நாட்டு நிலைமை காரணமாக சோபை இழந்து காணப்பட்ட இலக்கிய விழாக்களும், நூல் வெளியீடுகளும் மீண்டும் களைகட்டத் தொடங்கியிருந்தன. இணையத்தளம் ஒன்றில் வெளியாகியிருந்த சிறுகதை ஒன்றில் மூழ்கியிருந்த என்னை மனைவியின் குரல் உலுக்கியது.
'என்னப்பா இருக்குறீங்க. நூல் வெளியீட்டுக்கு போகவேணும் என்டனீங்கள்..... என்ன வெளிக்கிட இல்லையோ?'
'மறந்தே போயிட்டனப்பா. நல்ல காலம் ஞாபகப்படுத்தினீர்' என்றபடி சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தேன்.
'இன்னும் அரை மணித்தியாலம்தான் இருக்கு......' என்னுள் நினைவுகள் ஓட அவசரமானேன்.
'சரி நான் போயிற்றுவாரன் சுதா' என்று புறப்படத் தயாரானபோது சூடான தேனீர்க் கோப்பையை என் முன் நீட்டினாள் அவள்.
'இவ்வளவு நேரமும் இருந்துட்டு இப்பதான் இதக்கொண்டு வாரியோ' அவசரமாய் ஒரு மிடறு தேனீரை உறிஞ்சியபடி அவளிடம் கேட்டேன்.
'ஒருத்தருக்கும் தங்களின்ர பிழையள் தெரியாது. மற்றவையளின்ர குறையளைத் தான் தூக்கிவச்சு கதைப்பீனம். முதல்ல தங்களுக்குள்ள இருக்கிற பிரச்சனையளைத் தீர்க்க வேணும். பிறகு மற்றவையப் பற்றி, அவையளின்ர பிழையளைப் பற்றி பேச வெளிக்கிட வேணும்' என்றாள் குறும்பாக என்னைப் பார்த்துச் சிரித்தபடி.
சூடான தேனீர் என் உதட்டை பதம் பார்க்க 'இந்தாப்பா நீயே வச்சுக்குடி' என்றபடி எழுந்து நடந்தேன்.
காரை நான் நெருங்கியபோது, சுதா அவசரமாக ஓடிவந்தாள்.
'வரேக்கை அந்த புரோக்கரிட்டையும் ஒருக்கா போயிட்டு வாங்களேன்.'
'ம்... ம்...' தலையை அசைத்தபடி காரைப் பின்னுக்கு எடுத்து, பிரதான பாதையை நோக்கிச் செலுத்தினேன்.
வெளியில் வெதர் நன்றாக இருந்தது. 'இந்தமுறை ஸ்னோவும் அவ்வளவாக் கொட்டுறதாய் காணயில்ல. ஸ்னோ கொட்டியிருந்தா மனுசர் இப்பிடி கார் ஓட ஏலுமே?'. பெருந்தெருவில் கார் சுகமாகப் பயணித்தது.
விழா மண்டபத்துக்குள் நான் நுளையவும் கூட்டம் தொடங்கவும் சரியாக இருந்தது. புலம்பெயர் நாட்டில் சதா வேலை வேலையென்று ஓடிக்கொண்டிருக்கிற என் போன்ற இலக்கியப் பசிகொண்டவர்களுக்கு இந்த நூல்வெளியீட்டு நிகழ்வுகள் தான் கொஞ்சம் ஆறுதல்.
வரவேற்புரை, தலைமையுரை எனத்தொடர்ந்து எனக்குப் பிடித்த நூலாய்வு வந்த போது மனம் ஒன்றி அதைக் கேட்பதில் கவனத்தைச் செலுத்தினேன்.
அந்தப் பேச்சாளர், நூலைப்பற்றி சுருக்கமாகக் கூறிவிட்டு, மிகுதி அரை மணித்தியாலங்களுக்கும் மேலாக யாழ்ப்பாண உயர்சாதியினர் எப்படி அடிமட்டத்து மக்களை ஒதுக்கினார்கள் என்பது பற்றியும், தீண்டாமை, ஆலயப்பிரவேசம் பற்றியெல்லாம் உணர்வு பூர்வமாக சூடுபறக்கப் பேசினார். பின்னர் அவரைத்தொடர்ந்து பேச வந்த மற்ற பேச்சாளரும் அந்தப் பிரச்சனையைப் பற்றியே தொடர்ந்து பேசினார். எனக்கு சகிக்க முடியாமல் இருந்தது.
'இதுக்கெல்லாம் மூலகாரணம் வெள்ளாளரின்ர சாதிப்பார்வைதான். குறைஞ்ச சாதியென்டு எங்களை ஒதுக்கி வைச்சவையள். கோயிலுக்குள்ள நாங்க போகக்கூடாது. பொதுக் கிணத்தில தண்ணி அள்ளக்கூடாது.......' ஒருவர் தன் முகம் சிவக்கப் பேசிக்கொண்டே போனார்.
'இவங்கள் விசரங்கள். பழைய கதையள இழுத்து வைச்சு கதைச்சுக்கொண்டு இருப்பான்கள். இன்னும் எவ்வளவு காலத்துக்கு உந்தக் கதையளை வச்சு அரைக்கப்போகீனம்? மேடை கிடைச்சால் காணும்.....!!'
மேற்கொண்டு தொடர்ந்து அவ்விழாவில் இருக்க முடியாமல் மெல்ல நடந்து மண்டபத்தை விட்டு வெளியேறினேன்.
'இங்க இப்ப பிள்ளையள் உந்த சாதியளையா பாக்குதுகள்? என்ன படிச்சிருக்கிறான்? என்ன வேலை செய்யுறான்? தங்களுன்ர பழக்கவழக்கத்தோட இவன் ஒத்துவருவானா? இதைத்தானே அதுகள் பாக்குதுகள். தங்களுக்கு பிடிச்சுதென்றால் கலியாணம். இல்லாட்டில் வேறயொன்டு.'
'இப்ப அங்க தொண்டை கிழியக் கத்துறவரின்ர மகன் விரும்பி முடிச்ச பெட்டையும் நல்ல சாதிப் பெட்டைதானே.......'
பலதையும் நினைத்து அலுத்துக்கொண்ட மனம் இன்று செய்யவேண்டிய இரண்டாவது வேலையைப்பற்றி சிந்திக்கத் தொடங்கியது.
'புரோக்கர் வீட்டை போக வேணும்.'
ஸ்டியரிங்கை ஒரு கையால் பிடித்துக்கொண்டு காரை மெதுவாகச் செலுத்தியபடியே எட்;டி அடுத்த சீட்டில் கிடந்த கவரை எடுத்துப்பிரித்தேன். மகள் குமுதாவின் படத்தோடு ஒட்டியிருந்த லாவண்யாவின் படம் என் மடியில் விழுந்தது.
அண்ணர் குடும்பம் லண்டனில. கனடாவிலயோ, சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மன் பக்கமோ லாவண்யாவுக்கு ஏத்த மாப்பிள்ளை சந்திச்சா பார்க்கச் சொன்னவர்.
'அண்ணர் லாவண்யாவ பொத்திப் பொத்தி வளர்த்தவர். சரியான கண்டிப்பு. படிப்பும், வீடும் என்று அவளும் வளர்ந்திட்டாள். வேற விசயங்களில அவளுக்கு ஆர்வம் இருக்கேல்ல. இப்ப அவளுக்கு மாப்பிள்ளை தேடி களைச்சுப் போயிட்டார். அவளும் தன்ர படிப்புக்கும், வேலைக்கும் ஏத்தமாதிரி வெளிநாட்டில படிச்சு, நல்ல வேலையில இருக்கிற மாப்பிள்ளை தான் வேணும் என்டு ஒற்றைக்காலில நிக்குறாள்'
கவருக்குள் இருவரது சாதகங்களும் இருப்பதை ஒரு கையின் உதவியாலேயே உறுதிசெய்துவிட்டு படங்களை வைத்து மறுபடியும் பக்கத்து சீட்டில் வைத்துக்கொண்டேன்.
எனக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த கறுப்பனுக்கு ஒரு கையால் காரை மெதுவாக செலுத்தி வரும் எனது செயல் கடுப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இரண்டு, மூன்று தடவைகள் 'ஹார்'னை அழுத்தி ஒலியெழுப்பிப் பார்த்தான். நான் கருமமே கண்ணாக இருந்தேன். அடுத்த லைன் வழியாக எனது காரை முந்திக்கொண்டு வந்து, மீண்டும் என் காருக்கு முன்னால் தன் வாகனத்தை விட்டு மெதுவாக ஓட்டி எனக்கு எரிச்சல் மூட்டி என்னைப் பழிவாங்கினான். தன் கார் கண்ணாடிவழியாக என்னைப் பார்த்து விரலை உயர்த்தி அசிங்கமாகத் திட்டினான். நான் மன்னிப்புக்கோறும் முகமாக கையை உயர்த்தி “Sorry” என்றும் அவன் கடுப்பாய் இருந்தான்.
ஏற்கனவே பல தடவைகள் புரோக்கரிடம் போய் வந்ததால், 'அப்பொயிண்மன்ட்' ஒன்றும் எடுக்கவில்லை. வந்துவிட்டேன். அந்த நேரம் பார்த்து கைத்தொலைபேசி கிணுகிணுத்தது. அடுத்த கணம் தானே ஓய்ந்துபோனது.
அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தேன். சில நிமிடங்களில் கதவு திறந்தது. கதவை அடைத்துக்கொண்டு வெற்றிலை போட்டுச் சிவந்த தன் பற்கள் தெரியச் சிரித்தாள் புரோக்கர் அம்மா.
'என்ன திடீரென்று வந்து நிக்கிறியள்.' என்று குற்றம்சாட்டிய புரோக்கர் அம்மையார், அடுத்தநொடியே, 'கொஞ்சம் இருங்கோ. இவையள அனுப்பிப்போட்டுத்தான்....' உள்ளே ஏற்கனவே சிலர் வந்திருப்பதைத் தெரிவித்தார்.
'ஓகே... ஓகே.... பிரச்சனையில்லை.....' என்றபடி சற்று தள்ளிக் கிடந்த கதிரையில் போய் அமர்ந்தேன்.
விறாந்தை முழுவதும் சிறுவர்களது விளையாட்டுப் பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. புரோக்கர் அம்மா பகுதிநேர வேலையாக 'பேபி சிட்டிங்' செய்வது நானறிந்ததே. மூலையில் கிடந்த மேசைமீது கோப்புக்கள் வரிசையாக அடுக்கப்பட்டு இருந்தன. நெற்றியில் ஏற்றியிருந்த தன் மூக்குக்கண்ணாடியை கண்களில் சரியாக பொருத்திக்கொண்டு கையில் இருந்த சாதகத்தை புறட்டத் தொடங்கினார் புரோக்கர்.
மேசைக்கு முன்னால் போடப்பட்டிருந்த கதிரைகள் இரண்டிலும் ஆணும் பெண்ணுமாய் இரண்டு தடித்த உருவங்கள். கணவன் மனைவியாய் இருக்கவேண்டும். சில புகைப்படங்களை கையில் வைத்திருந்த அந்தப்பெண் அவற்றை ஒவ்வொன்றாக கணவனுக்குக் காட்டி, அவன் காதுகளுக்குள் ஏதோ கிசுகிசுத்துக்கொண்டிருந்தாள். அவர்கள் பார்வை ஒருமுறை என்மீது படிந்து திரும்பியது.
திரும்பவும் கைத்தொலைபேசி சிணுங்கியது. நிமிர்ந்து பார்த்த புரோக்கரிடம் சைகை காட்டிவிட்டு கைத்தொலைபேசியின் பட்டனை அழுத்தியபடி கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தேன். எதிர்முனையில் அண்ணர்தான்.
'இப்ப உங்களைத் தான் நினைச்சுக்கொண்டு இருக்கிறன். நீங்க எடுக்குறீங்க'
'நீ எங்க நிக்கிறாய்? உன்னோட ஒரு முக்கியமான விசயம் கதைக்க வேணும்'
அண்ணரின் குரலில் ஒருவித பதற்றம் தெரிந்தது.
'நான் இங்க புரேக்கரிட்ட வந்தனான். லாவண்யாவுக்கு ஒரு இடம் பொருந்தி வந்திருக்கு என்று புரோக்கர் 'மெசேஜ்' விட்டிருந்தா. அதுதான் பார்ப்பம் என்டு வந்தனான்...'
எதிர்முனையில் நிலவிய அமைதி என்னை சங்கடப்படுத்தியது.
'என்ன அண்ணெ? ஏதோ சொல்ல வேணும் என்டு சொன்னனீங்கள்........? என்ன விசயம்.....?'
'அது..... அது வந்து....'
'என்ன அண்ணெ....? சொல்லுங்க...?'
'அவளுக்கு....... அவளுக்கு கலியாணம் பேசத் தேவையில்லை. இங்க எல்லாம் சரிவந்துட்டுது....'
தொண்டைக்குள் ஏதோ சிக்கினாற்போல திக்கித்திணறிப் பேசினார் அண்ணர். எனக்குள் ஆயிரம் சிந்தனைகள் ஓடியது.
'நேற்றுக்கூட அண்ணரோட கதைச்சனான் தானே. அப்ப ஒன்டும் சொல்லேல்ல. என்ன இப்ப திடுதிப்பென்று......?'
'ஆ..... சரிவந்துட்டுதோ.....!!'
'...........' எதிர் முனையில் மௌனம்.
'ஆரு பெடியன்.......? விசாரிச்சனீங்களே.....? எப்பிடி சம்மந்தம் சரிவந்துது.....?' அடுக்கடுக்காய் கேள்விகளை அடுக்கினேன். சிறிது நேர தயக்கத்தின் பின் அண்ணர் பேசினார்.
'அதெல்லாம் எனக்குத் தெரியாது, ஆனா அவளோட வேலை செய்கிற பெடியனாம். அவள் நேற்றுப் பின்னேரம் தாயோட சொல்லியிருக்கிறாள். மனுசி இரவு என்னோட இதைப் பற்றி சொல்லேக்க என்ர தலையில இடி விழுந்திட்டுது'
எனக்கு பேசுவதற்கு வார்த்தை ஒன்றும் வரவில்லை. என்ர தலையிலும் இடிதான். மௌனமாயிருந்தேன். ஏதோ புரிவதுபோல இருந்தது.
'அவளின்ர குணம் தான் உனக்குத் தெரியுமே. நானும் எவ்வளவோ கதைச்சுப்பார்த்தன். எங்களுக்கு உது சரிவராதென்டு சொன்னன். அவள் பிடிவாதக்காரி. எனக்கு என்ன செய்யுறதென்டு தெரியேல்ல'
'ம்......'
'ஆரு என்ன என்று விசாரிச்சன். ஊரில யாழ்ப்பாணம் தான் சொந்த இடமாம். கோண்டாவில் பக்கம், அங்காலை....... வேறயாக்கள் போல இருக்குது...... எனக்கு என்ன செய்யுறதெண்டு தெரியேல்ல. அவள் என்ன சொன்னாலும் கேட்கிறாள் இல்லை. பெடியன் இவளை மாதிரித்தான் அஞ்சு வயதில லண்டனுக்கு வந்தவனாம். யூனிவேர்சிட்டி முடிச்சிட்டு, இவள் வேலை செய்யுற இடத்திலதான் வேலைசெய்யுறானாம்.' கவலைதோய்ந்த குரலில் சொல்லிக்கொண்டு போனார் அண்ணர்.
'ஏதோ தமிழ்ப்பெடியன் என்ற விதத்தில் எனக்கு ஆறுதல். அவ்வளவுதான்' என்ற அண்ணர் மீண்டும் மௌனமானார்.
'சரியப்ப....' என்றபடி தொடர்பை துண்டித்துக்கொண்டார்;.
அவற்ர மனம் எனக்கு நல்லாத் தெரியும். எத்தனையோ விசயங்களை கொட்டித்தீர்க்க அந்தரப்பட்டாலும் ஒன்றும் கதைக்க ஏலாமல் மனதை கல்லாக்கிக்கொண்டு விசயத்தை மட்டும் சொல்லிப்போட்டு போனை 'கட்' பண்ணீட்டார். அண்ணா இந்த விசயங்களில் லேசில் விட்டுக்கொடுக்காதவர். ஊரில எத்தினை பேரோட பிரச்சனைப்பட்டவர்.
ஏன் இப்ப இருபத்தைஞ்சு, முப்பது வருஷமாகியும் ஊரில ஓடிப்போன கடைசித் தங்கச்சி விஜியோட அண்ணர் இன்னும் கொண்டாட்டம் இல்லையே. போன வருஷம் சிலோனுக்கு போனபோதும், அம்மா எவ்வளவு கெஞ்சியும் அவளைப் பார்க்க மாட்டன் என்டு பிடிவாதமா இருந்திட்டார்.
'இங்க பிள்ளையள் விரும்பீட்டுதுகள் என்றால் பிறகு நாங்க ஒன்றும் கதைக்க ஏலாது. அதுகள் சாதியென்றால் என்ன என்டு கேக்குதுகள். அதுக்கு என்ன பதில் சொல்லுறது.....?' என் மனம் உள்ள நிலவரத்தை அலசி ஆராய்ந்தது.
இரண்டு புறாக்கள் என்னை அலட்சியப்படுத்தியபடி அருகில் வந்து நிலத்தில் எதையோ பொறுக்கிக்கொண்டிருந்தன. கையை மெதுவாக உயர்த்த விருட்டென்று எழுந்து பறந்த அந்த இரண்டு புறாக்களும்; இரண்டு வீடுகளுக்கு அப்பால் நிலத்தில் உலவியபடி மறுபடியும் எதையோ பொறுக்கத் தொடங்கின.
நேரத்தைப் போலவே என் சிந்தனைகளும் கட்டுக்கடங்காமல் ஓடியது. வெளியில் நன்றாக இருள் கவ்விக்கொண்டு வந்தது. லேசான குளிரை அப்போதுதான் என் உடல் உணரத்தொடங்கியது. வந்த காரியத்தை தொடரமுடியாமையால் வீட்டுக்குத் திரும்ப உத்தேசித்தேன்.
பொக்கற்றுக்குள் கையை நுளைத்தபோதுதான் தெரிந்தது கார்ச்சாவியை உள்ளேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன். மறுபடியும் கதவைத் திறந்துகொண்டு வீட்டினுள் நுளைந்தேன்.
என் மனம் ஒரு நிலையில் இல்லை. உள்ளே காரசாரமாக பேச்சுக்கள் நடந்துகொண்டிருந்தது. என்னைக் கண்டதும் குரல்கள் சற்று அடங்கின. மெல்லிய குரலில் பேச்சுத்தொடர்ந்தது.
'நான் நாளைக்கு வாரன்' புரோக்கரிடம் சைகை காட்டி விட்டு நான் அமர்ந்த சோபாவில் கார்ச்சாவியைத் தேடினேன். 'சரி'யென்று தலையசைத்த புரோக்கரும் அவர்களுடன் பேச்சைத் தொடர்ந்தார். அந்தப் பெண்ணின் குரல் ஓங்கியொலித்தது.
'இஞ்ச பாருங்க, நாங்கள் ஆர் ஆக்களென்டு தெரியும் தானே. நாங்கள் மேலோங்கி கரையார், நீங்க எங்கட பிள்ளைக்கு...... எங்கட ஆக்களுக்க பாருங்க. இல்லையென்றால், வெள்ளாளர் அல்லது பிரமணச் சாதியில என்றாலும் எங்களுக்கு பிரச்சனையில்லை. ஆனால் கரையார் மட்டும் வேண்டாம்'
காலிலே பாதணியை மாட்டிக்கொண்டு நின்ற நான் ஒருகணம் திடுக்குற்று திரும்பிப் பார்த்தேன். என் உதடுகளில் என்னையும் அறியாமல் ஒரு ஏளனப் புன்முறுவல் படர்ந்தது.
நிதானமாக படிகளில் இறங்கி நடந்தேன். என் செவிகளில் மனைவி புறப்படும்போது சொன்ன வாசகங்கள் ஞாபகம் வந்தன.
'ஒருத்தருக்கும் தங்களின்ர பிழையள் தெரியாது. மற்றவையளின்ர குறையளைத் தான் தூக்கிவச்சு கதைப்பீனம். முதல்ல தங்களுக்குள்ள இருக்கிற பிரச்சனையளைத் தீர்க்க வேணும். பிறகு மற்றவையப் பற்றி, அவையளின்ர பிழையளைப் பற்றி பேச வெளிக்கிட வேணும்'.
மிக யதார்த்தமாகச் சொல்லப்பட்டிருக்கும் துணிச்சலான கதை- நாட்டு நடப்பைச் சொல்லியிருக்கிறீர்கள்-பாராட்டப்படவேண்டிய வரலாற்றுப் பதிவு,'அண்ணா' திருந்தி இருப்பது வரவேற்கத் தக்கது.
ReplyDeleteசமூகப் பீடையான சாதியமைப்பைக் கருவாகக்கொண்ட இவ்வாறான இலக்கியங்களின் வருகை மிக அவசியமானது.
இலக்கியவாதிகள் இனங்காட்டும் சாதி ஒரு விசர். அவர்கள் விசரர்கள் இல்லை.
மானிடப்பண்பு மிக்க இலக்கியங்கள் காலத்தைக் கடந்து பேசப்படும்.
வாழ்த்துக்களோடு
அன்பன்
நடராசா கண்ணப்பு
அன்னை கலைக்கழகம்.
எனது கதையை வாசித்துவிட்டு உடனேயே உங்கள் விமர்சனத்தை முன்வைத்தற்கு நன்றி. இக்கதை வெறுமனே சாதிப் பாகுபாட்டை மட்டும் பேசவில்லை. தாழ்த்தப்பட்ட சாதியினர்களுக்கிடையே நிலவுகின்ற சாதி முரண்பாடுகளையும் இக்கதை தொட்டு நிற்கின்றது.
ReplyDeleteபிரியமுடன்,
அகில்