Friday, January 21, 2011

யௌவனம்

கே.எஸ்.சுதாகர











கோட்டைப் புகையிரத நிலையம் ஒரே ஆரவாரமாக இருந்தது. இவன் சன நெரிசலில் முண்டியடித்துக் கொண்டு புகையிரதத்தினுள் ஏறிக்கொண்டான். 'ஹாண்ட் பாக்'கை மேலே வைத்துவிட்டு 'கோணர் சீற்'றைக் கைப்பற்றிக் கொண்டான். இருக்கும் இடம் வசதியானதும் சுற்றுமுற்றும் பார்த்தான். இவனது இருக்கையின் அருகருகே இரண்டு வயது முதிர்ந்தவர்கள். எதிராக இருந்த மற்ற 'கோணர் சீற்'றில் வாட்ட சாட்டமான ஒரு இளைஞன். அவன் தனது பார்வையை வெளியே எறிந்துவிட்டுக் காத்திருந்தான். அந்த எறிதலில் ஏதோ விஷேசம்  இருப்பது கண்டு இவனும் அத்திசை நோக்கினான். புகையிரதத்திற்கு வெளியே அழகிய ஒரு இளம் பெண். அவள் அருகே பையன் ஒருவனைத் தூக்கி வைத்திருந்தபடி சேலை அணிந்த இன்னொரு வயது முதிர்ந்த பெண்.

 அந்த இளம்பெண் ஒரு கலைப்படைப்பு. அப்படித்தான் இருக்க வேண்டும். அடிக்கடி சட்டையை மேலும், பாவாடையைக் கீழும் இழுத்து விட்டுக்கொண்டாள். இரட்டைப் பின்னலைத் தூக்கிப் பின்னாலே எறிந்து கொண்டாள். இரட்டைப் பின்னலுக்கு தப்பிய முடி, புகையிரத நிலையத்தின் செயற்கை ஒளியில் பொன்னிறமாகத் தகதகத்து காற்றினில் துடித்துக் கொண்டிருந்தது. பொக்கற்றுக்குள்ளிருந்த 'லிப்ஸ்டிக்'கை எடுத்து உதட்டருகே கோடிழுத்துக் கொண்டாள். உதடுகளை மேலும் கீழும் அசைத்து சப்புக்கொட்டி அழகு காட்டினாள். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு இருபது இருபத்திரண்டு வயது இருக்கலாம்.

 இவன் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தான். புகையிரதம் புறப்படுவதற்கு இன்னமும் இரண்டோ மூன்று நிமிடங்கள் தானிருந்தன. புகையிரதம் கொஞ்சம் தாமதித்துப் புறப்பட்டால் நல்லது போல இருந்தது. அவளைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். மனம் பரபரப்படையத் தொடங்கியது. இன்னும் சற்று நேரத்தில் அவள் மறைந்துவிடுவாள்.

 புகையிரதம் புறப்படுவதற்காகக் கூவியது. அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. சேலை அணிந்திருந்த பெண் - அந்த இளம்பெண்ணைத் தேற்றுவது போலவும், அவள் ஏதோ சிணுங்கிச் செல்லம் கொஞ்சுவது போலவும் தெரிந்தது. புகையிரதம் புறப்பட ஆயத்தமானதும் - பையனை அந்த இளம் பெண் அவளிடமிருந்து வாங்கிக்கொண்டாள். சேலை அவளைக் கட்டித் தழுவிக்கொண்டது. மறுகணம் பிள்ளை – பிள்ளையைத் தூக்கிக்கொண்டு சிட்டாகப் பறந்து வந்து புகையிரதத்தில் ஏறிக்கொண்டது. இவனுக்கு எதிராக மூலைக்குள்ளிருந்தவன் எழுந்துகொள்ள – அவள் அந்த இடத்தை நிரப்பினாள். இருவரும் ஒருமுறை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அசப்பில் அவள் அண்ணனைப் போன்றிருந்த அவன், அந்தச் சிறுவனின் கன்னங்களைத் தடவிக்கொண்டே விறுவிறெண்டு இறங்கிப் போனான். அவள் கண்கள் அழுதுவிடுமாப்போல் கண்ணீர் ததும்பி நின்றது.

 கீழே இறங்கிக் கொண்ட அவனும், சேலை அணிந்த பெண்ணும் 'பாய்' என்று அவளிற்கு கை காட்டினார்கள். புகையிரதம் புறப்பட்டது.

 எந்த தேவதையின் கடைக்கண் பார்வை விழாதோ என ஏங்கினானோ – அந்த தேவதை இப்பொழுது வரம் கொடுப்பதற்காக இவனின் முன்பாக கறுப்பு என்றாலும் பளிங்கு போன்ற படிகம். முகத்திலே ஒரு தனிக்கவர்ச்சி. அவளின் தோடு - இன்னமும் தோணி போல காதிலே ஆடிக்கொண்டிருந்தது. இலவச அழகை தாராளமாக அள்ளிப் பருகிக் கொண்டான்.

 பிரயாணம் எந்தவித கஸ்டமுமின்றி இருக்கவேண்டுமென இவன் வேண்டிக் கொண்டான். இவனிடம் அரச அலுவலகத்தில் வேலை செய்வதற்கான அத்தாட்சி இருந்த போதிலும் உள்ளூர ஒரு பயம். மோப்ப நாய்களுக்கு முகரும் சக்தி போல. முகமூடிகளுக்கும் இராணுவத்துக்கும் அப்பாவித்தமிழர்களைக் கண்டுபிடிக்கும் வல்லமை அதிகம். போனதடவை கூட வவனியாவிலிருந்து கொழும்பிற்கு வரும்போது மூன்று நான்கு தமிழ் இளைஞர்களை குருநாகலில் இறக்கி இராணுவத்தினர் கொண்டு போனார்கள்.

 இவனிற்கு அருகே இருந்தவர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த பேப்பரை வாசிக்கத் தொடங்கினார்கள். சிங்களப் பேப்பர். எதிரே இருந்த அவள் 'இவனை' ஒருதடவை பார்த்துவிட்டு, குழந்தையை மடி மீது சௌகரியமாக இருத்திக் கொண்டாள். இவன் செக்கச் செவேல் என்ற தோற்றம். 'கிளீன் Nஷவ்'. முறுக்கேறிய உடல். ஏதோ ஒரு உயர் அதிகாரியாக இருக்க வேண்டும். இவன் தன் கால்களைப் பக்கவாட்டில் நீட்டி அவள் சௌகரியமாக இருக்கும் பொருட்டு வழி சமைத்தான். சிறு பையன் சோர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். புகைவண்டி சட்டங்கள் மீது தனது தலையைச் சாய்த்து எங்கோ தொலைவில் மலையிடுக்கை நோக்கி அவளது பார்வை நீண்டு போனது. மலைத்தொடருக்கு மேலால் முகில்கூட்டங்கள் விரைந்து சென்றன. அவள் கண்களில் ஏக்கமும் சிந்தனையும் குடிகொண்டு இருந்தன. அவள் கூட ஒரு மழை முகில்தான்.

 அவள் யார்? சிங்களப் பெண்ணா அல்லது தமிழ்ப்பெண்ணா?

 ரயில் பூமி அதிர கடகடத்தபடி ஓடிக்கொண்டிருந்தது. ரயிலில் குலுக்கத்தில் - சிலவேளைகளில் அவளின் கால்கள் இவன் மீது பட்டு விலகின. குளிர்ந்த பஞ்சிலாலான ஒரு உரசல். அந்தப் பொழுதெல்லாம் ஒரு 'ஜென்டில்மன்' ஆக இவன் நடந்துகொண்டான். இருப்பினும் அவன் மனதினுள்ளே ஒரு மிருகத்தின் பாதச்சுவடுகள் உள்ளே நுழைய எத்தனித்துக் கொண்டிருந்தன.

 வெளியே இருட்டி விட்டிருந்தது. ராகம – பொல்காவெல போன்ற இடங்கள் தாண்டி விட்டன. உள்ளே சில விளக்குகள் மாத்திரம் எரிய பெரும்பாலானவர்கள் தூங்கி வழிந்துகொண்டிருந்தார்கள். அவள் இவனை ஒரு தடவை பார்த்துவிட்டு, ஜன்னலின் முன்னால் இருந்த சட்டத்தை இழுத்துவிட்டாள். புற உலகக் காட்சிகள் மறைந்தன.

 'ஜனகன். புhலைக் குடிச்சிட்டுப் படு' தனது மகனை அழகு தமிழில் கூப்பிட்டாள். தமிழ்! தமிழ்ப்பெண்!! அந்தச் சிறுவன் பேந்தப் பேந்த விழித்து பால் போத்தலை வாயினுள் வைத்து உறுஞ்சினான். சற்று நேரத்தில் இருவரும் உறக்கத்திற்குப் போய் விட்டார்கள். இவன் தனது வலது கையை மடக்கி தலையணையாக்கி உறங்க முயற்சித்தான்.

 உறக்கம் வரவில்லை. அவளை மேலும் கீழும் ஒவ்வொரு அவயவமாகப் பார்த்தான். கண் மூடி ஒரு மெருகுச்சிலை போல அவள் இருந்தாள். அவளின் எடுப்பான தோற்றமும், கிளர்ச்சியைத் தூண்டும் பருவ மொக்குகளும் இவனை அவளின்பால் ஈர்த்தது. கீறிப் பிளந்து விட்ட உதடுகளில், லிப்டிக்ஸ்கின் சாயம் வைரத்தில் பட்டுத் தெறிக்கும் ஒளியென மின்னியது. அவள் பாதங்கள் செருப்பை விட்டு வெளியே வந்து இவனுக்காகவே காத்துக் கிடந்தன. கொழுத்த குட்டிக் குட்டி விரல்கள். ஒரு விரலிலே 'மெட்டி'. அதன் வெண்ணிற ஒளி இவனை 'வா' என்று சமிக்கை செய்தது. இளமையின் மதர்ப்பில் உடல் சிலிர்த்து உன்மத்தம் கொண்டது. ஒட்டகம் இவனது கூடாரத்தினுள் கேட்பாரற்று நுழையத் தொடங்கியது.

 எவ்வளவு நேரந்தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பது! ஆமை தன் ஓட்டிற்குள்ளிருந்து அவயவங்களை வெளியே நீட்டி அவள் விரல்களிற்கு கொக்கி போட்டது. சங்கமித்ததில் அவன் உடல் மெல்ல நடுங்கத் தொடங்கியது. மனச்சாட்சி உறுத்த, அறிவு மழுங்கி உணர்ச்சி கொப்பளித்துப் பாய்கிறது. அவள் பேய்த் தூக்கத்தில் ஆழ்ந்து கிடந்தாள்.

 இவனது அங்க சேஷ;டைகள் ஒவ்வொரு படி நிலையாக உயர்ந்தது. ஒரு நிலையில் அவள் இருக்கையில் அங்கும் இங்கும் நெளிந்து விழித்தெழுந்தாள். இவன் கண்களை இறுக மூடிக்கொண்டான். சற்று நேரத்தில் மெதுவாக கண்களை இவன் திறந்த போது – அவள் ஒன்றுமே நடவாதது போல இவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் அந்தச் செய்கை இவனுக்கு விசித்திரமாக இருந்தது. தனக்கு உடன்பாடாக இருப்பது போலவே உணர்ந்து கொண்டான். அப்போது நேரம் இரவு ஒரு மணியைத் தாண்டியிருந்தது.

 மேலும் அத்தகையதொரு சுகமான வாசிப்பிற்காகக் காத்திருந்தான். இரண்டாம் ஜாமப்பொழுதில் மீண்டும் தன் திருவிளையாடலை ஆரம்பித்தான். முற்றாக விளக்குகள் அணைந்திருந்தன. எங்கும் இருள். அந்தத் தடவை அவள் கண்களைத் திறந்து கொள்ளவேயில்லை. எந்தவித புறக்கணிப்பும் இல்லாமல் ஒரு அசைவற்ற ஜடம் போல பொறுமையாக சகித்துக்கொண்டாள். தனது முயற்சியில் தோற்றுப் போய் வலிந்த ஒரு கனவுக்குள் இவன் நழுவினான். கனவின் புலத்தில் அந்த அதிசய இரவில் அவளுடன் உறக்கம் கொண்டான்.

 திடீரென இவனை யாரோ தொடுவது போல் இருக்க மெல்ல விழித்துக் கொண்டான். அவள் இவனது கால்களைச் சீண்டி விளையாடிக்கொண்டிருந்தாள். மெதுவாக விழி உயர்த்தி அவளைப் பார்த்தான். அவள் எங்கோ சிந்தனையில் இருப்பவள் போல காணப்பட்டாள்.

 இரவின் நீட்சியில் இயற்கை அவர்கள் இருவரையும் வென்றது.

 வெளியே இருள் விலகத் தொடங்கியிருந்தது. புகையிரதம் மாகோ, அனுராதபுரம் போன்ற இடங்களைத் தாண்டி மதவாச்சியை எட்டிப் பிடிக்க ஓடிக்கொண்டிருந்தது. ஜன்னல் சட்டங்களிற்குள்ளால் செந்நிற ஒளி உள்ளே கசியத் தொடங்கியது. அவள் சட்டங்களை மீண்டும் மேல் உயர்த்தினாள். தக தகத்த செந்நிறச் சூரியன் வானத்தை மெல்ல எட்டிப் பார்த்தான். அவள் முகம் ஒளியில் சிவந்து ஒரு சௌந்தர்ய தேவதை போலக் காட்சி தந்தது. குருவிகளின் கீச்சிட்ட சத்தம் உள்ளே வந்து காதை எட்டியது.

 அவள் ஒரு கையில் பிள்ளையை அணைத்தபடி மறுகையை புகையிரதத்திற்கு வெளியே தொங்க விட்டாள். இவனும் தனது கையை வெளியே நீட்டினான். குளிர்ந்த காற்று இருவரது கைகளையும் வருடிச் சென்றது. இவன் சட்டென்று அவளது கரத்தைப் பற்றிக் கொண்டான். இருவருது கைகளும் ஒன்றையொன்று தழுவின. உணர்வின் வெப்பம் உடல்களை ஊடுருவின. இரண்டு குளிர்ந்த கால்கள் இவன் முழங்காலை முறுக்கின. திடீரென ஏதோ நினைத்தவாறு அவள் தன் கையை உள்ளே எடுத்துக் கொண்டாள்.

 இந்தப் பயணம் இனி எதில் போய் முடியும்?

 அருகே இருந்தவர்கள் மெல்ல விழிப்படையத் தொடங்கினார்கள். ஒரு சிலர் தாம் கொண்டுவந்திருந்த பொதிகளை மேலிருந்து இறக்கத் தொடங்கினார்கள்.

 ஈரப்பெரியகுளத்தில் ஒரு சில இராணுவவீரர்கள் புகையிரதத்தினுள் ஏறிக்கொண்டார்கள். அவள் ஊர் போய்ச் சேரும் வரைக்கும் - இவன்தான் அவளுக்கு 'கார்டியன்'. அவளது தூக்கியடிக்கும் அங்க அசைவுகளில் சொக்கி, மீண்டும் மீண்டும் அவளைச் சீண்டினான். அவள் ஒன்றுமே நடவாதது போல தன்னைக் காட்டிக் கொள்ள முயன்றாள்.

 இவனது தொடர்ந்த செய்கைகள் அவளிற்கு இப்போது கோபத்தையும் எரிச்சலையும் ஊட்டியது. உணர்ச்சியற்ற ஜடம் போல இருந்த அவளது உடல் எதனாலோ ஒருமுறை குலுங்கியது. கண்களில் நீர் திரண்டது. வெறுப்பைக் கக்கும் விழிகளால் இவனை உற்றுப் பார்த்தாள். 'தூ' என்று காறி உமிழ்ந்து ஜன்னலிற்கு வெளியே துப்பினாள். 'இனி என்னைத் தொடாமல் இரு' என்ற எச்சரிக்கையுடன் எச்சில் நிலத்திலே விழுந்தது.

 ஒரு சிறங்கை எச்சிலால் இந்த மனித மனங்களை அடக்க முடியுமா?

 இவன் திடீரென்று அதிர்ச்சிக்குள்ளானான். அவளது அந்த அதிர்ச்சி வைத்தியம் - இவனது அவயவங்களை உள்ளிளுத்து ஒடுங்கச் செய்தது. இதுவரையும் அப்படி நடந்து கொண்டவள் திடீரென்று ஏன் இப்படி மாற வேண்டும்? ஏமாற்றம் கொண்டான். அவளின் அந்தச் செய்கையானது – வடபகுதியின் எல்லைவரை தொட்டு வந்த யாழ்தேவி, வவனியா வரை தனது சேவையை நிறுத்தியது போல இருந்தது.

 புகையிரதம் வவனியாவில் தரிப்பதற்கு முன்பதாகவே அவசர அவசரமாக இருக்கையைவிட்டு எழுந்து கொண்டாள் அவள். 'பாக்'கை தோளிலே மாட்டிக் கொண்டாள். பையனைத் தூக்கி இடுப்பிலே இருத்திக் கொண்டாள். விழுந்துவிடுமாப் போல் தள்ளாடி நடந்து கதவருகே போய் நின்றுகொண்டாள். இவனிடமிருந்து எவ்வளவு விரைவாக தப்பித்துக் கொள்ளலாம் என்பதில் அவள் கவனம் இருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் இறங்கி சனங்களின் மத்தியில் கலந்துகொண்டாள்.

 இவன் விரைவாகப் புகையிரதத்திலிருந்து குதித்து அவளை அங்குமிங்கும் தேடினான். அப்பொழுது அவள் ஸ்ரேசனின் உட்புறமிருந்து வெளியேறிக் கொண்டிருந்தாள். இவன் விரைவாக நடந்து ஸ்ரேசன் வளவிற்குள் நின்ற அரசமரத்தின் பின்னால் ஒதுங்கினான். முன்னே விரிந்து சென்ற பாதை வழியே நடந்து கொண்டிருந்த அவள் - ஒரு தடவை நின்று தன்னை யாராவது பின் தொடருகின்றார்களா எனப் பார்த்துவிட்டு நடக்கத் தொடங்கினாள்.

 'பாரடா தம்பி! உதிலை போறது அகிலாதானே?' அரசமரத்தின் வேரிலே குந்தியிருந்த வயது போன ஒரு முதியவர், தனக்குப் பக்கத்திலே நின்ற சை;ககிள்காரப் பெடியனிடம் கேட்டார்.

 'ஓம் அப்பு!' என்றான் அவன்.

 இவன் முதியவருக்குப் பக்கத்தில் வந்து, 'ஐயா! உங்களுக்கு அந்தப் பெண்ணைத் தெரியுமா?' என்றான்.

 முதியவர் இவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு,

 'பாவமடா பெடிச்சி! இப்ப நாலைஞ்சு வரிசமா பிள்ளையோடை புருஷனைத் தேடி, கொழும்பு அங்கை இஞ்சையெண்டு அலையுறாள். கொழும்புக்குப் போன இடத்திலை வெள்ளை வானிலை வந்தவங்கள் பிடிச்சவங்கள். இன்னமும் வச்சிருக்கிறான்களோ அல்லது சுட்டுப் போட்டான்களோ ஆருக்குத் தெரியும்! ஒரு சோலி சுரட்டுக்கும் போகாத அப்பாவி அவன்' என்றார்.

 பின் ஏதோ எண்ணம் கொண்டு, 'அவளுக்கு அவள் புருஷன் - வாழ்க்கையிலை ஒரு மின்னலைப் போல' என்றார்.

 முதியவரின் பேச்சில் இவன் திகைத்துப் போனான். ஒருவேளை புகையிரதத்தினுள் நடந்தது கூட அவளின் ஒரு 'தற்காப்பு' முயற்சியோ என்று இவனை சிந்திக்க வைத்தது.

 அவள் போன வழியே – ஆனால் சற்றுத் தாமதித்து - இவனும் நடக்கலானான். அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு பாதச்சுவடும் இவன் நெஞ்சை அழுத்தியது. தம்மைத்தாமே எல்லா வகையிலும் மேம்பட்டவர்களாகக் காட்டிக்கொள்ளும் இந்த உலகத்தில் - மன்னுப்புக் கேட்கும் திராணியற்று – அவளின் பின்னாலே நடந்து கொண்டிருந்தான். அவளது இடுப்பிலே தொங்கிய பையனின் கால்கள் இவனது மனத்தைப் போல இருபுறமும் ஆடிக்கொண்டிருந்தன.

 அடுத்து வந்த சந்தியில் அவள் மேற்குப் புறமாகவும் - இவன் கிழக்குப் புறமாகவும் பிரிந்து சென்றார்கள். 
 

1 comment:

  1. மனித உணர்வுகளை நன்கு சித்தரித்துள்ளீர்கள். தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete