Friday, January 21, 2011

அவர் கண்ட முடிவு!

மு.பொன்னம்பலம்சிவத்தம்பி தமக்குள்ளேயே சிரித்துக்கொண்டார். அதுவெறும் சிரிப்பல்ல, வெற்றிப்புன்னகை. வெற்றியென்றால் ஏதோ அபாரமான நற்செயலையோ அல்லது சதித்திட்டத்தையோ அமுல் நடத்தி வெற்றி பெற்று விட்டாhர் என்பதல்ல அர்த்தம். நினைவில் முளைத்ததை இப்போதான் செயலில் நடத்த அவர் திடங்கொண்டுள்ளார். அதாவது தாம் நினைத்ததைச் செய்வதற்கு உள்ளத்தைத் தயார்படுத்தி வெற்றி கொண்டுவிட்டார். அதனால் தான் அவர் முகத்திலே சிந்தனைக் கிறுக்கல்கள் மறைந்து, மகிழ்ச்சியின் முறுவல் மலர்ந்தது. இத்தனைக்கும் அவர் எண்ணத்திலே எழுந்த திட்டத்தான் என்னவோ?

 அதோ அதை சிவத்தம்பியின் உள்ளமே சொல்கிறதே 'அதை எழுதியே தீருவேன். என்றைக்கும் எனது பெயர் இவ்வுலகில் நிலைத்திருக்க நான் அதை ஆராய்ந்தறிந்து எழுதியே தீருவேன்!'. சிவத்தம்பியின் உள்ளம் உரங்கொண்டு குதித்தது. ஆமாம், அவர் போட்ட திட்டம் எழுத்துலகை அடிப்படையாகக் கொண்டதுதான்.

 எதற்காக இத்தனை திட்டமும் சிந்தனையும்? எழுத்துலகில் நுளைவதற்கு திட்டங்கள் வேறே? வேடிக்கையாக இருக்கிறதே! வேடிக்கைக்கு அங்கு ஒன்றும் இல்லை. சிவத்தம்பி நுளையப்போகும் எழுத்துலகு சாதாரணமானதல்ல. பாரதூரமானது. ஆராய்ச்சிகள் நிறைந்தது. ஆராய்ச்சியென்றால் இலகுவானதல்ல. சில சமயங்களில் கண்ணியமாக வாழும் சிவத்தம்பியின் மானத்தைக் காற்றிலே பறக்கவிட்டு விடுமே! அத்தகைய 'சீரியஸ்' ஆன கொடுமை நிறைந்த ஆராய்ச்சியது.

 அதனால் தான் சிவத்தம்பி அவ்வளவு தூரம் சிந்தித்தார். ஆனால் அதற்குத்தான் அவர் இப்போ துணிந்துவிட்டரே! இனி அச்சமில்லை. அப்படியானால் அவர் ஆராய்ச்சி செய்து எழுதப்போவது தான் என்ன?

 'உலகிலே விபசாரிகள் ஒழிவதற்கு வழி?'

 இதைத்தான் ஆராய்ந்தறிந்து எழுதுவதற்குத் திட்டம் போட்டார் சிவத்தம்பி. சாதாரண விஷயமா இது? உலகிலே இதுவரை யாரும் தொட்டுப்பார்க்காத ஆராய்ச்சி. இதுவரை எவரும் எழுதாத – எழுதியிருந்தாலும் வெற்றி பெறாத – பொருள் இது. அத்தகைய ஒன்றைத்தான் சிவத்தம்பி எழுதி வெற்றி பெறப்போகிறார்.

 இத்தகைய சிக்கல் மிகுந்த பொருளைப்பற்றி எழுதப்போகும் சிவத்தம்பி ஏதோ பெயர் பெற்ற எழுத்தாளரல்லர். அவர் எழுத்துலகுக்கே புத்தம் புதியவர். இதுவரை எழுத்துலகு என்றால் என்னவென்று அறியாதிருந்த சிவத்தம்பிக்கு 'இந்த எண்ணம்' ஏற்பட்டதும் எழுத்துலகில் குதிக்க வெறிகொண்டார். அதாவது தாம் எழுதப்போகும் 'உலகிலே விபசாரிகள் ஒழிவதற்கு வழி' என்ற ஒரே நூலின் மூலமே அந்தக் கன்னிப்படைப்பின் மூலமே – தமது பெயரை இவ்வுலகில் சிரஞ்சீவியாக்கி விட வேண்டும் என்பன போன்ற எண்ணக்கோட்டைகள் அவர் உள்ளத்தே பரந்து வியாபித்திருந்தன. இத்தனைக்கும் சிவத்தம்பி யார்?

 சிவத்தம்பி ஓர் ஆசிரியர் அல்லர். ஆனால் தமது ஓய்வு நேரங்களில், தப்பித்தவறி தம்மிடம் சிக்கிக்கொள்ளும் பள்ளி மாணவர்களிடம் பலாத்காரமாக தமது ஆசிரியப் பதவியை நிலை நாட்டி போதனைகள் செய்யத் தொடங்கிவிடுவார்! இந்த விதத்தில் எத்தனை எத்தனையோ மாணவர்களுக்கு 'படிப்பித்துக்' கொடுத்திருக்கின்றார். அப்போதெல்லாம், 'தோன்றிற் புகழுடன் தோன்றுக' என்ற தமக்குப் பிடித்தமான குறளை அவர் என்றைக்குமே போதிக்க மறந்ததில்லை. ஆனால் அவர் அந்தக் குறளுக்கு இலக்கணமாக வாழ்ந்துள்ளாரா? அவர் இந்தக் கேள்வியைத் தம்மிடமே கேட்டுப் பார்ப்பார். ஆனால் இல்லை. 'இல்லை' என்று எங்கிருந்தோ கேட்கும். பிறகு அவர் பாடு தொல்லைதான். 'ஊருக்கெல்லாம், புகழோடு வாழ வேண்டும் என்று போதனை செய்கிறேன். ஆனால் நானோ பிறந்து வளர்ந்து என் சமூகமே அறியாது இறந்துவிடப் போகிறேனே' என்று அவர் எண்ணிக்கொள்வார். அடுத்தகணம் அவர் உள்ளமெங்கும் ஓர் வகையறியாத வலி.

 அந்த வலி வரவரக் கூடிக்கொண்டு போனபோது தான் சிவத்தம்பிக்கு ஞானம் பிறந்தது. 'என் பெயர் உலகில் என்றும் நிலைத்திருக்க நான் ஏதாவது நல்லதொன்று செய்யத்தான் வேண்டும்' என்று அவர் சங்கற்பம் பூண்டுவிட்டுத் தடுமாறியபோதுதான் எழுத்துலகு அவரைக் கைகாட்டி அழைத்தது. அதற்கேற்றாற் போல் இன்றைய ஏற்றத்தாழ்வு நிறைந்த சமூகம் அவர் சிந்தனைக்கு விசை கொடுத்துவிட்டு வேடிக்கை பார்த்தது.

 அன்று இரவுச் சாப்பாட்டை முடித்துவிட்டு படுக்கையில் சாய்ந்த சிவத்தம்பி சிந்தித்தார். பிறகு சிறிது நேரம் கழித்து மெல்லச் சிரித்தார். அந்தச் சிரிப்பு உலகையே எள்ளி நகையாடுவது போலிருந்தது.

 'மனிதர்கள் எத்தகைய விசித்திரப்பிறவிகள்! ஏதோ 'நாகரிகம் நாகரிகம்' என்று பிதற்றுகிறார்கள். 'தொல்மதியைத் தொட்டுவிட்டோம்' என்று தம்பட்டம் அடிக்கிறார்கள். ஆனால் இங்கே வாழவழியற்று எத்தனையோ மக்கள் சாகிறார்கள். பெண்கள் கற்பை விற்று விபசாரிகளாகத் திரிகிறார்கள்!' என்று சிவத்தம்பி எண்ணிப் பார்த்துச் சிரித்தபோது, திடீர் என்று அவர் உள்ளத்திலே 'விபசாரி' என்ற அந்தச் சொல் அனாவசியமாக நிலைத்துவிட்டது. சிறிது நேரம் அந்தச் சொல்லை அந்தணர் மறையோதுதல் போல் அசைபோட்டார். பிறகு சிறிதுநேரம் செல்லச்செல்ல அனாவசியமாக நிலைத்த அந்தச்சொல் எத்தனையோ அவசியத்தைத் தருவதுபோல் பட்டது. தமது திட்டத்துக்கு கை கொடுத்து உதவ அது முன்வந்துள்ளதை அவர் மௌ;ள மௌ;ள உணர்ந்தார்.

 'மனிதன் மதியைத்தொடும் இக்காலத்தில் மானத்தை விற்று வாழும் விபசாரிகள் வாழ்வதா?' என்று தமக்குள்ளேயே கேள்வியெழுப்பிய சிவத்தம்பி, கூடாது விபசாரிகள் உலகில் வாழவே கூடாது! விபசாரிகளை உலகில் ஒழிப்பதற்கு நானே வழிதேடப் போகிறேன்' என்று தமக்குள்ளேயே பதிலையும் அளித்துக்கொண்டார்.

 சிவத்தம்பியின் எண்ணம் ஈடேறினால் ஒரே கல்லில் இரு மாங்காய்போல் ஒருபக்கத்தில் அவருக்குப் புகழ்வந்து சேர்வதோடு மறுபக்கத்தில் விபசாரிகளும் உலகத்திலே இல்லாமல் போய்விடுவார்கள்.

 ஆனால் அந்த எண்ணம் ஈடேற வேண்டுமே! அதற்காகத்தான் அவர் சிந்தித்தார். அவர் அப்படி பலநாள் சிந்தித்ததற்கும் காரணம் உண்டு. அதாவது வெறும் சிந்தனையில் தோன்றிய கற்பனை வழிகளை வைத்துக்கொண்டு, 'விபசாரிகளை ஒழிப்பதற்கு இதுதான் வழி' என்று எழுதி வெற்றிபெற்று விடலாம் என்பதில் அவருக்கு நம்மிக்கை கிடையவே கிடையாது.

 எதையும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அதுவும் உண்மையான ஆராச்சியாக இருக்க வேண்டும். அப்போதுதான் எந்த ஆராய்ச்சிதானும் வெற்றிபெறும்' என்பது சிவத்தம்பியின் கொள்கை. ஆகவே அவர் தமது நூலை வெற்றிகரமாக முடிப்பதற்கு பல திட்டங்கள் கட்டியெழுப்பியிருந்தார். அவற்றுள் முக்கியமானது விபசார விடுதிகள் பலவற்றில் சிவத்தம்பி வரவுசெய்து பல விபசாரிகளிடம் அவர்கள் அந்நிலைக்கு வந்ததின் காரணத்தைப் பேட்டி கண்டு அறிய இருந்தார்!

 அது இலேசான செயல்தானா? சிவத்தம்பி தமது மானத்தையே கையில் பிடித்தவண்ணம் செய்ய வேண்டிய செயல்லவா? அவர் உள்ளத்தூய்மையுடன் தான் விபசார விடுதிக்குள் புகுந்தாலும் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? மானத்தையே வாங்கி விட மாட்டார்களா? வாங்கி? அத்தோடு சிவத்தம்பிப்பிள்ளை குட்டிக்காரப் பிறவியய்யா! தம்பித்தவறி அவர் பத்தினியின் காதில், 'இப்படி உன் புருஷன் வேசி வீடெல்லாம் ஏறி இறங்கினராமே, மெய்தானா?' என்று யாராவது படுவாவிப் பெண்கள் கேட்டு வைத்தால் குடிகெட்டுதே! அதற்காகத்தான் சிவத்தம்பி அவ்வளவு தூரம் சிந்தித்தார். ஆனால் இப்போ அவர் துணிந்தகட்டை. துணிந்த பின் உலகமே வந்தெதிர்த்தாலும் 'பூ' என்று ஊதிவிட்டால் பறக்கும் தூசுதானே அது!.

 மாலை நேரம் மணி எத்தனை என்று அறிவதற்கு சிவத்தம்பியின் உள்ளம் ஓர் நிலையிலில்லை. செயலைக் கருத்தாய், தமது திட்டத்தை நிறைவேற்றும் நோக்கத்தோடு, நகரத்தின் முக்கிய பகுதியைத் தாண்டி விபசாரிகள் உறையும் சேரிப்பக்கமாக சிவத்தம்பி நடந்து கொண்டிருந்தார். அவர் சட்டைச் சாக்கில் 'எழுதுகோல்' செருகப்பட்டிருந்தது. கையிலே குறிப்பெடுக்கும் சில ஏடு. கால்களிலே 'சடக் கடக்' என்று கதறியழும் கண்ணராவிக் செருப்புக்கள் இரண்டு.

 சிவத்தம்பி நடந்து கொண்டிருந்தார். அவரை முதலில் சந்தித்த விபசாரி தமது வீட்டு வாசலில் நின்றபடியே மெல்லக் குரல் கொடுத்தாள். சிவத்தம்பி சிறிது தயங்கினார். பிறகு ஒன்றும் பேசாமல் அந்த வீட்டுக்குள் நுழைந்துவிட்டார்! நுழைந்தவர் சிறிதும் தாமதியாமல், 'ஓய் பொண்ணு, மன்னிக்க வேண்டும். நான் இங்கு வேறு எதற்காகவும் வரவில்லை. உன்னிடம் சில விஷயங்கள் அறிய வேண்டியிருக்கு. அதற்கு நீ உதவி செய்ய வேண்டும்' என்று கூறினார். 'டக்' என்று ஒரு பத்து ரூபா நோட்டை எடுத்து, 'இதை சந்தோஷமமாக வைத்துக்கொள்' என்று அதை அவள் கையில் திணித்தார்.

 அந்த விபசாரி ஆச்சரியப்பட்டாள். இதுவரை அவள் அறிந்திராத புதுப்பழக்கம். தமது அகன்ற விழிகளை உருட்டி மேலும் கீழுமாக அவரை நிறுத்தெடுத்தாள். அப்போது அவள் விழிகளிலே கூத்தாடிய கொள்ளை அழகுதான் எத்தனை! அட கடவுளே இவளேன் இப்படி விபசாரியாக வாழவேண்டும்?

 'பயப்படாதே நான் ஏதோ உளவறிய வந்த சி.ஐ.டி என்று நினைத்துவிடாதே. நான் வந்தது ஒரு நல்ல காரியமாகத்தான்' என்று சொல்லிவிட்டு சிவத்தம்பி மெல்ல பல்லைக்காட்டினார். அந்தச் சிரிப்பில் அரைப்பங்கு அசடு வழிவதாயிருந்தது.

 'பயமா? எனக்கா? இந்த லோகத்து ராஜா வந்தாலும் நான் ஏன் பயப்படணும்?' என்று கூறியவள் நெஞ்சை நிமிர்த்தியவாறு அவர் அருகே வந்தாள். அவர் பார்வை அங்கே சிறிது நேரம் நிலைத்தது.

 'சரி, நீ அப்படி கொஞ்சம் உட்காருவாயா?' சிவத்தம்பி வேண்டிக்கொண்டார்.

 'ஓ! உட்காருகிறேனே!' என்று நளினமாக அவள் கூறியபோது வில்லாய் வளைந்த புருவத்தின் அழகையும் அலைபோல் நெளிந்த வெற்றிலைச் சாறுண்ட அதரங்களின் வனப்பையும் அவர் பார்வையால் பருகினார்.

 'அதாவது.... வந்து.... வந்து....' பேச்சைத் தொடங்கிய சிவத்தம்பி தடுமாறினார். எப்படிக்கதையைத் தொடங்குவது, எதை முதலில் கேட்பது என்று நினைத்துத் திக்குண்டார்.

 'என்னய்யா வந்து வந்து?' சிவத்தம்பியின் முகத்தருகே தனது முகத்தை நீட்டியபடி மெதுவாகக் கேட்டாள் அவள். கேட்டபோது அவளின் விம்மி எழும் மார்பகங்கள் அவரைப் பார்த்துப் பரிகசித்தன. வாசனைத் தைலம் வேறு அவரது மூக்கைப் பறித்தது. ஓரக் கண்களால் அவளைப் பார்த்தார். அவள் மென்னகை புரிந்தாள்.

 'வந்து... வந்து...' அவர் தவித்தார்.

 'ஐயோ பாவம், உங்களுக்கு கதைக்கவே முடியவில்லை. நாக்கு வரண்டு போச்சு. கொஞ்சம் இருங்கள். காப்பி கொண்டு வருகிறேன்' என்றவள் செல்லமாக அவர் தோளில் தட்டிவிட்டு எதிரேயிருந்த அறைக்குள் நுழைந்தாள்.

 சிவத்தம்பி சிலையாய் இருந்தார். உடல் கனல்போல் கனன்றது. அரைநிமிடந்தான் அந்த நிலை. மறுகணம் கணைபோல் அவள் சென்ற அறைக்குள் பாய்ந்தார்! கதவு மூடிக்கொண்டது.

 கணைபோல் பாய்ந்து சென்ற சிவத்தம்பி அரைமணித்தியாலம் கழித்து பூனைபோல்; அந்த அறையைவிட்டு வெளியே வந்தார். ஏன், அந்த வீட்டை விட்டுத்தான்! பேட்டியோ குறிப்போ எந்த மண்ணாங்கட்டியும் அவருக்கு இனித் தேவைப்படவில்லை. காரணம் அவர்தான் பெண்கள் விபசாரிகளாவதன் காரணத்தை தெரிந்துகொண்டாரே!

 ஆண்கள் தமது உணர்;;ச்சிகளை அடக்காதிருக்கும் வரை பெண்கள் - முக்கியமாக ஏழைப்பெண்கள் கற்புள்ளவர்களாக வாழ முடியாது. வறுமை வந்தாலும் பெண்கள் விபசாரிகளாக வாழ விரும்பமாட்டார்கள். ஆண்கள் தம் உணர்ச்சிகளுக்கு அடிபணியாவிட்டால் - இதைச் சிவத்தம்பி நன்றாகத் தெரிந்து கொண்டார் அனுபவத்தில்.

 இனி எதற்கு ஆராய்ச்சி.

No comments:

Post a Comment