மாப்பிள்ளையை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்கள். மாப்பிள்ளை விசேஷமாக அலங்கரிக்கபட்ட மணவரையிலே அமர்ந்திருக்கிறார். ஐயர் மந்திரம் ஓதுகிறார். யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய நகைமாளிகையின் சொந்தக்காராகிய சுந்தரம்பிள்ளையின் புதல்வியின் திருமணம் என்றால் அலங்காரத்திற்கும் கூட்டத்திற்கும் கூறவும் வேண்டுமா?
பந்தல் நிறைய ஆட்கள் குழுமியிருக்கிறார்கள். ஒரு புறத்தில் குளிர்பானம் கொடுப்போர் மறுபகுதியில் வெற்றிலை சிகரெட் கொடுப்போர் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் திரிந்து பணியாற்றுகின்றனர்.
'மணப்பெண்ணை அழைத்து வாருங்கள்' என்ற ஐயரின் சொல்லை நிறைவேற்றுகின்றனர் சில பெண்கள். திருமண நேரம் நெருங்கி விட்டபடியினால் நேரத்தைப் போக்காமல் முதலில் மாங்கல்யத்தை அணிவிக்கும்படி ஒருவர் ஆலோசனை கூறுகிறார்.
ஓர் தட்டத்தில் கூறை, தாலிக்கொடி, சீப்புக்கண்ணாடி, பவுடர் முதலியவற்றை வைத்து ஒருவர் பந்தலினுள்ளவர்களுக்குக் காட்டிக் கொண்டு வலம் வருகின்றார். எல்லோரும் மிகப் பயபக்தியுடன் இரண்டு கைளினாலும் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ளுகின்றனர். செல்வமும் நடுங்கும் கரங்களால் தொட்டு ஒற்றிக் கொள்ளுகின்றான்.
'மேளம் மேளம்' என்ற சத்தத்துடன் மாங்கல்யம் மங்கையின் கழுத்தில் அணிவிக்கப்படுகின்றது. மீண்டும் மாலை மாற்றப்படுகின்றது. மாம்பிள்ளையின் அருகிலே, மிக அமைதியாக அமர்ந்திருக்கிறாள் மங்கை. குனிந்த தலை நிமிராவிட்டாலும் கடைக்கண் எங்கும் மேய்கின்றது.
பந்தலின் ஒரு புறத்தே மரத்துடன்மரமாக இருந்து பார்த்துக் கொண்டிருந்த செல்வத்தின் கண்கள் நீரைச் சிந்துகின்றன. மற்றவர்கள் கவனிக்கு முன் சால்வையினால் துடைக்கிறான்.
அவனது உடைமை என எண்ணியிருந்தவள் இன்று வேறெருவன் உடைமையாகி விட்டாள். சமீபத்தில் நடைபெற்ற தமிழ் உரிமைப்போர் அவளை அவனிடம் இருந்து பிரித்துவிட்டது. அவனது மனம் கடந்த காலத்தை அசைபோடுகின்றது.
அவனது தாய் தந்தையர் அவனது எட்டு வயதில் ஓர் கார் விபத்தில் இறந்து விடுகின்றனர். தாய் தந்தையரை இழந்து அனாதையாகிவிட்ட அவனை மாமனார் ஆதரவு கொடுத்து, அரவணைத்துக் கொள்கின்றார். சுந்தரம்பிள்ளையின் மகளான மங்கை தன் அத்தான் மீது அளவு கடந்த பாசம் கொண்டவள். இருவரும் ஒன்றாகவே கல்லூரிக்குச் செல்வார்கள். இப்போது மங்கை – செல்வம் இருவருமே எஸ்.எஸ்.சி. சித்தியடைந்து விட்டார்கள். சுந்தரம்பிள்ளை வசதியிருந்தும் மகள் மேற்கொண்டு படிப்பதை விரும்பவில்லை. செல்வமும் தொடர்ந்து படிக்க விரும்பவில்லை. மாமானாருக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்த பத்திரிகை அலுவலகத்தில் உதவி ஆசிரியர் வேலை ஒன்றைச் சம்பாதித்துக் கொண்டான்.
செல்வம் - மங்கை இருவரது அன்புப் பிணைப்பு பெரியவர்களானதும் காதலாக மாறியது. 'தமிழ் என் உயிர்' என்பதுதான் அவனது மந்திரமாக இருந்தது. செல்வம் அத்துடன் சிறந்த எழுத்தாளன். அரசாங்கத்திற்கு வால் பிடித்த, வால் பிடிக்கின்ற அரசியல்வாதிகள், சந்தர்ப்பவாதிகள் யாவரையும் தன் பேனாவினால் சாடுவான். தான் படைத்த சிறுகதைகளையும் அவ்வப்போது மங்கையிடம் படித்துக்காட்டுவான். அவள் மனதிற்குப் பிடித்தமான கதைகள்தான் பத்திரிகைகளுக்கு அனுப்பப்படும். நாளடைவில் செல்வம் எல்லோராலும் புகழ்ப்படும் அளவிற்கு உயர்ந்து விட்டான்.
அரசாங்கத்தின் மொழிக்கொள்கையைக் கண்டித்து பல கட்டுரைகள் எழுதினான். மக்கள் மத்தியில் உணர்ச்சி நிரம்பிய கட்டுரைகள் மூலம் புத்துணர்ச்சி ஏற்படுத்தினான். சில சுயநலப் புலிகள், தங்கள் சுகபோக வாழ்வை இந்தப் பொடிப்பயல் தன்பேனாவினால் பிட்டுக் காட்டுகின்றானே என ஆத்திரம் கொண்டனர்.
சுந்தரம்பிள்ளை செல்வத்தை நயமாகச் சொல்லிப் பார்த்தார். பலனில்லை. மிரட்டிப் பார்த்தார் - அதன் பலன் - செல்வம் வீட்டை விட்டே வெளியேறி விட்டான்.
அவன் வீட்டைவிட்டுப் போனாலும் மங்கை – செல்வம் சந்திப்பு நடந்துகொண்டுதான் இருந்தது.
தமிழ் உரிமைப் போராட்டத்திற்காக ஆயத்தங்களைத் தமிழ்த் தலைவர்கள் செய்து கொண்டிருந்த நேரத்தில் ஒருநாள் மங்கை வீட்டில் -
'மங்கை – நான் இனி இங்கு அடிக்கடி வரமாட்டேன். தமிழ் உரிமைப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபடப் போகிறேன். போராட்டம் முடியும்மட்டும் நாம் சந்திக்க முடியாது. மனம் வருந்தாதே. காதலிலும் பார்க்க கடமைதான் முக்கியம் எனக்கு'
'அத்தான் - எனக்கு மட்டும் தமிழ் உணர்ச்சியில்லையா? எனக்கும் உங்களுடன் தோளோடு தோள் நின்று உரிமைக் களத்தில் குதிக்க விருப்பம்தான். ஆனால் தந்தையார் அனுமதி கொடுக்க மாட்டாரே என்பதுதான் வருத்தம். முழுமூச்சுடன் போராட்டத்தில் ஈடுபடுங்கள். என் காதல் என்றும் அழியாது.'
முன் அறிவித்தபடி தமிழ்தலைவர்கள் 20-02-61ல் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் ஆரம்ப கட்டமாக யாழ்ப்பாண கச்சேரி வாயில்களை முற்றுகையிட்டு மறியல் இயக்கத்தை ஆரம்பித்தார்கள். அன்றைய தினமே சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் விசாரணை எடுபடும் முதற் தினமாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கு விசாரணகளின் ஆரம்பத்திற்கு முன்னர் நிகழவேண்டிய சம்பிரதாய சடங்குகளில் கலந்து கொண்டு சுப்ரீம் கோட்டு இராசாவுக்கு கட்டளை வழங்க வேண்டிய கடமை அரசாங்க அதிபருடையது. அரசாங்க அதிபர் சுப்ரீம் கோர்ட்டிற்குச் செல்வதற்கு ஆயத்தமானார். அவரை ஏற்றிவந்த மோட்டார்வண்டியை வழிமறித்து நின்றனர் தொண்டர்கள். நிலைமையைக் கண்காணிக்க முன் ஏற்பாடாக அங்குவந்து காத்திருந்த பொலிசார் குண்டாந் தடிகளால் தொண்டர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள். மறியல் போராட்டத்தை வேடிக்கை பார்ப்பதற்காக அங்கு குழுமி நின்ற மக்களும் உடனடியாக போராட்டத்தில் குதித்தனர்.
நிலைமை கட்டுக்கடங்காது போகவே தொண்டர்களின் உடலுக்கு மேலாக வண்டியை ஏற்றிச் செல்லப் போவதாக பொலிஸ் அதிகாரி மிரட்டிப் பார்த்தார். பயனில்லை. ஈற்றில் - மக்கள் துக்கி எறியப்பட்டார்கள். செல்வத்திற்கும் மண்டையில் பலத்த அடி. நெற்றி பிளந்து விட்டது. அவ்விடத்திலேயே மயங்கி விழுந்து விட்டான் செல்வம்.
பொலிசாரின் காட்டு மிராண்டித்தனமான செயலால் மக்களிடையே உணர்ச்சிப் பிரவாகம் ஏற்பட்டது. சிறுவர் முதல் பெரியவர்வரை கூட்டங் கூட்டமாகக் கச்சேரி வாயில்களை முற்றுகையிட்ட வண்ணமாகவே இருந்தனர். குடாநாட்டின் சகல பகுதிகளிலிருந்தும் அறப்போர் மக்கள் ஊர்வலங்களை நடத்தி வந்தனர். இராணுவம் அனுப்பப்பட்டது யாழ்ப்பாணத்திற்கு.
இந்நிலையில் சத்தியாக்கிரகத்தை முறியடிக்க அரசாங்கம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அப்பப்பா! கூப்பன் வழங்கமுடியாது என்று ஏகமனதாகக் கூறிவிட்ட வர்த்தகப் பெருமக்களிடையே பிளவையுண்டாக்க கிராமம் கிராமமாகச் சென்று அரிசியை விநியோகித்துப் பார்த்தார்கள். மக்கள் அப்போதும் முறையை மீறி வந்த அரிசியை வேண்டாமென்று மறுத்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் கச்சேரிக்கு முன் ஆரம்பித்த சத்தியாக்கிரகத்தைத் தொடர்ந்து, இயக்கம் வேறு பல இடங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டது. அதன் பலன்? வடக்கு கிழக்கு மாகாணங்களிலே அரசாங்கம் செயற்பட முடியவில்லை. ஈற்றில் தமிழர் சார் தபாற் சேவையை தமது போராட்த்தின் அடுத்தகட்டமாக ஆரம்பித்தார்கள். இப்போராட்டத்தைச் சாக்காக் கொண்டு அரசாங்கம் அவசர கால நிலைமையைப் பிரகடனம் செய்து சர்வாதிகார இராணுவ தர்பாருக்குக் கால் கோல் இட்டது.
பழைய பூங்கா வாசலிலே மறியல் செய்து நின்ற தொண்டர்களை அப்புறப்படுத்த ஆரம்பித்தது கடற்படை. தொண்டர்கள் அசைந்து கொடுக்காது தரையில் படுத்துக் கொண்டார்கள். அத்தொண்டர்வரிசையில் செல்வமும் ஒருவன். கடற்படை வீரன் ஒருவன் துப்பாக்கிச் சனியனை செல்வத்தின் நெஞ்சில் பதியும் படி அமிழ்த்தினான். செல்வமா அஞ்சுபவன்? உடனே மார்பில் தரித்திருந்த மேல் சட்டையை நெஞ்சு தெரியும்படியாக விலக்கி 'துணிவுண்டேல் சுட்டுப்போடு. அல்லது உன் ஈட்டியை இங்கே பாய்ச்சு என்று படைவீரனுக்கு சவால் விடுத்தான். செல்வத்தின் மன உறுதியை மெச்சிய படைவீரன் அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
ஆயிரத்தித் தொழாயிரத்;து அறுபத்தோராம் ஆண்டு சித்திரைத் திங்கள் 17ஆம் நாள் இரவு கச்சேரி முன்றலில் மக்கள் வழக்கம் போல் சத்தியாக்கிரகம் இருக்கிறார்கள். செல்வமும் அவர்களுடன் சேர்ந்து கொள்கிறான்.
நடுநிசி – பொலிஸ் ஜீப்கள் அடுத்தடுத்து வந்துநின்றன. 'எம்மை அரசாங்கம் விருந்தாளியாக அழைத்துள்ளது. சென்றுவருகிறோம்' என விடை பெறுகின்றார்கள் தலைவர்கள். எஞ்சி நின்ற தலைவர்களுடன் செல்வமும் சேர்ந்து கொண்டான். சுமார் இரவு இரண்டு மணியிருக்கும், இராணுவ லொறிகள் கச்சேரி வளவிற்குள் சென்றன. இராணுவத்தினர் வருகின்றார்கள். முதலாவதாக கச்சேரி நல்லூர் ரோட்டில் நின்ற மக்கள் தாக்கப்படுகின்றனர். அதையடுத்து கச்சேரி கட்டிடங்களை எதிர்த்தாற்போல் இருக்கும் தேர்தல் காரியாலயத்தின் முன் குழுமி நின்றவர்கள் நையப் புடைக்கப்பட்டனர். பின் மறியல் செய்து நின்ற தொண்டர்கள் இராணுவவீரர்களின் மிருக வெறிக்கு இலக்காகினார்கள். துருப்பினர் தொண்டர்களை பூட்ஸ்காலால் உதைத்தார்கள். துப்பாக்கியின் பின் பக்கத்தால் இடித்தனர். செல்வமும் இரத்த வெறிகொண்டு விட்ட போர்ப்படையினரின் தாக்குதலுக்குள்ளாக நேர்ந்தது.
ஏற்கனவே தலையில் ஏற்பட்டிருந்த ஊனத்துடன், துருப்பினரின் பலத்த தாக்குதலும் சேர்ந்து கொள்ளவே வீழ்ந்துவிட்டான். படைவீரரின் மிருகவெறி அவனது கண் ஒன்றைப் பலிவாங்கிவிட்டது.
இப்போது செல்வம் ஒன்றைக் கண்ணனாகிவிட்டான். இந்நிகழ்ச்சிகளை தொடர்ந்து முன்பெல்லாம் இலக்கிய இரசிகையாக, ஆருயிர்க் காதலியாக இருந்த மங்கை இப்போ விலகிச் செல்லத் தொடங்கினாள். இருவருக்குமிடையே இடைவெளி நீண்டு கொண்டே சென்றது.
மங்கைக்குத் திருமணப் பேச்சுத்தொடங்கியது. கண் அற்றவன் - ஒற்றைக் கண்ணன் என்றமுறையில் அலட்சியப்படுத்தப்பட்டான் செல்வம். முடிவு – செல்வம் மாமன் வீட்டாருடன் கொண்டிருந்த தொடர்பை முற்றாகத் துண்டித்துக் கொண்டான்.
மங்கையிடம் இருந்து திருமண அழைப்பிதழ் வந்ததும் முதலில் மிகுந்த மனக் குழப்பத்திற்குள்ளானான் செல்வம். ஆயினும் மிருகமாக மாற முடியவில்லை அவனால். தன்னுள் மனித குணமே மேலோங்கி நிற்கக் கண்ட செல்வம் மங்கையின் பிழையைப் பொறுத்துக் கொண்டதுடன் அவளது திருமணத்திற்கும் வந்திருந்தான்.
'அறுகரிசி போடுபவர்கள் வரலாம்' என்ற ஐயரின் குரல் அவன் சிந்தனையைத் துண்டித்தது.
மண மக்களை வாழ்த்தி முடிந்ததும் - மற்றவர்கள் பரிசுப் பொட்டலங்களைக் கொடுத்தார்கள். செல்வமும் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு '25 லட்சம் மக்களின் தலைவர்' 'கயமை மயக்கம்' 'திருக்குறள்' 'ஈழத்து அறப்போரும் உரிமைப்போரும்' ஆகிய நூல்கள் அடங்கிய பார்சலைத் தனது அன்பளிப்பாக அளித்து அவர்களை உளமார வாழ்த்திவிட்டுத் திரும்பினான்.
காதலில் தோல்வியடைந்தாலும் செல்வம் இலட்சியத்தில் தோல்வியடையவில்லை. தமிழ் உரிமைப் போரில் கண்ணைப் பறிகொடுத்த தியாகியென எதிர்காலம் போற்றும்படியாக வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட செல்வம் எந்தவித எண்ணங்களாலும் பாதிக்கப்படாதவனாக தன் இருப்பிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.
(03-02-1963)
No comments:
Post a Comment