நாவாந்துறை, டானியல் அன்ரனி
நிலம் முற்றாக இன்னும் வெளுக்க வில்லை. அந்த வெள்ளாப்பிலேயே நேற்று பொழுது சாயும் மைம்மல் இருட்டில் கடற்கரையில் நடந்துவிட்ட அந்தச் சம்பவம் ஊர் முழுவதும் பரவி ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது.
எப்பொழுதுமே அவ்வேளையில் ஊமை அமைதியுடன், கடலை அண்டிப் பரந்து கிடந்த வளவில் நீண்டு நெடுப்பாக வளர்ந்து நிற்கும் தென்னை மரங்களிடையே தனித்து நிற்கும் பூவரச மரத்தடியில் நின்று கொண்டு, பலர் நடந்துபோன அந்தச் சம்பவத்தைப் பற்றி ஆவேசமாகவும், உரத்த தொனியிலும் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டு நின்றனர்.
வாடை அன்று பெயர்ந்தது. வேகமாக அள்ளுண்டு வந்த காற்றில் தென்னங்கீற்றுகள் வெறி பிடித்து ஆடின. கடல் கறுத்துக் குழம்பிக் கிடந்தது. வடுமாறி வெள்ளம் நுகைக்கத் தொடங்கியது.
கடல் முழுவதும் மிதந்து கொண்டிருந்த தோணிகளின் 'சள சள' ஓசையின் சலனங் களினால் 'களங் கண்டி' வலைகள் பாய்ந்திருந்த தடிகளில் குந்தியிருந்த வெண்கொக்குகள் நீலவானத்தில் எழுந்து பறந்து செல்வதும் நிலை கொள்ளாமல் மீண்டும் நீர்ப் பரப்பில் இறங்கி கூரிய அலகுகளினால் எதையோ கொத்திச் செல்லும் முனைப்பில் போராடிக் கொண்டிருந்தன.
கடலை அண்டிய காரைதீவு வீதியில் ஆனைக்கோட்டைக்கு அப்பாலிருந்து அங்கு வரும் இழுப்பு வலைக்காரார் இழுத்து வந்த மீன்களையும், இறால் வலைகளையும் வீதியில் பரத்திப் போட்டுக் கடற்பாசிகளிலும், தாழை களிலும் இருந்து அவற்றைப் பிரித்து எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களும் அவ்விடத்தைவிட்டு விரை வில் சென்று விட வேண்டுமென்று பரபரத்தாலும், சுற்றி நின்று காது செவிபடக் கத்திக் கொண் டிருந்த காக்கைக்கூட்டங்கள் அவர்களை விடுவதாயில்லை.
வில்லூன்றிச் சுடலையைத் தாண்டி வடக்கால் காக்கைதீவுச் சந்தையை நோக்கி ஓடிக்கொண்டிருந்த தோணியின் அணியத்தில் நின்ற சைமன் தூரத்தில் வரும்போதே கடற்கரை வளவில் பெரும் கூட்டம் ஆரவாரப்பட்டுக் கொண்டு நிற்பதைக் கண்டு கொண்டான்.அற்ப சம்பவங்களைக் கூட பெரிது படுத்தி உணர்ச்சி வசப்பட்டவர்களாய் உரத்து விவாதிப்பதும் விவாதம் முற்றி கைகலப்பாக மாறி தங்களுக்குள்ளே அடிபட்டுக் கொள்வதும் அந்த ஊர் மக்களுக்கு பரிச்சயமாகிப் போன ஒன்று என்பது பிரசித்தம்.
சைமன் ஒரு தினுசானவன். ஊர்ச் சோலிகள் எதுவானாலும் கண்டுக்காமல் இருக்கமாட்டான். அதிலும் தொழிலாளிகள் விஷயம் என்றால் உரத்தே குரல் எழுப்புவான். இவனைப்பற்றி வேறு மாதிரியான கதை ஊரில் இருந்தாலும் ஊர் விஷயங்களில் இவன் கொள்ளுகின்ற அபிப்பிராயங்கள் பற்றி சனங் களுக்கு மதிப்பு இருந்தது.
'டேய் சவிரி, அங்க கவனியடா, வளவில் ஒரே சனக்கூட்டமா இருக்குது. ஊரில் ஏதாவது நடந்து போச்சுதோ....'
தோணியின் நடுத்தளத்திலிருந்து மீன்களைத் தெரிந்து பறிக்குள் போட்டுக் கொண்டிருந்த சவிரியும், சைமன் சுட்டிக்காட்டிய பக்கம் தலையை நிமிர்த்திப் பார்த்தான்.
'ஓம் அண்ண, ஏதோ நடந்துதான் போச்சுது போல இருக்கு. நேற்று இவன் பொன்ராசாதான் தண்ணியைப் போட்டுவிட்டு மச்சினனோட கொழுவிக் கொண்டு நின்றான்.'
'நான் நினைக்கயில அப்படி யிருக்குமெண்டு. கூட்டத்தைப் பார்த்தால் விஷயம் வேறபோல கிடக்கு. கொஞ்சம் கரையைத் தள்ளிப் பார்த்துப் போட்டுப் போவம்.'
சைமன் தாங்கிக் கொண்டிருந்த மரக்கோலை தோணியின் இடப்புறம் போட்டு வேகத்தைக் கட்டுப்படுத்தினான்.
சவிரி காக்கைத்தீவுச் சந்தையைப் பார்த்தான். பொழுது நல்லா ஏறிவிட்டது. கூட்டம் கலைந்து கொண்டிருந்தது.
'அண்ண, சந்த கலையுது. நேரஞ் செண்டா அவளவை நாறல் மீனைக்கேக்கிற விலைக்கு கேப்பாளவயள்'.
சைமன் மீண்டும் மரக்கோலை வலப்புறம் போட்டுக் கரையை நோக்கித் திருப்பினான்.
'சவிரி வலை இழுக்கயுக்கேயே வெள்ளப்பா போயிற்று. இண்டைக்கு நம்மட சந்தையில விப்பம். மீனும் அவ்வளவு இல்லத்தானே....'
சவிரி மீண்டும் மீன்களைப் பொறுக்கு வதில் மௌனமாகி விட்டான். சைமன் கரையை நோக்கி வேகமாகத் தோணியைத் தாங்கினான். தோணி நீரைப் பிளந்து கொண்டு சீறிப்பாய்ந்து கரையை அடைந்தது.
'சவிரி, தோணியைக் கட்டிப்போட்டு மீன்களைச் சந்தைக்கு கொண்டுபோ. நான் என்னெண்டு கேட்டுப்போட்டு வாறன்'.
சைமன் தோணியிலிருந்து மெதுவாக இறங்கினான். தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து கடல் உவர்ப்பில் காய்ந்து போயிருந்த 'சொறசொற'த்த முகத்தையும், மீன் செதில்கள் ஒட்டிக்கிடந்த உடலையும் துடைத்துவிட்டு, இடுப்பில் கட்டியிருந்த கச்சையை அவிழ்த்துப் போட்டுவிட்டு துண்டை இடுப்பில் சுற்றிக் கொண்டான்.
வளவில் நின்று முகம் சிவந்துபோக உதடுகள் துடிக்க முகத்தில் விழுந்து புரண்டு கொண்டிருந்த செம்பட்டையான சுருட்டை மயிர்களை ஒரு கையால் ஒதுக்கியபடி மறு கையை அடிக்கடி உயர்த்தியபடி நியாயம் கதைத்துக் கொண்டிருந்தான் மரியதாசன். மண் மேட்டிலேறி வளவை நோக்கி வந்து கொண்டிருந்த சைமனும் இவனைக் கண்டு கொண்டான்.
கூடி நின்றவர்கள் எல்லோர் பார்வையும் வளவைத் தேடி வந்து கொண்டிருந்த சைமன் பக்கம் திரும்பியது.
'என்னடாப்பா, ஏன் இப்படி விடியக்கு முன்னமே கூட்டம் கூடி கத்திக் கொண்டு நிக்கறீங்க,'
சற்று எரிச்சலுடன் வெளிவந்த சைமனின் வார்த்தைகளைக் கேட்டதும் நடந்துபோன சம்பவத்தை இன்னும் அவன் அறியவில்லையென்பதைக் கூடி நின்றவர்கள் ஊகித்துக் கொண்டார்கள்.
'என்னண்ணை, உங்களுக்கு விஷயம் தெரியாதா? நம்மட சூசைக்கிழவனுக்கு அவன் யோணும் அவன்ர ஆக்களும் அடிச்சு மண்டையை உடைச்சுப் போட்டாங்க. மனுசனுக்கு இழுக்குது.' சைமன் இதைக் கேட்டதும் சற்று நேரம் மௌனமாக நின்றான்.
'ஏன் கிழவனுக்கு அடிச்சவங்க....?'
'கிழவன் விடுவலைக்கு வாறன் எண்டுபோட்டு யோணட்ட ஆயிரம் ரூபா முற்காசு வேண்டினவராம். சுகமில்லாமல் திருக்க முள்ளு அடிச்சுக் கிடந்ததினால் இனிமேல் தொழிலுக்கு வர ஏலாதெண்டு சொல்லிப் போட்டாராம் கிழவன். காசை உடன வைக்கச் சொல்லித்தான் இந்தச் சண்டித்தனம்'. மரியதாசன் உணர்ச்சி வசப்பட்டவனாக மீண்டும் உரத்துக் கத்தினான்.
'சம்மாட்டிமாரட்ட முற்காசு வாங்கிப் போட்டு தொழிலுக்கு வாறன் எண்டு சம்மதிச்சுப் போட்டா தொழிலுக்கு போகவேணும். இல்லாட்டியா அவங்கட காசு திருப்பிக் கொடுக்கவேணும். இதுதானே ஊர் வழக்கம். யோணும் பலமுறை காசக் கேட்டுப்பார்த்தார். குடுக்காமல் கிழவனும் வெறியில் அவங்களைப் பேசிப்போட்டார்'.
யோணின் விடுவலையில் மன்றாடியாக தொழில் நடத்திச் செல்லும் சற்று வயதான சந்தியோ மீண்டும் சம்மாட்டியின் பக்கம் பரிந்து பேசியதைக் கண்ட மரியதாசனும் அவனோடு கூட நின்ற யேசுராசனும் கொதித்தனர். அவர்களும் யோண் வலையில் தொழிலுக்குப் போகிறவர்களாக இருப்பினும் யோணும் அவனுடைய ஆட்களும் செய்தது அநீதி என்பது அவர்களுடைய திடமான நம்பிக்கை.
'சந்தியோ அண்ணைக்கு சம்மாட்டி மாரட்ட நக்கிற புத்தி இன்னும் போகயில்ல.' மரியதாசன் திடீரென வீசியெறிந்த சுடு சொல்லை எதிர்பாராத சந்தியோ அதிர்ந்து போனார்.
'தம்பி மரியாதையாகப் பேசும், இல்லாட்டி....'
'இல்லாட்டி.... என்ன செய்து போடு வீங்க.' மரியதாசன் முஷ;டியை உயர்த்திக் கொண்டு சந்தியோவை நோக்கி நெருங்கினான். இவ்வளவு நேரமும் அமைதியாக அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு நின்ற சைமன் நடந்துபோனவற்றை ஒருவாறு ஊகித்துக் கொண்டாலும் விவாதம் இப்போது வேறு திசையில் திரும்புவதைக் கண்டதும் நிலைமையைச் சமாளிக்க நினைத்தான்.
'இஞ்ச பாருங்க, நீங்ளேன் உங்களுக்குள்ள சண்டை பிடிக்கிறீங்க. பின்னேரம் சனங்களைக் கூப்பிடுவம். சம்பந்தப் பட்டவர்களையும் கூப்பிடுவம். அதுக்குப் பிறகு பாப்பம். இப்ப எல்லோரும் பேசாமப் போங்க'.
கூடி நின்ற எல்லோரும் முணுமுணுத்த படி மெல்ல மெல்ல அவ்விடத்தை விட்டு நகரத் தொடங்கினர்.
மரியதாசனும் யேசுராசனும் மாத்திரம் உரத்துப் பேசிச் செல்வது சைமனின் காதுகளுக்குக் கேட்டது. 'சம்மாட்டிமாற்றை கொழுப்பை இதோட அடக்க வேணும்.'
'சைமனின் இதயத்திலும் இனம் தெரியாத துடிப்பு. பல தலைமுறையாக ஏதோ ஓர் அடிமை முறையில் இவர்கள் நடத்தப்பட்டு வரும் முறைபற்றி இவனுக்கு நீண்ட நாட்களாக மனதில் ஒரு உறுத்தல் இருந்து வந்தது. ஆயினும் சரியான சந்தர்ப்ப சூழ்நிலை உருப்பெறாமல் தள்ளிப்போய் கொண்டிருந்த காரணத்தினால் அவனுடைய எண்ணங்களை வெளிக் கொணர முடியாமல் இருந்தது. தொழிலாளர்களின் உணர்ச்சிகளை தற்காலிகமாகவேனும் செம்மைப்படுத்த இப்பொழுது அதற்குச் சரியான நேரம் வந்துவிட்டதாக அவன் உள்மனம் உணர்த்தியது. நீண்ட நேரமாக கலகலத்துக் கிடந்த அந்த வளவு இப்போது வெறிச் சோடிக்கிடந்தது. சைமன் சிந்தனை வசப் பட்டவனாக வளவைத் தாண்டி மண் ஒழுங்கையில் இறங்கி வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.
ஊர்க்கூட்டம் தொடங்க சரியாக நாலு மணிக்கு மேலாகிவிட்டது. ஊரில் உள்ள சம்மாட்டிமாரில் சிறில் ஏதோ வேலை காரணமாக கரையூர் சென்றதனால் அவரைத் தவிர எல்லோரும் கூடியிருந்தனர். கூட்டம் கூடி பத்து நிமிடங்கள் கழியத்தான் தனது சதை பருத்த தேகத்தையும் தூக்க முடியாமல் நசினல் சட்டைக் குள்ளே இரட்டை வடம் பவுண் சங்கிலி சகிதம் சம்மாட்டித் தனத்தின் செருக்கும், திமிரும் முகத்தில் பிரதிபலிக்க அரக்கி அரக்கி வந்து பின்வாங்கில் குந்திக் கொண்டார் யோண் சம்மாட்டி. தலைமை வகித்த பெரியார் சுருக்கமாக பிரச்சினைகளை எடுத்துக் கூறினார். கூட்டம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. மரியதாசன் எழுந்தான்.
'சம்மட்டியார் யோணும் அவங்கட ஆக்களும் செய்த செயல் மிகப்பிழை. கிழவனட்டை மன்னிப்புப் கேக்க வேணும்.'
'பிழையெண்டால் நியாயம் காட்ட வேணும்.'
சவிரிமுத்துச் சம்மாட்டி குறுக்கே குரல் கொடுத்தார். 'பணம் கொடுக்குமதியாக இருந்தால் மரியாதையாகக் கேட்டு வாங்க வேண்டியது தான். அதற்காகத் தொழிலாளிகளை அடிமை களாக நினைத்துக் கண்டபடி பேசுவதும் அடிப்பதும் எங்களால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.'
'தொழிலுக்கு வாறன் எண்டு கடன் பட்டால் தொழிலுக்கு வரவேண்டியதுதான் கடமை. இல்லாட்டி காசைத் திருப்பித் தர வேண்டியதுதான்.'
'அதுக்காக இருபது வருஷத்துக்கு மேலாக வெயிலெண்டும் குளிரெண்டும் பாராமல், உங்களுக்கு உழைத்துத் தந்த மனுசன் என்றும் பாராமல், கை நீட்டி அடிக்கிறதா? எங்கட உழைப்பிலை தானே நீங்க வீடும் வாசலுமாக இருக்கிறீங்க. அதுக்கென்ன அந்த ஆயிரத்தையும் அவங்களுக்கே விட்டால்....'
யேசுராசன் எழுந்து நின்று குரல் கொடுத்தான்.
'நாங்க இவ்வளவு பணம் பொட்டு தொழில் நடத்துறம். அவங்களுக்கு பங்குக்காசு கொடுக்கிறம்.... இதைவிட என்னத்தை அவங்க உழைச்சுத் தந்திட்டாங்க. சாமத்திய வீடெண்டாலும்....செத்த வீடெண்டாலும் எங்கட்டத்தானே ஓடி வருவினம். ஐஞ்சோ பத்தோ கொடுத்து நாங்க தானே உதவி செய்யிறம்'.
யோணின் பேச்சு தலைமை வகித்துக் கொண்டிருந்த பெரியவருக்கும் கோபத்தையும், எரிச்சலையும் கொடுத்தது.
சைமன் எழுந்தான்.
'சம்மட்டியார் ஏதோ தொழிலாளர்களுக்கு அள்ளிக் கொடுப்பதாகக் கூறினார். அவர் இறால் போட்டு சுறாப்பிடிக்கும் கெட்டித்தனம் எங்களுக்கு இப்ப விளங்காது என்ற எண்ணம் போல கிடக்கு. ஒரு வருசத்தில கமிசனுக்கு எண்டு ஒரு தொழிலாளியிட்ட ஆயிரம் ரூபாவுக்கு மேல் கழிக்கிறீங்க. ஆனால் அவங்களுக்குக் கொடுக்கிறது என்ன இருநூறு, முந்நூறு.,ஒரு சாராயப் போத்தல். உழைக்கிறதில தோணிக்கு, வலைக்கு என்று எவ்வளவத்தை தள்ளி நீங்க எடுத்துக் கொள்ளுறீங்க. இதெல்லாம் எங்களுக்கு விளங்காததல்ல.'
எல்லோரும் சைமன் பேசியதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். சிலர் சம்மாட்டிமாரைத் ரகசியமாகக் கிண்டல் செய்யத் தொடங்கினர்.
மரியதாசன் மீண்டும் எழுந்தான். 'நாங்க இனி மேல் இவங்கட தொழிலுக்கு போவதாக இருந்தால் எங்களுடைய பங்குப் பணத்தைக் கூட்டித்தரவேணும். 'கமிசன்' பணம் சரியாகக் கணக்குப் பாக்க வேணும். சூசைக்கிழவனிடம் மன்னிப்புக் கேக்க வேணும். இல்லாவிட்டால் கடலில வலை இறங்காது.'
சம்மாட்டிமாரிடையே முணுமுணுப்பு ஏற்பட்டது. யோண் எழுந்தார். எல்லோரையும் நன்றாகப் பார்த்தார். கனத்த குரலை ஒருமுறை செருமிவிட்டுக் கொண்டார். 'இஞ்ச நாங்க ஒண்டும் பயந்தாக்களல்ல. எங்களை யாராலும் வெருட்டேலாது. உங்கட உழைப்பு வந்துதான் சாப்பிடப் பொறமா? எத்தனை நாளைக்கு சுருண்டு கிடக்கப் போறீங்க? பற நாய்கள் எங்கட காலிலதான் வந்து விழுவிங்க....அப்ப பாப்பம்.' யோண் கூறிவிட்டு கூட்டத்தைவிட்டு விறுவிறு என்று வெளியேறினார். அதைத் தொடர்ந்து எல்லாச் சம்மாட்டிமாரும் வெளியேறினர்.
கூட்டம் அல்லோலகல்லோலப் பட்டது. யோணின் திமிரான வார்த்தைகள் கூடியிருந்து கேட்டுக் கொண்டு இருந்தவர் களுக்கு சினத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
தலைவர் எல்லோரையும் சமாதானப் படுத்தினார். மீண்டும் கூட்டம் ஒழுங்குக்கு வர நிமிடங்கள் சென்றன.
'சைமன் அண்ணே....சைமன் அண்ணே....'
விறாந்தையில் விரித்துப்போட்டு நண்டு சப்பியும் நைந்தும் போனதால் விரிசல் கண்டுவிட்ட பழைய வலைகளை அரிக்கன் இலாம்பின் மங்கிய வெளிச்சத்தில் வைத்து வெட்டி வெகு லாவகமாக பொத்திக் கொண்டிருந்த சைமன் நிமிர்ந்து பார்த்தான். படலைக்கு மேல் பல தலைகள் தெரிந்தன. இருட்டில ஒன்றும் தெளிவாகத் தெரியாவிட்டாலும், அது மரியதாசின் கனத்த குரல் என்பதை ஊகித்துக் கொண்டான்.
இவ்வளவு நேரமும் படலையடியில் சுருண்டு படுத்துக் கிடந்த சைமனின் 'கறுவல்' பலமாகக் குரைத்தது.
'ஆர் மரியதாசா? ஏன் வாசலில் நிக்கிறீங்க. படலையைத் திறந்து கொண்டு உள்ள வாங்களன். நாய் ஒண்டும் செய்யாது'.
சைமன் லாம்பை எடுத்து முற்றத்தில் வெளிச்சம் விழக்கூடியதாக தூக்கிப் பிடித்தான்.
யேசுராசா, மரியதாசன், சவிரி, செபமாலை, சூசை முத்து, தெற்குத் தெரு பர்னாந்து நிரைத்து வந்து சைமனைச் சூழ ஆசுவாசத்துடன் குந்திக் கொண்டார்கள்.
சைமன் மீண்டும் மடவலைப் பகுதியை கால்களின் பெருவிரல்களுக்குள் மாட்டிப் பொறுக்கப் பிடித்துக் கொண்டு வேகமாகக் கிழிசல்களைக் பொத்திக் கொண்டே அடுக்களைக்குள் இருந்த மனைவிக்குக் குரல் கொடுத்தான்.
'இஞ்ச.... பிலோமினா, வந்திருக்கிறவங்களுக்கு தேத்தண்ணி போட்டுக் கொண்டு வா. குறை நினைக் காதீங்கடாப்பா, கூப்பன் சீனி எப்பவோ முடிஞ்சு போச்சுது. சக்கரைதான்....'
'உங்கட வீட்டில மாத்திரமில்ல அண்ண, எல்லாற்ற வீட்டிலயும் இந்த நிலைதான். காசு கொடுத்து வெளியில சீனி வாங்க ஆரட்ட காசு இருக்கு'.
மரியதாசன் இருண்டு கிடந்த முற்றத்தைப் பார்த்துக் கொண்டே பதில் சொன்னான். மரியதாசன் முகத்தில் தெம்பு இல்லை. கூட வந்திருந்த எல்லோர் முகத்திலும் ஏதோ ஓர்வித சோர்வுக்களை அப்பிக் கொண்டிருந்ததைச் சைமன் அவதானித்து விட்டான்.
'என்னடாப்பா ஒரு மாதிரியாக இருக்கிறிங்க.... ஏதாவது விசேஷம் உண்டா?'
சைமன் கேள்வியைக் கேட்டதும் யேசுராசனும் மரியதாசனும் ஒருவரையொருவர் பார்த்தனர்.
'என்ன நடந்தது என்று சொல்லுங்க. ஆராவது சம்மாட்டிமாற்ற தொழிலில ஏறிவிட்டாங்களா....?'
சைமன் வார்த்தைகளில் சூடு ஏறியது.
'நாளைக்கு எல்லா சம்மாட்டிமாற்ற விடுவலைகளும் கடலில இறங்கப் போகுதுகள் போல இருக்கு. சம்மாட்டிமார் தொழிலாளிகளை விலைக்கு வாங்கிப் போடு வாங்க போல இருக்கு'.
சைமன் அதிர்ச்சியுடன் மரியதாசனைப் பார்த்தான். மரியதாசன் நிதானமாகப் பதில் சொன்னான்.
'சாமிநாதர் விடுவலைக்குப் போறதுக்கு சம்மதிச்சுப் போட்டார்'.
'ஏன்?'
'விடுவலைகள் நின்று போனதால் தொழிலாளிகள் எல்லாம் படுப்பு வலைக்கும் களங்கட்டி வலைக்கும் தூண்டலுக்குமாக போய்விட்டார்கள். ஆனால் பாவம் சாமிநாதன் மூன்று நாளாக தொழிலுக்குப் போகயில்ல. போறதுக்கு வேறு தொழிலும் கிடைக்கயில்ல. வீட்டில பட்டினி பொறுக்க முடியாமல் யோண் சம்மாட்டியிட்ட போய் கடன் கேட்டிருக்கிறார். அவன் விடுவலைக்கு வந்தால் கடன் தாரன் என்று சொல்லியிருக்கிறான். சாமிநாதரும் சம்மதிச்சுப் போட்டார்'.
சைமனின் முகம் சுருங்கிக் கறுத்துவிட்டது. இப்படி ஒரு நிலையை இவன் எதிர்பார்க்கவில்லை. பல தலைமுறையாக இருந்துவரும் இந்தவித அடிமைப் போக்குகளை தகர்த்தெறிவது என்பது இலகுவான காரியம் இல்லை என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டான். சைமன் சற்று நேரம் அமைதியாக இருந்தான்.
'அண்ணே, சம்மட்டிமார் நாளைக்காலம விடுவலைகளை எப்படியும் கடலில இறக்கிப் போட வேணும் எண்டு இன்னும் ஆக்களைப் பிடிக்கிறதுக்கு வலைபோட்டுத் திரியிறாங்க. இப்டியே விட்டுவிட்டால் சாமிநாதர் போல ஒவ்வொருத்தராகப் போய்ச் சோந்துவிடுவாங்க'.
குசினிக்குள் இருந்த பிலோமினா தேநீர்க் கோப்பைகளையும், சக்கரைக் குறுகல்களையும் கொண்டுவந்து கூடியிருந்தவர்கள் முன் வைத்து விட்டு கதை கேட்கும் ஆவலில் அறைக்கதவு அருகே போய் சாய்ந்தபடி நின்று கொண்டாள்.
தேநீர் உறிஞ்சப்பட்டு கோப்பைகள் வெறுமையாகிக் கொண்டிருந்தன. சைமனின் சிந்தனையில் பல சம்பவங்கள் திரண்டு வந்தன. 'எத்தனை நாளைக்கு இப்படிச் சுருண்டு கிடப்பீங்க? தெரு நாய்கள், எங்கட காலில தான் வந்து விழுவீங்க'. யோணின் பேச்சு இவன் நினைவில் வந்து மோதியது. உடல் ஒரு கணம் சிலிர்த்து அடங்கியது. பொத்திக் கொண்டுடிருந்த வலைகளையும் அப்படியே விட்டுவிட்டு விறுக்கென்று எழுந்தான். காது மடிப்புக்குள் செருகி வைத்திருந்த புகையிலைத் துண்டை எடுத்துச் சப்பிக் கொண்டே கனத்த குரலில் பேசினான்.
'இவங்கட வலைகள் கடலில இறங்கிற கெட்டித் தனத்தைப் பார்ப்பம். மரியதாஸ்! நீ சவிரியையும், யோசேப்புவையும் கூட்டிக் கொண்டு சாமத்தில தெற்குத் தெருவுக்குப் போ. யேசுராசா! நீ சூசைமுத்து, செபமாலையோட கோயில் ஒழுங்கையைக் கவனி. நான் பெர்ணாந்தையும் சிலுவைதாசனையும் கூட்டிக் கொண்டு நடுத்தெருவுக்குப் போறன். ஆர் ஆக்கள் வெள்ளாப்பில வந்து தொழிலாளிகள அரட்டிறாங்க எண்டு பார்ப்பம்'.
'ஓம் அண்ணே! அதுதான் சரி'.
மரியதாசன் பதில் சூடாக வெளிவந்தது. எல்லோரும் எழுந்து கொண்டனர். சைமன் வளையில் சொருகியிருந்த துண்டை எடுத்துக் தோளில் போட்டுக் கொண்டே படலையைத் தேடி நடந்தான்.
பிலோமினா பயத்துடன் படலையைப் பார்த்தாள். முற்றத்தில் கிடந்த கறுவல் மறுபடியும் குரைத்தது. அவர்கள் படலையைத் திறந்து வெளியேறி இருளுக்குள் மறைந்தனர். தெருநாய்கள் ஆக்ரோசத்துடன் குரைத்தன.
வெகுதூரத்துக்கு அப்பாலும் அவர்களது அழுத்தமான காலடி ஓசை கேட்டுக் கொண்டிருந்தன.

No comments:
Post a Comment