பார்த்திபன்
கீழ்வரும் தகவல்கள் சிலவேளை உங்களுக்கு உதவக் கூடும்.
....... அன்ரனிக்கும், வத்சலாவுக்கும், எதிர்வீட்டு சிறீயையும், மஞ்சுளாவையும் கண்டால் பயம்.
...... சாந்தி விரும்பியதால் தயாபரன் திலக்சனையும் கூட்டிக்கொண்டு கனடா போய்விட்டான்.
..... சபாரத்தினமும், கனகேசுவரியும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளாததிலிருந்து பரதனும், பத்மினியும் வெளியில் போவதில்லை.
நான் மீண்டும் எனது தீவுக்கே திருப்பியனுப்பப்பட்டு விட்டேன்.
எனது தீவு நான்கு பக்கமும் சுவர்களால் சூழப்பட்டது. இந்தத் தீவில் என்னுடன் சேர்த்து உயிருடனிருந்தவை ஒரு புத்தக அலுமாரி, ஒரு கசற் றெக்கோடர், ஒரு செற்றி, ஒரு யன்னல் மட்டும்தான்.
யன்னலூடாக வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
வீடுகள், மரங்களுக்கு அப்பால் மேலே மிக உயரத்தில் வானம். அதன் நீல நிறம் எனக்குப் பிடிக்கும். அதனால்தான் எனது தீவின் சுவர்களை நீலமாக்கி வைத்திருக்கிறேன். தரைக்கும் நீலம் விரித்திருக்கிறேன். தவிர நாலு சேட்டு நீலக் கலரில் வைத்திருக்கிறேன்.
எனக்கு வானம், அதன் நீலம் பிடிக்கும். பஞ்சு பஞ்சாகப் போகும் மேகங்கள் பிடிக்கும். எனக்கும் அவற்றுக்கும் இடையில் நீண்ட நீண்ட தூரம். எந்த நெருக்கமோ, உறவோ இல்லை. எனினும் அவற்றை எனக்குப் பிடிக்கும் அல்லது அதனால்தான் பிடிக்குதோ என்னவோ.
கசற் றெக்கோடரிலிருந்து மகாகவியின் சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் பாடல் மெல்லிதாக ஒலித்துக் கொண்டிருந்தது.
வானம் நீலமாகவே இருந்தது.
பார்த்துக் கொண்டேயிருந்தேன்.
அழுகை வந்தது.
எனது தீவில் மட்டும்தான் நான் அழுவேன். இந்தத் தீவில் இருக்கின்றபோது அடிக்கடி அழுகை வருகிறது. வெளியே போகின்றபோதெல்லாம் அணிந்து செல்கிற சிரிப்பை கழட்டி எறிந்துவிட்டு சுதந்திரமாக அழுவேன். யன்னலுக்கு இது வடிவாகத் தெரியும்.
இப்போதும் அழுதேன்.
முப்பத்தியைந்து வருடங்கள் தாண்டியிருக்கிறேன்.
இதுவரையில் எனது தீவுதான் இடம் மாறியிருக்கிறது. தீவில் எதுவும் மாறவில்லை. என்னாலும் இங்கிருந்து நிரந்தரமாக வெளியே போக முடியவில்லை. எவ்வளவுதான் முயற்சித்தாலும் எனது தீவிற்கே மறுபடி மறுபடி என்னை திருப்பியனுப்பிவிடுகிறார்கள்.
நானும் என்னைப் பல வகைகளில் பலமாக்கி, எச்சரிக்கையாக்கி வைத்திருக்கிறேன். இருந்தும் என்ன... நான் தோற்றுப் போவதுதான் யதார்த்தம். இல்லையில்லை யதார்த்தம்தான் என்னைத் தோற்கடிக்கிறது.
அழுவதால் ஒன்றும் நடக்காது என்பது எனக்குத் தெரியாததல்ல. அதைவிட அழுவதும் எனக்குப் பிடிப்பதில்லை. அழுகை என்ன எனது விருப்பத்தை விசாரித்துக்கொண்டா வருகிறது. தானாக வருகிறது இப்போது வருவதைப் போல. தொண்டை பாரமாகியிருந்தது.
அழுதேன்.
யன்னலால் வானத்தைப் பார்த்தபடி அழுதேன்.
எங்கள் வீட்டு சேவலுக்கும், பேட்டுக்கும் எப்போது சண்டை ஆரம்பித்தது என்று எனக்கு ஞாபகமில்லை. நான் அவதானித்த நாளிலிருந்து அவை ஒன்றையொன்று உர்ரென்று முகத்தைத் திருப்பி வைத்துக் கொண்டிருந்தன. குஞ்சுகள் தங்கள் பாட்டில். இத்தனைக்கும் அவை ஒரே கரப்புக்குள்தான் இருந்தன.
இந்த ஏனோ தானோவை பார்க்கும் போதெல்லாம் எனக்குள் எழும் கேள்வி அந்தச் சின்னக் குஞ்சுகளை இந்த நிலமை பாதி;க்காதா என்பதுதான்.
பாதித்தது.
எனக்கென்று ஒரு தீவை நான் முதன் முதலில் அமைத்துக் கொண்ட காலம் எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது.
அப்போது நான் சின்னப்பிள்ளை.
வெளியே போய் என்னைப் போலிருக்கும் மற்றவர்களுடன் சேர்ந்து கள்ளன் பொலிஸ் விளையாடினேன். போளை அடித்தேன். கோவில் கட்டித் தேர் இழுத்தேன். இலந்தைப்பழம் பொறுக்கினேன். பிள்ளையார் பந்து எறிந்தேன்.
அவர்களைப் பெற்றோர் எனக்கும் அவர்களுடன் சேர்த்து அன்பு காட்டி உபசரிப்புச் செய்தனர். அவர்கள் வாசலில் நான் தினமும் வரம் கேட்டேன்.
எனக்கும் சில விசயங்கள் பிடிபடும்வரை எல்லாம் உண்மையென்றுதான் நம்பினேன்.
எனது ஏக்கத்தை வைத்து பெரிசுகள் வேடிக்கை பார்ப்பதை உணர எனக்கு நீண்டகாலம் பிடிக்கவில்லை.
எங்கள் தோட்டப் பயிரை மட்டும் வெள்ளாடு மேய்ந்ததாக கதையளந்தார்கள். எங்கள் தோட்டத்திற்கு மட்டும் வேலியில்லையென்று சொல்லிச் சிரித்தார்கள்.
நான் கூசிக் குறுகிப் போனேன்.
இது அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
என்னைப் பிளந்து, கதை பிடுங்கி, தங்களுக்குத் தீனி தேடுவதற்காக என்னை அணைத்து தங்கள் கூட்டுக்குள் எடுத்து வைத்துக் கொண்டு அந்தச் சமூகப் பிராணிகள் ஓங்கி ஊளையிட்டன.
நான் சிதைந்து போனேன்.
அழுகை வந்தது.
இந்தப் பிராணிகளுக்கு முன் அழக் கூடாது. இவற்றை ஏறெடுத்துப் பார்க்கக் கூடாது. இந்த உலகம் கெட்டது. இனி எனக்கென்று நானே ஒரு உலகம் செய்து கொள்ள வேண்டும். எனக்கே எனக்கென்று. அதற்குள் எவருக்கும் இடமில்லை.
பழைய சாமான்கள் போட்டு வைத்திருந்த சின்ன அறைக்குள் எனது கட்டிலைப் போட்டுக் கொண்டேன். கதவைச் சாத்தினேன். இரண்டு யன்னல்களில் ஒன்றைப்பூட்டி ஒன்றைத் திறந்து வைத்தேன்.
எனது தீவு தயார்.
வீடு பழைய கால சுண்ணாம்புக் கட்டிடம். அகலமான சுவர்கள். யன்னலில் ஏறி இருக்கலாம். ஏறியிருந்தேன். வேலிக்கப்பாலே என்னைப் போலிருந்தவர்கள் கிட்டியடித்துக் கொண்டிருந்தார்கள்.
போகவா? சிரிப்பார்கள். போகக் கூடாது. போக மாட்டேன். இவர்களையேன் நான் பார்க்க வேண்டும்.
மேலே பார்.
அழகான வானம்.
நீல நிறம்.
அதன் கீழாக வெண் பஞ்சு மேகங்கள் மிதந்து கொண்டிருந்தன. அந்த மேகங்கள் சில நேரங்களில் சில உருவங்களாக மாறும்.
இப்போது அவர்கள் போளையடிப்பார்களா? வாத்தியார் வீட்டு மாங்காய் மரத்திற்கு கல்லெறியப் போயிருப்பார்களா?
இந்த யோசனையேன் எனக்கு?
மேகங்கள் எவ்வளவு அழகு. இத்தனை வேகமாய் அவை எங்கே போகின்றன?
இப்போது அவர்கள் மாங்காயைக் கல்லில் குத்தி, உப்புத்தூள் போட்டுக் கொண்டிருப்பார்கள்.
ஏன் எனக்கு அழுகை வருகிறது?
கண்ணீர் கண்களை மறைக்க முயன்றாலும் நான் யன்னல் கம்பிகளைப் பிடித்தபடி மேலே ஆகாயத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.
எனக்கு ஆகாயம் பிடித்தது. அதன் நீலம் மிகவும் பிடித்தது. ரசித்துப் பார்த்தேன். பார்த்துக் கொண்டேயிருந்தேன். பள்ளிக்கூடம் போய் வந்து மிச்ச நேரங்களில் எனது தீவுக்குள் வந்து பார்த்துக் கொண்டிருப்பேன்.
வெளியே எங்கும் போவதில்லை.
யாரையும் சந்திப்பதில்லை.
எனக்குத்தான் எனது தீவு இருக்கிறதே.
'.... மனிதன் ஒரு சமூக விலங்கு. இந்த சமூக விலங்குகள் ஒரு கூட்டமாக வாழும். இந்த விலங்குகளுக்கு ஒன்றையொன்று தேவை. அவ்வப்போது இவை தமக்குள் கடித்துக் குதறினாலும் தமக்குள் அனுசரித்துப் போக வேண்டியது இயற்கை விதியாகும்....' என்று ஆசிரியர் பாடசாலையில் படிப்பித்தார்.
எனக்கு முழுதாகப் புரியிவில்லை. என்னை ஏன் இந்த சமூக விலங்குகள் தம்முடன் சேர்த்துக் கொள்வதில்லை? என்னைத் தேவையில்லையா?
நான் எனது தீவிலிருந்த நேரங்களிலெல்லாம் யோசித்துப் பார்த்தேன். எப்படியும் ஏனைய பிராணிகளுடன் கூட்டுச் சேர்ந்தால்தான் வாழ முடியும் என ஆசிரியர் நம்புகிறாரா?
எதற்கும் எனது காயங்கள் ஆறட்டும். இன்னொருமுறை முயற்சித்துப் பார்க்கலாம். அதுவரை இந்தத் தீவே எனக்குப் பாதுகாப்பு. எவ்வளவு சுதந்திரமான தீவு இது. சொல்லாலும், சிரிப்பாலும் காயப்படுத்துகிற எதிரிகள் இங்கு வர அனுமதியில்லை.
எனக்கா ஒன்றும் இல்லை.
எவ்வளவு பரந்த ஆகாயம். அதன் நீல நிறம். அதன் கீழ் தவழ்ந்து கொண்டிருக்கும் வெள்ளை மேகங்கள். எவ்வளவு அழகு.
கடல்கள் பல கடந்து நான் நாடு கடத்தப்படுவேன் என கொஞ்சமும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.
புதிய இடம்.
புதிய மனிதர்கள்.
புதிய சமூகம், புதிய விலங்குகள்.
இங்கே நான் மற்றவர்களுடன் கூட்டாக வாழ முயற்சித்துப் பார்க்கலாம். சிலவேளைகளில் சரிவரக் கூடும். அப்படி நடந்தால் எவ்வளவு நல்லது. எனக்கென்று ஒரு தீவை நான் உருவாக்கத் தேவையில்லை. தனித்திருந்து வானம் பார்க்கத் தேவையில்லை.
என்னைப் புனரமைக்கும் முயற்சியில் முழுமையாக இறங்கினேன். என்னுடன் நானே சண்டை பிடித்துக் கொள்வதென்பது அவ்வளவு சுலபமானதில்லை. காயங்கள் விரைவில் காய்ந்து விடுவதில்லை. அவற்றை மூடுவதற்காக சிரிப்புச் செய்து அணிந்து கொண்டேன்.
புது ஆரம்பம்.
அவனை நான் சந்தித்தது தற்செயல்தான். அப்போது அவன் கவிதைகளை மனதில் வைத்திருந்தான். எனக்குச் சொல்லிக் காட்டினான். எனக்கு உடனேயே கவிதைகளுடன் அவனையும் பிடித்துப் போயிற்று. அவ்வளவு சீக்கிரத்தில் அவனுக்கும் எனக்கும் நெருக்கம் வந்தது அதிசயம்தான். எனது ஏக்கமும், காயங்களும், அவனது பண்பும் இதற்கு காரணமாயிருக்கலாம்.
நாங்கள் ஒன்று சேர்ந்து நாங்கள் விரும்பும் உலகையும், மனிதர்களையும் எழுத்தால் செய்தோம். எமது உலகில் எமது பிடித்தமானவைகளுக்கு மட்டும் இடமளித்தோம்.
இந்த உலகம் சரிவருமா? என்று எங்களை நாங்களே கேட்டு, கடைசியில் நாங்களாவது அங்கு போய் சீவிப்போம் என்று உறுதியெடுத்தோம்.
நான் மிக மகிழ்ச்சியாக இருந்தேன். எனக்கென்று தனித் தீவு இனித் தேவையில்லை. வெளியே மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் நான் சேர்ந்து கொள்வேன். அவர்கள் என்னைச் சேர்த்துக் கொள்வார்கள்.
எனது காயங்கள் மாறாவிட்டாலும் மறந்து போயின.
நாங்கள் ஒன்றாகக் கனவு கண்டோம். ஒன்றாக எழுதினோம்.
பிறகு அவன் தனக்கென ஒரு துணை தேடிக் கொண்டான். எனது உலகம் இன்னும் விரிந்தது. ஆதரவின் இன்னொரு பரிமாணம் கிடைத்தது. நான் மறுபடி ஒருமுறை குழந்தையாகினேன். என்ன ஆனந்தம்.
அவர்களுக்கு குழந்தை பிறந்தது.
இப்போது எனக்கு மூன்றாவது பரிமாணமும் கிடைத்தது.
எனக்குக் குழந்தைகள் பிடிக்கும். மிகவும் மிகவும் பிடிக்கும். குழந்தைகள் உலகத்தில் வாழ எனக்கு இன்னும் பிடிக்கும்.
குழந்தையை எனது முதுகில் ஏற்றி யானையாகினேன். அதுக்குச் சிரிப்புக் காட்ட குரங்கானேன். அடி வாங்கினேன். மூத்திரத்தால் நனைந்தேன். அது ஓடி வந்து என்னில் தாவி ஏறும்போது எனக்கு எல்லாம் மறந்து போனது.
என்ன இனிமையான உலகம். அதிசயங்கள் என்னெவெல்லாம் கொட்டிக் கிடக்கின்றன.
இந்த மனிதர்களுடன் நான் கொண்டிருக்கும் உறவுக்கு எனக்குப் பெயர் தெரியவில்லை. அது ஏதோ ஒன்று.
எல்லாம் நிரந்தரமா என்ன?
நாங்கள் வேறு உலகம் போகின்றோம் என்று ஒருநாள் அவன் புதுக் கவிதை எழுதினான்.
நான் அதிர்ந்து போனேன்.
அப்ப நாங்கள் குடியிருப்பதற்காகச் செய்த உலகம்? என்று கேட்டேன்.
இப்போது நாங்கள் இருப்பது உண்மை உலகம். இனி நாங்கள் போகப் போவதும் உண்மை உலகம்தான். உண்மையைப் புரிந்து கொள். யதார்த்தமாய் வாழப் பழகிக் கொள் என்றான்.
எனக்குப் புரியவில்லை.
உலகங்களைப் பற்றி ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் வரைவிலக்கணங்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. என்னைத் திரும்பவும் எனது தீவுக்கே திருப்பியனுப்பப் போகிறார்கள். என்னால் தாங்க முடியவில்லை. ஐயோ.. வேண்டாம் தயவு செய்து வேண்டாம். யாரின் காலை நான் பிடித்துக் கெஞ்சலாம்.
எனக்கு உங்களைத் தவிர வேறு யாரையும் தெரியாது என்று இரந்தேன்.
உலகம் பெரியது. தவறு யாருடையது என்று கேட்டான்.
இவர்களுக்குத் தெரியுமா எனது தீவைப் பற்றி... அதன் தனிமை பற்றி... அதன் கொடுமை பற்றி... நான் எவ்வளவு கடுமையாகப் போராடி மிகவும் கஸ்ரப்பட்டு எனது தீவிலிருந்து தப்பி வந்திருக்கிறேன். இப்போது மீண்டும் அங்கே கொண்டுபோய் விடப் போகிறார்கள். எனது உணர்வுகளுக்கு மொழியில்லை என்பதால்தான் அது யாருக்கும் கேட்கவில்லையா?
உண்மையில் கேட்கவில்லையா?
நாங்கள் போய் வருகிறோம் என்று எல்லோருமாகப் போய் விட்டார்கள்.
குழந்தையும் போய்விட்டது. எனக்கு எல்லாமாக இருந்தது. அதுவும் போய்விட்டது. இப்போது யானையும், குரங்கும்தான் மிஞ்சிப் போயிருக்கின்றன.
நான் அவர்களை விளங்கிக்கொள்ள முயற்சித்தேன்.
அவர்கள் வாழ்தலை அவர்கள்தான் தீர்மானிக்கலாம்.
அவர்கள் குழந்தையை அவர்கள்தான் வைத்திருக்கலாம்.
அவர்கள் வானத்தில் பறந்த கையோடு நான் துண்டு துண்டாகச் சிதறிய நிலையில் எனது தீவுக்குத் திரும்ப வந்தேன்.
நான்கு பக்கமும் சுவர்களால் சூழப்பட்டது எனது தீவு. ஒரு செற்றி, ஒரு கசற் றெக்கோடர், ஒரு புத்தக அலுமாரி, ஒரு யன்னல் இவை மட்டும்தான் இப்போது என்னோடு.
செற்றில் அமீரின் இமாஜினேசனை ஒலிக்க விட்டு, ஒரே ஒரு யன்னலின் வழியாக வெளியே வெறித்துப் பார்த்தேன்.
எனக்கு மிகவும் பழகிப் போயிருந்த, இடையில் பலகாலம் பார்க்காமலிருந்த அதே ஆகாயம். அதே நீல நிறம்.
அழுகை வர வாய்விட்டு அழுதேன். தொடர்ந்து அழுதேன்.
ஏன் எனக்கு இப்படி?
நான் மட்டுமேன் தீவில்?
வாழ்தல் நீண்டது. நான் மறுபடி என்னைத் தயாரித்துக் கொள்ள வேண்டும். எனக்கான சொந்தத்தை நான் மறுபடி வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
வெளியே, மேலே.. அதே ஆகாயம். அதன் நீல நிறம்...
அந்தக் குழந்தை இப்போது யார் முதுகில் ஏறும்? என்னைத் தேடமாட்டாதா?
அழுகை அழுகையாக வந்தது.
ஏன் திரும்பத் திரும்ப அதையே நினைக்க வேண்டும்.
இதோ பார். மேலே பார். எவ்வளவு பரந்த ஆகாயம். அதன் கீழாக மிதந்து கொண்டிருக்கும் மேகங்களின் அழகைப் பார்.
அவர்கள் இப்போது போன உலகத்தில் யாருடன் சேர்ந்து கூழ் குடிப்பார்கள்? யார் காயங்களுக்கு ஒத்தடம் கொடுப்பார்கள்?
அழுகை அழுகையாக வந்தது.
செற்றியில் விழுந்து அதை நனைத்தேன்.
எனது தனிமையை விரட்ட ஒரு புது வழி கண்டுபிடித்தேன். வேலை. வேலை. வேலை.
தகரங்களையும், இரும்புத் தூண்களையும் பத்து மணித்தியாலத்திற்கு மேலாகச் சுமக்கையில் வேறு பாரங்கள் எப்பிடி நினைவு வரும்? வேலையை எனக்கான போதை மருந்தாக்கிக் கொண்டேன். வேலைத்தளம் வேறு உலகம். அங்கு மனிதர்களைவிட பொருட்கள்தான் அதிகம் இருந்தன. உணர்வுப் போராட்டங்கள் எதற்கும் இடமில்லை. சுகமான பாரங்கள்.
தனிமையில் இருக்கின்ற நேரங்களைக் குறைத்து என்னை எதிலாவது ஈடுபடுத்துகையில் ஒரு வித வெற்றி இருக்கத்தான் செய்கிறது.
அதைவிட இருக்கவே இருக்கிறது எனது தீவு.
இனிமேல் கவனமாயிருக்க வேண்டும். எனது தீவை விட்டு வெளியே போக வேண்டி வரும்போது வெளி உலகோடு அவதானமாயிருக்க வேண்டும். மறுபடி என்னோடு உறவு சேர்த்து தங்களுக்குத் தேவையானபோது அறுத்துக்கொண்டு போவதற்கு அல்லது யதார்த்தம் அப்படி என்று சொல்வதற்கு விடக் கூடாது. யாரோடும் சேர வேண்டாம். ஏமாற்றுவதற்குப் பலர் தயாராக இருக்கிறார்கள். என்னைத் தங்கள் உலகத்தில் சேர்த்துக்கொண்டு விட்டதாகக் கூறிக்கொண்டு சமயம் வரும்போது என்னை மறுபடி எனது தீவுக்கே திருப்பியனுப்பி விடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அது யதார்த்தம். எனக்கு மறுபடி மறுபடி செத்துவிடுவது.
வெளியே போகையில் எனது சிரிப்பை எடுத்து அணிந்து கொண்டேன். எனது ஒரேஒரு கவசம் அதுதான்.
என்னைத் தனக்குப் பிடித்திருப்பதாகச் சொன்னாள் அவள்.
இப்படி எனக்குச் சொல்லப்பட்டது இது முதல் தடவை. நான் திகைத்துத்தான் போனேன். நிலைகுலைந்து போனேன். பலவீனமான இடங்களில்தான் தாக்குகிறார்கள்.
எனக்கு நிறைய அனுபவங்கள். எனது பழைய காயங்கள், எனது தீவு இவைகளை நினைத்து இம் முறை நான் மிகவும் எச்சரிக்கையாக இருந்தேன். மறுபடி மறுபடி பிய்ந்து போனால் எப்படித் தாங்குவேன்.
அவள் விருப்பத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு கால அவகாசம் தேவை. எப்படியாவது இழுத்தடிக்க வேண்டும். சும்மா சொல்லக் கூடாது. சில விசயங்களில் வெளியுலகம் என்னைக் கெட்டிக்காரனாக்கியிருக்கிறது.
காலத்தை இழு இழு என்று இழுத்தேன்.
இப்போது எனக்கு அவனையும் பிடித்திருக்கிறது என்றாள்.
எவ்வளவுதான் நான் எச்சரிக்கையாக இருந்தாலும் கவலை வருவதைத் தடுக்க முடியவில்லை. சகித்துக் கொண்டேன். இதென்ன புதிசா எனக்கு.
எனக்கு குழப்பமாயிருக்கு முடிவெடுக்க என்றாள்.
ஆக, ஒரு சிக்னல் தரப்படுகிறது தனக்குத் தேர்வு இருப்பதாக. இம் முறை நான் தப்பிவிட்டேன். என்னை யாரும் எனது தீவுக்குத் திருப்பியனுப்ப முடியாது. ஏனென்றால் அங்கேதானே இன்னும் நான் இருக்கிறேன்.
சில காலம் செல்ல, அவள் தனது துணையுடன் வந்து எனக்கு அறிவுரை சொன்னாள், இப்பிடியே எத்தினை காலத்திற்கு தனியே இருப்பதாக உத்தேசம் என்று.
நான் பதில் சொல்லவில்லை. மற்றவர்களுக்குப் புரியாத பதிலை நான் சொல்லி என்ன லாபம்.
எனது தீவுக்கு வந்து, யன்னலூடாக ஆகாயத்தைப் பார்த்தபடி ஓரு பாட்டம் அழுது தீர்த்தேன்.
மறுபடி அவளைக் காணவேயில்லை.
தற்செயலாகத்தான் எனக்கும் அவர்களுக்கும் தொடர்பு ஏற்பட்டது. நான் எவ்வளவோ கவனமாக இருந்தும் இது நடந்துவிட்டது. இதுதான் எனது பலவீனம் என்றேனே. மனிதன் ஒரு சமூக விலங்கு என்று ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.
அவர்களுடன் பழகியதற்கு எனக்கு வழக்கம் போல் பெயர் தெரியவில்லை. ஆனால் அப்படி ஒன்றிவிட்டேன்.
எனது பலவீனம் எனக்கு இப்போது தெரிந்தது. நான் சிறிசாக இருந்த காலங்களில் எனக்குக் கிடைக்காததைத் தேடி மனம் அலைந்து கொண்டிருந்திருக்கிறது. எங்காவது கிடைத்துவிட்டால் அவ்வளவுதான். எனது பாதுகாப்பு, எச்சரிக்கையெல்லாம் தூளாகிவிடுகின்றன.
எனக்கு மறுபடி எனது தீவு மறந்து போயிற்று. அந்த யன்னல், நீலவானம், மேகங்கள் .... எதுவும் தேவைப்படவில்லை.
என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருப்பதுபோல் உணர்கையில் நான் உண்மையில் மகிழ்ந்துதான் போனேன்.
அவர்கள் வீட்டிலும் குழந்தை வந்தது.
எனது உலகம் இன்னும் இன்னும் விரிந்தது.
நீண்டகாலத்தின் பின் நான் மீண்டும் யானையாகினேன். குரங்கானேன். ஆனந்தம்.
எப்போதாகிலும் யாராவது என்னிடம், உனக்கென்று சொந்தங்கள் வேண்டாமா என்று கேட்கையில் சிரிப்பு வந்தது. முட்டாள்களா நான் என்ன நான்கு பக்கமும் சுவர்களால் சூழப்பட்ட தீவிலா இருக்கிறேன். நன்றாகப் பாருங்கள். என்னைச் சுற்றிலும் எனக்கு ஆதரவு காட்டும் மனிதர்கள். என்னை நன்றாக அடையாளம் கண்டுகொள்ளும் குழந்தைகள்.
எனக்கும் சந்தோசத்திற்கும் அப்படி ஒரு உறவு. மறுபடி அது நிகழ்ந்தது.
எங்களுக்கு ஒன்றுமில்லை. ஆனால் நீ வந்து போவதை தெருவில் கிடக்கிற கண்கள் கவனித்து வாய்கள் தவறாகப் பேசலாம். அதனால்.... என்று அவன் சொன்னபோது நான் திரும்ப துண்டு துண்டாய் உடைந்து போனேன்.
மீண்டும் உறவு அறுக்கப்பட்டது. மீண்டும் ஒரு நிராகரிப்பு. என்னை எனது தீவுக்குத் திருப்பியனுப்புவதற்கான ஆயத்தம் ஆரம்பமாகிவிட்டது.
என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. எனது மொழி உணர்விலிருந்து வெளியில் வருவதற்கிடையில் செத்துப் போனது.
மிகவும் சிரமப்பட்டு எனது சிரிப்பை எடுத்து அணிந்து கொண்டேன். எனது காயங்களை மூடிக் கட்ட என்னிடமிருக்கும் ஒரே ஒரு பான்டேஜ் அதுதான்.
தெருவில் கிடக்கின்ற வாய்களும், கண்களும் இத்தனைநாள் எங்கே போயிருந்தன, இன்றுவரை உங்களுக்கு என்ன செய்தன என்று நான் அவர்களை கேட்க முடியாது.
அவர்கள் குடும்பம், அவர்கள் வாழ்தல் பற்றி அவர்கள் மட்டுமே தீர்மானிக்கலாம்.
இதே தெருவில் இதே வாய்களுடன்தான் நாங்கள் கதைக்க வேண்டும் என்பதும், இதே கண்களைத்தான் நாங்கள் பார்க்க வேண்டும் என்பதும்தான் யதார்த்தம் என்று அவர்கள் மேலதிக விளக்கம் தந்தார்கள்.
இப்போதுதான் தெரியவந்த யதார்த்தத்தின் முன் நான் திடீரென ஒன்றுமில்லாதவனாகிப் போனேன். என்னைச் சுற்றி இருந்தவர்கள் காணாமல் போனார்கள். மழலைச் சத்தம் நான் தொட முடியாத நீண்ட தூரத்திற்குப் போய்விட்டது.
நான் மறுபடி எனது தீவுக்கு திருப்பியனுப்பப்பட்டேன்.
இது நான்கு பக்கமும் சுவர்களால் சூழப்பட்ட எனது தீவு. ஒரு செற்றி, ஒரு புத்தக அலுமாரி, ஒரு செற் என்பவற்றுடன் ஒரு யன்னலும் இருந்தது. அதனருகில் வந்து வெளியே வெறித்துப் பார்க்கிறேன்.
அதே வானம். நீலமாய் மேகங்களால் மூடியும், மூடாமலும் இருக்கிறது.
எவ்வளவுதான் அடக்கி வைத்தாலும் துக்கம் தொண்டையையும் பிய்த்துக் கொண்டு வெளியில் வந்துவிட்டது. கண்கள் கன்னங்களை ஈரமாக்கினாலும் வெப்பமாயிருந்தது.
இது எனது தீவு. இங்கு நான் அழலாம். தாராளமாக அழலாம். சத்தம் போட்டு அழலாம். எந்தப் பொய்யான அனுதாபங்களும், பரிதாபங்களும் இங்கு என் மீது படமுடியாது.
நீ எங்களிலை ஒராள் என்று சொன்னார்களே..
மற. மற.
இதோ பார். ஆகாயம். அதன் நீல நிறத்தைப் பார். எவ்வளவு அழகு.
உனக்கும் எங்களுக்கும் இடைவெளி வரக் கூடாது என்றார்களே.
மறந்துவிடு. தயவு செய்து மறந்துவிடு. சொற்களுக்கெல்லாம் உயிர் இருக்க வேண்டுமென்றில்லை. நினைவுகள் என்னைப் பிய்த்து துண்டு துண்டாக்குவதைவிட வேறொன்றும் நடக்காது.
எல்லாவற்றையும் மறக்கத்தான் வேண்டும்.
அதுதானே யாதார்த்தம்?
ஏனோ தெரியவில்லை போட்டோ அல்பம் எடுத்துப் பார்க்க வேண்டும் போலிருந்தது. பார்த்தேன்.
என்னைத் திரும்ப எனது தீவுக்கே திருப்பியனுப்பி வைத்தவர்கள், எனக்கு யதார்த்தம் விளக்கியவர்கள்... எல்லோரும் இருந்தார்கள். எனது குழந்தைகளும் இருந்தார்கள். போட்டோவிலிருந்து இறங்கி வந்து என்னோடு விளையாடினார்கள். என் தலைமயிரைப் பிடித்து இழுத்தார்கள். தோள் மீது ஏறினார்கள். தூக்கச் சொல்லிக் கைகளை நீட்டினார்கள். என்னைத் தேடினார்கள்.
ஏன் மனசு பாரமாகிறது. ஏன் கண்ணீர் தொடர்ந்து வருகிறது. எனக்கு இந்தத் தீவுதான் சாத்தியம் என்று மறுபடி மறுபடி நிரூபிக்கப்பட்டுவிட்டதே. பிறகேன் நான் அழ வேண்டும்.
என்னை நான் மறுபடி புனரமைத்துக்கொள்ள வேண்டும். திரும்ப சிரிப்பை அணிந்துகொள்ள வேண்டும். இனிமேலாவது மிக எச்சரிக்கையாயிருக்க வேண்டும். யாருடனும் நெருங்கிப் போகக் கூடாது.
ஆனால்...
எனது பலவீனம் எனக்குத் தெரியும். நான் சின்னவனாக இருந்தபோது எதற்கெல்லாம் ஏங்கினேனோ அது இப்போது கிடைத்தாலும் நான் விழுந்துவிடுவேன். எனது உறுதி, எச்சரிக்கை, பாதுகாப்பு எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
என்ன செய்ய?
இன்னொரு யதார்த்தத்தைச் சந்திக்கும்வரை இந்தத் தீவுதான் எனக்குச் சொந்தம்.
அல்பத்தை மூடி வைத்துவிட்டு திரும்ப யன்னலடிக்கு வந்து வெளியே பார்க்கிறேன்.
அந்த வானத்துக்கும் எனக்கும் நீண்ட தூரம். என்னோடு எந்தச் சம்பந்தமும் அதற்கில்லை. அதனால்தானோ என்னவோ என்னால் அந்த வானத்தை ரசிக்க முடிகிறது. தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க முடிகிறது.....
.... கண்ணீர் வரும் வரைக்கும்.
17.10.1998
No comments:
Post a Comment