கே.ஆர்.டேவிட்
குரல் வளையோடு வெட்டப்பட்டு தலையை இழந்து விட்ட அந்த மொட்டைப் பனைமரம் வெதும்பி.... அழுகின்றது. இன்று நேற்றல்ல கடந்த பல மாதங்களாக அந்த மொட்டைப் பனைமரமும், அதைச் சூழநின்ற எண்ணுக் கணக்கற்ற மொட்டைப் பனைமரங்களும் அழுது கொண்டேயிருக்கின்றன.
இந்த மொட்டைப் பனைமரங்களின் அழுகைக்கான காரணம்....? அது ஒன்றும் இரசிகசியமானதல்ல... பரகசியமானது... அதுவும் சர்வதேசம் வரை விரிந்திருக்கும் பரகசியம்....!
'முகமாலை'.....
அந்த மொட்டைப் பனைமரங்கள் நிறைந்திருக்கும் பகுதியை 'முகமாலை' என்ற பெயரினால்தான் அழைக்கின்றனர். யாழ்ப்பாண நகரத்தின் முழுகெலும்பு போன்ற கண்டி வீதியில் கொடிகாமம், மிருசுவில்> எழுதுமட்டுவாழ், அதையடுத்து இந்த முகமாலைக் கிராமம் அமைந்துள்ளது. மூன்று> நான்கு வருடங்களுக்கு முன்புவரை> சர்வதேசங்களிலும் வாழ்கின்ற தமிழர்களால் உச்சரிக்ப்பட்ட ஒரு கிராமம் தான் இந்த முகமாலைக் கிராமம்.
தியாகம் கலந்ததொரு வீரவரலாற்றுக்குரித்தான இந்த முகமாலைக் கிராமம் இன்று.... தலைகளை இழந்த வெறும் முண்டங்கள் நிமிர்ந்து நிற்கும் மயானமாகக் காட்சிதருகின்றது.....!
முகாமாலைக் கிராமத்தை ஊடறுத்துச் செல்கின்ற கண்டி வீதியில் பயணிக்கின்ற ஒவ்வொரு மனிதனும்> அந்த மொட்டை மரங்களைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடிதான் செல்கின்றான்...!
அந்த மொட்டைப்பனைமரம்.... இன்னமும் அழுது கொண்டுதான் இருக்கின்றது... இந்த மொட்டைப்பனை மரத்தை அண்மித்து இன்னொரு பனைமரம்..... 'வடலி' என்ற விடலைப் பருவத்தைத் தாண்டி வளர்ந்துவிட்ட பனைமரம்.... எந்தச் சேதமுன்றித் தப்பித்துக் கொண்டது சகலருக்கும் ஆச்சரியம் தான்!
எதிரியின் முதுகைச் சொறிந்து தான் இந்தத் தனிமரம் தன்னைக் காப்பாற்றிக் கொண்டது என்ற நையாண்டித் தனமான பேச்சுகளும் இதுவரையில் எழுந்ததில்லை....!
அந்தத் தனிமரம் நேர்மையானது என்பதில் யாருக்குமே சந்தேகமில்லை... தற்செயலாக அந்தத் தனிமரம் தப்பிவிட்டது... இதுதான் உண்மை!....
அந்தத் தனிமரமும் தனக்குள் அழுதுகொண்டுதான் இருக்கின்றது. அந்த மொட்டைமரத்தின் துயரத்தில் பங்குகொள்ள விரும்பிய அந்தத் தனிமரம் அந்த மொட்டை மரத்திடம் பேச்சுக் கொடுக்கிறது.
'அண்ணை.... இப்படி எத்தினை நாளைக்குத்தான் அழப்போறியள்.... நடந்தது நடந்துபோச்சு.... இனிமேல் நடக்கவேண்டியதைக் கவனிக்கிறதுதான் புத்திசாலித்தனம்' அந்தத் தனிமரம் வேதனையோடு கூறுகின்றது.
அழுது கொண்டிருந்த அந்த மொட்டைமரம், தனிமரத்தின் குரல் கேட்டுத் தனது கவனத்தைத் தனிமரத்தின் பக்கம் திருப்புகின்றது.
'இப்படியொருமுடிவை நான் எதிர்பார்க்கவில்லை...?' அந்த மொட்டை மரத்தின் அவிந்துபோன இதயம் பேசுகின்றது. மொட்டைமரத்தின் பேச்சைக் கேட்ட தனி மரத்திடம் எந்த கலங்கமும் தோன்றவில்லை. சில விநாடிகள் மௌனமாக நின்ற அந்தத் தனிமரம் திருப்பவும் பேச ஆரம்பிக்கின்றது.
'அண்ணை இப்படிப்பட்ட தொரு முடிவை எதிர் பார்க்கவில்லை எண்டுசொன்னீர்களே... அப்படி யெண்டால்... என்ன மாதிரி முடிவை எதிர்பார்த்தனீங்கள்...' தனிமரத்தின் கேள்வியில் காந்தக் கூர்கள்.....' மொட்டைமரம் குழம்பிப்போய் மௌமாக நின்றது.
'அண்ணை... கொஞ்சம் நிதானமாக யோசிச்சுப் பாருங்கோ.... என்றுமே தோல்வியற்ற நிட்சயிக்கபட்டதொரு வெற்றி உணர்வோடைதானே இருந்தனீங்க...' தனிமரம் திரும்பவும் மௌனமாகவே நிற்கின்றது.
'தனிமனிதனாக இருந்தாலென்ன... குழுவாக இருந்தாலென்ன...! 'தற்திருப்தி' என்ற 'ஆணவ' உணர்வு எப்ப எற்படுகிறதோ... அப்பவே அவன் தோல்வியை நோக்கி நகர ஆரம்பிக்கின்றான், எண்டுதான் அர்த்தம்....' தனிமரத்தின் இந்தப் பேச்சு நகக்கண்ணுக்குள் சிராம்புக் கூர் ஏறியதைப் போல்.... மொட்டைமரத்தின் இதயத்தைக் குத்தி வலிக்க... மொட்மைமரம் அதிர்ந்து போய் நின்றது!
'....நீ சொல்றதை என்னாலை புரிச்சு கொள்ள முடியாமல் இருக்கு....' மொட்டைமரம் கூறுகின்றது.
'.... சல சலப்பில்லாமல் பலகாரம் சுடேலாது... ஆனால் அந்தச் சலசலப்பே பலகாரமாகிவிடவும் முடியாது.... அதைத்தான் நான் சொல்றன்...' தனிமரம் பூடகமாகவும் அதேவேளை நிதானமாகவும் கதைக்கிறது.
'தயதுசெய்து என்னைச் சோதிக்காதை... சொல்றதை விளக்கமாகச் சொல்லு' மொட்டைமரத்தின் பேச்சில் வேதனையும் ஆவலும் கலந்து கசிகின்றது.
'...உங்களிடமிருந்த ஆயுத பலம் அற்புதமானது.... அதேபோல உங்களிடமிருந்த தியாகபலம்... அது வணக்கத்துக்குரியது... அதேயளவுக்கு உங்களிடம் மக்கள் பலமும், அரசியல் பலமும் போதுமானதாக இருக்கவில்லை....' தனிமரம் விளக்கமாகக் கூறுகின்றது.
'...ஏன் பொதுமக்கள் எங்களைப் பாராட்டினார்கள் தானே' மொட்டைமரம் கேட்கிறது.
'...பொதுமக்களின் பாராட்டுதல் என்ற 'சல சலப்பை' நீங்கள் 'பலகாரம்' என்று நம்பிவிட்டீர்கள்....'
'பொதுமக்கள் பார்வையாளர்களாக நின்று பாராட்டுவதோடு நின்று கொண்டார்களே தவிர... அவர்கள் தங்களைப் பங்காளர்களாக்கிக் கொள்ளவில்லை.... இறுதிநேரத்தில் சிக்குண்டிருந்த இலட்சக்கணக்கான பொதுமக்கள் ஆயுதங்களைத் தூக்க வேண்டாம்... அத்தனை பேரும் ஒவ்வொரு விறகுக்கட்டையைத் தூக்கியிருந்தால்....?... முடிவு எப்படி இருந்திருக்கும்....' தனிமரம் இப்படிக் கேட்டுவிட்டு மொட்டைமரத்தைப் பார்க்கின்றது.
மொட்டைமரம் தனது அழுகையை நிறுத்திக் கொண்டு ஆச்சரியமாகத் தனிமரத்தைப் பார்க்கின்றது.
'....எல்லாம் முடிஞ்சு போச்சு' சில வினாடிகளின் பின் மொட்டைமரம் இப்படிக் கூறுகின்றது.
'... அப்பிடித் சொல்லாதை... உன்ரை காலடியை ஒருக்கால் குனிஞ்சுபார்....
நீ உன் தலையில் தாங்கிய பனம்பழங்கள் உதிர்ந்து என் காலடியில் விழுந்து.... தன்னிச்சையாகவே வேரோடி பனங்கிழங்காகி... அந்தக்கிழங்கு முத்தி... பீலி வெடித்து பூமியைக் குடைந்து மேற்கிழம்பி... வடலிகளாக நிற்கின்றன.
இவைகள் வளரத்தான் போகின்றன...
உன்னைப் போல நிமிர்ந்து மரங்களாகத்தான் போகின்றன.
நீயும் நானும் உயிரோடை இருப்பமோ.... இல்லையோ...
ஆனால்... வரலாற்றுக்கு மரணமில்லை
அந்த வரலாறு...
இன்றைய வடலிகள்.... நாளை தலைநிமிர்ந்து....
உன்னைப்போல் மரங்களாகும் போது.... இன்று நடந்தவற்றை உணர்த்தத்தான் போகின்றது!