Monday, January 31, 2011

நிலவிலே பேசுவோம்

என்.கே.ரகுநாதன்

மாலையிலே
மது ஒழிப்புக் கூட்டம் நடைபெற்றது! ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த அந்த மாபெருங் கூட்டத்திலே ஆண் சிங்கம்போலத் தோன்றி, மதுவினால் ஏற்படும் தீமைகளையும், அது ஒழிக்கப்பட வேண்டிய அவசியத்தையும், அதற்கான வழி வகைகளையும் அள்ளி விளாசி, இடையிடையே காந்தியத்தைப் பூசி, அழகு தமிழிலே அனல் பறக்கப் பேசிவிட்டுச் சற்று முன்புதான் வந்திருந்தார் ஸ்ரீமான் சிவப்பிரகாசம் அவர்கள்.

அப்பொழுது மணி எட்டு இருக்கும். அவருக்கு பசி, அத்துடன் கூட்டத்திற் பேசிய களைப்பு வேறு.

சாப்பிட்டு முடித்ததும், அறுசுவையுண்டியின் ருசியில் நாவைத் திளைக்கவிட்டபடியே, உள்ளே இருந்த 'ஓர் குலம்' பத்திரிகையைக் கையில் எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். விறாந்தையின் மூலையொன்றில் கிடந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு ஜகஜ்ஜோதியாகப் பிரகாசித்துக்கொண்டிருந்த மின்விளக்கின் ஒளியில் பத்திரிகையைப் புரட்டிப் படிக்கத் தொடங்கினார்.
ஒரு பத்திகூட வாசித்திருக்கமாட்டார். வெளியே வாசற்பக்கமாகச் சிலர் பேசுவது கேட்டது. பத்திரிகையில் படித்திருந்த பார்வையைத் திருப்பி அங்கே நோக்கினார்.

யாரோ பத்துப் பன்னிரண்டு பேர்கள் - தசித்துப் போன கூட்டம் - அல்லது 'உழைத்தாற்றான் உணவு' என்ற நிலையிலிருக்கும் உழைப்பாளி வர்க்கம்! அவர்களில் ஒருவன் தயங்கித் தயங்கி இவரண்டை வந்தான். மற்றவர்கள் அங்கேயே நின்றுவிட்டார்கள். சிவப்பிரகாசம் எழுந்து இரண்டடி முன்னே நடந்து, வந்தவனை உற்றுப் பார்த்தார்.

'அடடே! நீயா கந்தா! என்ன சேதி என்றார்.

'உங்களைக் காணவேண்டுமென்று வந்தோம். இந்த மதுவிலக்கு சம்பந்தமாக...' என்று தயக்கத்துடன் சொன்னான்.

'ஆகா! அதற்கென்ன, நல்லாய்ப் பேசலாமே!' என்று சொன்னார் சிவப்பிரகாசம்.

'இன்னும் சிலர் வந்திருக்கிறார்கள். அப்படியானால் அவர்களையும் கூப்பிட்டு...' வார்த்தையை முடிக்காமல் வாசற் பக்கம் திரும்பி, அங்கே உள்ளவர்களைக் கூப்பிட எத்தனித்தான் அவன்.

சிவப்பிரகாசம் ஒரு கணம் திக்குமுக்காடினார். மனதிலே ஒரு பரபரப்புதடுமாற்றம்! தலையைச் சொறிந்து, நெற்றிப்புருவங்களை உயர்த்தி ஏதோ யோசனை செய்தவர், திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தார்.

'வேண்டாம் கந்தா, கூப்பிடாதே! இதெல்லாம் இரண்டாம் பேர் அறியக்கூடாத விஷயங்கள். மனைவி மக்களென்றாலும் இந்தக் காலத்தில் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும். எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறதென்று யாருக்குத் தெரியும்? அதோ பார்! வெளியே நல்ல நிலவு! அத்துடன் பால் போன்ற மணல். அங்கே போய்ப் பேசிக்கொள்ளலாம். வா!' என்று அவன் பதிலை எதிர்பாராமல் கீNழு இறங்கி நடந்தார். அவன் பின் தொடர்ந்தான்.
பின், வாசலில் நின்றவர்களையும் அழைத்துக்கொண்டு, சற்றுத் தூரம் போய் ஒரு நல்ல இடத்தில் அமர்ந்து பேசினார்கள்.

வந்தவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள். கள் சேர்ப்பது அவர்கள் தொழில். ஊர் முழுவதும் 'மது ஒழிக' என்ற கூச்சல். இந்த நிலையிலே அவர்கள் கதி...?

மது ஒழிப்புக் கூட்டத்திலே, சிவப்பிரகாசம் காரசாரமாகப் பேசியதை அவர்களும் கேட்டார்கள். எனவே, அவரிடமே வந்து சேர்ந்தார்கள். தமது ஜீவப் பிரச்சனைக்கு ஆலோசனை கேட்பதற்கு.

'........நாங்களும் மதுவிலக்குக்கு ஆதரவு தருகிறோம். மதுவினால் உலகத்துக்கே ஆபத்து என்பது நமக்குத் தெரியும். நமக்குக்கூட அது ஒரு மகிழ்;ச்சியான தொழிலல்ல. ஊர் மக்களிடம் வசை கேட்கிறோம். 'எக்ஸைஸ்' உத்தியோகத்தர்களுக்கு சப்பளத்துக்குமேலே 'கிம்பளம்' கொடுத்தும் ஒளித்தோடுகிறோம்..... அது மட்டுமா? ஒவ்வொரு நொடிப்பொழுதும் உயிரைப் பணயம் வைத்துத்தான் நாம் வாழ வேண்டியிருக்கிறது. ஆகாயத்தை அளாவி நிற்கும் மரங்களில் இருக்கும்போது, நமது நிலைமையை எண்ணிப்பாருங்கள். மிகப் பயங்கரமான தொழில்தான்! என்றாலும்.....' என்று இழுத்தான் அங்கு வந்திருந்த ஒரு வாலிபன்.

'ஏன் இழுக்கிறாய்? சொல்லு தம்பி!' என்று வற்புறுத்தினார் சிவப்பிரகாசம்.

'நமக்கு வேறு தொழில் வேண்டும்!'

சிவப்பிரகாசம் சிரித்தார். 'இதென்ன பிரமாதம்? இந்தப் பரந்த உலகத்தில் தொழிலுக்கா பஞ்சம்?' என்றார்.

'எத்தனையோ தொழில்கள் இருக்கின்றனதான்: என்றாலும் நாம் செய்வது சாத்தியமா?'

'ஏன்?'

'ஒரு தேனீர்க் கடை வைத்தால் யாராவது நம்மிடம் வந்து தேனீர் குடிப்பார்களா? அல்லது ஒரு பலசரக்குக் கடை வைத்தாற்கூட நம்மிடம் வந்து சாமான் வாங்குவார்களா? இரும்புக் கடையில்கூட நம்மவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள மாட்டார்களே: இரும்புப் பொருட்களில் தீட்டு ஒட்டிக் கொள்ளுமென்று! அதிகம் வேண்டாம்: என்னை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு கூலியாக வைத்துக்கொள்ளுங்கள் என்றால் சம்மதிப்பீர்களா? இந்த நிலையில்...' என்று அந்த வாலிபன் மிகவும் உணர்ச்சியுடன் பேசிவிட்டு அவர் முகத்தைப் பார்த்தான். அப்போதும் அவர் சிரித்தார்.

'அப்படிச் சொல்லாதே தம்பி! அதெல்லாம் வேறு விஷயம். இவைதான் தொழில்களா? வேறு கைத்தொழில் செய்கிறது!'

வாலிபன் பேச வாயெடுத்தான். அவனைத் தடை செய்துவிட்டு இதுவரை மௌனமாக இருந்த ஒரு நடுத்தர வயதினன் கோபத்துடன் கேட்டான்:

'ஆமாம்! அதெல்லாம் வேறு விஷயங்கள். உங்களுக்கென்ன எத்தனையோ சொல்வீர்கள். இதோ பாருங்கள்! நான் இருக்கிறேன். எனக்கு இப்போது ஐம்பது வயதாகிறது. இந்த வயதில் நான் வேறு புதுத் தொழில் பழகித் தேர்ச்சியடைவதற்கும் காலம் வந்து என் கழுத்தில் கயிறு போடுவதற்கும் சரியாயிருக்கும். தொழில் பழகுகிற காலத்திலே நல்ல ஊதியம் கிடைக்குமா? அவ்வளவும் நானும் என் பெண்டாட்டி பிள்ளைகளும் பட்டினி கிடக்கவேண்டியதான்! அப்படித்தானே உங்கள் திட்டம்?'

சிவப்பிரகாசம் ஆபத்தான கட்டத்தில் அகப்பட்டுக் கொண்டார். எனினும் சமாளித்துக்கொண்டு, 'ஆத்திரப்படாதீர்கள்! நீங்கள் ஒருங்கே திரண்டு உங்கள் தேவைகளை அரசாங்கத்திடம் கேளுங்கள். நீங்கள் கள்ளுச் சேர்க்க வேண்டாம். கருப்ப நீர் இறக்குங்கள். ஒரு சீனித் தொழிற்சாலை நிறுவித் தரும்படி உங்கள் தொழில் அமைச்சரைக் கேளுங்கள். கவனிக்காமல் விட்டுவிடப் போகிறார்களா?' என்று நொண்டிச் சமாதானம் கூறினார்.

கூட்டத்திலிருந்து ஒரு புதிய எழுச்சிக் குரல் கேட்டது.

'அதொன்றும் வேண்டாம், மதுவினால் நன்மையோ தீமையோ! நமது சாதி கொஞ்சம் முன்னேறி வருகிறது. அது உங்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனபடியால்தான் மது விலக்கு வேண்டுமென்றீர்கள். நீங்கள் மதுவை ஒழியுங்கள், காந்தி மகாத்மாவின் பெயரைச் சொல்லிக் கொண்டே எங்கள் வாழ்வைப் பறியுங்கள். நாங்கள் பசி கிடந்து சாகிறோம். தீண்டாமை ஒழிய வேண்டுமென்று மகாத்மா காந்தி சொன்னாரல்லவா? நாம் ஒழிந்து விட்டால் தீண்டாமையும் கொஞ்சம் ஒழிந்துவிடும். உங்களுக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய், அதே நேரத்தில் 'ஜின்'னும், 'பிரண்டி'யும் மருந்துக் கடைகளில் விலைப் படட்டும், மருந்து என்ற பெயிரில்!'

'சைச்சை! இது தவறான வாதம்! அப்படி எண்ணவே கூடாது!'

'பின் எப்படி எண்ணுவது? காந்தியின் பெயரைச்சொல்லி மது ஒழிக்கக் கிளம்பிவிட்டீர்களே. முதலில் தீண்டாமையை ஒழிக்க வேண்டாமா?' என்றது அந்தக் குரல்.

சிவப்பிரகாசம் சிலையாய்விட்டார். இப்படிப் பேசுவார்கள் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை.

வந்தவர்கள் எழுந்தார்கள்.

'நாங்கள் போய் வருகிறோம். சிந்தித்து நல்லதைச் செய்யுங்கள். 'மதுவிலக்கு அவசியம் வேண்டும்!' அதே நேரத்தில் நாம் மகிழ்வுடன் வாழவேண்டும். இந்த அடிப்படையிலே தொண்டாற்றுங்கள். உங்களுடன் நாமும் சேர்ந்து கொள்கிறோம்' என்று சொல்லிவிட்டு நடந்தார்கள்.

'வெளியே நல்ல நிலவு - அங்கே போய்ப் பேசிக் கொள்ளலாம்!' என்று சிவப்பிரகாசம் சொன்னதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு அதிக நேரம் செல்லவில்லை.