Thursday, February 17, 2011

செல்வி ஏன் அழுகின்றாள்?


வி.ஜீவகுமாரன்
 








எல்லாமே
முடிந்து விட்டது.
இருந்த வீடு.....  வாழ்ந்த கிராமம்....  தெரிந்த முகங்கள்......  எல்லாம...... எல்லாமே.......  தொலைந்து போய்விட்டது.
இப்பொழுது முழுக்க முழுக்க சனக்குவியல்கள் மத்தியில......  இரத்த வாடைகளுக்கும்......  இலையான்கள் மொய்க்கும் சிதழ்பிடித்த புண்களுக்கும் மத்தியில்......  யாராவது ஒரு சாப்பாட்டு பாசல் கொண்டு வந்து தருவார்களா என்ற ஏக்கத்துடன.....   புல்டோசர் கொண்டு இடித்து, தறித்து, அடிவேர்க் கட்டைகள் நீட்டிக் கொண்டிருக்கும் அந்த காட்டுப் பிரதேசத்தில் போடப்பட்ட கூடாரத்துக்கு கனகமும் செல்வியும் வந்து ஆறு நாளச்சு.
வெயில் கொளுத்திக் கொண்டு இருந்தது. எல்லாமே கனவு போல் இருந்தது. இடம் மாறி இடம் மாறி ஒடிக்கொண்டு இருக்கும் பொழுது எதுவுமே தெரியவில்லை.
 'கிட்டவாக வந்திட்டாங்கள்! ஓடுங்கோ!!', என்ற ஒன்றைத் தவிர எதுவுமே கேட்டிருக்கவில்லை.
வீடு, சந்தையடி, கோயிலடி என்ற கிராமத்தின் எல்லை.  மட்டும் அறிந்து வைத்திருந்த சனங்களுக்கு...... எந்தப் பக்கத்தாலை போறம்?...... எந்த ஊருக்குள் போகின்றோம் என்ற எந்த விளக்கமும் இல்லாமல் துப்பாக்கி சத்தங்கள் குறைந்த பக்கங்களை மட்டும் நோக்கி அள்ளுப்பட்டு......  அள்ளுப்பட்ட......  இப்ப எல்லாம் கனவு போலை........
தவறிவிடாமல் இருப்பதற்காக சிவதம்புவும் கனகமும் செல்வியும் ஒருவரின் கையை ஒருவர் பிடித்துக் கொண்டுதான் வந்தார்கள். இருந்தால் போல் சிவதம்புவின் கை கனகத்தை இழுக்குமாப்போல் இருக்கு திரும்பி பார்த்தாள். சிவசம்பு சரிந்து கொண்டிந்தார். காதடியில் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. கண்கள் மூடாமல் திறந்தேயிருந்தது. கனகத்தினதும் செல்வியின் பெலத்த குரலினான சத்தம் இந்த நெருசலில் யாருக்கும் கேட்கவில்லை. பதிலாக நடு றோட்டில் இருந்து அழுதது பலருக்கு இடைஞ்சலாய் இருந்தது. 'றோட்டுக்கரையிலை இழுத்துக் கொண்டு போங்க........', யாரோ கூறியபடி சாமான்களால் நிறைந்த தனது சைக்கிளை தள்ளிக் கொண்டு விலத்திப் போனார்.
கனகமும் செல்வியும் சிவதம்புவை றோட்டின் கரைக்கு இழுத்து வந்தார்கள் - உடம்பு கனத்திருந்தது போல இருந்தது. கனகம் ஒலமிட்டு அழுது கொண்டேயிருந்தாள் - செல்வி விறைத்தளவாய் பார்த்துக்  கொண்டேயிருந்தாள் - றோட்டால் போய் கொண்டு இருப்பவர்களுக்கு இது பத்தோடு பதினென்று.
 'ஒருவர் மட்டும் கிட்டவாக வந்து சந்தியிலை வந்திட்டான்கள் போலை கிடக்கு கெதியாய் நடவுங்கோ', என எச்சரித்துப் போட்டு போனார்.
பிள்ளை அப்பாவை அந்தப் பள்ளத்துக்கை கிடத்துவம..... என்றபடி கனகமும் செல்வியுமாக சிவதம்புவை றோட்டுக்கு அருகேயிருந்த பள்ளத்துள் இறக்கினார்கள். கைகளாளும் காட்டுத் தடிகளாலும் மண்ணை வறுகி சிவதம்புவின் உடலை மூடினார்கள். கனகம் பொருமி பொருமி அழுதாள்.

'
நான் உன்னை விரும்பிக் கட்டினதாலை தானே உன்னைக் கழிச்சு வைச்சவை. சிலவேளை உனக்கு முதல் நான் போனால் நீ பிள்ளையையும் கூட்டிக் கொண்டுபோய் உன்ரை கொண்ணை ஆக்களின்ரை பகுதியோடை இரு', இரண்டு வருஷத்துக்கு முதல் செல்வி பெரியபிள்ளையான பொழுது வீட்டுத் தாழ்வாரத்தடியிலை இருந்து சிவதம்பு சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. காசு, பணம், கௌரவம் எல்லாத்தையும் தேடி கனகத்தையும் செல்வியையும் ஒரு கைபிடி உப்புக்காக கூட அயலட்டைக்கு அனுப்பாத சிவதம்பு. . .இப்போது அதுவாகி றோட்றோர மண்ணுக்குள் மண்ணாக. . . கனகத்தின் கைகளை வலுக்கட்டாயமாக பிடித்துப் கொண்டு செல்வி சனத்தோடை சனமாக முன்னேறினாள்.
நெடுகலும் சிவதம்பு சொல்லுவார் - நான் ஒரு ஆண்பிள்ளைச் சிங்கத்தை பெத்து வைச்சிருக்கிறன் எண்டு. அவளே தலைச்சான் பிள்ளையாக தாயைக்கூட்டிக் கொண்டு மீண்டும் சனத்தோடு சனமாக. . . சனக்கூட்டமோ முன்னே போகும் ஆட்டுக்குப் பின்னால் போகும் மந்தையாக. . . கனகம் நடைப்பிணமாக செல்விக்குப் பின்னால்.
92இன் யாழ்ப்பாண இடம்பெயர்வின் பொழுது எங்கிருந்து வெளியேறினாலும் கிளிநொச்சியை அடைவதுதான் நோக்கமாய் இருந்தது. இப்பொழுதோ எங்கு போய் அடைவது என்று தெரியாமல் சனம் அள்ளுப்பட்டுக் கொண்டு இருந்தார்கள் - குண்டு விழாத இடங்களைத் தேடி. வன்னியில் இருந்து ஒரு தடவை செல்வி தாய், தகப்பனுடன் நல்லூர்த் தேர்த்திருவிழாக்கு போன போது சனவெள்ளத்தைப் பார்த்து பிரமித்துப் போயிருந்தாள். அந்த சனக்கூட்டத்தில் தாய் அடியழித்துக் கும்பிடப்போன பொழுது தகப்பனையும் தவறவிட்டு பின் இரண்டு மூன்று மணித்தியாலங்களுக்கு பின்னால் கண்டு பிடித்ததது நல்ல ஞாபகம் இருக்குது. இது பத்துமடங்கு நல்லூர்த் திருவிழா. சுற்றி சுற்றித் தேடி வர இங்கு உள்வீதி, வெளிவீதி என்று ஏதும் இல்லை. தவற விட்டால் அவ்வளவு தான். அதுவும் கனகம் இப்பொழுது இருக்கும் நிலையில். . . செல்விக்கு தன்னை நினைக்கவே ஆச்சரியமாய் இருந்ததுதாய் அழுதளவில் பத்தில் ஒரு மடங்கு கூட தகப்பனுக்கு பக்கத்தில் இருந்த தான் அழவில்லையே என்று! மரணங்களும். . .மரணபயங்களும் தன் உணர்வுகளைக் கூட மரக்கவைத்து விட்டதோ என்று எண்ணிப் பார்த்தாள். ஊரில் என்றோ ஒரு மரணம் வர அதிகாலை சொல்லிச் செல்லும் இழவுச் செய்தியில் தொடங்க..... பாடை கட்டு...... மரம் தறிப்பு...... .கொழும்பு பயணக்காரருக்கான காத்திருப்பு..... கிரியைகள்..... . பட்டினத்தார் பாடல்கள்...... சுடலையடியில் எழும் சின்ன சின்ன சண்டைகள்..... எட்டுச் செலவுகள்......  காடாத்து..... அந்தியட்டி என சுமார் ஒரு மாதமாய் அட்டவணைப்படுத்தப்பட்டு நடக்கும் காரியங்களில் எந்த ஒன்றும் இன்றி....... காகம் கொத்திக் கொண்டு போகும் வடையாக மனிதன் மறைந்து போகின்றான்.
இந்த ஒரு மாதத்துள் இப்படி எத்தனை?..... எத்தனை? ஏன் எதுக்கு என்று எவர்க்கும் சிந்திக்க அவகாசமும் இல்லைஅனுமதியும் இல்லை. . .ஓடுங்கோ. . .  ஓடுங்க.... .என்ற கட்டளையும் கட்டளைக்கு பணிதலும் தான். . .மக்கள் மக்களோடு ஒடியபட.....  நேற்றுக்காலை தான் கொஞ்சம் பாதுகாப்பான இடத்துக்கு வந்திருந்தார்கள் - இங்கு இனிக்குண்டு விழாது என்று அனைவரும் நம்பியபோது இவ்வளவு நாளும் மறந்திருந்த பசி தலை தூக்கியது...... தண்ணி விடாய்த்தது..... குளிக்காததால் உடம்பு பிசுபிசுத்தது...... ஆனாலும் குளித்தாலும் மாற்றுவதற்கு சீலையோ சட்டையோ இருக்கவில்லை. கனகத்திடம் உடுத்திருந்த சீலையைத் தவிரவும், செல்வியிடம் போட்டிருந்த சட்டையையும் தவிர எதுவுமே இல்லைஎதையுமே எடுத்துக் கொண்டு வர அவகாசம் இருக்கவில்லைஎடுத்து வந்த காசும் வழிவழியே செலவாக கைகளில் இப்பொழுது இருக்கும் இரண்டொரு நகைகள் தான் மிச்சம். இனி இதுகளை வித்துதான் ஏதாவது வேண்டவேணும். . . வெளிநாட்டிலை இருக்கிற ஆரிட்டையும் உதவி கேட்க வேணும்.
கனகத்தின்ரை ஆட்கள் கண ஆட்கள் வெளிநாட்டிலை தான் - சிவதம்புவை கட்டினதாலை விட்டுப் போன உறவுகள்.. . '.இனி அவையைத் தான் நாடவேணும்'
வாழ்வின் நிர்ப்பந்தங்கள் ரோஷ உணர்வுகளுள் தோற்றுக் கொண்டு இருந்ததுஎல்லாமே எங்களுக்குள் நாங்கள் போட்ட கதியால் வேலிகள் தான். . .   கொஞ்சம்  அகலப்படுத்தவோ அல்லது ஆழப்படுத்தவோ எங்குமே இடமிருக்கவில்லை. கனகமும் சிவதம்புவும் வேறு வேறு சாதி கூட இல்லை. ஆனால் சிவதம்புவின் பேரன் ஒரு சிங்களத்தியை வந்திருந்ததும் 83 கலவரத்தின் பின் சிவதம்புவின் குடும்பம் வியாபாரத்திலும் இளைத்ததும் தான் அவர்கள் இளக்காரமாய் போய்விட காரணமாகிவிட்டது. இன்று அந்தக் கனகம் கைம்பெண் கனகமாக கையில் ஒரு குமர்ப்பிள்ளையுடன். . .
'சாப்பாட்டு பாசல் குடுக்கினம்', யாரோ சொல்லக் கேட்டு அரை உயிரும் குறை உயிருமாய் அத்தனை பேரும் அடித்துப் பிடித்துக் கொண்டு கம்பி வேலிக்கு கிட்டவாக ஓடுகிறார்கள் - சிலருக்கு முள்ளுக் கம்பிகள் கீறிவிட்டது. ஆனால் பசியின் போராட்டத்தில் அதொரு பொருட்டல்ல. செல்வியும் அந்தக் கூட்டத்துள் போய்ச் சிக்கிக் கொண்டாள். . .  எட்டியவரை கையை நீட்டினாள். . .   எப்படியோ கையில் ஒரு பாசல் வந்து விழுந்தது.
'அம்மாக்கும் ஒரு பாசல் தாங்கோ'
'அப்பிடி எல்லாம் தர ஏலாது. ஆளுக்கொரு பாசல் தான்'
செல்விக்கு கண்கள் கலங்கியது. ஆனாலும் வேண்டிக் கொண்டு திரும்பினாள்.
'
உப்பிடித்தான் வேண்டிக் கொண்டுபோய் உள்ளுக்கை விக்கினமாம்'
செல்விக்கு யாரோ பிரடியில் அடித்தது போல் இருந்தது. சாப்பாட்டு பாசலை தூக்கி மூஞ்சையில் எறிய வேணும் போல் இருந்ததுஆனாலும் தாயை நினைத்துக் கொண்டாள். சுருண்டு கிடந்த தாயை எழுப்பி வற்புறுத்தி சாப்பிட வைத்தாள். சிவசம்புவின் நினைவுகள் மேலே வந்து அவளை விம்ம வைத்தது.
'அழாதை அம்மா' செல்வி தேற்ற முயன்று தோற்றாள்.

'
பிள்ளை நீ சாப்பிடு'
தாய் சாப்பிட மறுத்த மிகுதிச் சாப்பாட்டை அவள் சாப்பிடத் தொடங்கினாள். ஆனாலும் சாப்பாட்டு பாசல் தந்தவன் சொன்னது காதில் மீண்டும் கேட்க சாப்பாடே அருவருத்ததுஅருவருப்பை அடக்கி கொண்டு சாப்பிடப் பார்த்தாள் முடியவில்லை. – தூக்கி வெளியில் போட்டுவிட்டு படுத்து விட்டாள்.
நேரம் நடுநிசியை தாண்டிக் கொண்டு இருந்தது. 'ஏதாவது மருந்தை தந்து என்னைக் கொண்டு விடுங்கோ', என்று வலியின் வேதனையில் ஒருவர் குழறிக் கொண்டு இருந்ததை தவிர அதிகமானோர் நன்கு தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.
'கனகம் ஏன் நெடுக படுத்துக் கொண்டு இருக்கிறாய். . .  பிள்ளை அழுது கொண்டு இருக்கிறாள். . .' சிவசம்பு வந்து எழுப்பியது போலிருக்க கனகம் திடுக்கிட்டு எழும்பினாள். வியர்த்துக் கொட்டியது. திரும்பி செல்வியைப் பார்த்தாள். செல்வியைக் காணவில்லை.
கூடத்தினுள் இருந்த மற்றைய ஆட்களை மிதித்திடாதவாறு கவனமாக போக வேணும் என எழுந்த பொழுது செல்வி உள்ளே வந்து கொண்டிருந்தாள். பாவாடையின் கீழ்ப்பகுதி கிழிக்கப்பட்டு  ங்கிக் கொண்டு இருந்தது இரவின் வெளிச்சத்திலும் நன்கு தெரிந்தது. கனகத்திற்கு 'திக்'கென்றது.
பக்கத்து கூடாரப் பையன் ஒருத்தன் செல்வியையே முதன்நாள் வைத்த கண்வாங்காது பார்த்துக் கொண்டிருந்ததையும், வந்த இடத்தில் ஏன் பிரச்சனை என்று தான் பார்த்தும் பார்க்காமலும் இருந்தது ஞாபகத்திற்கு வந்தது.

'
எங்கையடி போனனி. . .என்ன நடந்தது. . .' தாய் பதைபதைத்தாள்.
உஷ் என விரலால் காட்டினாள் - மற்றவர்கள் எழும்பி விடுவார்கள் என்ற பதைபதைப்பில். ஆனால் கனகத்தினாள் மௌனமாயிருக்க முடியவில்லை.

'
சொல்லடி. . . இப்ப எனக்குத் தெரிய வேணும்' என வெளியே இழுத்துக் கொண்டு போனாள்.
மத்தியானம் தூக்கியெறிந்த சாப்பாட்டு பாசல் பகல் முழக்க வெயிலுக்குள் வெதுங்கி இருந்ததால் மணத்துக் கொண்டிருந்தது. அந்த மணம் வேறு வயிற்றைப் பிரட்டியது.

'
என்ன நடந்தது. . .ஏன் பாவாடை கிழிஞ்சு கிடக்கு'
தாயைக் கட்டிக் கொண்டு அழத்தொடங்கினாள். கனகத்தின் பெத்த வயிறு துடித்தது. . .

'
சொல்லடி பிள்ளை. . .சொல்லடி பிள்ளை. . .என்ன நடந்தது. . . யாரும். . .ஏதும். . . .'

'
இல்லையம்மா. . . தீட்டு வந்திட்டுது. . .அதுதான் பாவடைத் துணியை. . .'கனகம் செல்வியை இறுகக் கட்டிக் கொண்டாள். செல்வி பலமாக விக்கி விக்கி அழத் தொடங்கினாள்.

'
ஏனக்கா பிள்ளை அழுகுது'
தூக்கம் கலைந்த ஒருத்தி கூடாரத்துள் இருந்தவாறு கேட்டாள். 'பிள்ளைக்கு தேப்பன்ரை ஞாபகம் வந்திட்டுது' இப்போ இன்னும் பலமாக செல்வி அழத்தொடங்கினாள்.

No comments:

Post a Comment