூடம் இருந்தது. அதில் அவன் மூன்றாம் வகுப்பு வரை படித்திருக்கிறான். பிறகு அவனது அப்பா பாம்பு கொத்திச் செத்துப் போனதால், மாடு மேய்க்கவும், பால் கறந்து விற்கவுமே நேரம் சரியாக இருந்தது. அவனது அப்பாவைப் பாம்பு கொத்தியது கண்ணில். எவ்வளவு நாட்டுவைத்தியம் செய்தும் குணமாகவில்லை. பச்சிலை தேடி எத்தனை ஊருக்கு அலைந்திருப்பான் அந்தச் சிறுவயதில். கடைசியில் எதுவும் உதவவில்லை.
அருள்ஜோதி தினமும் இரவைக்குத்தான் சோறு சமைப்பாள். இரவில் எஞ்சியதையோ, காலையில் அவித்ததையோ அவளும் பிள்ளைகளும் பகலைக்கும் வைத்துச் சாப்பிடுவார்கள். அவளென்றால் பசியிலும் இருந்துவிடுவாள். பிள்ளைகளைப் பட்டினி போடுவதெப்படி? அவள் வளர்ந்த காலத்தில்தான் உண்ண இல்லாமல், உடுக்க இல்லாமல் கஷ்டத்தோடு வளர்ந்தாள். பிள்ளைகளையும் அப்படி வளர்ப்பது எவ்வாறு? ஆனாலும் பகலைக்குச் சோறு சமைப்பதைக் காட்டிலும் இரவில் சமைத்தால்தானே கணவன் சூட்டோடு சூட்டாக ருசித்துச் சாப்பிடுவான்? உழைத்துக் களைத்து வரும் கணவனுக்கு ஆறிய சோற்றைக் கொடுப்பது எப்படி? ஆசையோடு அவன் வாங்கிவரும் கருவாடோ, நெத்தலியோ, ஆற்றுமீனோ உடனே சமைத்துக் கொடுத்தால்தானே அவளுக்கும் திருப்தி? இரவைக்குப் பாரமாக ஏதாவது வயிற்றில் விழுந்தால்தான் நன்றாக நித்திரை வரும்..உடலும் ஆரோக்கியமாக வளருமென்று அவளது அம்மா இருக்கும்வரை சொல்வாள். மூத்தவள் இவள் வயிற்றிலிருக்கும் போதல்லவா அம்மா கிணற்றுக்குப் போகக் கீழே இறங்கும்போது வழுக்கிவிழுந்து மண்டையை உடைத்துக் கொண்டாள்? உரல் மாதிரி இருந்த மனுஷி. குடம் உருண்டு போய் வீதியில் விழுந்து, ஆட்கள் கண்டு அவளை வீட்டுக்குத் தூக்கிவரும்போதே உயிர் போய்விட்டிருந்தது. இப்படி நடக்குமென்று யார் கண்டது? விஷயம் கேள்விப்பட்டு தோட்டத்தில் வேலையிலிருந்த இவளும், முருகேசுவும் குழந்தை வயிற்றிலிருக்கிறதென்றும் பாராமல் ஓட்டமாய் ஓடி வந்தார்கள். குழந்தை பிறந்ததுமே அம்மாவின் பெயரைத்தான் அவர்கள் அதற்கு வைத்தார்கள். ஆனாலும் அப் பிள்ளையின் மீது கோபம் வரும்போதெல்லாம் அம்மாவின் பெயரைச் சொல்லித் திட்டுவது எவ்வாறு? அதனால் அதை ராணி என்று செல்லப் பெயர் வைத்தும் கூப்பிடத் தொடங்கினார்கள். அருள்ஜோதிக்கு அடிக்கடி அம்மாவின் நினைவு வரும். உடலில் ஏதாவது வருத்தம் வரும்போது, சுவையாக ஏதாவது சாப்பிடும்போது, அம்மா நட்டு வளர்த்த முற்றத்துத் தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கும்போது, அம்மா விழுந்த இடத்தைக் காணும்போது என்றெல்லாம் ஒரு நாளைக்குப் பல தடவைகள் அம்மாவை நினைத்துப் பெருமூச்சு விட்டுக் கொள்வாள். கொல்லைப் புறத் தோட்டத்தில் கத்தரி, வெண்டி ,பாகலென்று அவள் நட்டிருக்கும் மரக்கறிச் செடிகளுக்குத் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுவதிலும், களை பிடுங்குவதிலும், உரம் போடுவதிலுமே பின்னேரம் கழிந்துவிடும். இரண்டு மூன்று கிழமைக்கொரு முறை காய்களை ஆய்ந்து சந்திக் கடைக்குக் கொடுத்து செலவுப் புத்தகத்திலிருக்கும் கணக்கைக் குறைத்துக் கொள்வாள். வீட்டிலிருப்பதென்று சொல்லி சும்மா இருப்பதெப்படி?
சுமனா சொன்னபடியே அருள்ஜோதி பெரியாஸ்பத்திரிக்கு வந்திருந்தாள். தனியாகத்தான் வந்தாள். சுமனாவையும் கூட்டி வந்திருக்கலாம். கூப்பிட்டால் வந்திருப்பாள்தான். ஆனால், அவளும் வந்தால் இளையவை இரண்டையும் யாரிடம் விட்டு வருவது?  கீழ் வீட்டு சுமனாவிடம் இரண்டு குழந்தைகளையும் ஒப்படைத்துவிட்டு பள்ளிக்கூடம் செல்லும் மூத்தவளோடு வீட்டைப் பூட்டிக் கொண்டு பாதைக்கு வரும்போதே நன்றாக விடிந்திருந்தது. அவள் இதற்குமுன்பும் ஓரிரு முறை பெரியாஸ்பத்திரிக்குப் போயிருக்கிறாள்தான். ஆனால் அது நோயாளி பார்க்கத்தான். இப்படி மருந்தெடுத்து வரப் போனதில்லை. அதிலும் ஒருமுறை முருகேசுவின் சித்தி மலேரியாக் காய்ச்சல் வந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டதுமே, சுவையாக சோறு சமைத்து, பார்சல் கட்டி எடுத்துக் கொண்டு அவள்தான் முருகேசுவுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தாள். நோயாளிக்குச் சோறு கொடுக்கவேண்டாமென்று தாதி சொன்னதும் அங்கிருந்த வேறொரு நோயாளிக்கு அப் பார்சலைக் கொடுத்துவிட்டாள் ஜோதி. ஆஸ்பத்திரியென்றால் நோயாளியை அங்கேயே தங்க வைத்துக் கொள்வார்களென்றே அவள் எண்ணியிருந்தாள். அப்படியில்லையென்றும் மருந்து கொடுத்து உடனே அனுப்பிவிடுவார்களென்றும் சந்திக் கடை லலிதா சொன்னபிறகு தானே இன்று இங்கு வரவே அவளுக்கு தைரியம் வந்தது? அதன் நாற்றம்தான் அவளால் தாங்கிக் கொள்ளமுடியாதது. ஆஸ்பத்திரிக்குப் போய்வந்தால் சேலையெல்லாம் கூட அந்த வாசனைதான். அதற்காக பழையதைக் கட்டிக் கொண்டு போகமுடியுமா? இருப்பதிலேயே நல்லதைத்தான் உடுத்திக் கொண்டு போக வேண்டும். நகரத்துக்குப் போவதென்றால் சும்மாவா? சின்னவள்தான் கையை நீட்டி நீட்டி அழுதாள். சுமனா அவளைத் தூக்கிக் கொண்டு கொல்லையில் கூண்டுக்குள் இருந்த கிளியைக் காட்டப் போனதும்தான் அருள்ஜோதியால் வீதிக்கு வரமுடிந்தது.
பல் வலி தாங்கமுடியவில்லை. கைக்குட்டையைச் சுருட்டி கன்னத்தில் வைத்து அழுத்தியவாறுதான் ஆஸ்பத்திரிக்கு நடந்துவந்தாள். வந்து பார்த்தால் மருந்தெடுக்க கிட்ட நெருங்க முடியாதளவு சனம். விடிகாலையிலேயே வந்து நம்பர் எடுத்து எத்தனை பேர் காத்திருக்கிறார்கள்? அவளுக்குப் போன உடனேயே வைத்தியரை அணுக முடியுமா என்ன? வந்த உடனே அவளுக்கு நம்பர் எடுக்கவேண்டுமென்பது கூடத் தெரியாது. அருகிலிருந்த ஒரு பெண்தான் அவளை நம்பர் எடுக்கும்படி சொன்னாள். அவள் இரவே வந்து காத்திருந்து ஒருவாறு நம்பர் எடுத்துவிட்டாளாம். காலையில் ஒரு மணித்தியாலம் மட்டும்தான் நம்பர் வினியோகிப்பார்கள். யாருக்குத் தெரியும் இது? அருள்ஜோதி அந்த நேரத்தைத் தாண்டி வந்திருந்தாள். இப்பொழுது என்ன செய்வது? எல்லா நோயாளிகளுக்கும் மருந்து கொடுத்த பிறகு நேரமிருந்தால் வைத்தியர் நம்பர் இல்லாதவர்களையும் பார்ப்பாரென அதே பெண்தான் சொன்னாள். அவ்வளவு பாடுபட்டு வந்ததற்குக் கொஞ்சம் காத்திருந்தாவது பார்ப்போமென ஒரு மூலையில் நிலத்தில் குந்தினாள் அருள்ஜோதி. எத்தனை விதமான நோயாளிகள்? காயத்துக்கு மருந்து கட்டும் அறையிலிருந்து வரும் ஓலம் கேட்டுக் கொண்டிருக்க முடியாதது. அவளுக்கு அதையெல்லாம் கவனிக்க எங்கு நேரமிருக்கிறது. பல்லுக்குள் யாரோ ஊசியால் குத்திக் குத்தி எடுப்பது போல வலியெடுக்கும்போது, பக்கத்திலிருப்பவளுக்கு உயிரே போனாலும் தன்னால் திரும்பிப் பார்க்கமுடியாதென அவள் நினைத்துக் கொண்டாள். அவளுக்கு முன்னிருந்த வாங்கில் அமர்ந்திருந்த ஒருத்தியின் ஏழெட்டு மாதக் குழந்தை அருள்ஜோதியைப் பார்த்துச் சிரித்தது. அவள் கன்னத்தில் அழுத்திப் பிடித்திருந்த கைக்குட்டையை எடுத்து விரித்து அக் குழந்தையை நோக்கி அசைத்தாள். அது இன்னும் சிரித்தது. அருள்ஜோதியால் சிரிக்க முடியவில்லை. திரும்ப கன்னத்தில் கையை வைத்து அழுத்திக் கொண்டாள்.
ஆஸ்பத்திரியின் வாடை இப்பொழுது பழகி விட்டிருந்தது. ஒவ்வொருவராக உள்ளே போய் வந்து கொண்டிருந்தாலும் சனம் குறைவதுபோல் தெரியவில்லை. ஒரு நாளைக்கு நூறு பேரைத்தான் வைத்தியர் பார்ப்பாரென அங்கு கதைத்துக் கொண்டார்கள். அவளைப் போல நம்பரில்லாமல் எத்தனை பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள்? அதிலும் பக்கத்தில் நிலத்தில் அமர்ந்திருக்கும் இந்தக் கைப்பிள்ளைக்காரியை முதலில் உள்ளே அனுப்பாமல் அவள் உள்ளே போவதெப்படி? நூற்றியோராவது ஆளாக அவள் போனாலும் வீட்டுக்குப் போய்ச் சேர அந்தியாகிவிடுமென அவளுக்குத் தோன்றியது. ஆனால் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்ததற்கு இருந்து மருந்தெடுத்துக் கொண்டே போக வேண்டுமென்ற வைராக்கியமும் உள்ளுக்குள் எழாமலில்லை. பல் வலிக்கு மருந்தெடுக்கப் போகவேண்டுமென்று முருகேசிடம் சொன்னதுமே, குறை சொல்லக் கூடாது, சட்டையை எடுத்து அதன் பைக்குள் கைவிட்டு கொஞ்சம் பணத்தை எடுத்து நீட்டினான். பெரியாஸ்பத்திரியில் போய் வரிசையில் காக்க வேண்டாம் என்றும் காசு கொடுத்து ஒரு மருத்துவரைப் பார்த்து மருந்து எடுத்துக் கொண்டு வரும்படியும் சொன்னான்தான். ஆனாலும் இலவசமாகக் கிடைக்கும் மருந்துக்கு எதற்குக் காசு கொடுக்கவேண்டுமென்றும் அவளுக்குத் தோன்றியது. அந்தக் காசை எடுத்துக் கொண்டு வந்ததும் நல்லதாகப் போயிற்று. இங்கு மருந்தெடுக்க முடியாமல் போனால் அந்தத் தனியார் க்ளினிக்குக்குப் போய் மருந்தெடுத்துக் கொண்டு போகலாம். அவள் கன்னத்தில் கைக்குட்டையை வைத்து அழுத்தி வேதனையில் முனகுவதைக் கண்ட ஒரு தாதி அருகில் வந்தாள். இவள் பல்வலியென்றதும் பல் டாக்டர் புதன்கிழமை மட்டும்தான் வருவாரெனவும் புதன்கிழமை வந்து நம்பரெடுத்து அவரைப் பார்க்கும்படியும் சொல்லிவிட்டுச் சென்றாள். அதற்குப் பிறகும் அங்கு காத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமென்ன இருக்கிறது? அதிலும் கையில் காசிருக்கும்போது எதற்காக இங்கே காத்துக் கிடந்து நேரத்தை வீணாக்கவேண்டும்? அவள் எழும்பி வெளியே வந்தாள்.
வெயில் சுட்டது. பசித்தது. காலையில் எதுவும் சாப்பிடாமல் கிளம்பிவந்தது. அருகிலிருந்த குழாயருகில் போய் வயிறு நிறையத் தண்ணீர் குடித்தாள். தண்ணீர் பட்டதும் வலி சற்றுக் குறைந்தது போலவும் இருந்தது. தனியார் கிளினிக் இருக்குமிடத்தை விசாரித்துக் கொண்டு அங்கே நடக்கத் தொடங்கினாள். கடுமையான வெயிலல்லவா இது? மயக்கம் வருவதுபோலவும் உணர்ந்தாள். அந்தக் கிளினிக் அதிக தூரமில்லை. பணம் கட்டி மருந்து எடுப்பதற்கும் சனம் நிறைந்திருப்பதைக் கண்டுதான் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அங்கிருந்த வாங்கில் போய் உட்கார்ந்துகொண்டாள். வரிசைப்படி இந்தச் சனம் மருந்து எடுத்து முடித்து, அதன் பிறகு தனது முறை வருவதற்கு வெகுநேரமெடுக்குமெனத் தோன்றியது. பிள்ளை பள்ளிக்கூடத்திலிருந்து வந்துவிடும். பசியிலிருப்பாள். ஏதோ தீர்மானித்தவள் எழுந்து வெளியேயிறங்கி வீதிக்கு வந்தாள். கையிலிருந்த காசுக்கு பிள்ளைகளுக்கு பிஸ்கட்டும், மூத்தவளுக்கு பள்ளிக் கூடத்துக்குக் கொண்டு போக ப்ளாஸ்டிக் தண்ணீர்ப் போத்தலொன்றும் வாங்கினாள். இங்கு வெறுமனே உட்கார்ந்திருந்தால் அங்கு பிள்ளைகளை யார் பார்த்துக் கொள்வது? சுமனாவும் வீட்டில் சும்மாவா இருக்கிறாள்? அவளுக்குத் தையல் வேலைகள் ஆயிரமிருக்கும். சின்னவள் அவளைப் போட்டுப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருப்பாள். இந்தப் பல்வலிக்கு கசாயம் குடித்தாலோ, கோயிலுக்குப் போய் வேப்பிலை அடித்தாலோ சரியாகப் போய்விடும். ஒன்றுமில்லாவிட்டால் பெருங்காயம், கராம்புத் துண்டு வைத்துப் பார்க்கலாம்.  

No comments:

Post a Comment