Thursday, January 20, 2011

மனச்சாட்சியின் தண்டனை

 தேவன்
 


 












வேலாயுதத்தின் தலைமுறை தேய்ந்து வருகிறது. அவனைப் போன்றவர்கள் இனிமேல் தோன்றமாட்டார்கள். ஆமாம்! நேற்றுத்தான் அவன் காலமானான். – சிவபதமடைந்தான் என்பது கௌரவமாயிருக்குமோ? இதில் என்ன கௌரவம் வந்தது? செத்தான். ஏதாவது நோய், நொடிவந்து செத்திருந்தானானால் பரவாயில்லை. அல்லது தற்கால நாகரிகத்திற்கு ஏற்றவாறு 'சத்திர வைத்தியம் சித்தியடைந்தது. நோயாளி மாண்டான்' என்று மடிந்திருந்தால் கூட குற்றமில்லை. அப்படியானால் அவனைக் கொன்றது என்ன? மனச்சாட்சி!

 குற்றம் செய்தவன் பச்சாத்தாபப்பட்டு தற்கொலை செய்து கொண்டான் என்றால் அதை மனச்சாட்சி விதித்த மரண தண்டனை எனலாம். ஆனால் குற்றமே செய்யதவன் நஞ்சைக் குடித்தால்.....? அங்கேயும் மனச்சாட்சி தான். ஆனால் ஒரு சாவு நிம்மதியைத் தருகிறது. இன்னொன்று பரிதாபத்தை உண்டு பண்ணுகிறது.

 வேலாயுதம் நாற்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன் மணியகாரன் சித்திரவேலு வீட்டில் இருபது வயதுப் 'பொடியனாய்' சமைக்க வந்தான். பெரியவருடைய காலத்திலேயே அவருடைய மகன் சின்னத்தம்பி அப்புக்காத்துடன் கொழும்புக்கு வந்துவிட்டான்.

 பரம்பரை பரம்பரையாக திமிர் ஏறிய – அதிகாரத்திமிர் பணத்திமிர் எல்லாந்தான் - குடும்பத்தில் பரமயோக்யனாக, நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக, ஏவாமல் பணிபுரியும் சேவகனாக இவ்வளவு காலமும் வாழ்ந்து கல்யாணம் பண்ணி, பிள்ளைகளைப் பெற்று, படிக்கவைத்து, அவர்களுக்கும் கலியாணம் செய்துவைத்து விட்டான்.

 சித்திரவேலு சின்னத்தம்பி அப்புக்காத்து படிக்கும்போதே, தகப்பனார் வாழ்ந்தபோதே கலியாணம் செய்து கொண்டார். ஆனால் அந்த சீமாட்டி, 'மன்னன்' படிப்பு முடித்துக்கொண்டு கொழும்பிலேயே தங்கி பெயர்ப்பலகை மாட்டி தொழில் செய்யத்தொடங்கி இரண்டு வருடமாகவில்லை, மறு உலகம் போய் விட்டாள்.

 அப்பொழுதுதான் வேலாயுதத்துக்கு 'பிரமோஷன்' கிடைத்தது. அவனுக்கு ஊரை விட்டுப் போகப் பிரியமில்லை. ஆனால் மணியகாரனுக்கு முன்னால் வாய் திறந்தறியான். ஆகையால் பேச்சு மூச்சின்றி மூட்டை முடிச்சுகளைக் கட்;டினான். அவனுக்கு கொழும்பு பிடிக்கவில்லை. முக்கியமாக 'குவினைன்' மாதிரி குழாயில் வருகிற தண்ணீர்! ஆனால் அவனுடைய விருப்பு வெறுப்புகளை யார் கேட்டார்ள்.

 ஆனால் அவனை அலைக்கழித்தது தன் சௌகரியம் மட்டுமல்ல, சின்னத்தம்பியின் போக்கும்தான். 'தங்கமான மனுஷனுக்கு இப்படியா வந்து பிறக்கவேணும்?' என்று அயல் வீட்டு வேலைக்காரனோடு அவன் அரட்டை அடிக்கவில்லை. மனத்துக்குள்ளேயே புழுங்கினான். அந்த 'மகாலட்சுமி' இந்த 'அட்டாதுட்டித்தனத்தை' இருந்து பார்க்க முடியாமல்தான் கண்ணை மூடினாளோ என்று ஏங்கினான்.

 குடிப்பது, வெறிப்பது, கூத்துகள் ஒன்றுக்கும் குறைச்சலில்லை. பெரிய பங்களா, வீட்டைக் கட்டி ரோட்டிலே சில்லுப் பூட்டிவிட்டது போலக் கார் - எல்லாமிருந்துமென்ன என்றுதான் எண்ணினான். பாவம்! கற்பு, ஏக பத்தினி விரதம், பிறன் மனை நோக்காத பேராண்மை என்று பெரிதாக நினைக்கவிட்டாலும் ஏதோ எல்லாம் பிசமான காரியம், தவறான பாதை என்றுதான் எண்ணினான்.

 இத்தகைய சின்னத்தம்பிக்கு நட்பு, உறவு என்று பலர் சேர்ந்தனர். அதனால் தொழில் விருத்தியாயிற்று. அதிர்ஷ;ட தேவதையின் கடாட்சமும் இருந்தது. எல்லாம் ஒரு விஷச் சக்கரம். பெரிய மனிதனாயிருக்க பணம் வேண்டும். பணம் சம்பாதிக்க பணக்கார கட்சிக்காரன் வேண்டும். பணக்கார கட்சிக்காரரை மயக்க பணக்கார அப்புக்காத்தாக நடிக்க வேண்டும். பணக்கார அப்புக்காத்தாக நடிக்க 'பார்ட்டிகள்' 'டின்னர்கள்' வைக்க வேண்டும், குடிக்க வேண்டும்.

 இவ்வளவுக்கும் வேலாயுதத்திற்கு கரைச்சல் என்று ஒன்றுமில்லை. காலையில் காப்பி, தனக்கும் அப்புக்காத்து ஐயாவுக்கும் பலகாரம், மத்தியானம் இருவருக்கும் சமையல். இரவில் தனக்கு மட்டும் ஏதாவது - இவ்வளவுக்கும் ஐயா இரவில் வீட்டில் சாப்பிடுகிற வழக்கமே கிடையாது. நண்பர்கள் என்று நாலுபேர் சேர்ந்துவிட்டால் எல்லோருக்கும் எடுப்புச் சாப்பாடுதான். வேலாயுதத்தின் சமையல் நாகரிகமாக அவர்களுக்குத் தோன்றாது. அவன் சுத்தமான உடைகளுடன் பரிமாற வேண்டியதுதான். நல்ல பெரிய, வசதிகள் நிறைந்த அந்த வீட்டைக் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பும் அவனுடையது.

 அப்படியானால் வேலாயுதம் ஏன் முணு முணுக்க வேண்டும்? காய்கறி வாங்கப் பணம் கொடுத்தால் மீதி எவ்வளவு, எங்கே என்று கேட்காத எசமான் மீது ஏன் அதிருப்பதி? 'எல்லோருக்கும் நல்லவர். தனக்கு மட்டும் கெட்டவர்' என்பதுதான் அவனுடைய அபிப்பிராயம். சதம், சதமாக கணக்குப் பார்க்கிறவனுக்கு பணம் பாழாய் கரைவதைப் பார்க்க வயிறெரிந்து கொண்டிருந்தது. பார்க்கப்போனால் அது அவன் பணமுமல்ல. பத்திரம் பண்ணினால் அதில் பங்கு அவனுக்கு கிடைக்கப்போவதுமில்லை. அதுதானே, அவன் பழைய தலைமுறையைச் சேர்ந்தவன் என்று சொல்லியாற்றே!

 இந்த நாளையப் 'பொடியனாய்' இருந்தால் தானும் ஒரு 'டோஸ்' அடித்துவிட்டு 'சௌடாலாய்' இருந்திருப்பான். ஆனால் வேலாயுதம் அப்படிப்பட்டவனல்லன்.

 இப்படி இருக்கையில் பெரியவர் சித்திரவேலு 'போன' செய்தி வந்தது. மகனும் வேலைக்காரனும் 'பறந்தடித்துக்கொண்டு' ஊருக்குப் போனார்கள். வேலாயுதம் அழுத அளவு சின்னத்தம்பி அழுதிருப்பாரோ என்றால், அது சந்தேகந்தான். கொழும்புக்குத் திரும்புகையில் 'நீ வாறியோ, நிக்கப்போறியோ?' என்று கேட்டார் சின்னத்தம்பி. அப்பொழுது வேண்டுமானால் நின்றிருக்கலாம். அவனால் 'நிற்கப்போகிறேன்' என்று சொல்ல முடியவில்லை. பெரியவரும் போய் தனியனாகிவிட்ட சின்னத்தம்பியை 'ஊரானொருத்தன்' இல்லாமல் கொழும்பு திரும்பவிட அவன் மனம் ஒப்பவில்லை.

 அதனால் அவன் வந்தது நாசமனைத்தும். இன்றைக்கு அவன் செத்திருக்க வேண்டி நேர்ந்திருக்காது. யாழ்ப்பாணத்திலே தங்கியிருந்தானானால் இன்று தன் பேரப்பிள்ளையைக் கொஞ்சிக்கொண்டிருப்பான். ஹூம்!

 கொழும்புக்கு வந்த சில வருஷங்களுக்குப் பிறகு சுசீலா என்றொரு பெண் அப்புக்காத்து வீட்டுக்கு வந்து போகத்தொடங்கினாள். நிமிஷத்துக்கொரு வாடகைக் காரில் வருவதும், வீடு முழுவதும் சுற்றித் திரிவதும் அவளுடைய உடையும் அலங்காரமும், 'சள, சள' வென்ற பேச்சும் வேலாயுத்துக்கு கட்டோடு பிடிக்கவில்லை. அதனாலென்ன? சின்னத்தம்பிக்கு நிறையப் பிடித்திருந்தது.

 அதன் பலனாக அவள் அந்த வீட்டுக்கே குடிவந்தாள். தனக்கு எசமானியாக என்பதை உணர வெகுநேரம் பிடிக்கவில்லை வேலாயுதத்துக்கு. மீண்டும் பெரியவரை நினைத்துப் பார்த்தான். அவர் போய் விட்டார். கொடுத்து வைத்தவர். அவருடைய பிரதிநிதியாகத் தான் மட்டும் இந்த அக்கிரமங்களை யெல்லாம் காண வேண்டுமென்றிருந்ததே என்று வருந்தினான். அவர் போனதோடு சரி, தன் உறவைத் துண்டித்துக் கொள்ளாதது பிசகு என்று தோன்றிற்று.

 இந்த லட்சணத்தில் அவனுக்கும் சுசீலாவுக்கும் எப்படி உறவிருந்திருக்க வேண்டும் என்று வர்ணிக்கத்தேவையில்லை. கீரியும், பாம்பும் என்றால் சரி. ஆனால் இங்கே வைரிகள் இருவரும் ஒரேதரத்தவர் அல்லர். ஆகையால் நேர் மோதுதல் ஒன்றும் கிடையாது. ஆனால் உள்ளே ஒருவரை மற்றவர் விழுங்கிவிட வேண்டும் என்று கருவிக்கொள்கிற அளவுக்கு ஆத்திரம். சுசீலா வேண்டுமென்றே இவனை அலட்சியம் செய்தாள். 'தேவடியாளுக்கும் இவளுக்கும் என்ன வித்தியாசம்? என்று வேலாயுதம் நினைத்தான்.

 உரிமையோடு குடும்பத்தில் ஒருவனாய் வாழ்ந்த பாசம் முறைதவறி உள்ளே நுழைந்தவளை வெறுத்தது. 'நமக்கு எதுக்கு வம்பு' என்றிருக்க மனம் விடவில்லை. கல்யாணம், சம்பந்தம் என்று சுசீலாவே உள்ளே நுழைந்திருந்தால் வேலாயுதம் அவளை தலைமீது வைத்துக் கொண்டாடியிருப்பான். அவள் பாதங்களைப் பூவென்று கண்ணில் ஒற்றியிருப்பான். ஆனால்.......

 ஸ்நான அறையில் கழற்றிவைத்த வைரக்காதோலையைக் காணவில்லை. தான் வாங்கியதல்ல. சின்னத்தம்பி வாங்கிக் கொடுத்தது. ஆடிய ஆட்டம், குதித்த குதிப்பு! இம்மாதிரி நிகழ்ச்சிகள் சர்வசாதாரணம், பணக்கார வீடுகளில். சின்னத்தம்பியும் பலவீனமான ஒரு வேளையில் நிதானம் தவறிவிட்டார். அவரும் வேலாயுதத்தை வாய்க்கு வந்தபடி பேசிவிட்டார்.

 அன்றிரவு படுக்கைக்குப் போன வேலாயுதத்திற்கு ஒரேயோசனை. பெரியவருடைய காலத்தில் 'பெரிய அம்மா' ஒருநாள் கிணற்றடியில் வைத்த மூக்குத்தியை அவன் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தபோது அவனை எவ்வளவு பாராட்டினார்கள். இளமையிலே அந்த நேர்மைப் பட்டம் கேட்டவனுக்கா இன்று திருட்டுப்பட்டம்?

 காலையில் அவன் எழுத்திருக்கவில்லை. தனக்குத் தெரிந்த ஒரு டாக்டரை அழைத்து வந்தார் சின்னத்தம்பி. சாதாரண சாவல்ல. நஞ்சு குடித்து தற்கொலையென்று சாதாரண பரிசோதனையிலேயே புலனாகி விட்டது. எத்தனையோ கொலைகாரரை விடுவிக்க வாதாடிய அப்புக்காத்து சின்னத்தம்பிக்கு தானே குற்றவாளிக்கூட்டில் நிற்பதாகப்பட்டது. காசை விட்டெறிந்தாhர். விஷயத்தை அமுக்கினார். அறுபத்திமூன்று வயதுக்காரன் செத்ததற்கு ஒரு காரணம் கூறத் தெரியாமல் ஒரு டாக்டர் இருக்க முடியுமா? ஐந்து வருஷம் வைத்திய கல்லூரியில் படித்தவருக்கு இதுதானா ஒரு பெரிய காரியம்?

 தந்தியடித்து வேலாயுதத்தின் மகனை அழைத்தார். அவன் நல்ல நிலைவரத்தில் இருந்தான். ஊருக்கு பிரேதத்தை கொண்டுபோக விரும்பினான். அருமையான மையப்பொட்டியொன்றில் உயிரற்ற வேலாயுதத்தை ரயிலேற்றி வைத்தார். 'ஆகா! எவ்வளவு நல்ல மனுஷன்! இந்த நாட்களில் வேலைக்காரனுக்காக யாராவது இவ்வளவு செய்வார்களா?' என்று பலர் சொன்னார்கள்.

 ஆனால் அவர் மனச்சாட்சி அவர் நெஞ்சைத் தின்றது. அந்த வைரத்தோடு அதைப்போல இன்னொன்று வாங்குவது பெரிய காரியமல்ல. அது எப்படிப் போயிருக்கும்? ஒரு வேளை கைதவறி குழாய்க்குள் விழுந்து விட்டதோ – யாருக்கு தெரியும்? அந்தக் குழாய் - அவனுக்குப் பிடிக்காத குழாய் - நாளை நல்ல ஒரு ஆளைக் கொண்டு அந்தக் குழாயைத் துளாவிப் பார்க்க வேண்டும் என்று எண்ணினார். எண்ணியென்ன? அவன் மனச்சாட்சி அவனைக் கொன்றே விட்டதே!.

No comments:

Post a Comment