Tuesday, January 25, 2011

மனிதாபிமானிகள்

 மன்னார் அமுதன்
 















 'மியாவ்...', 'மியாவ்...' என்று இடைவிடாது கேட்டுக்கொண்டேயிருந்த சத்தம், சர்வதேசத்தைப் போல நேரம் கிடைக்கும் போதெல்லாம் கூடிக் கதைக்கும் எங்கள் மனிதாபிமானம் தொடர்பான உரையாடலை இடைநிறுத்த மரக்கதிரையிலிருந்து எழும்பி வந்து ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தேன்.

 தன் அம்மாவை எங்கேயோ தொலைத்துவிட்ட, அழகான வௌ;ளைநிறப் பூனைக்குட்டியொன்று எங்கள் வீட்டின் கீழுள்ள சீனாக் கிழவியின் வீட்டிற்கு முன் நின்று கத்திக்கொண்டிருந்தது. அன்று முழுமதி தினம். ஞாயிற்றுக் கிழமை மத்தியானம் எங்கிறதால ரோட்டுல பெருசா சனம் இல்ல. எங்கள் குடியிருப்பு புறாக்கூடு மாதிரி. சதுரம், சதுரமா கட்டப்பட்ட அடுக்கு மாடிமனை. எங்கட முதலாவது மாடி எங்கிறதால ஏறி இறங்க லேசு. பக்கத்துல, மேல, கீழ எண்டு நிறைய வீடுகள் இருந்தாலும் இரத்தம் மலிஞ்ச பூமி என்கிறதால யாரும், யாரோடும் பெருசா புழங்கிறது இல்ல. மனசுல ஓர் அழுத்தத்தோட வாழுற மக்கள், படியில பார்த்தா மட்டும் சிரிச்சுக்குவாங்க. எங்கட பக்கத்து வீட்டில ஒரு அம்மம்மாவும், அவட அம்பது வயசு மகளும் இருக்குறாங்க. கீழ்வீட்டில சீனாக்கிழவி தன் மகள், பேரப்பிள்ளைகளோட வாழுறா. அவ சின்னப்பிள்ளையா இருந்தப்ப சீனாவுல இருந்தாவாம், அதனால எல்லாரும் அவவ சீனாக்கிழவி எண்டு சொல்லுவாங்க.

 'ஐயோ பாவம், அழகான வெள்ளைக் குட்டி' எண்டு நினைச்சுக் கொண்டிருக்கையிலேயே, தமிழ் தொலைக்காட்சியில் 'நியூஸ் அலர்ட்' லோகோ சுத்திக் கொண்டு வரவும் சரியாக இருந்தது. பூனைக்குட்டியிலிருந்த கவனம் டீவியை நோக்கித் திரும்பியது.

 'இவன்கள், இந்த டீவியை வச்சுக் கொண்டு படுற பாடு. இந்த வீணாப் போன விளம்பரங்களையும், இதையும் தானே சுத்திச் சுத்திக் காட்டுறான்கள். ஒரு பாட்டையாவது முழுசாப் போடுறான்களா. டெலிபோன் கதைக்கிறப்போ சொல்லனடா தம்பி' என்று வசைபாடிக் கொண்டே பக்கத்து வீட்டு அம்மம்மா எழும்பினா. செய்தி போற நேரம் தான் அவக்கு இடைவேளை. அந்த நேரம் அவட அவசர, அவசிய வேலைகளை முடித்துக் கொண்டு திரும்பவும் நிகழ்ச்சி தொடங்க வந்திருந்து பார்ப்பது வழக்கம். அவங்கட வீட்டில டீவி இருந்தாலும், தனியா இருந்து பார்க்க அம்மம்மாவுக்குப் பிடிக்கிறதில்லை.

 நியூஸ் அலர்ட்டில வன்னியிலிருந்து வந்து குவியிர மக்களைக் காட்டுறப்ப கண்ணுக்குள்ள இருந்து முட்டக் கண்ணீர்த் துளி இரண்டு நிலத்தில விழுந்து தெறித்தது. தாயில்லாம, தகப்பனில்லாம, ஒவ்வொரு உயிரும், மற்றொரு துணையையிழந்து, இழக்கிறதுக்கும், தொலைக்கிறதுக்கும் ஒண்ணுமில்லாத சீவன்கள் கை, கால்களை இழந்து கீழ கத்திக்கொண்டிருக்கும் பூனைக்குட்டி மாதிரி அனாதரவாய் நிக்கிறதப் பார்த்தா யாருக்குத் தான் துக்கம் தொண்டையை அடைக்காது. வன்னிப் பெருநிலத்தின் மக்கள் நிலையைக் கண்ட சனமெல்லாம் ஒரே அதே கதையைக் கதைத்துக் கொண்டு ரோட்டுல இங்கையும் அங்கையும் கூடிக் கூடிக் கதைக்குதுகள். பூனைக்குட்டியும் போறவார ஆக்களுக்குப் பின்னால இங்கையும் அங்கையும் கத்திக்கொண்டே ஓடித்திரிந்தது.

 எங்கட மனிதாபிமானக் கதைகள் வன்னி மக்களையும் கடந்து,கடல் கடந்து எத்தியோப்பியா வரை போய் முடிகையில் பூனைக்குட்டி உச்சஸ்தாயியில் கத்திக்கொண்டிருந்தது. பின்னேரம் ஆறு மணியாயும் ஆயிட்டு. மின்னல் வெட்டோடும், இடிச் சத்தத்தோடும் அரசியல் நிகழ்ச்சியொன்று டீவியில தொடங்க வெளியில மழையும் தூறத் தொடங்கியது. அந்நிகழ்ச்சியில் 'டிங் டாங்' சின்னத்தில் எலக்சன் கேட்ட பச்சோந்தி சேகர் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு வன்னி மக்களுக்கு தனது நீலிக்கண்ணீரை சமர்ப்பணம் செய்து கொண்டிருந்தான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அம்மம்மா '
83கலவர நேரம் பல தோட்டங்களை எரிச்சதுக்கு இவனுக்கு பரிசாக் கிடைச்சது தானாம் இந்த பதவி, பவுசெல்லாம். ஆடு நனையுதுன்னு ஏன் இந்த ஓநாய் அழுகுது?' எண்டு தன் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்த்தா.

 கடைசி வார்த்தையைக் கேட்டதும் மண்டைக்குள்ள பொறிதட்ட பூனைக்குட்டி நனையுதேன்னு எட்டிப் பார்த்தேன். தொப்பலா நனஞ்சு போய், எல்லாத்தையும் இழந்த தமிழ்ச்சனம் மாதிரி கூனிக் குறுகி களச்சுப் போய் நிக்குது. கொஞ்சம் உசாரானதும், குட பிடிச்சுக்கொண்டு போற வாற ஆக்களுக்குப் பின்னால எல்லாம் கத்திக்கொண்டே ஓடித்திரியுது.

 பொறுமையிழந்து படிகளில் இறங்கி ஓடிப்போய் சீனாக்கிழவியின் வீட்டிற்கு முன் நின்ற பூனக்குட்டியைத் தூக்கிக் கொண்டுவந்து மெதுவாகத் துவட்டி விட்டு, பாலைக் கரைத்துக் குடிக்கக் கொடுத்தேன். குட்டிக்கு பாலைக் குடிக்கக் கூடத் தெரியலை. பால் மூக்குக்குள்ள போக, கொஞ்ச நேரம் தும்மியது. மத்தியானத்திலயிருந்து அது ஒண்டும் சாப்பிடாததாலயோ, இல்ல சுத்தியும் ஆக்களப் பார்த்த பயத்தினாலயோ தெரியல. இன்னும் சத்தமாகக் கத்தித் தொலைத்தது. பூனைக்குட்டியோடு மல்லுக் கட்டிக் கொண்டிருக்கையில் 'டொக்...டொக்' என்று கதவு தட்டும் சத்தம் கேக்க முன்னறைக்குப் போய் திறந்து பார்த்தால், கீழ்வீட்டு சீனாக்கிழவி.

 ' வாங்க ஆச்சி, என்ன இந்த நேரத்தில' என்றேன்.

 'பூனைக்குட்டி வளக்கிறீங்களா மகன்?' என்று சகோதர மொழியில் கேட்டவாறே உள்ளே வந்தா. இவ கதைச்சது, குட்டிக்கு விளங்கியது போல கதவருகே கத்திக்கொண்டே ஓடிவந்தது. 'நீங்க வளருங்க தம்பி, எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. ஆனா இதைச் சத்தம் போட வேணாமெண்டு சொல்லுங்க, எங்களுக்கு இரவைக்கு நித்திரை கொள்ள முடியாது. அப்படிச் செய்ய முடியாட்டி வேறெங்கயாவது கொண்டுபோய் விட்டிருங்க.'என்று தொடர்ந்தாள்.

 'என்னது பூனைக்குட்டி நாங்க வளக்குறோமா?' எனக்குள் எழுந்த கோவத்தை வெளிப்படுத்த முனைகையில், அம்மம்மாவும் என் கையைப் புடிச்சுச் சொன்னா 'விட்டிடு மகன். இதுக்கு சாப்பிடக் கூடத் தெரியல்ல. எப்பிடிடா வளர்ப்பாய்'

 மத்தியானத்திலிருந்து மனிதாபிமானத்தை பற்றி விளாசித் தள்ளிக் கொண்டிருந்த எனது நண்பர்களும் 'ஓம் மச்சான்' என்று வழிமொழிய பத்திரமாகக் கீழே கொண்டு போய் வேறு இரண்டு பெரிய பூனைகளுக்கு அருகில் விட்டு வந்து ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டு நின்றேன். ஒருபூனை மெதுவாக வந்து குட்டியை மணந்து பார்த்து, தன் நாக்கால் வருடிக் கொடுத்துக் கொண்டிருக்கையிலேயே எங்கிருந்தோ பாய்ந்து வந்த வெறிபிடித்த தெருநாய் டக்கென்று குட்டியின் கழுத்தைக் கௌவி ஒரு உலுப்பு உலுப்பியது.

 பூனைக்குட்டி, ஒரு சிறு குழந்தையின் குரலை ஒத்த ஓசையுடன் கத்தி ஓய்ந்தது. ஒரு கிழிந்த வெல்வெட் துணியில் சிவப்பு மையை ஊற்றியது போல கிடந்த அதன் உடலில் மெல்ல மெல்ல மூச்சு என் கண் முன்னால் அடங்கியது.

 இப்போது மனிதாபிமானிகள் பலர் மழைக்குள் குடைபிடித்த படியே பூனைக்குட்டியைச் சுற்றி நின்று தங்களுக்குள் மனிதாபிமானக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். சீனாக் கிழவி 'உச்' கொட்டிக்கொண்டே மேல்நோக்கிப் பார்த்தா. ஜன்னலருகே கண்ணீரோடு நின்ற என்னட்ட சொன்னா 'மகன், நீங்க வளர்த்த பூனைக்குட்டி தான் எங்கட வீட்டுக்கு முன்னால செத்துக் கிடக்குது, இதை அப்புறப்படுத்துங்கள் என்று...

 டீவியில மறுபடியும் 'நியூஸ் அலர்ட்' லோகோ சுத்திக்கொண்டு வருகிறது.

No comments:

Post a Comment