Monday, February 28, 2011

மூலஸ்தானம்

 ஸ்ரீதரன்

மணிச்சத்தமே கந்தசாமிக் குருக்களின் வாழ்க்கையின் நிரந்தர அம்சம் என்று சொல்ல முடியாது. 'ஊரார்' என்று பலவாறாகவும் குறிப்பிட்டுப் பேசப்படுகிற அந்த மனிதக் கூட்டம் இந்தக் குருக்களின் இந்த முரண்பாட்டைப்பற்றிச் சந்தி, மதகு, வாய்க்காலடியே உரத்து விவாதித்துத் திட்டித் தீர்த்தாலும் மார்க்கண்டு அவரிடம் வந்து போவதும் ஓரம்சமாகி விட்டது. அவன் தரும் கள்ளில்தான் அவரது வாழ்க்கையின் மெய்மை யாவும் அடங்கியிருப்பதான ஒரு உணர்வு, அவருக்குச் சில வேளைகளில் எழுவதுண்டு. என்னவாயிருந்தாலும் குருக்களுக்கும் மார்க்கண்டுவுக்குமே தங்களுடைய பரஸ்பரத் தொடர்பு இந்தக் கள்ளைத் தாண்டி நிற்கும் நிலை தெரியும். மார்க்கண்டுவுக்கும் அவன் தரும் கள்ளுக்கும் தொடர்பில்லாமல் மார்க்கண்டுவின் தொழிற் பேட்டைக்கு- ஒரு பனந்தோப்பிற்கு- நடுவில் அந்தப் பிள்ளையார் கோவில் நிற்கிறது. பெரிதாக வர முயன்று தோற்றுப்போன முயற்சியில் கோபுரம், மதில் தங்கள் வழக்கமான நிலையையும் இழந்து, தேய்ந்துகுட்டிச் சுவராய் நிற்கிற நிலைமை நாலாந்திருவிழா நடக்கிற போது சிலருக்குத் தெரிவதுண்டு. அப்போதுதான்  நாலு அல்லது ஐந்து சிகரச் சோடினைகள் 'லைட் மெஷின்கள்', பதினைந்து இருபது கூட்டம் பெரிய மேளம், நாலைந்து கூட்டஞ் சின்ன மேளம் என்று புடவைக் கடைக்காரச் சிவசம்பு ஆயிரமாயிரமாய் இறைக்கும் போது, அதில் கால்வாசி இதைத் திருத்தப் போதுமே என்று சில வயது போனதுகள் யோசிப்பதுண்டு. அதுகளும் பெரிய மேளச் சின்ன மேள ரசனையிலும் வரும் சனத்திலும் சிந்தையை வைத்து, இந்த யோசனையைக் காற்றில் பறக்கவிட்டு இந்த ஒரு நாள் மாய மினுக்குகள் மறையப் பின்னர் விவாதிப்பதுண்டு. திருவிழாக் காலந் தவிர மோதக வடை ஆசைகள் கிளம்புகிற பொழுதும், அகஸ்மாத்தாகச் சுருட்டுக்காரர் பொன்னையர் கோவிலருகால் போகும் பொழுது கோவில் விளக்கெரியாததை அவர் காணும் போதுந்தான் பிள்ளையார் இருப்பது ஊருக்கே தெரிய வரும்.

முன்னதே ஐயரின் ஸ்திரத்துக்கும் ஜீவனத்துக்கும் ஆதாரம். பின்னது என்றால் இந்தப் பிராமணியைத் திட்டித் தீர்த்து ஒழிக்க மூர்க்கமான முயற்சிகள் நடைபெறும். இவைகளுக்கெல்லாம் புறம்பாகப் பேசாமல் மௌனியாக இருந்து எல்லாரும் திட்டித் தீர்த்த பின் மார்க்கண்டுவின் கள்ளில் கொஞ்சத்தை மிடறி அவனுடன் கதைத்த பின்னர் மௌனமாகத் தன் வீட்டினுள் நுழைந்து, செத்தது போல் கிடக்கும் வருஷத்துக் கொன்றாகத் தெய்வங் கொடுத்திருந்ததுகளைத் தாண்டி அடுத்ததையுந் தெய்வம் கொடுக்கப் பண்ணும் முயற்சியில் இந்த நாடகக்காரர்களின் கூச்சலை மறக்கடித்து விடுவார்.

இந்தத் தாமதக்காற்றில் அப்போதுதான் ஒரு தீப்பொறி மெல்லப் பற்றியது. சில காரணகாரிய ஆராய்ச்சிக்காரர்களின்  தேடித் திரிந்து பொறுக்கப்பட்ட காரணம் மார்க்கண்டுவின் தமையன் மகன் கிருஷ்ணன் சிவப்புச் சட்டைக்காரர்களுடன்  சேர்ந்து கொண்டான் என்பதாக இருந்தது. மார்க்கண்டுவாலோ விதிக்கப்பட்ட தவாளியில்- இயற்கையாக அவனுக்கே சரியாகப் புலப்படாமல், அடிமனதின் ஒரு மூலையில் வெள்ளாளன்களின் குடுமிகளின் சகல மயிர்களும் தன் கையில் இருக்கின்றனவென்பதாக உணர்ந்து சிலிர்த்தாலும் - அதையும் நடைமுறையில் நசுக்கி இயங்கி இயங்கியே ஷகோவிலுக்குள் போவதாமே| என்பதையும் அந்த ரீதியிலேதான் விருப்பு வெறுப்பின்றி எடுக்க முடிந்தது.

அந்த வருடத் திருவிழாத் தொடங்கியது. தொடங்குவதற்குச் சிறிது காலம் முன்னரே கசமுசவென்று இந்தக் கோவிலுக்குள் போகிற பிரச்சனை கிருஷ்ணனின் முயற்சியால் அவர்களுக்குள் எழுந்து பரவியது. தூரத்துச் சொந்தத்தில் பல அலைகளை எதிர்த்து நீந்தி, அடிக்கடி இடம் மாற்றுப் படுகிற ஆசிரியனாகிவிட்ட நடேசுவின் உதவியோடு கிழடு கட்டைகளை ஒத்துக் கொள்ளப்பண்ணுவதே பெரிதாகிப் போயிற்று.

மார்க்கண்டுவுக்கும் நடேசுவைப் பார்த்துத்தான் நம்பிக்கை வந்தது. கும்மிருட்டில் அந்தப் பனங்காட்டில் சலசலப்பு. வானத்து நட்சத்திரங்களின் மினுமினுப்பு இவைகளின் பின்னணியில் மார்க்கண்டு இதைக் குருக்களிடம் சொன்ன போது - அரைப்போதையின் தூக்க நிலையை உதறிச் சிலிர்த்தது.

                           - 2 -

'எட விசரா, இப்ப வாடா, நான் கூட்டிக்கொண்டுபோறன்.' என்று குருக்கள் சுருதியைக் கூட்டி விதிர்த்தார். வெறிப் பிடிவாதம் பிறகு சுருக்கென ஏறி 'வாடா' என்று கையைப் பிடித்துத் திரும்பவும் இழுத்தார். மார்க்கண்டுவுக்கு உதறல். கிருஷ்ணன் ஒருவரிடமும் சொல்லாதே என்றது ஞாபகத்துக்கு வந்தது. nkள்ள nkள்ள எல்லாவற்றையும் சொன்னபோது குருக்கள் வழக்கம்போல் அவரது மௌன உலகில் பிரவேசித்தார்.

'தர்ம கர்த்தா தம்பிமுத்துவின் பளபளப்புக் கண்ணாடிகளினூடாக நெருப்புக் கதிர்கள் பறந்து மார்க்கண்டுவைத் தீக்கிரையாக்கி...' சிலிர்க்கின்ற ஓர் உணர்வில் மார்க்கண்டுவின் குறைந்த சுருதிக் கதையின் சாரமும் சேர்ந்து வெறியை ஊட்டி அவருக்கே பழகிப்போன இயல்பில் அடங்குகின்றன.
அப்போதுதான் அந்த வருஷத் திருவிழா தொடங்கியது.

யாகசாலையில் புகையும், அந்த யாகசாலையில் மூலையில் இருக்கும் போத்தலிலிருந்து பிரிந்து சென்ற திரவமுஞ் சேர்ந்து குருக்கள் கண்ணைச் சிவப்பாக்குகின்றன. பத்ததி வாசிக்கிறவன் 'யாழ்தேவி' குருக்கள் 'ஸ்லோட்றெயின்' வேகமாற்றம் அதிகமாகி அதிகமாகி இடமாற்றமாகி மாறி குருக்கள் வடக்குக் கும்பத்தில் நிற்கும் போது பத்ததி 'ஓம் தெஷண கும்பாய நம| வில் நிற்கிறது. குருக்களின் மனதில் மனுஷியின் போனபிள்ளைப் பேற்றுக்கு தம்பிமுத்துவிடமே வாங்கிய கடனை இந்தத் திருவிழாவுடன் அடைக்கும் சாத்தியக் கூறுகள் பற்றிய விசாலமான ஆய்வு. அதில் இந்த மார்க்கண்டுவின் கதை முள்ளாகக் குத்திக் கத்திக் காயமாகிப் பெருத்துக் கொண்டே வருகிறது. வெளியில் கோயில் நாயனத்தின் தேய்ந்த உருக்குலைந்த 'கல்யாணி'  
  
அதற்கு இரண்டு பொருட்கள் ஒத்துப் போவதும் முரண்படுவதும் ஒரேயடியாக நடக்குமென்ற விசால தத்துவத்தை விளக்கு முயற்சியோ ஒரு மேளம். மனஞ் சூனியமாகி யாகசாலைக்கு வெளியே நிற்கிற கிழவிகள் கூட்டம், அங்குமிங்குமாகத் திரியும் அலுவல்காரர்கள், லவுட்ஸ்பீக்கரைக் காணுமிடத்திலெல்லாங் காணப்படக் கூடிய ஒரு பெடியன்கள் கூட்டம். வெளியில் கடலைக்காரர்கள் இவர்களின் பிரசன்னத்துடன் குருக்கள் மகன் பாலனுக்குந் திருவிழாத் தொடங்குகிறது. யாகசாலையில் புகையில் கண்ணைக் கசக்குகிறான். ஸ்கூலால் கூட்டிச் சென்று காட்டப் பட்ட சீமெந்து பாக்டரியின் ஞாபகம் வருகிறது.

இங்கே என்ன தயாரிக்கிறார்கள்.?

இந்த அப்பாவே மோசம்.. மூலையில் பார். ஓடியாடி அதையெடுத்து இதையெடுத்து- மடைப் பள்ளிக்குப் போகும் போது- அங்கே மடைப் பள்ளி ஐயர் நிற்கிறார். கோவில் மண்டபத்தின் மூலையில் அவன் தாய் குந்தியிருந்து கிழவி பொன்னம்மாவுடன் கதைத்துக் கொண்டிருக்கிறாள். அவன் தம்பி தங்கைகள் மண்டபத்தில் ஓடி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சலசலப்புகளுக்கிடையில் கொடியேறுகிறது. ஓடியாடுபவர்களும் ஒரு கணம் கும்பிட்டுக் கொள்கிறார்கள். பூசை முடிந்து சுவாமி புறப்பாட்டுக்கான ஆயத்தங்கள் நடக்கின்றன. பாலனுக்கும் வேலை கடுமைதான். எனினும் சம்பாவனை தந்த உத்வேகத்தால், அதைத் தகப்பன் விசாரிக்காததால் அவன் மனதில் கடலை, ஐஸ்கிரீம் கனவுகள் நிரம்பி இந்தக் கடுமையை வெகுவாகக் குறைக்கின்றன. வசந்த மண்டபத்தில் 'சுவாமிக்கு' அலங்காரம் நடக்கிறது. வடிவாக இருக்கிறது.

வெளியே 'அரோகரா! அரோகரா!' என்ற சத்தம் கேட்கத் தொடங்கி வர வர வலுப்பெற்றுக் கொண்டே வர, அதில் இருந்த ஒரு வெறி நிரம்பிய கன்னித் தன்மை ஈர்க்க பாலன் வெளியே ஓடி வந்து பார்க்கிறான்.

- 3 - 

நடேசுவின் தலைமையில் ஒரு கூட்டம் கூப்பிய கரங்களுடன் கோயிலை நோக்கி வந்து கொண்டிருந்தது. கிருஷ்ணன் நடேசுவுக்கு அருகில் நடந்து வந்து கொண்டிருந்தான். கையில் கற்பூரத்துடன் பெண்கள். அதில் இளவயசுகளே அதிகம். மார்க்கண்டுவின் கையில் ஓர் அருச்சனைத் தட்டு, கோயிலை நெருங்க நெருங்க 'அரோகரா'வின் வெறி நிரம்பிய லயம் அவர்களில் உருவைத் தோற்றுவித்து மற்றவை எல்லாவற்றையும் அவர்கள் மனத்திலிருந்து ஒதுக்கி அழித்து அவர்களைப் புதியவர்களாக்கி இருந்தது.

பாலன் பார்க்கிறான்.

மார்க்கண்டுவின் மகன் சுந்தரமும் அக்கூட்டத்துடன் பரந்து வந்து கொண்டிருந்த சிறுவர்களுடன் ஒருவனாக வருவது தெரிந்தது. அவன் இடுப்பில் வெள்ளைத் துண்டு. அரோகராச் சத்தம் அந்தச் சிறுவர் மனதிலும் புகுந்து, அதன் சுருதியுடனும் லயத்துடனும் ஈடுபடுத்தி, அவர்களின், புதியதைப் பார்க்கப்போகிற ஆவலையும் ஒதுக்கி விடுகின்றன.

அந்தக் குட்டிச் சைனியம் தனக்கே உரித்தானதொரு கம்பீரத்துடன் கோவிலை மிக நெருங்கி வந்து வெளி வாசலைத் தாண்டி உள்ளே புகக் காலடி எடுத்து வைக்காத மட்டும் பரம்பரை பரம்பரையாகக் கற்பனையில் கூட இது தோன்றியிருக்காததால் இந்தச் சைனியத்தின் நோக்கம் மற்றவர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் எல்லோரும் வெளிவாசலைத் தாண்டி மண்டபத்தில் பிரவேசித்தபோதே என்ன நடக்கிறது என்பது பலர் மண்டையில் ஏறியது.

'டோய்! கோவிலுக்கை உள்ளட்டுட்டாங்கள்' என்று யாரோ கத்திக் கொண்டோடுவது கேட்டது. வேறு பலரையுங் கூட்டி வரத்தான் திடு திடுமெனக் குறுக்குந் நெறுக்குமோடி சில கணங்களில் வேறோரணி திரண்டது.

மார்க்கண்டு அருச்சனைத் தட்டுடன் எல்லாரையும் விலக்கி முன்னேறி வருவதைப் பார்த்து அதை வாங்கினார். வாங்கும்போதே மண்டபத்தில் நின்ற கிழங்களின் மத்தியில் ஒரு கேவல் சத்தம் ஓடி வருபவர்களின் ஓசைக்கு ஓர் அவலச் சுருதியாய்ப் பெருகியது. முத்தாய்ப்பாக 'உந்தப் பிராமணியைப் பார்' என்ற குழறல் கேட்டது.

'ஓம் அத்திய பூர்வோத்தேவங்குண' என்று எதிரொலி மூலஸ்தானத்திலிருந்து கேட்கத் தொடங்கியது. அருச்சனை பாதி நடந்தேயிருக்காது, அதற்குள் பட்டாளம் திரண்டு தடி, மண்வெட்டிப் பிடிகளுடன் பிரவேசித்து 'ஓடுங்கோடா வெளியாலை' என்று அங்கிருந்த வெகு தீர்மானத்துடன் வந்திருந்தவர்களை நெட்டித் தள்ள முயற்சித்த போது, நடேசு பெருத்த குரலில் 'இங்கை இருக்கிற யாரிலையெண்டாலும் கை வைத்தால் நடக்கிற சேதி பிறகு தெரியும். நாங்கள் சமாதானமாய் ஆரையுங் குழப்பாமல் அமைதியாய்ச் சாமி கும்பிட வந்தனாங்கள். இது ஆண்டவன் சந்நதி  நாங்கள்...'

'டாய்! எங்களுக்குச் சொல்லுறாய்,' சுருட்டுக்காரப் பொன்னையர் மற்றவர்கள் வந்து சேர்ந்த துணிவில், நடேசுவின் தீர்மானமான குரல் ஏற்படுத்திய மௌனத்தையும் கலைய முழக்கினார்.

'அடியடா' என்று வெகு தீர்மானமாக உத்தரவிட்டுக்கொண்டு முன்னாலொன்று பாய்ந்தது.

இதற்குள் பெண்கள் ஓடத் தொடங்கினார்கள். இத்தனை களேபரத்தினுள்ளும் அருச்சனை நிற்கவில்லை. அடிக்கிறவனை அடித்துத் தள்ளுறவனைத் தள்ளிச் சனத்தைக் கலைக்க முயற்சி மும்முரம், நடேசுவுக்கும் கிருஷ்ணனுக்கும் விழுந்த அடியில் தள்ளாடித் தள்ளாடி இதைத் தடுக்க முயன்று கடைசியில் விழ, நிலத்தோடு தேய்த்து இழுத்துக் கொண்டு போய் வெளியே போட்டது. அத்தோடு மற்றவர்களும் உற்சாகமிழந்து வெளியே போகத் தலைப்பட்ட போது, மார்க்கண்டுவையும் அடித்துத் தள்ளித் துரத்துகிற போது....... சுந்தரம் பார்க்கிறான். 'ஐயோ அப்புவை அடிக்கினம்.......'

- 4 –

தம்பிமுத்து ஆக்ரோஷமாக வந்து பின்னால் நிற்பதைப் போல உணர்வு குருக்களுக்கு. திரும்பியே பார்க்காமல் அருச்சனையை முடித்து மூலஸ்தானத்திலிருந்து தட்டுடன் திரும்பி வந்தபோது இந்தக் களேபரங்கள் உச்ச நிலையில் இருந்தன.
திரும்பி இதைப் பார்க்கச் சகிக்கவொண்ணாமல் மூலஸ்தானத்துக்கே போய் விட்டார்.
 nkள்ளத்

சத்தங்கள் அடங்குவது யாரோ ஒருவரின் வருகை காரணமாகத்தான். தம்பிமுத்துவின் கண்ணாடிகளினூடாக நெருப்புப் பொறி பறப்பது நிதர்சனமாகத் தெரிந்தது. கறுப்புப் பின்னணியில் வெள்ளைச் சலவை வேட்டி, பொட்டு, இடுப்பு வரை தொங்குகிற சங்கிலி, இவற்றின் நேர்த்தியின் பின்னால் தெரிகிற அதிகாரம், செருக்கு இந்தக் கோபத்துக்குப் பின்னணி.

பொன்னையரின் வர்ணனையில் குருக்களின் செய்கைகளின் விபரங்கள் ஒன்றுக்குப் பத்தாகிப் பஞ்சாய் எண்ணையாய் அந்த நெருப்பில் விழ....

'ஓய் குருக்கள்' தர்மகர்த்தா போட்ட கூப்பாட்டில்  கூட்டத்தில் ஓர் அமைதியலை பாய்ந்து முன்னேறியது. வழக்கம் போலவே.... அவருந் தலை குனிந்து முன்னே வந்து நின்றார். வழக்கம் போலவே இதுவும் செவிடன் காதில் ஊதிய சங்காய் முடியப்போகிறதைப் போலத் தோன்றத் தொடங்கத் தம்பிமுத்துவுக்குக் கோபம் நெருப்புக் கொழுந்து விட்டுக் கனல் கக்கிப் பெருகத் தொடங்கியது.

'ஓய் குருக்கள் உமக்கு அறிவில்லையே காணும். உந்தப் பள்ளர் நளவரிடைத் தட்டை வாங்கி மூலஸ்தானத்துக்கை கொண்டு போவிட்டீர்.....'

'அவர்கள்' உள்ளே வந்து விட்டதையும் அதை இத்தனை பேர் நின்றுந் தடுக்க முடியாமல் போனதையும் மறுகி வெடித்தார்.

'அருச்சனையெண்டால் ஆராளெண்டுந் தெரியேல்லைப்போலக் கிடக்கு' குருக்கள் தலையை நிமிர்த்திச் சிரித்தார்.

'ஏன்?' தம்பிமுத்துவுக்கு வெறியேறியது.

'நான் நினைச்சால் என்ன செய்வன் தெரியுமே  ஆய்.... தெரியுமோ என்டு கேக்கிறன்.....' குருக்களை நெருங்கினார். 'முதலாளி விடுங்கோ' பொன்னையர் மறித்தார். பாலன் பார்க்கிறான்.

'உவன் நாசமாய்ப்போக'

அவனது தாய் இடுப்பில் கைக்குழந்தையுடன்  வருகிறாள். அவள் முகத்தில் மரத்துப்போன பாவமே தெரிகிறது. தம்பிமுத்துவுக்குச்  சுரதி கூடுகிறது.

'இத்தனை காலமும் பொறுத்தாச்சு....'

நெருப்பு எரியத் தொடங்கிக் கனல் கக்கிப் புகையை விட்டுக் கடைசியாகத் தணல் காட்டும் நிலைக்கு வந்தது.

'ம் போனது போகட்டும் ஒரு பிராயச் சித்தத்துக்கு ஒழுங்கு படுத்தும்'

'என்னால் முடியாது. நான் செய்ய மாட்டேன்' குருக்களின் நிதானத்தில் உறுதி தெரிந்தது.

'என்ன காணும்' தனது கட்டளைகள் மீறப்படுவது, அதை இத்தனை சனங்களும் பார்ப்பது, அது வழக்கமில்லாததொன்றாய் இருப்பது  இவையெல்லாவற்றிற்கும் மேலாய் வேறொரு குருக்களையுங் கொண்டு வர முடியாத நிலையாய்க் கொடியும் ஏறி முடிந்தது, எல்லாம் சேர்ந்து தன்னை எரிப்பதைப் போல தம்பிமுத்துவுக்கு ஒரு உணர்வு. இந்த உணர்வு அவர் கண்களினூடாகப் பாய்ந்தது.....

'ம்ம் நான் கவனிச்சுக் கொள்ளுறன்' திரும்பி விறு விறென்று நடப்பதில் தெரிந்தது அவர் கோபம். பொன்னையர் அவரின் கார் வரைக்கும் பின்னால் ஓடினார். கூட்டத்தின் கவனம் கோவிலுக்குள் போனவர்கள் மீது திரும்பியது.

                        - 5 -

ஓடியவர்கள் போக நடேசு கிருஷ்ணன் இவர்களைக் கொண்ட ஒரு இளங் கூட்டம் கோவில் வாசலுக்கு வெளியே மிஞ்சியிருந்தது. நடேசுவுக்கும் கிருஷ்ணனுக்கும் அடியினால் அரை மயக்கம். இம்முறை சட்டக் கழுதைக்கு எட்ட நிற்கும் யோசனையில் சாத்வீகமாகவே இறுதிவரை பார்ப்பது என்பது தீர்க்கமான முடிவு. கூட்டம் இவர்களின் மீது பாய்ந்தது.

கணேசமூர்த்தி மாஸ்டர்- ஒரு முன்னை நாள் கொம்யூனிஸ்ட், இன்று முழுநேர அரசியல்வாதிகளுக்கும், வேலை தேடுபவர்கள் மாலை போடுபவர்கள் இவர்களுக்குமிடையில் நிற்கும் ஒரு அரைநேர மாஸ்டர்- தனது மனைவி பிள்ளைகள் சகிதம் அப்போதுதான், வந்து இந்தக் கலவரங்களைக் கண்டுங் காணாதது போல் கோவிலுக்குள்ளே போய்ப் பெரிய கும்பிடு போட்டார். கும்பிடும் போது, இதற்குத் தலைமை, அதோடு சம்பந்தப்பட்ட கட்சிச் சிக்கல்களின் பின்னணியில் தான் போய்த் தலையிடுவதன் விளைவுகளின் பிரதிபலன்களை மனம் ஆராய்ந்தது. காந்தி, மார்க்ஸ், ஏன்செல்ஸ், 1930ம் ஆண்டு நடந்த 'சமபந்தி போசனத்தில்' தான் இளைஞனாயிருக்கும்போது ஏற்ற பங்கு, இவைகளின் நினைவுகள் குழம்பாய்ப் பொங்கிச் சில கணங்களின் பின்னர், 'நீ கும்பிடு நான் உதுக்கை போயிட்டு வாறன்..'

'உதுக்கை நீங்களேன் போறியள்? இங்காலை வாங்கோ' என்று அவர் பாரியார் வழக்கமான கனத்துடனும் கண்டிப்புடனும் இரைய.....

ஐயர் வெளிவாசலுக்கு ஓடுவதைக் கண்டு மாஸ்டர் பின் தொடர்ந்தார்.

'நிப்பாட்டுங்கோ....' ஐயரின் சத்தம் எடுபட நேரமில்லை.

'நிப்பாட்டுங்கோ' மாஸ்டர் புகுந்தார்.

நிற்பாட்டி ஓய்வதற்குள் சத்தியாக்கிரகிகளில் சில இளவட்டங்கள் நடேசுவுக்கும் கிருஷ்ணனுக்கும் அடி விழுவதைப் பார்த்துச் சகியாமல் முதலில் தடுக்க முயன்று பிறகு அவர்களை எதிர்க்க முயன்று உலைய நேரிட்டது. கடைசியாய்க் கூட்டங் கலையவும் பொலிஸ் ஜீப்பொன்று வரவும் சரியாயிருந்தது.
அடுத்த நாள் காலை கோவில் வாசற் கதவு சாத்தப்பட்டிருந்தது. தம்பிமுத்துவின் உத்தரவுதான். இந்தக் கலவரங்கள் நடந்து தன் கோவிலுக்கும் பொலிஸ் காவல் வந்தது அவரது மனதில் கிளு கிளுப்பை ஏற்படுத்தியிருந்தாலும் இந்த ஐயரின் விவகாரம் மட்டும் முள்ளாய்க் குத்தி ஷஎன்ன செய்வது?| என்ற நிலைக்கு அவரைத் தள்ளியிருந்தது.

குருக்கள் காலையில் பார்த்தபோது, வெளி வாசற் கதவு பூட்டியிருந்தது. திருவிழாக்காரர் மகன் தெற்கு வாசற் கதவால் வருவதைப் பார்த்து....

'கதவு ஏன் பூட்டியிருக்குது.?'

புரியத் தொடங்க, nkள்ளக் குறுக்கும் நெடுக்குந் நாலைந்து தரம் நடந்து கடைசியாக எல்லாமே வெறுமையாகப் போகிற உணர்வுடன் வெளிவாசற் கதவை நோக்கி நடந்தார்.

ஒரு கணம்-தம்பிமுத்துவின் கண்ணாடிக்குள்ளிருந்து பொறி பறந்து தன்னைச் சுடுவது போல ஒரு உணர்வு. திறாங்கை  எடுத்து விட்டுக் கதவைத் திறந்த போது,

'ஐயரே உது என்ன.?' பொலிஸ்காரர்களுடன் கதைத்துக் கொண்டிருந்த பொன்னையர் குழறியபடி ஓடி வந்தார்.

'உமக்கு விசரே.? முதலாளி கண்டால் என்ன நடக்குந் தெரியுமோ?'

குருக்கள் பேசாமற் திரும்பி உள்ளே போகப் பொன்னையர் திகைத்துப் போய்க் கறுவியபடியே தம்பிமுத்துவின் வீட்டை நோக்கி ஓடினார். இன்ஸ்பெக்டருக்கு இது புதினம்.

- 6 -

பாலன் இங்குமங்குமாக ஓடியபடி வேலைகள் செய்து கொண்டிருக்கிறான். யாகசாலையில் எல்லாம் எடுத்து வைத்தாயிற்று. திருவிழாக்காரர் வர வேண்டியதுதான்.

'என்ன நடக்கப் போகிறது.?'

வெளியே தம்பிமுத்து பரிவாரமொன்றுடன் வருகிறார். சுருட்டுக்காரப் பொன்னையர் சொல்லிக் கொண்டு வருவது காதில் ஏறவில்லை. அவரின் ஒரு வெறித்த பார்வை கோபமென்பதே அகங்காரத்தின் ஒரு வெளியீடு என்பதை நிதர்சனமாக எடுத்துக் காட்டுகிறது.

'ஓய் குருக்கள்'

பத்ததி வாசிக்கும் ராமநாதன் குருக்களிடம் சடுதியாக ஓடினான். குருக்கள் கையைக் கட்டியபடியே வந்து நின்றார்.

'ஓய் இந்தக் கோவிலுக்கு நீரோ நானோ காணும் மனேஜ்மன்ற்?' ஒரு கண நேர மௌனத்தையுஞ் சகிக்க முடியவில்லை.

'ஓய் சொல்லுங் காணும்......' குருக்களை நெருங்கினார். அவருடைய வழக்கமான தாமதச் சேற்றில் ஒரு கணம் இறங்கிய குருக்கள் சுதாரித்துக் கொண்டு, சிலிர்த்துச் சிலிர்ப்பை மனதின் ஒரு மூலைக்குக் கொண்டு போய் அதையும் பொறுக்காமல்......

'நீர்தான்....' எதிர் பார்த்த இந்த விடையைக் கொண்டு கொஞ்சங் கொஞ்சமாய் அதைச் சுற்றித் தன் வாதங்களைப் பெரிதாக எழுப்பிக் குருக்களின் ஒழுங்கீனங்கள், அதைத் தான் 'குடும்பகாரன்' ரீதியில் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்த, தோரணைகள் இன்னும் அத்துடன் வேறு தனது பெருமைகள் இவைகளுக்கு வார்த்தை ரூபங்கள் கொடுத்துக் கொஞ்சமாய்ச் சத்தம் கூடி.... குருக்களை அழைப்பது பன்மையாக இருந்து ஒருமையாகும் நிலைக்கு வந்தது. நெருப்பு, கண்ணாடிக் கண்களுடாக இந்த முறை குருக்களைச் சுட்டது. குருக்கள் பாலனைப் பார்த்து,

'கத்தியைக் கொண்டு வா' பாலன் ஓடிப் போய் வந்தான்.

கத்தியால் தன் கங்கணத்தை அறுத்தார்.

'நீர் செய்யுறதைச்....' குருக்கள் போவதைக் கண்டு எல்லாரும் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

'நான் பார்த்துக் கொள்ளுறன்.| பரிவாரம் திரும்புகிறது.

குருக்கள் வீட்டில் அமைதி கனத்துக் கல்லாய் நிரம்பியிருந்தது. பாலன் ஒரு மூலையிலிருந்து அம்மாவையும் அப்பாவையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். அப்பா ஒரு மூலையில், அம்மா ஒரு மூலையில் ஆளுக்கொருவராய்க் குந்தியிருக்கிறார்கள். அம்மாவின் முகஞ் சிவந்து வீங்கியிருக்கிறது. ஷஅப்பா இனி என்ன செய்யப் போகிறார்'

போன வருஷத்துப் பிள்ளைப் பேற்றுக் கடன். இந்த வருஷத்து இப்போதைய கடன், நாளை நடக்கப் போகும் பாடு இவையெல்லாஞ் சேர்ந்து அவர் மனதில் கோயில் மேளம் மாதிரியே அபத்தமாய் களையிட்டன. பூபாலு வெகு உற்சாகமாக வந்து கொண்டிருந்தான். கடை நெருக்கடியிலிருந்து கிடைத்த கொஞ்ச நேர விடுதலை, அவனுக்குத் தரப்பட்டிருக்கிற 'பவர்' இந்த மாத்திரைகள் நன்றாக வேலை செய்தன. ஐயர் வீடு நெருங்க நெருங்க அவனுக்குள்ளே ஒரு மிடுக்குக் கொஞ்சங் கொஞ்சமாய்ப் பெருத்து வியாபித்து.....

அவன் பட்டு வேட்டி சால்வையுடன் நாபிக்கமலம் வரை தொங்குகிற சங்கிலியுடன் நடந்து வருகிறான், கோயிலுக்குள் சனங்கள் - பெண்கள் - ஏராளம்.

                            - 7 -

'முதலாளி வாறார் விலத்துங்கோ....' கடையில் அவனுடன் நிற்கிற வட்டு சுப்பு - பெரிதாக வளர்ந்து - சனங்களை விலத்துகிறான்.

'ஓய் ஐயரே' குரல் தம்பிமுத்துவின் குரல் மாதிரியே சன்னமாய்க் கம்பீரமாய் ஒலிக்கிறது. ஐயர் நடுங்கியபடி ஓடி வருகிறார். கோவிலைச் சுற்றி வந்துகொண்டு ஒவ்வொன்றாய் ஐயரில் பாணம். பின்னால் ஒரு பட்டாளம் பெண்கள் அவனைப் பார்க்கிறார்கள்.

'உதென்ன காணும் உந்த விளக்கு?. உதைத் துடைப்பிக்கிறேல்லியே?'

'ஏன் இவ்வளவு நேரம்? பூசையைத் துடங்குமென் காணும்....' பெண்கள் பார்த்து ரசிக்கிறார்கள். அதில் தம்பிமுத்துவின் மகளும் நிற்கிறாள். அவள் இவனைப் பார்த்து ரசித்தபடியே அவனை நோக்கி வருகிறாள், வந்து....

பூபாலு ஐயர் வீட்டை நெருங்கி உள்ளே எட்டி 'ஐயா' என்றதுந்தான் மௌனம் கலைந்தது.

'முதலாளி உங்களை உடனே உந்தச் சங்கிலியைத் திருப்புறதுக்கு ஆயத்தமாக வரட்டாம். இல்லாட்டி நடக்கிறது தெரியுந்தானே?'

'சரி சரியோ தம்பி இந்தா வாறன்' அவனுக்கு அதில் இருந்த காரம் மணம் குணம் இவையொன்றுந் தெரிய நியாயமில்லை. கடை யோசனைகள் திரும்பவரப் போய் விட்டான். பத்திதி வாசிக்கும் ராமநாதன் நின்றால் மனுசியையும் பிள்ளைகளையும் அவள் தகப்பன் வீட்டிற்குத் தற்போதைக்கு அனுப்பலாமே என்று யோசித்தவராய்-

'என்ன இந்த ராமநாதனைக் காணேல்லை.?'

முணு முணுப்பு மனுஷி காதில் விழுந்து இயக்கத்தை ஏற்படுத்தியது. இந்த எரி மலைகளின் கொதிப்பு வெடிப்புகளைப் பொருட்படுத்தாமல் வழக்கம் போலவே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை அடக்கினாள். ஐயர் சால்வையை உதறிப் போட்டுக் கொண்டு தீர்மானத்துடன் எழுந்து, ஒன்றையுங் கவனியாமல் வேகமாய் நடந்தார்.

'ஆரிட்ட கேக்கப் போறார்?'

கால்கள் அவரையும் அறியாமல் மார்க்கண்டுவின் கொட்டிலுக்கு இழுத்த போது பின்நேரம் இருந்த போதும் வழக்கத்துக்கு மாறான ஒரு துணிவு.

'ஐயா நீங்கள் போங்கோ நான் கொண்டாறன்......' மர்க்கண்டு நொண்டியபடி வெளியே வந்தான்.

'அது கிடக்கட்டும் இப்ப.......'

இந்தச் சங்கிலி விவகாரத்தைச் சொல்லி முடித்த போது மார்க்கண்டு யோசித்ததாய்த் தெரியவில்லை.
'போங்கோ நான் எல்லாம் கொண்டு வாறன்' ஐயர் திரும்பி விட்டார். மார்க்கண்டு இரண்டுடனுந்தான் வந்தான். மாலைச் சூரியன் மரமங்களினுதவியுடன் கோடுகள் கீறும் நேரம் பட்டணத்துக் கோவில் ஒன்றில் ஆள் தேவை என்று கொஞ்ச நாளைக்கு முன்னர் வந்து விசாரித்த விபரத்தைக் குருக்கள் சொன்னார்.

'மார்க்கண்டு ஒரு வருஷமாகுமடா'

'அதைப் பிறகு பார்ப்பம்'

                         - 8 -

தம்பிமுத்துவின் கடையை அடைந்த போது அவரே இரண்டு பேராகிப் போன மாதிரியொரு மப்பு உஷார். கடையில் அவரில்லை. தம்பிமுத்துவின் வீட்டுக்கே போன போது அங்கே......... 

ராமநாதன், அவன் தமையன் நடராஜனுடன் நிற்கிறான்.

'நடராஜனை உடனே இங்கே சேர்க்கக் கூட்டிக் கொண்டு வந்திட்டான் போல கிடக்கு'

ராமநாதனைக் குருக்கள் பார்க்க ராமநாதன் அப்பால் திரும்பிக் கொள்கிறான், நடராஜன் முழிக்கிறான்.
'என்ன காணும்....' தம்பிமுத்துவுக்குத் திரம்பவும் ஆக்ரோஷம் வருவதற்கான அறிகுறி அதில் போரில் வெல்லப் போகிறோமென்ற புகையுணர்வு குருக்கள் காசை மடியிலிருந்து அவிழ்த்து எடுக்க.....

பிராமணிக்குக் காசு எங்கே கிடைச்சுது.?

'மணியம்' பட்டாசு புஸ்வாணமாவது போலத் தம்பிமுத்துவுக்குத் தெரிகிறது. மணியம் வந்து நோட்டையெடுத்து வரவு எழுதுகிறான். தம்பிமுத்து உள்ளே போய் அறையில் இரும்புப் பெட்டியிலிருந்து சங்கிலியைக் கொண்டு வருகிறார். காசை வைக்கத் திரும்பப் போகிறார்.

'தம்பி நடராஜா'

நடராஜ ஐயர் பார்க்கிறார்.

'தம்பி பிராயச்சித்த அபிஷேகமெல்லாம் ஆயத்தமோ?'

'ஓம்  ஓம்'

ராமநாதனின் இரண்டு உருவங்களுந் தெரிகின்றன.

'அதுக்கு முதலிலையடா அந்தா தெரியுமே....'

அவர் காட்டுந் திசையில் தம்பிமுத்துவின் இரும்புப் பெட்டி- அதில் காசை வைத்துக் கொண்ருக்கிறார்- தெரிகிறது.

'உதுக்கு உந்தப்பிராயச்சித்த அபிஷேகத்தைச் செய்யடா நான் வாறன்.'

ஒரு ஏளனப் புன்னகை தெரிந்தாலும் குருக்களின் மனதில் ஒன்றுமில்லை. அவர் பேசாமல் போகிறார்.


                                                        -----       -----        ------
                              
        தரிசனங்கள்  தொகுதி - மே, 1973.