Thursday, January 20, 2011

ஆத்மாவின் கீதம்

 காவலூர் எஸ்.ஜெகநாதன்   

  'சத்திய மேடையில் உத்தமன் பாடிடும்......'

 கசங்கிய அந்தக்கடதாசியில் எழுதப்பட்ட பாடல் வரிகளை என்னுள் முணுமுணுத்துப் பார்த்தேன். நெஞ்சத்துள் ஒரு இன்ப உணர்வு நெருடியது. வெளியாக இருந்த அந்தக் தரையில் நின்று உரத்துப் பாடினேன். பிசிறின்றி ராகத்துடன் ஒலித்தது என்குரல். வீட்டுக்குள் ஓடினேன். விறாந்தையில் இருந்து அப்பா தேவாரம் பாடிக் கொண்டிருந்தார். 'அப்பா நான் ஒரு பாட்டு எழுதியிருக்கேனப்பா....' என்றேன் ஆவலுடன். 'பன்ரெண்டு வயது முடியேல்லை அவருக்கொரு பாட்டு' அப்பா மீண்டும் தேவாரம் பாடுவதில் மூழ்கிவிட்டார். அவர் பாடிக்கொண்டிருக்கிற பாட்டு மட்டும் என்னவாம். ஞானசம்பந்தர் மூணே வயசிலை பாடினது தானே, மீண்டும் 'என் பாட்டைக் கேளுங்கப்பா....? என்றேன். 'இவனோட பெரிய தொல்லை' என்று சலித்தபடியே அப்பா எழுந்து உள்ளறைக்குள் சென்றுவிட்டார்.

 என் மனம் வெகுவாக கசந்துவிட்டது. அந்தப் பாடல் எழுப்பட்ட கடதாசியைக் குனிந்து பார்த்தேன். கண்ணீர்த்துளிகள் தான் அதில் பறந்து விழுந்தன. மறுகணமே ஒரு நினைப்பில் கீறல் என் மனதைத்தாக்கியது. அம்மா நிச்சயமா என் பாட்டைப் பாராட்டுவாள். மகனுடைய செயலைத் எந்தத்தாய்தான் பாராட்ட மாட்டாள். ஆவலுடன் துள்ளிக் குதித்தபடியே குசினிக்குள் ஓடினேன். அம்மா பால் காய்ச்சிக் கொண்டிருந்தார் அம்மாவின் அருகில் அமர்ந்தபடி முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன். அம்மாவின் முகத்தில் கருணை கசிந்து கொண்டிருந்தது. 'நான் ஒரு பாட்டு எழுதியிருக்கேனம்மா' என்றபோது அம்மா சிரித்தாள். நிச்சயமாக அது ஏளனம் செய்கின்ற சிரிப்பாக இராது என்ற 'நம்பிக்கை'யில் திருப்திபட்டவனாக தொண்டையைச் செருமினேன். மூச்சை உள்வாங்கி இழுத்துக்கொண்டு உரத்த குரலில் பாடத்தொடங்கினேன். அப்பாவுக்கும் கேட்கவேண்டும், அவர் பாடிக்கொண்டிருக்கும் தேவாரத்தை மீறி அவரது மனதைத் தொட வேண்டும் என்ற வெறி எனக்குள் மூழ்கியிருந்தது.

 அம்மா சிரிப்பதைப் பார்ப்பதற்காக இடையில் கண்ணை மெல்லத் திறந்தேன். அம்மா குசினியை விட்டுப் போய்க்கொண்டிருந்தாள். 'சீனியை எடுத்திட்டு வாறன்ரா' என்ற அம்மாவின் குரல் என் காதுக்குள் விருப்பமின்றியே நுழைந்தது.

 அடுப்பிலிருந்த பானையில் பொங்கிக்கொண்டிருந்த பால் உள்வாங்கியது போலவே என் மனதிலும் பிரவேசித்து வந்த இனிய உணர்வ உள்வாங்கியது. அந்தப் பாடலை என்மனதுள் முணுமுணுத்தேன். என் இதயப்பரப்பில் அந்த உத்தமரின் நினைவைப் போலவே அந்தப்பாடல் வரிகளும் அழிக்கமுடியாத ஓவியமாகப் பதிந்து விட்டது.

 மேல் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு முறை விடுமுறையில் உல்லாசப்பயணம் போனோம். பஸ்சில் போய்க்கொண்டிருந்தபோது எல்லோரும் தனித்தனியாகப் பாட்டுப் பாடினார்கள். என் முறையும் வந்தது. 'எல்லோரும் அமைதியாக கேளுங்க.... இந்தியாவிலே சுதந்திரம் பெற்றுக்குடுக்க ஒரு காந்தி பிறந்தாரில்லையா அது போலவே நமக்கும் சுதந்திரம் பெற்றுக்கொடுப்பதற்கென்றே பிறந்த உத்தமருடைய தத்துவத்தைப் பற்றிய பாடல் இது' என்றேன். எல்லோரும் வியப்புடன் என்னையே பார்த்தார்கள். நான் என்னை மறந்து பாடத்தொடங்கினேன். 'சத்திய மேடையில்........' குறுக்கிட்ட சிரிப்பொலிகளைக் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன். 'டேய்.... ஒரு சினிமாப்பாட்டுப் பாடுடா' என்று பக்கத்தில் இருப்பவன் கூறினான். என் நெஞ்சம் வேதனையில் கசந்தது.

 நாட்கள் நகர்ந்தன. எனக்கும் திருமணம் முடிந்துவிட்டது. முதலிரவன்று மனைவியின் வரவுக்காக கட்டிலில் காத்திருந்தேன். அவளும் அருகே வந்து அமர்ந்தாள். அருகணைத்து இருத்தியபடியே 'நான் ஒரு பாட்டுப்பாடட்டுமா' என்றேன். இலக்கியக் கூட்டத்தின் பின்னர் கச்சேரி வைக்கும் போது அந்தக் கச்சேரியை ரசிப்பதற்காக இலக்கியக் கூட்டத்தை சகித்துக் கொண்டிருப்பார்களே.... அதுபோலாவது என்பாட்டை அவள் ரசிக்க மாட்டாளா என்ற நினைப்பில் செருமிக்கொண்டே பாடத்தொடங்கினேன். குறுக்கிட்டவள்; 'சினிமாப் பாட்டுங்களா' என்று ஆவலுடன் கேட்டாள். 'இல்லையடி இலட்சிய முனைப்பில் இதய சுத்தியுடன் நமக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் தலைவரின் தத்துவத்தைப்பற்றியது' என்றுவிட்டுப் பாடத்தொடங்கினேன்.

 'சத்திய மேடையில் உத்தமன் பாடிய தத்துவமானது எத்தனை ஆண்டுகள்'
 குறுக்கிட்ட குறட்டைச் சத்தம் கேட்டு பாட்டை நிறுத்தினேன். மடியில் தலைவைத்து உறங்கிவிட்டாள் என் மனைவி.

 என் மனைவியும் இறந்து பல வருடங்கள் கழிந்துவிட்டன. நோயும் என்னைப் பீடித்துக்கொண்டது. நானும் எவ்வளவு மாறிவிட்டேன். உருக்குலைந்துவிட்ட உடலை சரித்துக்கொண்டேன். தாகம் நெஞ்சை வாட்டியது. எவ்வளவு நேரம் இப்படிக் கிடப்பேனோ தெரியவில்லை. 'தாத்தா...' என்று ஒலித்த மழலைக்குரல். திடுக்கிட்டு எழுந்து பார்த்தால், ஒரு குழந்தை சிரித்தபடி மலர்ந்த முகத்துடன் நின்றது.

 'பாப்பா... கொஞ்ச தண்ணீர் தருவியா' என்று கேட்டேன். உள்ளே சென்ற குழந்தை சில நிமிடங்களின் பின் நீருடன் வந்தது. ஆத்மா குளிர்ந்தது. வீதியால் சென்றுகொண்டிருந்த இருவர் கதைத்துக்கொண்டு போவது கேட்கிறது.

 'நம்ம தலைவர் பாராளுமன்றத்திலை சுதந்திரப்பிரகடனம் கொண்டுவரப் போகிறார்.' உத்தமரின் முகம் என் மனக்கண்களில் தோன்றியது. என் ஆத்மாவின் கீதம் அந்தப்பாடல் வரிகளை உரத்துப் பாடிவிட்டு கண்களைத் திறந்துகொண்ட போது சிரித்தபடி கைகளை ஆட்டிரசித்துக் கொண்டிருந்தது குழந்தை. நான் இறகு விரித்து வானில் பறந்தேன். குழந்தை தன் தாயைக் கையில் பிடித்துக்கொண்டு வெளியே அழைத்து வந்தது. 'நீங்களும் வாருங்களேன்' என்று அவள் குரலைத்தொடர்ந்து கணவனும் வெளியே வந்தான். வீதியில் போனவர்கள் கூடிவிட்டார்கள். எல்லோரும் பாடலில் லயம் தவறாது கையால் தாளமிட்டுக்கொண்டிருந்தனர். என் பாடல் அரங்கேறிவிட்டது. நான் என்னை மறந்துவிட்டேன். என் ஆத்மாவின் கீதம் காற்றில் கலந்துகொண்டிருந்தது.

 'சத்திய மேடையில் உத்தமன் பாடிடும்
 தத்துவமானது
 எத்தனை ஆண்டுகள்
 செத்துவிட்டாலும்
 நித்தியானது'

 என்னைச் சூழநின்ற எல்லோரும் தம்மை மறந்து பாடலில் மூழ்கிவிட்டார்கள். நான்...? என் கண்கள் இருண்டன. பசிக்களைப்பில் உடல் சுருண்டது. என் உடலைவிட்டுப் போகத் துடித்த என் உயிர் போகாமலேயே நின்றது அந்த உத்தமரை நினைத்து. நாலே வரிகள் பாடியதாலேயே என் உயிர் காப்பாற்றப்பட்ட தென்றால் அந்த உத்தமர் நித்தியமானவர்.

No comments:

Post a Comment