Thursday, February 17, 2011

மன்னிப்பாரா?

பவானி ஆழ்வாப்பிள்ளை

'மூர்த்தி, நான் பெற்ற ஒரே பிள்ளை நீயப்பா! என் ஆசை, கனவு, கற்பனை எல்லாம் உன்னைப் பொருளாகக் கொண்டவைதானே! நீ வாழ்வில் துன்பத்தைத் தேவையை உணராது வாழ்வதற்கென்றால் எந்தத் தியாகமும் எனக்குப் பெரிதாக தோன்றவில்லை. என் இதயம் துடிப்பதே உன் நினைவால் மூர்த்தி! அந்த இதயம் வெடித்து நான் இறக்க வேண்டுமென்றால் அந்த குலம் கெட்டவளை மனங்குளிர மணந்துகொள். உன்னைப் பெற்றவர்கள் ஊரில் தலைதூக்க முடியாது சிறுமைப்பட்டு, மனமுடைந்து சாவதுதான் சந்தோஷம் என்றால் அவளை மணந்துகொள்!..... எங்கே, என்னைப் பார் மூர்த்தி, அவளை மறந்துவிடுவேன் என்று ஒரு வார்த்தை சொல்லி என் மனங்குளிரச் செய்யடா!....' ஒரு வார்த்தைதான்!...... பெற்றவள் கெஞ்சுகிறேன்....' மூர்த்தி அந்தக் காட்சியை தினைவு கூரச் சகியாதவன் போல் கண்களை இறுக மூடிக்கொண்டான், பெற்றவளின் மனதை மகிழ்விக்க மூர்த்தி அந்த ஒரேயொரு வார்த்தையைக் கொடுத்து விட்டதால் இன்று உள்ளமும் உணர்வுமிழந்த உருவமாய் உலவுகிறான். அன்று மூர்த்திக்குப் பெருஞ்சோதனை. அவன் சுமை ஒன்றும் புதிதல்ல. யுகயுகமாய் இரு உணர்ச்சிகளுக்கிடையில் நிகழும் போராட்டம்தான் -  ஒன்றைக் கடமை என்பர்! மற்றதைக் காதல் என்பர்! கதைகளில் படித்திருக்கிறான் மூர்த்தி. சினிமாவில் பார்த்திருக்கிறான். நேரில் கண்டுமிருக்கிறான். அவனுக்கு ஐந்து நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் நால்வர் காதலை மறந்து கடமை பெரிதெனக் கவலையற்றுக் கல்யாணமும் செய்து கொண்டார்கள். எஞ்சிய நண்பன் ஒருவன்தான் காதலித்து வெற்றி கண்டான். ஆனால் அவன் காதலித்தவளோ அந்தஸ்துள்ளவள், அழகுள்ளவள், ஆஸ்தியுள்ளவள் - எல்லா விதத்திலுமே அவனுக்கு ஈடுகொடுத்தாள். இந்நிலையில் காதலுக்குத் தோல்வி ஏது? பிச்சையைக் கூடப் பாத்திரமறிந்துதான் இடச்சொல்லி விட்டார்கள் பெரியவர்கள். காதலையும் அப்படித்தான் இடமறிந்து மதிப்பிட்டுக் கொடுக்கவேண்டுமோ?

அந்தச சம்பவம் நடந்து இன்று ஆறு மாதங்கள் சென்று விட்டன. நாளை உதயத்தில் சுசீலாவுக்குத் திருமணம். குலம், கோத்திரம் பார்த்துத் திருமணம். உலகின் உதயவேளையில் சுசீலாவின் வாழ்வும் மூர்த்தியின் வாழ்வும் அஸ்தமித்து இருள் பாய்ந்துவிடும். வீட்டு மாடியிலே அவன் அறையில் மூர்த்தியின் உருவம் சாய்வு நாற்காலியில் கிடந்தது. அவன் உணர்வோ தெருக்கோடியில் கமலாவின் கல்யாணக்களை தோய்ந்த வீட்டை நோக்கி ஓடிவிட்டது. மூர்த்தி கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி ஒன்பது. நாதஸ்வரகீதம் திறந்த ஜன்னலூடே காற்றில் மிதந்து வந்தது. மேள ஒலி அவன் இதயத்தைப் பிளப்பது போலிருந்தது. மனதில் பட்ட பச்சைக்காயம் ரணமாக வலித்தது. மூர்த்தி எழுந்து ஜன்னலை அறைந்து மூடினான். சுசீலாவின் குணத்திலே குறையில்லை என்றாலும் பிறப்பிலே குறைவைத்துவிட்டார் படைத்த கடவுள். அவளின் நிலையை அறிந்தும் தன் பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்களென்று தெரிந்தும் மூர்த்தி தன் உள்ளத்தை நெகிழவிட்டான். எண்ணும் திறனென தனக்கு இருந்ததெல்லாம் அவளைச் சுற்றிப்படரவிட்டான். தன் அறிவின் எச்சரிக்கைக்குப் புறம்பான முடிவைக் கொண்டுவிட்டான். ஆனால் அந்த முடிவைப் பின்பற்றிச் செல்லவேண்டிய தருணத்தில் துணிவிழந்த கோழையாகி விட்டான்.

சுசீலா ஒளிவு மறைவு அற்றவள். அவள் மூர்த்தியிடம் எதையுமே மறைக்கவில்லை.

'மூர்த்தி, ஏழ்மையிலும் நான் கண்ட நிறைவே நான் தரக்கூடிய நிதியம், குணமே நான் தரும் குலம். ஆனால் நமது சமூகம் கொடுமை வாய்ந்தது மூர்த்தி, எண்ணித்தான் துணிந்தீர்களா? அல்லது இவை உணர்ச்சி வேகத்தில் பேசும் வார்த்தைகளா?'

'நான் துணிந்துவிட்டேன் சுசீ, உலகம் வேகமாக முன்னேறுகிறது. அந்த முன்னேற்றப் பாதையில் சாதி வரம்புகள் நிலைத்து நிற்க முடியாது. நாளைய உலகம் நம்மைத்தான் ஆதரிக்கும் சுசீ. இதில் சிந்திப்பதற்கு என்ன இருக்கிறது?' எவ்வளவு தன்னம்பிக்கையோடு மூர்த்தி அன்று பேசினான். இன்று மனச்சாட்சியின் பாதை தாங்காது புழுப்போல் நெளிகிறான். சுசீலா அவனை நம்பினாள். ஆமாம்! அவன் திண்மையில், திடசித்தத்தில் நம்பிக்கை வைத்தாள். இன்று அவள் எண்ணத்தில் ஒரு கணம் கூட நிலைக்கத் தகுதியற்றவன் ஆகிவிட்டான்.

மூர்த்தியின் மனம் கலாசாலை நாட்களை நோக்கித் தாவியது. எத்தனை இன்பமான நாட்கள் அவை. அந்த வாலிப சமுதாயத்திலே காதலுக்கு எதிர்ப்பு இல்லை. ஆதரவு தான் கிடைத்தது. அந்தக் கவலையற்ற வாழ்க்கையோட்டத்தில் பெற்றோர்கள் எதிர்க்கக்கூடுமென்ற சிறு நினைவுகூடத் தேய்ந்துவிட்டது. வாழ்க்கையின் பரிதாபமே இதுதான். சீர்திருத்தக் கருத்துக்களைச் சிந்தையாய்க் கொண்ட இளைஞர் உலகம் சாதிசமய வேற்றுமைகளை மதிப்பதில்லை. அவை இன்றைய சந்ததிக்கு அர்த்தமற்றவையாய்த் தோன்றும். அதனால்தான் பழமையில் ஊறிய புதிய சந்ததியின் மனப்போக்கு அதற்கு விளங்குவதில்லை. ஆசார அனுஷ;டானங்களில் ஊறிப் பழைய சமூக திட்டத்தைப் போற்றி வாழும் முதிய சந்ததி சமூக சீர்திருத்தத்தை ஆதரிப்பதில்லை. சாதியை ஒழிப்பது சத்தியத்தை அழிப்பதை ஒக்கும் என்றெண்ணும் சந்ததி அது. அதனால்தான் கடமையைப் பாசத்தைக் காட்டிக் களங்கமற்ற இளம் உள்ளங்களைச் சிதைத்து விடுகிறது. மூர்த்தியின் தந்தை கண்கலங்கக்காலில் விழாத குறையாகக் கெஞ்சினார்.

'மூர்த்தி, உனக்கு வாழ்க்கையில் எல்லா வசதிகளையும் அளிக்க முடியாது போய்விடுமோ என்ற பயத்தால் எனக்கு வேறு குழந்தையே பிறக்காது பார்த்துக்கொண்டேன். விளையாட்டல்ல, மூர்த்தி. உண்மைதான். கடைசியில் எனக்கு நீ செய்யும் உபகாரம் இதுதானா? மானத்தோடு வாழ்ந்துவிட்டேனப்பா! மானத்தோடு என்னைச் சாகவிடு மூர்த்தி!' மூர்த்திக்குமனம் தாளவில்லை. அவர் பச்சையாய்த்தன் உள்ளத்தைத் திறந்து காட்டியது அவனை என்னவோ செய்தது. உள்ளத்தில் கொப்பளிக்கும் ஆற்றாமைதானே அவரை அப்படிப் பேசச் செய்தது. இப்படியும் ஒரு தியாகமா?.

'அப்பா....அப்பா.... நீங்கள் விரும்பியபடியே செய்கிறேன் அப்பா!' மூர்த்திக்கு அப்பொழுது தன் குரலே வேற்று மனிதனின் குரல்போல், விசித்திரமாக ஒலிப்பது போல் தோன்றியது. மூர்த்தி சற்றே உடம்பை நெளிந்து கொடுத்தான். பெற்றோருக்கு நிம்மதி அளித்துவிட்டவன் தன் நிம்மதியைப் பறிகொடுத்துவிட்டான். அவன் இதயத்தில் செதுக்கப்பட்ட அந்த உயிரோவியத்தை என்ன முயன்றும் அவனால் அகற்றிவிட முடியவில்லை. சுசீலாதான் அவனைப் பற்றி என்ன நினைத்திருப்பாள். அன்றொருநாள் அவளிடம் பெரிதாக வீரம் பேசினானே!.

'மூர்த்தி, எங்கள் இருவரை மட்டுமன்றி, இது உங்கள் பெற்றோரையும் சுற்றத்தையும் சம்பந்தப்பட்ட விஷயம், எங்கள் சமூகம் அப்படிப்பட்டது. எனக்காக எந்த எதிர்ப்பையும் சமாளிக்கும் உறுதி உங்களுக்குண்டா? எனக்காக ரத்த பாசத்தின் பிணைப்பைக்கூட உதறி விடமுடியுமா உங்களால்?' சுசீயின் உள்ள அடித்தளத்திலே இந்த அச்சம் சதா அரித்துக்கொண்டிருந்தது. நியாயமான அச்சந்தானே! மூர்த்தி அவளுடைய விரிந்த கண்களை, சற்றே திறந்த உதடுகளைப் புருவ வளைவைப் பார்த்துப் பாசத்தோடு, பெருமையோடு சிரித்தான்.

'சுசீ, தாழ்வில் நீ கண்ட திருப்திதான் வாழ்வில் எனக்கும் வேண்டியது. எனக்குச் சுற்றமும் சூழலும் இனி நீதானே? ஒருவருக்கொருவர் துணையாக வாழ்வது போதாதா? சுசீ? என் மேல் அத்தனை அவநம்பிக்கையா உனக்கு?' அத்தனையும் சொற்கள்தான். வெறும் வெற்றுச் சொற்கள்தான். அன்று அந்தச் சிறுமிக்கு இருந்த அறிவு, தைரியம் - அவற்றில் ஒரு துளிகூட அவனுக்கு இல்லாமல் போய்விட்டது. அவன் உள்ளத்தின் நம்பிக்கை, ஆசை, கனவு, அத்தனையையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டான். சுசீலா அவனை நோகவில்லை. குற்றம் கூறவில்லை: வெறுக்கவுமில்லை.

'மூர்த்தி, உங்கள் பெற்றோரின் மணக்கசப்பின் அடிப்படையிலே நம் வாழ்வை அமைத்துக்கொள்வதால் சுகமில்லை, உங்கள் மனைவியாக வருபவள் உங்கள் குடும்பத்தை வாழ்விக்க வருபவள் - குடும்பத்தை குலைக்க வருபவள் அல்ல, வருந்தாதீர்கள். காலம் உங்கள் உள்ளக்காயத்தை ஆற்றிவிடும்.' அறிவு வார்த்தைகளை உருவாக்கி உதிர்ந்தது. ஆனால் உள்ளமோ உடைந்து சுக்கலாகிக் கொண்டது. அடக்க முடியாது கண்களில் பொங்கிய கண்ணீர் துடைக்கத் துடைக்கப் பெருகியது.

'சுசீ! உன்னை எப்படி மறப்பேன் சுசீ! உன்னை எப்படி மறப்பேன்?' சட்டென்று அவள் கைகளைப் பற்றித்தன் மார்பில் புதைத்துக் கொண்டான். சுசீ இன்னொருவன் உடைமையாவதா? முடியாது? முடியவே முடியாது! வெறி பிடித்தவன் போல் அவளை இமையாது பார்த்து நின்றான்.

'சுசீ, உனக்களித்துவிட்ட இதயத்தை வேறெந்தப் பெண்ணுக்கும் என்னால் கொடுக்கமுடியாது சுசீ! எனக்கு மிக அருகில் இருந்த நீ இன்று அணுகமுடியாத இலட்சியம் ஆகிவிட்டாய், என் நெஞ்சில் நிலைந்த உன் நினைவிலேயே நான் வாழ்வில் திருப்தி காணுவேன். நீ என்னை மறந்து சந்தோஷமாக வாழவேண்டும் சுசீ... மறுபிறவி என்று ஒன்றிருந்தால்!......'

மறுபிறவி! தொடுவானம்போல் உரு விளங்காத புரியாத மறுபிறவியை நினைத்து ஆசையை, உள்ளத்தாபத்தைத் தணிந்துக்ககொள்ள முடியுமா?

மூர்த்தி பெருமூச்சு விட்டான். மெல்லிய நாதஸ்வர ஒலி அடங்கி வெகு நேரமாகிவிட்டது. வெளியே பால் நிலவு காய்ந்துகொண்டிருந்தது. உலக இருளுக்கு ஒளி ஏற்ற ஒரு நிலவு உண்டு! – அவன் உள்ள இருளுக்கு?.... ஏன் இல்லை?' சுசீயின் நினைவு. அவன் உள்ளத்தில் என்றும் சிரிக்கும் சுசீயின் அழகு முகம் அவன் வாழ்வில் இருளென்பதே இல்லாமற் செய்துவிடும்... விடிய ஆறு மணிக்குக் கோயிலில் முகூர்த்தம் என்று கேள்விப்பட்டிருந்தான். உலகமே உறங்கிவிட்டது. ஆனால் அவன் உள்ளத்திற்குத்தான் இனி உறக்கமென்பதே இல்லையே! சுசீலா தூங்குவாளா? அல்லது அவனைப்போல நினைவுகளால் அலைப்புண்டு தவித்துக் கொண்டிருப்பாளா? சுசீலாதான் அதற்குள் திருணமத்திற்குச் சம்மதிப்பாள் என்று அவன் நினைக்கவில்லை. அதற்குள் அவனை அவளால் மறக்க முடிந்ததா? ஏன் மறக்கக்கூடாது? அவனை நினைத்து அவள் ஏன் உருகவேண்டும்? நம்பி வந்தவளை நட்டாற்றில் விட்டு விட்டான். ஏளனத்திற்கு, அவமானத்திற்கு, அவதூறுக்கு ஆளாக்கிவிட்டான். அவனுக்காக அவள் வாழ்வெல்லாம் நிராதரவாய், நிறைவற்றவளாய் அலையவேண்டும் என்று நியதியா? ஆமாம். சுசீலா அவனை மறக்கத்தான் வேண்டும். அதுதான் அவனுக்குத் தகுந்த தண்டனை. ஆனால்.... ஆனால் மூர்த்தியால் தான் அவளை மறக்க முடியவில்லையே! அவன் அவளை மறக்க விரும்பவில்லையே! அன்று அவள் சொன்ன வார்த்தைகள் இன்றுபோல் அவன் காதில் ஒலித்தன.

'மூர்த்தி, உங்கள் மனைவியாய் வாழ நான் கொடுத்து வைக்கவில்லை. இருந்தும், நீங்கள் என்னைஎன்னை மட்டுமே காதலிக்கிறீர்கள் என்ற நினைவே எனக்கு நிறைவளிக்கும். நான் எதற்காகவும் வருந்தவில்லை. நான் எங்கு சென்றாலும், என்னவானாலும் உங்கள் நினைவுதான் என்னை வாழ்விக்கும் மறவாதீர்கள்!' சுசீலா ஆழ்ந்து, உணர்ந்து வாழ்பவள். வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஏதோ அற்புதத்தை, ஜீவரகஸ்யத்தை உணர்பவள். அவளுக்கா இந்தக் கொடுமை நடக்கவேண்டும்?..... கடவுளே சுசீலாவின் அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவன் காதில் ஒலித்தன. இலைகளினூடே தென்றலின் முணுமுணுப்புப்போல அவள் குரல்தான் அந்த வார்த்தைகளை அவன் காதில் வந்து ஓதிற்று. ஏனோ மூர்த்திக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. சுசீலா அருகிலிருப்பது போன்ற பிரமை ஏற்பட்டது. மூர்த்தி தன் இதயத்தை அமுக்கிப் பிடித்தான், முகத்தைக் கரங்களில் புதைத்துக் கொண்டான்.

'ஐயோ சுசீ!' உள்ளத்தைப் பிளந்து எழுந்தது அவ்வேதனைக் குரல். 'ஐயோ சுசீ!' பாவம்! அவன் வேறென்ன சொல்லமுடியும்? வார்த்தைகளில் வடிக்க முடியுமா அந்த வேதனையை? சொல்லித் தெரியமுடியுமா அந்த இதயத்;;;தின் வலி? அனுபவித்தல்லவா அறியவேண்டும்!

'மூர்த்தி, மனச்சாட்சி ஒன்றின் முன்தான் மனிதன் இவ்வுலகில் மண்டியிடவேண்டும். மனச்சாட்சியின் சொற்படி வாழ்வை அமைப்பவன் தெய்வத்தின் வழி நடப்பவன் ஆவான்.' மீண்டும் சுசீயின் அதே ரகஸ்யக்குரல். மூர்த்தி உடம்பைச் சிலிர்த்துக்கொண்டான். ஏன் இன்று மட்டும் இந்த எண்ணங்கள் அவன் நினைவில் தோன்றுகின்றன? சுசீயைப்பற்றி எத்தனையோ இனிய நினைவுகள். இன்பக்கதைகள் எல்லாம் இருக்க, இன்று மட்டும் இந்தச் சில வார்த்தைகள் அவன் நினைவில் ஓங்குகின்றன. சுசீ நாளை இன்னொருவனை மணக்கப் போகிறாளென்றா? இல்லையில்லை. சுசீ உள்ளமும் உணர்வுமாக என்றும் அவனுக்கே உரியவள். அவனை மணக்கப்போகிறவன் - பாவம் - அவள் உடலைத்தானே ஆளப்போகிறான்? ஆமாம், அவள் தன்னை மறந்துவிட்டாள் என்று நினைத்தது மடத்தனம். சுசீ தன் காதலின் நினைவை என்றென்றும் மறக்கமாட்டாள்! மறக்க முடியாது. இந்த நினைவு மூர்த்தியின் நொந்த மனத்திற்கு ஏதோவொரு நிறைவளித்தது......

'சலக்...சலசலக்!...' மூர்த்தி திடுக்கிட்டுச் சப்தம் வந்த பக்கம் திரும்பினான். 'சலசலக்... சலக்!' மூடிய யன்னல் கண்ணாடியின் வெளிப்புறத்தில் சிறு கற்கள் மோதி விழுந்தன. யாரோ வெளியே நின்று அக்கற்களை எறிந்து அவன் கவனத்தைக் கவர முயல்கிறார்கள் போலும்! மூர்த்தி எழுந்து யன்னலைத் திறந்தான் - அங்கே... அங்கே....

'சுசீலா!' மூர்த்தி மெல்லக் கூவினான், ஆமாம்! அவள்தான்! கரிய போர்வையால் முக்காடிட்டு இருந்தாள். நிமிர்ந்து மேல் நோக்கிய அவன் முகத்தில் நிலவொளி வீசியது. மூர்த்தி திரும்பிப் படிகளை இரண்டு எட்டில் கடந்து வெளியே ஒடினான். அவள் நின்ற இடத்தில் அவளைக்காணவில்லை! பிரமையோ என....

'மூர்த்தி?' மெல்ல இழைபோல் அவள் குரல் இருளிலிருந்து எழுந்தது.

'உண்மையாக நீயா சுசீ? எப்படி வந்தாய்? உன்னைத் தேடமாட்டார்களா?'

'இல்லை மூர்த்தி, தலையிடி என்று சீக்கிரமே தூங்கச் சென்றுவிட்டேன். எலலோரும் தூங்கிவிட்டார்கள். அறைக்கதவைப் பூட்டிச் சாவியை எடுத்து வந்தேன். விடியுமட்டும் என்னைத் தொந்தரவு செய்யமாட்டார்கள். அவர்கள் எழுந்திருக்குமுன் திரும்பிவிடுவேன்.'

'சரி, இங்கே நிற்கவேண்டாம். உள்ளே வா சுசீ, வீட்டில் என்னைத் தவிர ஒருவரும் இல்லை. அப்பா, அம்மா வெளியூர் போய்விட்டார்கள். வா!' அறையினுள் மூர்த்தி விளக்கை ஏற்றினான். சுசீலா கண்களைக் கூசிக்கொண்டு அவனுக்கெதிரே சுவரில் சாய்ந்துகொண்டாள்.

'நாளைக்கு எனக்குத் திருமணம்...' பாதி தனக்குள்ளும் பாதி உரத்துமாய் முணுமுணுத்த சுசீலா மூர்த்தியை நிமிர்ந்து நோக்கினாள்:

'மூர்த்தி, நான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்றதும் ஆச்சரிப்பட்டீர்களா? என் தாயின் திருப்திக்காக, இந்த சமூகத்தில் வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்காகத் திருமணம் செய்துகொள்ள உடன்பட்டேன். மூர்த்தி, என் உள்ளத்தையும் உணர்வையும் உங்கள் ஒருவரால்தான் தொடமுடியும், ஆனால்.... ஆனால்.... இன்று என் உடலைக் கூட இன்னொருவன் தொடநேரும் என்ற நினைப்பையே என்னால் தாங்க முடியவில்லை. மூர்த்தி, நான் உங்களுக்குரியவள், என் உள்ளமும் உணர்வும் உடலும் உங்களுக்குரியவை. என் வாழ்வு உங்களோடு ஆரம்பித்து உங்களோடு முடிவதொன்று. உங்களுக்குள்ளே அது என்றென்றைக்குமாய் ஒன்றிவிடட்டும். மூர்த்தி, ஆண்டவனுக்கு அர்ப்பணமாகி விட்ட மலர் பொன் தட்டில் இருந்தாலும் புழுதியில் வீழ்ந்தாலும் புனிதம் குறையாது. உங்களோடு ஒன்றுவதால் என் புனிதம் குறையாது மூர்த்தி!' அவள் நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தாள்.

'நீ என்ன.... சொல்கிறாய் சுசீ?' அவன் குரல் நடுங்கியது.

'உங்களுக்குப் புரியவில்லையா மூர்த்தி? இல்லை. உங்களுக்கு நன்றாகப் புரிகிறது. மூர்த்தி காதலித்தவனையே கணவனாகக் கொள்வதுதான் கற்பெனில், இந்த என் முடிவு கற்பு நெறிக்குச் சிறிதும் புறம்பானதல்ல மூர்த்தி....'

'உண்மையாகவா சுசீ?' கற்பனைக்கெட்டாத சுகம் என்று ஒன்று இருந்தால் மூர்த்தி அதை அக்கணம் உணர்ந்தான். சுசீலா ஓடிவந்து அவனருகே மண்டியிட்டாள்.

'மூர்த்தி, நேர்மையே உருவான உங்கள் சுசீலா ஒழுக்கம் தவறிப் பேசுகிறாள் என்று நினைக்கிறீர்களா? இல்லை, என் மனச்சாட்சிக்கு மதிப்புக் கொடுத்ததால்தான் உங்களிடம் வந்திருக்கிறேன். உங்கள் உரிமையை இப்பொழுது ஏற்றுக்கொள்ளுங்கள். நமது வாழ்வை இக்கணமே வாழ்ந்து முடித்துவிடுவோம். கோடி இன்பங்களையும் ஒரு கணத்தினுள் குவித்துக்கொள்வோம், நாளை சுசீலா நடைப்பிணமாகிவிடுவாள்.....'

சட்டதிட்டத்தைச், சாதிவரம்புகளை மதித்தவர்கள் மனித இதயங்களை மதிக்கவில்லை. அதனால் சுசீலா இன்று பண்பிழந்தவளா? ஒழுக்கங்கெட்டவளா? வழுக்கி விழுந்தவளா? அன்றி இதுதான் வாழும் வீரமா?

சுசீலா துடிக்கும் உதடுகளைப் பல்லால் அழுத்திப் பிடித்தாள்.

'மூர்த்தி.... மூர்த்தி மானசீகமாய் மட்டுமின்றி என்னால் என்றுமே உங்களோடு வாழமுடியாது. ஆனால்... இந்தக் கணம் உங்களோடு வாழ்கிறேன். இதை அறிந்தால் உலகம் என்னைக் கேவலமாய்க் கருதும்: பகிஷ;கரித்துவிடும். ஆனால்.... ஆனால் கடவுள் மன்னிப்பார் இல்லையா?'.

'சுசீ!' மூர்த்தி அவளை இறுக அணைத்துக் கொண்டான். 'நிச்சயமாக நம்மை மன்னிப்பார்.!'.


                                                       (1961)

No comments:

Post a Comment