Thursday, January 20, 2011

வலி.....!

-     அகில்

மச்சக்கறி இல்லையென்றால் மயூரனுக்கு சாப்பாடு இறங்காது. செவ்வாய், வெள்ளி போறதே அவனுக்குப் பெரும்பாடாக இருக்கும். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் சாமினி மரக்கறிச்சாதம் செய்து, ஊறுகாய்த் துண்டொன்றும் வைத்திருந்தாள். மதிய இடைவேளையின்போது வேண்டாவெறுப்பாக சாப்பிட்டுவிட்டு, வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பியிருந்தான்.

'இன்டைக்கு நல்ல பேச்சுத்தான் நடக்கப்போகுது' என்று நினைத்து வந்ததைப் போல வீட்டுக்கு வந்தபொழுது, புன்முறுவல் காட்டி வரவேற்ற சாமினி, அவன் கொண்டுவந்த சாப்பாட்டுப் பெட்டியைத் திறந்து பார்த்ததும் புறுபுறுக்கத் தொடங்கினாள்.

''என்னப்பா, கொண்டுபோன சாப்பாடு அப்பிடியே இருக்குது......''

''ம்.... மனுசர் சாப்பிடக் கூடிய சாப்பாட்டை வைச்சால் எல்லோ சந்தோசமாச் சாப்பிட'' என்றான் வெறுப்பு மண்டிய குரலில்.

''எந்த நாளும் மட்டனும், சிக்கனும் என்று சாப்பிட்டு நல்லா கொலஸ்ரோலை ஏத்தத்தான் உங்களுக்கு விருப்பம்..'' புறுபுறுத்தபடி லஞ்ச் பாக்ஸை 'சிங்'கில் போட்டு தண்ணீரைத் திறந்துவிட்டாள். சாமினியின் குடும்பம் வெஜிடேரியன் என்று மயூரனுக்கு கலியாணம் பேசும்போதே தெரியப்படுத்தி இருந்தார்கள். நல்ல வேளை வெளிநாட்டு தனிக்குடித்தன வாழ்க்கையில் அவன் நிறையவே சமைக்கக் கற்றுக்கொண்டிருந்தான். தனக்குத் தேவையான மச்சச் சாப்பாட்டை தானே சமைத்துக்கொள்ளுவான். சாமினி அவனுக்கு முட்டை மட்டும் அவித்துக்கொடுப்பாள். அவள் மச்சத்தைக் கையாலும் தொட்டதில்லை.

உடை மாற்றி, சற்று நேரம் சோபாவில் அமர்ந்து டீவியை ஓடவிட்டான். வன்கூவரில் நடந்த 'வின்டர்ஒலிம்பிக்' விளையாட்டுப் போட்டிகளின் நேரடி ஒலிபரப்பு நடந்துகொண்டிருந்தது. கனடா ஐந்து தங்கப்பதக்கங்களை வென்றிருந்தது.

'இன்றைக்கு ரஷ்யாவும் கனடாவும் ஹெக்கி விளையாடுவீனம். கட்டாயம் பார்க்கவேணும். ஹெக்கியில இந்த முறை கனடா 'வின்'பண்ண வேணும்' மனதுக்குள் நினைத்துக்கொண்டான். அகதியாய் வந்தபோது அடைக்களம் தந்த நாடல்லவா!

''என்னப்பா இப்பிடியே இருந்தால் சரியா....? எழும்பி வெளிக்கிடுங்க. இன்றைக்கு நந்தினியின்ர மகளுன்ட 'பேத்டே பார்டி' இருக்கெல்லோ.....?''

''ஓமப்பா அதை மறந்தே போயிற்றன். அங்கையாவது போனா மச்சம் சாப்பிடலாம் தானே'' என்றான் சாமினிக்கு கோபமூட்டுவதற்காகவே.
அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்துவிட்டுப் போனாள் சாமினி.

மயூரனுக்கு 'ஹைகொலஸ்டிரோல்' இருப்பதாக குடும்ப வைத்தியர் சொன்ன நாளில் இருந்து சாமினியும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். செவ்வாயும், வெள்ளியும் வீட்டில் மச்சம் சமைக்க சாமினி அனுமதிப்பதில்லை. மற்றைய நாட்களில் எல்லாம் தனக்கு விரும்பியவாறு ஏதாவது இறைச்சி, ஹொட்டோக், பேகர் என்று வாய்க்கு ருசியாக சாப்பிட்டான். திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபோல அந்த உணவுப் பழக்கத்தையும் தானே விட்டாலொழிய தான் சொல்லி எதுவும் நடக்காது என்பதை உணர்ந்து மௌனியானாள் சாமினி.

வெள்ளிக்கிழமை மாலை நேரம் என்பதால், அவர்கள் பயணித்த உயர்வேகப்பாதை (Highway)அமைதியாகக் கிடந்தது. பனிகொட்டும் காலம் என்பதால் நேரத்திற்கே இருள் கவ்வத் தொடங்கியிருந்தது. தெருவின் இரு புறமும் பனித்துகள்கள் உறைந்துபோய் கல்லாகிக் கிடந்தன.

சதா வேலை வேலை என்று ஓடித்திரியும் வேகவாழ்க்கையின் மத்தியில் இப்படி மனைவியுடன் காரில் பயணிக்கும் சந்தர்ப்பங்கள் மிகவும் மகிழ்ச்சிகரமான பொழுதுகள். வேலைப்பளு, கடன்பிரச்சனைகள், தாய் மண்ணின் நினைவுகள் எல்லாவற்றையும் சற்று ஒதுக்கிவிட்டு இருவரும்; எத்தனையோ விடயங்களை பகிர்ந்துகொண்டு, ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக்கொண்டு செல்வது உண்மையில் வாழ்க்கைப் பயணம் இப்படியே நீளக்கூடாதா என்று ஓரிரு சமயங்களில் அவன் நினைத்துக்கொள்வதுண்டு.

மயூரன்; காரை செலுத்திக்கொண்டுவர சாமினி சுற்றுமுற்றும் பார்த்து ரசித்துக்கொண்டே வருவாள். பனியில் நனைந்து நிற்கும் கிறிஸ்மஸ் மரங்கள், வரிசையாய் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் மின்கம்பங்கள், வானுயர்ந்த மாடங்களின் வடிவமைப்புக்கள், சதா வானத்தில் அங்குமிங்கும் பறந்து திரியும் விமானங்கள் என்று இவற்றையெல்லாம் ஒரு குழந்தையைப் போல அலுக்காமல் பார்த்து மகிழ்வாள் சாமினி.

திடீரென்று எதையோ ஒன்றைப் பார்த்தவளைப் போல சாமினி சத்தம் போட்டாள்.

''மயூ..... மயூ..... அங்க பாருங்க'' என்று அவள் சொல்ல, அவள் காட்டிய திசையில் மயூரன் பார்வையைச் செலுத்தினான்.

அவர்கள் பயணிக்கின்ற பாதையருகே ஒரு பெரிய 'ட்ரக்' ஒன்று வந்துகொண்டிருந்தது.

'ட்ரக்' என்றாலே சாமினிக்கு சரியான பயம். 'ட்ரக் வருகுது. கிட்டப் போகாதேங்கப்பா' என்பாள். பத்துப்பன்னிரண்டு சில்லுகள் கொண்ட பாரிய அதன் உருவத்திற்கு முன்னால் தங்களின் கார் அவளுக்கு பருந்தின் கால்களுக்கிடையில் இரையாகப்போகும் கோழிக்குஞ்சைப் போல உணருவாள்.

''தள்ளிப்போங்கப்பா... தள்ளிப்போங்க...'' என்று அந்த 'ட்ரக்' வண்டி தங்களை முந்திச் செல்லும் வரை செபம்போல் சொல்லிக்கொண்டே இருப்பாள். அவளது பயம் சிலவேளைகளில் மயூரனுக்கு சிரிப்பாக இருக்கும்.

'அங்க பார்த்தீங்களா.....? அதென்னப்பா அதுகள்...?' சாமினியின் கண்கள் கூர்மையுடன் அந்த 'ட்ரக்'கின் பின்புறப்பகுதியில் பதிந்திருந்தன. மயூரன் அப்பொழுதுதான் கவனித்தான். அந்த ட்ரக்கில் பன்றிக்குட்டிகள் அடைக்கப்பட்டிருந்தன.

அந்த வாகனம் முழுமையும் மூடப்பட்டு, பின்பகுதியிலும், பக்கங்களிலும் சில சிறிய துவாரங்கள் இடப்பட்டிருந்தன. அந்தத் துவாரங்களின் ஊடாக தமது மூக்கை வெளியே விட்டு தம்மை ஆசுவாசப்படுத்தின அந்தக் குட்டிகள். அவை ஒன்றையொன்று முட்டித்தள்ளியபடி துவாரத்தின் வழியே மூச்சுக்காற்றை இழுத்துக்கொண்டன. ட்ரக்கை மூன்று அடுக்குகளாகப் பிரித்து அவற்றை உள்ளே அடைத்திருப்பார்கள் போல் தோன்றியது. அவற்றின் தலை உயரத்தோடு ஒட்டியதாக இருந்த அந்தத் துவாரங்கள் மட்டும் திறந்திருந்தன.

''அங்க பாருங்க நல்ல சிவப்பு நிறத்தில பன்றிக்குட்டியள்'' என்றாள் சாமினி.

''நான் நினைக்கிறன் இதுகள் இப்பத்தான் ஒன்று, ஒன்ரரை மாதக் குட்டியாய் இருக்கும்.''

''இதுகளின்ட இறைச்சியைத் தான் 'பேக்கின்' செய்யுறதுக்கு எடுக்கிறது'' விளக்கம் கொடுத்தான் மயூரன்.

''ஐயோ! இவ்வளவு சின்னக் குட்டியளின்ர இறைச்சியைத்தான் நீங்க சாப்பிடுறனீங்களோ?'' என்றவள் மேலும் தொடர்ந்தாள்.

''சாக்காட்டத்தான் கொண்டுபோறாங்கள். அதுக்காக இப்பிடியா....? அதுகள் சுவாசிக்கக் கூட ஏலாமல் எவ்வளவு கஸ்டப்படுகுதுகள்.''

''உப்பிடி இறைச்சிக்கு என்று வளர்க்கிற ஆடு, மாடு, பன்றி எல்லாத்தையும் இவங்கள் நிலத்தில படுக்கக் கூட விடமாட்டங்களாம் என்ன மயூரன்?'' தான் யார் மூலமாகவோ அறிந்திருந்த விடயத்தை ஊர்ஜிதப்படுத்தும் நோக்கத்தோடு கேட்டாள் சாமினி. மயூரன் அதை ஏற்றுக்கொண்டு தலையசைக்கவும்,

''உயிர் என்டால் எல்லாம் உயிர்தானே. அதில மனுசர், மற்றதுகள் என்டு பிரிச்சுப் பார்க்கஏலாது. அதுகளும் தங்கட உயிரைக் காப்பத்த எவ்வளவு போராடுதுகள்'' என்றாள் சாமினி.

''என்ன கருமங்கள் இதுகள்''

ஒன்றையொன்ற நெரித்தபடி மூக்கை நீட்டி, 'மூசு, மூசென்று' காற்றைச் சுவாசித்தன. அவற்றைப் பார்க்க மயூரனுக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.

''பன்றியள் மட்டுமா? ஏன் நானும்; கூட இப்பிடித்தானே கனடாவுக்கு வந்தனான். பன்றியளோட பன்றியா......''

அவனது விழிகள் வீதியில் பதிந்திருந்தாலும், மனம் பத்து வருடங்களுக்கு முன்னர் நடந்த அந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்தது.

அகதியாக வெளிநாடு வந்த ஒவ்வொரு தமிழனுக்கும் கசப்பான கதைகள் பல இருக்கும். அந்த வகையில் அவனுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவம் ஒன்றை மீண்டும் இரைமீட்டுக்கொள்ள வேண்டியதாக இந்தச் சம்பவம் அமைந்துவிட்டது.

கனடாவுக்கு அகதியாக வெளிக்கிட்ட அவன், மெக்சிக்கோ வரை ஒரு பிரச்சனையும் இல்லாமல் வந்துவிட்டான். கனடாவுக்கு போவதென்றால் அமெரிக்காவுக்குப் போய் அங்கிருந்துதான் கனடாவுக்குப் போகவேண்டும். மெக்சிக்கோவுக்கு வந்து இரண்டு மாதங்கள் நின்றாகிவிட்டது. அவன் வந்த நேரமோ என்னவோ இலகுவாக அமெரிக்காவுக்கு போகின்ற கள்ளப் பாதைகள் எல்லாம் மூடப்பட்டு விட்டன. இந்த நிலையில்தான் இரண்டுநாட்கள் அவனை தனியே விட்டுவிட்டுப் போன ஏஜென்சிக்காரன் ஒருநாள் திடீரென்று வந்து கேட்டான், 'தம்பி அமெரிக்காவுக்குப் போறதுக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கு. பிரச்சினை இல்லாமல் போயிறலாம்....' என்று சொல்ல மறுப்பேதும் சொல்லாமல் தலையாட்டினான். எப்பிடியாவது கனடாவுக்குப் போய்ச் சேர்ந்தால் போதும் என்றிருந்தது அவனுக்கு.

உடுப்புக்களை மடித்து எடுப்பதற்குக் கூட நேரமில்லாமல் எல்லாவற்றையும் திரணையாகத் திரட்டி பைக்குள் அடைத்துக்கொண்டான். ஏஜென்சிக்காரன் தான் அழைத்துவந்த வாடகைக்காரில் மயூரனை ஏற்றிக்கொண்டான். எங்க போய் போவது, எப்படி போவது என்று எதுவுமே தெரியாத நிலையில் ஏதோ ஏஜென்சிக்காரன் சொல்கிறான் என்று ஏறிக்கொண்டான்.

கார் நகரத்தை விட்டு வெளியான பாதையொன்றில் போய்க்கொண்டிருந்தது. சிறிது நேர ஓட்டத்தின் பின் கார் ஒரு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ரக்கின் பக்கத்தில் போய் நின்றது. பையை எடுத்துக்கொண்டு இறங்கிய அவனை ட்ரக்கின் முன்பகுதிக்கு அழைத்துச்சென்றான். சாரதியின் இருப்பிடத்திற்கு பின்புறமாக இருந்த சிறிய துவாரம் ஒன்றின் வழியாக உள்ளே இறங்கச்சொன்னான் அந்த 'ட்ரக்'கின் சாரதி.

''என்ன இது இந்த சின்ன துவாரத்திற்குள்ளால் நான் எப்படி உள்ளே போவது'' என்று தயங்கிய மயூரனை சாரதி அரைகுறை ஆங்கிலத்தில் துரிதப்படுத்தினான். அவன் சொன்னதுபோலவே முதலில் கால்களை உள்ளே நுளைத்து இறங்கினான். கால்கள் தரையில் பட்ட இடம் விழுவிழென்று வழுக்கியது. மெதுவாக தலையை உள்ளே எடுத்ததும் வயிற்றைக் குமட்டிக்கொண்டு வந்தது. இரண்டு தடவைகள் வாந்தியெடுத்தபின் தலையை நிமிர்த்தினான். அவன் வந்த பாதை மூடப்பட்டு விட்டது. எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. ஒருசில நிமிடங்களின் பின் அவனது கண்கள் இருளுக்குப் பழக்கமானது. வாகனத்தின்; அசைவிலிருந்து பயணம் தொடங்கிவிட்டதை உணர்ந்துகொண்டான்.

அப்பொழுதுதான் கவனித்தான். அவனைச் சூழ சிறியவையும், பெரியனவுமாக பன்றிகள் அடைக்கப்பட்டிருந்தன. புதிதாக வந்த இவனை நெருங்கி அவை மோப்பமிட்டன. மயூரன் பயத்துடன் ட்ரக்கோடு சாய்ந்துகொண்டான். நல்ல வேளையாக சிறுதடுப்புக் கம்பிகள் இடையே இருந்தமையால் அவற்றால் இவனை நெருங்க முடியவில்லை. அவை அந்த கம்பி இடைவெளிகளின் வழியாக தமது முகத்தை நீட்டி இவனை நெருங்க பயமும், அருவருப்புமாய் நன்றாக ட்ரக்குடன் ஒட்டிக்கொண்டான். சற்றைக்கெல்லாம் அவனுக்கு மூச்சு முட்டியது. பன்றிக்குட்டிகளின்; கழிவு நாற்றம் குடலைப் புறட்டியது. சில பன்றிகள் சிறுநீர் கழித்தன. அது இவன் முகத்தில் தெறித்தது. உடல் முழுவதும் ஏதோ பூச்சிகள் ஊர்வது போல் கசகசத்தது. அந்த சிறிய இடத்தை விட்டு ஒரு அடி கூட எடுத்துவைக்க இடமின்றி அந்த இடத்திலேயே அடைபட்டுக் கிடந்தான்.

'இப்படி நடக்கும் என்று நினைத்திருந்தால், செத்தாலும் பரவாயில்லை என்று சிலோனில் இருந்திருக்கலாம்' என்று ஒருகணம் அவன் நினைத்துப் பார்க்கக்கூட தவறவில்லை.

மெக்சிக்கோவில் அவன் ஏற்றப்பட்ட இடத்தில் இருந்து அமெரிக்காவுக்குப் போவதென்றால் குறைந்தது இரண்டு மணித்தியாலங்கள் என்றாலும் எடுக்கும். அந்த இரண்டு மணித்தியாலமும் அவன் பட்ட அவஸ்தைக்கு அளவே இல்லை. நரகவேதனை. கையில் இருந்த காசை செலவு செய்ய விரும்பாமல் காலையில் எதுவும் அவன் சாப்பிடவில்லை. மதியம் சாப்பிடுவோம் என்று ஆயத்தமானபோதுதான் ஏஜென்சிக்காரன் வந்தான். உள்ளே புழுங்கிய வெப்பத்தில் நாவரண்டு தாகம் எடுத்தது. வாந்தி எடுத்ததில் தலைபாரமாகி, வயிற்றுக்குள் ஏதோவெல்லாம் செய்தது.

'இதுகளையெல்லாம் இறைச்சிக்குத் தானே கொண்டு போறாங்கள்' என்று நினைத்த மயூரனுக்கு தானும் அவற்றுடன் சேர்ந்து ஏதோ ஒரு கொலைக்களத்திற்குக் கொண்டு செல்லப்படுவது போல் தோன்றியது.

பசிமயக்கம் ஒரு புறம், மூச்சுத் திணறல் ஒருபுறமுமாக அரைகுறை மயக்கத்தில் இருந்த மயூரனை அந்த ட்ரக் சாரதி அமெரிக்காவில் பெயர் தெரியாத, சனசந்தடியே இல்லாத ஒரு இடத்தில் இறக்கி விட்டுப் போய்விட்டான். கடும் குளிரில் அரைமயக்கத்தில் கிடந்த அவனை அந்த வழியால் சென்ற அமெரிக்கப் பொலீஸ்காரர்கள் பிடித்துவிட்டனர். அவனுடைய நிலையைப் பார்த்து முதலில் அவனுக்குச் செய்யவேண்டிய முதலுதவிகளைச் செய்தனர். மயூரனுக்கு பயத்திலும், பயணத்தில் பட்ட அவஸ்தையிலும் காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் அவனை ஏனைய கைதிகளுடன் வைத்திருக்க விரும்பாத காவல்துறையினர், அவனை ஒரு விடுதியில் சேர்த்தனர்.

காலையில் கண்விழித்த மயூரன், யாருக்கும் தெரியாமல் அந்த இடத்தைவிட்டு வெளியேறி தன் ஏஜென்சியுடன் தொடர்புகொண்டான். ஏஜென்சிக்காரன் சொன்னபடியே தன் உறவினர்களுடன் தொடர்புகொண்டு கனடாவுக்கு வந்துசேர்ந்தான்.

'என்னப்பா....? எங்க போறீங்க.....?' சாமினி சத்தமிடவும் சுயநினைவுக்கு வந்தான் மயூரன். 'எக்ஸிட்' எடுக்கவேண்டிய இடத்தைத் தாண்டி கார் போய்க்கொண்டிருந்தது.

'உச்'சுக்கொட்டினான் மயூரன். சாமினி பொறுமையை இழந்து புறுபுறுக்கத் தொடங்கினாள்.

'சரி.... சரி. இதில எக்ஸிட் எடுத்துப் போவம். இப்ப என்ன அவசரம்?' என்றபடி காரைத் திருப்பினான் மயூரன்.

அந்தக் கசப்பான நினைவுகளினாலோ என்னவோ மயூரனுக்கு குளிரிலும் வியர்த்துக்கொட்டியது. 'காஸ்பொட்'டில் இருந்து தண்ணீரை எடுத்து இரண்டு மிடறு குடித்துவிட்டு வைத்தான்.

'உங்கட கவலையீனத்தால இன்றைக்கு பிறந்தநாளுக்கு நேரத்துக்கு போக ஏலாமல் போயிட்டுது. அப்பிடி என்னப்பா யோசினை....?'

பெரிதாக ஒரு முறை மூச்சை எடுத்துவிட்ட மயூரன் 'நான் அகதியாக கனடாவுக்கு வந்த விதத்தை ஒருக்கா நினைச்சுப் பார்த்தன்.....'

சாமினியிடம் ஏற்கனவே பலதடவைகள் அந்தக் கதைகளையெல்லாம் மயூரன் சொல்லியிருக்கிறான்.

'சரி சரியப்பா. அதுகளையெல்லாம் விடுங்கோ....' என்று அவனுடைய தோளிலே அழுத்தி ஆசுவாசப்படுத்தினாள்.

அவர்கள் உள்ளே நுளையவும் கீர்த்தiனா கேக் வெட்டவும் சரியாக இருந்தது. சாமினியின் நெருங்கிய உறவு அவர்கள். மகளுக்கு 'கீ பேத்டே' பெரிதாகக் கொண்டாட வேண்டும் என்று மண்டபம் எடுத்து எல்லோருக்கும் சொல்லிச் செய்தார்கள்.

போட்டோ எடுத்துக்கொள்ள ஒரு பகுதியினர் முண்டியடிக்க, ஒரு பகுதியினர் சாப்பாட்டு லைனில் இணைந்துகொள்ள என்று வந்திருந்த கூட்டம் இரண்டாகப் பிரிந்தது. அன்று வெள்ளிக்கிழமை என்பதால் சைவச்சாப்பாடு ஒரு இடத்திலும், மச்சச் சாப்பாடு எதிர் புறத்திலும் வைக்கப்பட்டிருந்தது.

''மயூ... உங்களுக்கு இன்டைக்கு நல்ல வெட்டுத்தான். நீங்க அந்தப் பக்கம் போங்க.'' என்று அவன் காதுக்குள் கிசுகிசுத்தாள் சாமினி.

மயூரன் கையில் 'பிளேட்'டும், முள்ளுக்கரண்டியும் எடுத்துக்கொண்டு வரிசையில் நகர்ந்தான். காற்றில் விதவிதமான உணவுகளின் வாசனை கலந்து வந்துகொண்டிருந்தது. மயூரனுக்கு உணவை நெருங்க நெருங்க வயிற்றை குமட்டத் தொடங்கியது. இடியப்பப் பிரட்டல், பிட்டு, ரொட்டி இவற்றுடன் 'சில்லிச் சிக்கன், மட்டன் கறி, தந்தூரி சிக்கன், மாட்டிறைச்சிப் பிரட்டல் என்பன வரிசையாய் ஆவிபறக்கும் விதமாக வைக்கப்பட்டிருந்தன.

'ஆறறிவு படைச்ச மனுசர் நாங்கள். உயிருக்கு ஆபத்து என்றதும் என்ன பாடுபட்டோ உயிரைக் கையில் பிடிச்சுக்கொண்டு, காடு மேடு கடல் எல்லாந்தாண்டி நாடு விட்டு நாடு வந்து சேர்ந்திட்டம். இந்த ஜீவராசிகள் இறைச்சிக்கு என்றே வளர்க்கப்படுறதுகள். சாமினி சொன்னதைப் போல தங்கட தேவைக்கு ஏத்தமாதரி அதுகளை நீட்டி நிமிர்ந்து படுக்கக் கூட விடாமல், சதை பிடிக்கிறதுக்கும், ஆரோக்கியமா இருக்கிறதுக்கும் என்று செயற்கையாக எத்தினையோ மருந்துகளைக் கொடுத்து அதுகளை வருத்தி வருத்தி வளர்த்து கடைசியில ஒன்று பார்க்க ஒன்ற – அடுத்தது நான் தான் என்ற மாதிரி மற்றது காத்திருக்க – மெசினுக்க தலையைக் குடுத்து சாக்காட்டுவான்கள். ஒரு மாட்டின்ட தலை அறுபடேக்க அந்த மாடு துடிக்கிற வேதனையும், அதுக்கு பின்னால நிற்கிற மாட்டுக்கு அடுத்ததாக எனக்கும் இது நடக்கப் போகிறது என்பதையும் உணர்ந்துகொள்ளும். சில மாடுகள் பரிதாபமாகக் கண்ணீர் கூட வடிக்குமாம். திமிரிக்கொண்டு ஓடியும், அவலமாய் கத்தி குரல் எழுப்பியும் தமது எதிர்ப்பைக் காட்டுமாம். அவன் கேள்விப்பட்டிருக்கிறான். இது எவ்வளவு பெரிய உயிர்க்கொலை.

சட்டென்று மயூரன் தன் கையில் இருந்த பிளேட்டை வைத்து விட்டு விலகினான்.

பத்து வருடங்களுக்கு முன் அந்த 'ட்ரக்'கில் நுகர்ந்த அதே அருவருக்கும் மணம் அவன் வயிற்றைக் குமட்டச் செய்தது. முகமெல்லாம் வியர்வையில் நனைந்தது. மெதுவாக வோஷ;ரூமுக்குள் சென்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.

''என்னப்பா, சாப்பிட இல்லையா? என்ன ஒரு மாதிரி இருக்கிறியள்...?'' மயூரனைப் பார்த்ததும் அச்சமும் படபடப்புமாய் வினாவினாள் சாமினி. அவள் பிளேட் அரைவாசி ஏற்கனவே காலியாகியிருந்தது. பக்கத்தில் 'புரூட் சாலட்;' வேறு.

மயூரன் சாமினிக்கு எதிர்ப்புறமாக இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டான். சாமினியின் பதட்டத்தைப் பார்த்ததும் மயூரன் தன்னை திடப்படுத்திக்கொண்டான்.

''ஒன்றுமில்லை சாமினி. எனக்கு இன்றைக்கு ஏதோ சாப்பிட மூட் இல்லாமல் இருக்குது. பசிக்க இல்லை..... நீர் சாப்பிடும்....'' என்றான். மயூரனை சந்தேகமாய் பார்த்தபடி இரண்டு ஸ்பூன் சாப்பிட்டவள் அத்துடன் நிறுத்திக்கொண்டாள். 'புரூட் சாலட்டை' கைகளில் எடுத்துக் கிளறியபடி அவனை நெருங்கி அமர்ந்துகொண்டாள்.

''என்னப்பா... என்ன பிரச்சனை....?''

''ஒன்றுமில்லை. எனக்கு பழைய நினைவு வந்திட்டுது....'' சிறிது நேரம் மௌனமாய் இருந்த மயூரன் தொடர்ந்தான்.

''இனி நான் இந்த இறைச்சியள் ஒன்றும் சாப்பிடப்போறதில்லை. எனக்கு இந்த மச்சங்கள் ஒன்றும் இனிவேண்டாம்'' என்றான்.

அவன் குரலில் உறுதி தெரிந்தது. அவன் தாடைகள் இறுகிப்போய் இருந்தன. கண்கள் தீர்க்கமாய் சாமினியின் கண்கள் மீது நிலைத்திருந்தது.


முற்றும்

No comments:

Post a Comment