Thursday, January 27, 2011

வரவேற்பு.....!

.யேசுராசா



ஸ்ரீலங்கா புத்தகசாலை'யிலிருந்து 'தாமோதர விலாசி'ற்குள் நான் நுழைந்தபோது வெட்கப்பட்டுச் சிரித்துக் கொண்டு, அவன் என்னை வரவேற்றான். நானும் பதிலுக்கு சிரித்தேன்.

கைகழுவிட்டு உள்ளுக்குள் சென்று அமர்ந்தபோது முன்னுக்கு வந்து 'என்ன சாப்பிடுறீங்க' என்று ஆதரவாகக் கேட்டான்.

நான் சொல்லியபடி அவன் கொண்டுவந்து வைத்த வடையைச் சாப்பிடத் தொடங்கியபோது,

'உங்கட ஊர் இங்கையா? லீவில வந்தனீங்க போல?'

'ஓம்' நான் தலையை ஆட்டினேன்.

'எங்க?'

'குருநகர், பழைய போஸ்ற் ஒவ்வீஸ்... அதுக்கங்கால கொஞ்சம் போகவேணும்.'

'நான் அங்கால போகஇல்லை'

மேலே ஒன்றுமே தோன்றாதபடி நின்றான். பழையபடி அதே வெட்கம் நிறைந்த சிரிப்பு.

நான்தான் தொடர்ந்தேன்.

'அந்த கொழும்புக் கடைய ஏன் விட்டனீர்?'

'சம்பளங் காணாது'

'இஞ்சவந்து, இப்ப எத்தின மாதம்?'

'அஞ்சு மாதம்'

'அங்கையும் இப்ப எல்லாம், புது ஆக்கள்'

'ரீ மேக்கர்.....?'

' அந்தாள், பழைய ஆள்.'

அவன் உள்ளுக்குப் போனான்.

'இதார்?' யாரோ கேட்டார்கள்.

'நான் நிண்ட கொழும்புக் கடைக்கு சாப்பிடவாற........'

அது அவனின் குரல்தான். வேறு ஒன்றும் கேட்கவில்லை.

வடையைச் சாப்பிட்டுவிட்டு தேத்தண்ணீருக்குச் சொல்ல ஆளைப் பார்த்தபோதும் அவன் வரவில்லை, வேறொரு பெடியன் வந்தான்.

நான், 'ஷஸ்றோங்கப் ரீ'க்குச் சொல்லிவிட்டு இருந்தேன்.

அப்போது, அவன் என்னைக் கடந்து முன்னுக்கு.... கஷpயர் மேசைக்குக் கிட்டப் போனான். உடனே திரும்பி வந்தவன் என்னைப் பார்த்துவிட்டு, மெல்லிய ஓட்டத்தோடு உள்ளுக்குச் சென்று 'கப் ரீ'யை எடுத்து வந்தான்.

'ரீ'யைக் குடித்துவிட்டு பக்கத்துக் கதிரையிலிருந்த புத்தகப் பார்சலையும் எடுத்துக்கொண்டு எழும்ப ஆயத்தமானபோது அவன் சொன்னான்:

'பில்ல நான் குடுத்திற்றன்.'

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

'எங்க?' நான் கேட்டேன்,

'இல்ல.... நான் அங்க குடுத்திற்றன், இப்பதான் காசு குடுத்தனான்' என்றபடி அதே வெட்கச் சிரிப்புடன் கஷpயரைக் காட்டினான்.

நான் எதிர்பார்க்கவேயில்லை! எழும்ப ஆயத்தமானவன் அப்படியே கதிரையில் இருந்தேன், எனக்கு ஒரே ஆச்சரியம், இப்பொழுதான் அவன் உள்ளுக்குப் போய் விட்டு வந்தது விளங்கியது.

உடனே எழுந்து சென்றுவிடாதபடி, அவனது செய்கை என்னைக் கட்டுப்படுத்தியது. அவனோடு இன்னும் நெருங்க வேண்டுமென்று நினைத்து,

'உம்மட பேர்...? வேதம் என்று தெரியும்: பேர் ஞாபகத்திற்கு வருகுதில்லை...' என்றபடி அவனைப் பார்த்தேன்.

அவன் சிரித்தபடி சொன்னான். 'மரியசூசை'

'இப்பயும் அங்க ஒரு வேதக்காறப் பெடியன் நிக்கிது: பேர் அந்தோனியாயிருக்க வேணும்'

'....! எனக்குத் தெரியாது'

தொடர்ந்து ஓர் மௌனம்.

நேரம் போய்க் கொண்டிருந்தது: பப்ளிக் லைபிறறிக்கும் போக வேணும்.

அந்த இதமான மௌனத்தொடேயே நான் போவதற்காக எழும்பி,

'அப்ப.... நான் வாறன்' என்று சொன்னபோது அவன் சரி என்பதைப்போல் தலையாட்டி, என்னைத் தொடர்ந்து வந்தான்,

கஷpயரும் பழ்கியவரைப்போல் சிரித்தார்.

'சரி: அப்ப நான் வாறன்....' என்று அவனுக்குச் சொல்லியபடி வெளியே வந்தேன்.

சைக்கிளை எடுத்து ஏறி அமர்ந்து ஓடியபோதும், அவனின் ஞாபகம்...

'மரிய சூசை....'

வெள்ளவத்தையில, 'மஹா லக்சுமி பவானில' நாங்க கதைச்சிருக்கிறம். தேத்தண்ணீர்க் கடைப் பெடியங்களில, எனக்கு எப்பவும் அனுதாபம், காலமையில இருந்து ராப் பத்து மணிவரை, ...! இந்த நீண்ட நேரம் இவங்க வேலை செய்ய வேணும்.....

கடைக்கு வந்தபோது நான் ஆதரவாக நடந்து கொண்டது அவனை என்மேல் ஈடுபாடு கொள்ளச் செய்திருக்கலாம். அவனின் தோற்றத்திலும், பழக்கத்திலும் எனக்கும் ஒருவித பிடிப்பு. எப்பவோ ஒருக்கா அவனின் பேரைக் கேட்டு வேதக்காரனெனத் தெரிந்தபோது எனக்கு ஆச்சரியம். அவனது ஊர் நாவலப்பிட்டி. 'அப்ப தோட்டக் காட்டிலும் வேதக்காறர் இருக்கினம்....'

நானும் வேதக்காரனென்பதை அவனுக்குத் தெரியப்படுத்தினபோது அவனுக்கு ஆச்சரியம். மேலும் ஒருவித அக்கறையுடனும் மரியாதையுடனும் அவன் நடந்துகொண்டான். இதைவிட குறிப்பிடத்தக்க தொடர்பு ஏதும் எனக்கும் அவனுக்குமில்லை.

இப்ப, யாழ்ப்பாணத்தில அஞ்சு மாதத்திற்குப் பிறகு அவனைச் சந்தித்தபோது, தனக்குத் தெரிஞ்ச ஒருவரை பழக்கமானவரை, தன்னுடைய வீட்டில்... கடையில், வரவேற்க விரும்பினானா.......?

'மரிய சூசை....'

இதை என்னால் மறக்க முடியாது!.



No comments:

Post a Comment