Friday, January 21, 2011

தமிழ்ச்சட்டம்பி


 அராலியூரான்

 'தங்கம்மா! தங்கம்மா! இஞ்சை ஒருக்கா ஓடியா?'

 'ஏனணை அம்மா கூப்பிடுகிறியள்?'

 'உன்ரை கொத்தானெல்லே பெண்சாதியோடை போறார். ஓடியந்து பாரன்'

 'உண்ணாணைப் போறார்?'

 'உண்ணாணைப் போறார் பிள்ளை' என்று பார்வதி சத்தியம் செய்து கூறியதும் வீட்டு விறாந்தையைக் கூட்டிக்கொண்டு நின்ற தங்கம் கூட்டுமாறையும் அப்படியே விட்டுவிட்டு ஒடினாள் தெருப்படலையடிக்கு.

 'பாத்தியே உன்ர கொத்தானை. எங்கண்ட வீட்டுக்கே வராமல் போறார். அவருக்கு நாங்கள் என்ன செய்தனாங்கள்'

 'என்ன செய்தனீங்களோ? அவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் நினைத்தால்........'

 'என்னத்தைச் செய்தனாங்கள்? நாங்கள் சொன்னமாதிரிப் படிச்சிருந்தால் ஏன் இப்படியெல்லாம் வருகுது'

 'நீங்கள் சொன்னமாதிரிப் படிப்பிச்சாப்போலை ஏதோ பெரியமனுசனா விடுவாரே? இப்ப மாத்திரம் ஏதோ குறைவே?'

 'இப்ப குறைவில்லைதான். இருந்தாலும்.........'

 'என்ன? என்ன இருந்தாலும் என்று இழுத்துப்பேசிறியள். இப்பதானாமே அவருக்குச் சரியான சம்பளம். வேலையும் சொந்த ஊரிலையாம். அவருக்கு சம்பளம் ஏறப்போகுதாம்.'

 'ஆர் சொன்னது?'

 'பேப்பர் தான் சொல்லுது. சுயபாiஷகாரருக்கு இன்னும் சம்பளத்தைக் கூட்டப்போறாங்களாம்'

 'உண்ணாணை எண்டு சொல்லு?'

 'உண்ணாணை'

 'நாங்களெல்லே கொத்தான்ரை சம்பளம் பிச்சைக்காரச் சம்பளம். குடும்பத்தைக் கொண்டு நடத்தமுடியாதெண்டெல்லோ நினைச்சு உன்னை...'

 'என்னை அவருக்குச் செய்து குடுக்காமை விட்டாப்போலை அவர் குறைஞ்சு போனாரே? என்னைக் கல்யாணம் செய்ய வேணுமெண்டு அவர் பட்டபாடு. பாவம்' என்று தங்கம் சொன்னதும் கடந்த காலச் சம்பவங்கள் யாவும் பார்வதியின் நினைவுக்கு வந்தன.


 ஆனந்தன் பார்வதியின் அண்ணன் மகன். அவன் பிறந்து ஐந்து ஆண்டுகளால் தகப்பன் இறந்துவிட்டான். சின்னஞ்சிறு வயதிலே தகப்பனை இழந்த ஆனந்தன் அவ்வூர்த் தமிழ்ப் பாடசாலை ஒன்றில் படித்தான். ஆனந்தன் படிக்கும் காலத்தில் ஆங்கிலத்திற்கு நல்ல மதிப்பு இருந்தது. ஆங்கிலம் படித்தவர்களுக்கே அரசாங்கத்தில் உத்தியோகங்கள் கிடைத்தன. உத்தியோகத்திற்காக ஆங்கிலத்தில் மோகங்கொண்ட தமிழர்கள் பலர் தமிழை வெறுத்து ஆங்கிலக் கல்லூரிகளில் ஆங்கிலம் படிக்கத் தொடங்கினர்.

 'ஒரு நாள்,

 'தம்பி ஆனந்தன்! இந்தக் காலத்திலை இங்கிலீசு படிக்காமை ஒண்டும் செய்ய முடியாது. நீயும் இங்கிலீசுப் பள்ளிக்கூடத்திலை போய்ப்படியன்'

 'எனக்கேன் இங்கிலீசை. எங்கண்டை தமிழ் இருக்கையுக்க தமிழை விட்டுட்டு இங்கிலீசு படிக்கிறதே'

 'பின்னை உனக்கு உத்தியோகம் வேண்டாமே?'

 'உத்தியோகத்துக்காகத் தாய் மொழியை விடச்சொல்லுறியளே, தமிழ் படிச்சவை உத்தியோகம் பாக்கையில்லையே. பண்டைத் தமிழர்கள் எல்லாம் உத்தியோகம் பாத்தவையே'

 'தமிழ் படிச்சவைக்;கு என்ன உத்தியோகம் கிடக்குது. ஆக அந்த வாத்தி வேலைதான் கிடக்குது. அதுவும் பிச்சைக்காரச் சம்பளம்'

 'அந்தக் காலத்து வாத்திமாரெல்லாம் சம்பளத்துக்காகவே படிப்பிச்சவை. என்ன இருந்தாலும் நான் தமிழ்தான் படிக்கப்போறன். தமிழிலை இருக்கிற இலக்கண இலக்கியம் வேறை எந்த மொழியிலை இருக்குது?'

 'ஆர் சொன்னது உப்பிடி? நானும் தமிழ் படிச்சனான்தான்'

 'ஓ நீங்களும் தமிழ் படிச்சிருக்கலாம். ஆனால் அங்கினை ஒண்டையும் இங்கினை ஒண்டையும் படிச்சிருப்பியள். முற்றும் ஆராய்ந்து படித்தவனுக்குத்தான் அதன் பெருமையும் சிறப்பும் தெரியும்'

 'சரி சரி உன்னோட கதைச்சு வேலையில்லை. உன்ரை கொம்மாவை ஒருக்கா வந்திட்டு போகச்சொல்லு!' என்று பார்வதி சொன்னதும் ஆனந்தன் சிரித்துக்கொண்டே எழுந்து வீட்டுக்குப் போனான்.

 'தங்கம்! மச்சாள் இருக்கிறாவே?'

 'என்ன மாமி! அம்மாவையே கேக்கிறியள். அவ கோலுக்கை இருக்கிறா. வாருங்கோவன் உள்ளுக்கு!' என்று கூறித் துள்ளிக் குதித்துக்கொண்டு மான் போல் ஓடி மறைந்தாள் தங்கம். தங்கத்தைப் பின்தொடர்ந்து சென்றாள் பரிமளம்.

 'உதார் எங்கண்டை பரிமள மச்சாளே? வா மச்சாள் வா'

 'வரச்சொல்லிச் சொல்லியனுப்பினீங்களாம். அதுதான் வந்தனான்.'

 'ஏனணை மச்சாள் நிண்டு கொண்டு கதைக்கிறியள். உதிலை இரன். உன்ரைமேனைப் பற்றித்தான் கதைக்க வேணும்' என்று பார்வதி சொன்னதும் சேலைத்தலைப்பை சரிசெய்து கொண்டே நாற்காலியில் அமர்ந்தாள் பரிமளம்.

 'நேற்றைக்கு மேன் என்ன சொன்னவர்?'

 'அவன் எல்லா விஷயமும் சொன்னவன் தான். என்ன இருந்தாலும் தமிழ்தானாம் படிக்கப்போறான். வருங்காலத்திலை தமிழுக்குத் தானாம் மதிப்பு வரும்'

 'உந்த எம்.பீ மார் சும்மா சொல்லுவாங்கள். பிறகு என்ன நடக்குதெண்டு பாருங்கோவன்'

 'மச்சாள்! என்னை என்னணை செய்யச் சொல்லுறாய்?'

 'மேனை இங்கிலீசு படிக்கச் சொல்லு. கண்டவன் நிண்டவனெல்லாம் இங்கிலீசு படிக்கையுக்கை இவர் மாத்திரம் தமிழ் படிக்கப்போறாராமே?'

 'அவன் தமிழ்தான் படிக்கப் பேறேணெண்டு ஒற்றைக்காலிலை நிக்கிறான்'

 'அப்பிடியெண்டா உன்ரை மேனுக்கும் என்றை மேளுக்கும் ஒத்துவராது. அவளை நாங்கள் இங்கிலீசு படிப்பிக்கப்போறம்'

 'நான் என்ன செய்யிறது? நீங்கள் என்னத்தை எண்டாயென்ன செய்யுங்கோ' என்று சொல்லிக்கொண்டே நழுவியிருந்த முந்தானைச் சேலையைச் சொருகிக்கொண்டு போனாள் பரிமளம்.


 ஐந்து வருடங்களுக்குப் பின்:


 'என்ன மச்சாள்! இண்டைக்கு உறவினர்களோடை வந்திருக்குறாய்? என்ன விNஷசம்?'

 'ஒண்டுமில்லை. என்ரை மேன்ரை விஷயமாகத்தான் வந்தனாங்கள்'

 'என்ன விஷயம்?'

 'கலியாண விஷயமாகத்தான்'

 'ஆருக்குச் செய்ய....'

 'என்ரை ஆனந்தனுக்கும் தங்கத்துக்கும்...'

 'என்ன!... நான்தானே படிக்கையுக்கை சொன்னனான்...'

 'போனதைவிடு மச்சாள். அவன்தானே இப்ப உத்தியோகமாகி விட்டான்'

 'என்ன உத்தியோகம்? தமிழ்ச் சட்டம்பிதானே?'

 'ஓமணை மச்சாள்.'

 'அது ஒத்துவராது. வேறை யாரையும் பாத்துச் செய்யுங்கோ'

 'உருத்துக்காகவே, உத்தியோகத்துக்காகவே கலியாணம் செய்யப் போறியள்'

 'எல்லாற்றை பெட்டையளும் காற்சட்டை போட்டவங்களோடை இங்கிலீசு பேசிக்கொண்டு போக என்ரை பெட்டையை மாத்திரம் வேட்டி உடுத்தவரோடை தமிழ் பேசிக்கொண்டு போகச் சொல்லுறியளே?'

 'ஏன் தமிழ்ச் சட்டம்பி உத்தியோகம் சரியில்லையே?'

 'சரியெண்டு வை. சம்பளம் என்ன தெரியுமே?'

 'இஞ்சைபார் மச்சாள்! சம்பளம் குறைஞ்சாப்போலை தமிழ்ச் சட்டம்பியைத் தள்ளி வைக்காதையுங்கோ. ஒரு காலத்திலை தமிழ்ச் சட்டம்பிமாருக்கும் நல்ல காலம் வரும்'

 'அது வந்த காலத்திலே பாப்பம். இனிமேல் இதைப்பற்றிக் கதைக்காமல் உன்ரை மேனுக்கு எங்கையாலும் பார்த்துக் கலியாணத்தைக் கட்டிவை.'

 'அது எனக்கும் தெரியும். இனிமேல் இந்த விஷயமாக உன்ரை வீட்டுக்கு வந்தால் உன்ரை காலுச் செருப்பாலை அடி' என்று சொல்லிக்கொண்டே விறுவிறென்று நடந்தான் பரிமளம்.

 ஆனந்தனுக்கும் அவ்வூரைச் சேர்ந்த பிரபல விவசாயி ஒருவரின் மகள் ரோகினிக்கும் திருமணம் வெகுசிறப்பாக நடைபெற்றது. ரோகினி வறுமைப்பட்டவள். ஆனால் பண்புள்ளவள். ரோகினியின் சிறந்த பண்பு ஆனந்தனைக் கவர்ந்தது. ஆனந்தன் ரோகினியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டதையிட்டுப் பெருமைப்பட்டான்.

 'என்ன பார்வதி! றோட்டையே பார்த்துக்கொண்டு நிக்கிறியள்? என்ன விNஷசம்?' என்று அந்த வீதியால் வந்த தம்பையா மாஸ்ரர் கேட்டதும் பார்வதி சுயநினைவுக்கு வந்தாள்.

 'ஒண்டுமில்லை மாஸ்ரர். எங்கண்டை மருமேனும் பெண்சாதியும் போகினம். அதுதான் என்றை மேளுக்குக் காட்டினனான்'

 'இப்ப காட்டினாப்போலை என்ன. அந்தப் பொடியன் கேட்ட நேரம் செய்து கொடுத்திருந்தா உன்ரை மேள் ஏன் உப்பிடி இருக்குது'

 'அதுக்கென்ன மாஸ்ரர் செய்யிறது. மருமேனுக்குப் பேசியிருந்ததென்டெல்லே ஒருத்தரும் மாட்ட மெண்ணுறாங்கள்'

 'பார்வதி! இப்பவெல்லே மருமேனுக்குச் சம்பளம் கூட்டிப் போட்டாங்கள். அவன்றை சம்பளத்துக்கும் மதிப்புக்கும் ஆரும் கிட்ட நிக்க முடியுமே?'

 'நானென்ன செய்யிறது. இதெல்லாம் காலம் செய்யிற வேலை மாஸ்ரர். அல்லாட்டித் தமிழ்ச் சட்டம்பியை வேண்டாமெண்டு தள்ளியிருப்பேனே? தமிழை வேம்பென வெறுத்துவிட்டு இங்கிலீசைக் கரும்பென நினைத்தது என் தவறுதான். அதுக்கினி என்ன செய்யிறது?'
 

No comments:

Post a Comment