Sunday, February 27, 2011

கொத்தமல்லிக்குடிநீர்

இரா.சம்பந்தன்

அம்மா! பிள்ளைகள் படுத்திருக்கினம். நான் போட்டு வாறன். பரிமளம் ஆச்சி எழுந்து உட்காருவதற்குள் அறைக் கதவைச் சாத்திவிட்டு மகள் போய்விட்டாள். ஆச்சிக்கு இன்றைக்கும் சுகமில்லைத் தான். போன கிழமை பேரப்பிள்ளைகளோடு கடற்கரைக் குளிரில் உலாவினதாக்கும் ஆச்சிக்கு நெஞ்சுத்தடிமன் ஆக்கிப் போட்டுது. சனியும் ஞாயிறும் ஒரே தலை அம்மல். மண்டையிடி. சாப்பாடு மனமில்லை. எழுந்து நடக்க உலாஞ்சியது.

இராத்திரிப் படம் பார்த்துக்கொண்டு இருந்த போது தொடர்ந்து நாலைந்து தடவைகள் இருமியதற்காக என்னம்மா படம் பார்க்க விடமாட்டீங்களா? போய் அறைக்குள்ளே இருந்து இருமுங்கோவன் என்று பட்டும்படாமலும் சிரித்துக் கொண்டு சொன்ன மகளை எண்ணி மனதுள் வேதனைப் பட்டுக்கொண்டு ஒரு தைனோலோடு படுத்த ஆச்சிக்கு இரவு முழுவதும் நித்திரை வரவில்லை.  தொண்டைக்குள்ளே யாரோ கோழிச்செட்டையாலே தடவின மாதிரி ஏதோ ஊர்ந்து ஒரு கண் நித்திரை கொள்ள விடாமல் ஒரே புகைச்சல்.


இரவு முழுவதும் தான்பட்ட பாட்டைப் பார்த்து மகள் எழுந்து வந்து என்னம்மா செய்யுது? சுடுதண்ணீர் வைத்துத் தரட்டோ என்று கேட்பாள் என்று எண்ணி ஏமாறுவதற்கு ஆச்சி கனடாவுக்கு வந்த புதிதல்ல. அம்மாவுக்கு அனுதாபம் காட்டி என்ன ஏதென்று விசாரித்தால் பிறகு தான் நின்றுதானே பிள்ளைகளைப் பார்க்க வேணும் என்ற நினைப்போடு பொன்சர் பண்ணிக் கூப்பிட்டது வேறு என்னத்துக்கு என்ற எண்ணமும் சில வேளைகளில் இருக்கலாம் என்று நினைத்து ஆச்சியும் ஒன்றையும் பெரிது படுத்துவதில்லை. ஆனால் இன்றைக்கு இரண்டு பிள்ளைகளையும் விட்டுப் போட்டு மனுசனும் மனுசியும் வேலைக்குப் போவினம் என்று ஆச்சி கனவிலும் எண்ணி இருக்கவில்லை.

ஒருமுறையல்ல விடிய ஒருமுறை மத்தியானம் இரண்டு முறை பின்னேரம் ஒருக்கால் என்றும் பெரியதை ஒருகையில்; பிடித்துக் கொண்டும் சிறியதை இடுப்பிலே சுமந்து கொண்டும் பள்ளிக்கூடத்துக்கும் வீட்டுக்கும் நாயாக அலையும் வாழ்க்கைக்கு வருத்தத்தைக் காரணம் காட்டி இன்றைக்கு லீவு தருவார்கள் என்று எண்ணியிருந்த ஆச்சிக்கு உண்மையில் ஏமாற்றமாகத் தான் இருந்தது.

தலையைக் கூட்டி முடிந்து கொண்டு கட்டிலை விட்டு இறங்கி ஒரு அடி வைக்கவில்லை. பித்தமாக்கும் வயிற்றைப் புரட்டியது. தற்செயலாக சத்தி வந்தாலும் என்று நினைத்து நேற்றே எடுத்துத் தலகணிக்குக் கீழே ஒளிச்சு வைத்திருந்த பொலித்தீன் பையை எடுத்து முகத்துக்குக் கிட்டப் பிடித்து ஆவென்று வாயைத் திறந்த போது தான் சின்னன் அதுதான் பேத்தி அஜி தொட்டிலுக்குள்ளே கிடந்து சரசரத்துச் சிணுங்கியது. ஓடியாறேன் குஞ்சு என்று சொல்லு முன்பே அம்மம்மா தங்கச்சியைத் தூக்குங்கோ என்று படுக்க விடுகுதில்லை என்று கத்தினான் பேரன்.

ஆச்சிக்கு வந்த சத்தியும் நின்று விட்டது. நெஞ்சைத் தடவிக்கொண்டு குழந்தையையும் தூக்கித் தோளில் அணைத்தபடியே பால்வைக்கப் போன ஆச்சிக்கு பால் காச்சும் கிண்ணத்தை அடுப்பில் வைத்த போதுதான்  ஒருநாள் பால் பொங்கி அடுப்புக்குள்ளே ஊற்றுப்பட்டதுக்காக மகளிடம் வாங்கிய ஏச்சு ஞாபகத்துக்கு வந்தது. என்ன உயிர் போற வேலை இருந்தாலும் பால் அடுப்பிலே வைத்தால் பக்கத்திலே நில்லுங்கோ அம்மா! கொஞ்சம் சத்தம் போட்டுத்தான் பிள்ளை சொன்னவள். சொன்ன விசயம் நியாயமானது தான் என்றாலும் சொன்ன விதம் இருக்கே அது ஒரு மாதிரித்தான். என்றாலும் பிள்ளைப்பாசம் ஆச்சி பொறுத்துக் கொண்டாள்.

குழந்தையைக் கழுவித் துடைத்து உடுப்பு மாற்றி ஒரு விசுக்கோத்தும் எடுத்துப் பாலோடு கொடுத்து இருத்திவிட்டு மூன்று நான்கு தடவைகள் அடுப்புக்கு மேலே கையை வைத்துப் பார்த்தாள் ஆச்சி. சூடு குறையத் தொடங்கி விட்டது. அடுப்பு நிற்பாட்டியதை உறுதி செய்து கொண்டு இரண்டு துண்டு பாணுக்குச் சூடுகாட்டி பட்டரும் பூசி மூத்த பொடிக்கு கோப்பியும் ஊத்தி வைத்துவிட்டு மேலே போனாள்.
ஏழரை மணிக்கு எழுப்பியம்மா வெளிக்கிடுத்திச் சாப்பாடு கொடுத்துப் போட்டு எட்டுமணிக்கு வெளியாலே கூட்டிக் கொண்டு இறங்கினீங்கள் என்றால்  அவசரப்படாமல் போகலாம் என்று ஒருமுறை மகள் விளங்கப்படுத்தினவள். அப்படிப் பார்த்தால் இன்னும் நிறைய நேரம் இருக்குத்தான். ஆனால் பொடியன் எழும்பி முகத்தைக் கழுவிப்போட்டுத் தங்கச்சியாரை ஒரு ஐந்து நிமிடம் பார்த்தால் தானே மற்ற அலுவல்களையும் பார்க்கலாம். வீடு கூட்டுவது சுவாமி கும்பிடுவது சமைப்பது சாப்பிடுவது போன்ற வேலைகளைக் குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டு செய்தாலும் குழந்தையையும் வைத்துக்கொண்டு செய்ய முடியாத ஒருசில வேலைகளும் உண்டு.

ஆச்சிக்கு இப்பவும் வயிற்றுக்குள் என்னவோ செய்தது. ஒருமுறை இருந்து பார்க்கலாம் தான் .பெட்டையை இறக்கி விட்டால் பேயடிச்சதைப் போல குழறும். பிறகு ஆத்தேலாது. அதுக்குப் பயந்து ஆச்சி அடக்கிக் கொண்டுதான் இருக்கிறாள்.

தம்பி குஞ்சு எழும்பு மோனை! பள்ளிக்கூடத்துக்குப் போகவேணுமல்லோ. என்னை விடுங்கோ அம்மம்மா. அப்படிச் சொல்லக்கூடாது ராசா. எழும்பு அப்பு! நான் பிள்ளைக்கு பாண் பட்டர் எல்லாம் பூசி வைச்சிருக்கிறன். எனக்கு பாண் வேண்டாம் அம்மம்மா. சூப் தான் வேணும். இனிச் சூப்பு காய்ச்ச நேரமல்லோ போய்விடும். அம்மா பாண் தானே குடுக்கச் சொன்னவள்? நேற்றும் சூப்புத்தானே குடிச்சது. நான் பிள்ளைக்கு இரவு காய்ச்சித் தாறன். அம்மம்மா எனக்குச் சூப் தான் வேணும். ஒரு சொல்வழி கேளாத பிள்ளை எழும்பிவா காச்சித் தாறன்.

சூப்பு என்றதும் தான் பரிமளம் ஆச்சிக்கு சடாசு அண்ணரின் மணியம் பெண்சாதி போனிலே சொன்னது நினைவுக்கு வந்தது. பரிமளம் அக்கா ஒரு சிறங்கை கொத்தமல்லி நாலைந்து மிளகு கொஞ்ச வெந்தயம் இரண்டு பல்லு உள்ளி கடுக சீரகம் எல்லாவற்றையும் இலேசாக வறுத்து எடுத்து கோப்பிக் கிறைண்டர் இருக்கல்லோ அதிலே போட்டு இரண்டு தரம் அரைத்துப் போட்டு தண்ணியைக் கொதிக்க வைத்து அவித்துக் குடி. துடிமன் தலைச்சுற்று எல்லாம் ஒரு நாளிலே பறக்கும் கண்டியோ. ஆதை விட்டுப் போட்டு இங்கே ஒன்றும் செய்ய மாட்டாய் அக்கா என்று சொன்னது. இன்றைக்கு அதையும் ஒருக்கால் செய்து குடித்துப் பார்க்க வேணும். இந்தப் பொல்லாத இருமல் ஒன்றுக்கம் நிக்குதில்லையே ஆச்சி நினைத்துக் கொண்டாள்.

எல்லாம் சரிதான். ஆச்சிக்கு கிரைண்டர் போடத் தெரியாது. சுpன்னக் கோப்பிக் கிரைண்டர் என்றால் சுகம்.  முகளிடம் இருக்கும் கிரைண்டர் வேறு மாதிரி. பெரிசு. மகள் போட்டுவிட உழுந்து அப்படி அரைத்துத் தான் ஆச்சிக்கப் பழக்கம். பொடியன் பள்ளிக்கூடம் போவதற்கு முதல் கேட்டு வைத்துக் கொண்டால் கொண்டுபோய் விட்டுப்போட்டு வந்து செய்து குடிக்கலாம்.

   எடதம்பீ! மோனே! இந்தக் கிரைண்டர் எப்படிப் போடுறது என்று சொல்லு ராசா.
   அம்மம்மா இங்கே பாருங்கோ இந்த வயரைப் பிளக்கிலே இப்படிக் குடுங்கோ. பிறகு எதைக் கிரைண்ட் பண்ணப் போறியளோ அதைப் போட்டு மூடியாலே மூடிப்போட்டு இப்படி அமத்துங்கோ இப்ப வேலை செய்யுதல்லோ
   சரிசரி நீ சாப்பிட்டுப் போட்டு இறங்கு. நான் பிறகு வந்து செய்யுறன். அம்மாடி உனக்கு சூப்பு ஆறட்டும் அண்ணாவை விட்டுப் போட்டு வந்து குடிப்பம்.
   ஆச்சி முகம் கழுவிக்கொண்டு வெளியாலே இறங்கிய பொது எட்டுமணி. அம்மா பள்ளிக்கூட வாசலிலே விட்டுப் போட்டு உள்ளே போறானோ என்று பார்த்துப் போட்டுத் தான் நீங்கள் வரவேணும். தற்செயலாக இவன் வாசலிலே நின்று ஏமலாந்த ஆராவது பிடிச்சுக்கொண்டு போய்விடுவான்கள் கவனம் என்ன? மகள் முதல் நாளே சொன்னவள். பேரன் உள்ளே போக ஆச்சி திரும்பி நடந்தாள். குடிநீர் வெறும் வயிற்றிலே குடிச்சால்தான் நல்லது என்று ஆச்சி இன்னமும் தேத்தண்ணீர் கூடக் குடிக்கவில்லை. பொடியைப் பதினொன்றரைக்குப் போய் கூப்பிடுவதற்குள் குடிநீரும் அவிச்சு பாத்திரங்களும் கழுவி கறியளும் வைக்க நேரம் காணுமா? காணும் காணும் ஆச்சி தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.
   குழந்தைக்கு சூப்பைக் கொடுத்து முடித்து விளையாட இருத்திவிட்டு ஆச்சி ஒரு சிறங்கை கொத்தமல்லியை எடுத்து மிளகு சீரகத்தோடு இரண்டு செத்தல் மிளகாயும் சேர்த்து வறுத்தாள். புதுச் செத்தல் ஆக்கும். சூடு பட்டவுடன் மிளகாய் புகைச்சூழ்ந்து இருமியது. ஆச்சி எல்லாவற்றையும் இறக்கி ஆறவிட்டாள். கிரைண்டரிலே போட்டுப் பேரன் சொன்னது போல அமர்த்தினாள். கிரைண்டர் வேலை செய்யவில்லை. ஆச்சிக்குப் பெருத்த ஏமாற்றமாகப் போய்விட்டது. அரைக்காட்டில் என்ன முழுசாகப் போட்டு அவிச்சுக் குடிப்பம் என்றுதான் ஆச்சி முதலில் எண்ணினாள். ஏதற்கும் பொடியன் இன்னும் ஒன்று ஒன்றரை மணித்தியாலத்திலே வந்திடும் கேட்போம் என்று நினைத்தவளாக மற்ற வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள்.
   குடிநீர் பொருட்களை அப்படியே கிரைண்டரோடு தள்ளிவைத்து விட்டு பாத்திரங்களைக் கழுவினாள் ஆச்சி. அதற்குள் பேத்தி அஜி அவித்து அரித்து பக்குவப்படுத்தி வைத்த மா வாளிக்குள் அரிசியை அள்ளிக் கொட்டி விட்டது. ஆச்சிக்கு இன்னொரு வேலை கூடி விட்டது. இங்கே விடு பிள்ளை என்று அரிசி அளவு பேணியைப் பறித்ததும் குழந்தை அழத் தொடங்கியது.
   ஆச்சி நேரத்தைப் பார்த்தாள். இன்னும் பத்து மணி ஆகவில்லை.பத்து மணிக்குத்தான் மகள் முதல் டெலிபோன் எடுக்கிறவள். அவள் போன் எடுக்கும் போது குழந்தை அழுதால் பிள்ளையை என்ன செய்யுறியள் என்றுதான் முதலில் கேட்பாள். அந்தக் கேள்விக்குப் பயந்து குழந்தையைப் பத்து மணிக்கு அழ விடுவதில்லை ஆச்சி.

   ஆச்சி பார்த்தாள். இன்றைக்கு என்ன சமைப்பது? மருமகனுக்கு கத்தரிக்காய் பிடிக்காது. தக்காளிப்பழம் கிரந்தியாம். உருளைக்கிழங்கு சாப்பிட வேண்டாம் என்று டாக்டர் சொன்னவராம். முருக்கங்காய்க் கறி வைக்கலாம். கீரை காச்சலாம். கோழிக்கால் இருக்குத்தான். ஒரு முறை சமைத்து வைத்ததற்கு கொம்மா ஏன் தெரியாத வேலைக்கெல்லாம் போறவ? இதை எப்படித் தின்னுறது? என்று மருமகன் சத்தம் போட்டது ஆச்சியின் காதிலும் விழுந்து விட்டது. அதற்குப் பிறகு ஆச்சி அந்த வேலைக்கெல்லாம் போவதில்லை.
   முன்பெல்லாம் பன்னிரண்டு மணிக்கு முன்பே ஆச்சி சமைத்துப் போடுவாள். ஆனால் வேலையாலே வந்து சாப்பிட சோறு காய்ந்து போகுது என்று மருமகன் மகளுக்குச் சொல்லி மகள் தனக்குச் சொன்ன பிறகு ஆச்சி கறிகளை மத்தியானமும் சோற்றை மூன்று மணிக்குப் பிறகும்தான் போடுறவள். ஆனால் ஆச்சிக்கு வேளைக்கப் பசிக்கும். அதனால் அனேகமாக முதல் நாள் மிஞ்சும் சோற்றைச் சூடாக்கி ஆச்சி சாப்பிட்டு விடுவாள். பேரனுக்கும் சிலவேளை அதுதான்.
   ஆச்சி திரும்பவும் முகம் கழுவப் போனாள். பிள்ளைகளின் உடுப்பு மகளின் உடுப்பு என்று எல்லாமே மூன்று நாட்களாக வாளிக்குள் கிடந்து புளித்து மணத்தது. அவளாலே ஏலாது என்றாலும் ஒருவரும் திரும்பிப் பார்க்காத அவற்றை தானும் அலம்பிப் போடாமல் வர மனதுக்கு ஒரு மாதிரியாய் கிடந்தது. எல்லாவற்றையும் துவைத்துப் பிழிந்து குளியலறைக் கம்பியிலே காயப் போட்டுவிட்டு நிலத்திலே குனிந்து தண்ணீh சொட்டு விழுகிறதா என்று பார்த்தாள் ஆச்சி. தண்ணீர் சொட்டுப் போடும் இடங்களில் பழந்துணிகளை விரித்து விட்டு முகம் கழுவிக் கொண்டு சுவாமிப் படத்துக்கு முன்னால் வந்தாள்.

முருகா! என்ரை பிள்ளை மருமகன் பேரப்பிள்ளைகள் எல்லாரும் நல்லாக இருக்க வேணும். ஒரு நோய் நொடி வரப்படாது. விபூதியை அள்ளிப் பூசிக் கொண்டு நேரத்தைப் பார்த்தாள். பத்து மணி. இப்ப போன் வரும்.


கலோ அம்மா என்ன செய்யுறியள்? இருக்கிறன் பிள்ளை. அஜி என்ன செய்யிறாள்? விளையாடுறாள்! வடிவாகச் சாப்பிட்டவளோ? அவள் எங்கே மோனை சாப்பிடுகிறது. தமையனுக்குக் காச்சின சூப்பிலே கொஞ்சம் குடிச்சாள். இதைச் சொல்வதற்குள் ஆச்சி மூன்று முறை இருமியிருப்பாள். டெலிபோனிலே கேட்டிருக்கும். மன ஆறுதலுக்காவது ஒரு வார்த்தை! ஆச்சிக்கும் கவலைதான். சரியம்மா நேரமாகுது. நான் பிறகு எடுக்கிறன். ஆச்சி போனை வைத்தாள். தேத்தண்ணீர் ஊற்றிக் குடித்தாள். குடிநீர் குடித்தால் சுகமாக இருக்கும். அதற்குக் கொடுப்பனவு இல்லைப் போலும்.

ஆச்சி பேரனுக்கு மிளகாய் போடாமல் பால்கறி ஒன்று வைத்தாள். நேரம் பதினொரு மணி. அவளுக்கு மனதிலே சந்தோசம். பன்னிரண்டு மணிக்குப் பொடியனைக் கூட்டிக்கொண்டு வந்து சாப்பாடு கொடுக்கும் போது எப்படியும் இந்தக் குடிநீர்ப் பிரச்சனையைப் பார்த்துப் போட வேணும். ஆச்சி சேலையை உடுத்தாள். வெளியாலே மழைக் குணமாய்க் கிடந்தது. குழந்தைக்குக் கம்பளி உடுப்புப் போட்டுக் கட்டினாள். வீட்டைப் பூட்டிக்கொண்டு இறங்கினாள்.

பொடியனைத் திரும்பவும் கொண்டுபோய் விட்டுப் போட்டு வரும் போது தெரு மூலையில் காயிதம் பார்க்க வேணும். இல்லாவிட்டால் இன்றைக்கு கடிதமும் பார்க்க நேரமில்லாமல் மணித்தியாலக் கணக்கிலே போன் கதைச்சு இருக்கிறியள் போலக்கிடக்குது என்று சொல்லி மகள் சிரிக்கும் போது சரியான கவலையாக இருக்கும். தெரிந்தவர்கள் எடுக்கும் டெலிபோன்களே வயது முதிர்ந்த சனங்களுக்கு ஆறுதலான விசயம் என்பதை இந்தப் பிள்ளையும் உணரும் ஒரு நாள் வருந்தானே ஆச்சி நினைத்துக் கொள்வாள்.


பள்ளிக்கூடம் விடமுன்பே போய் ஆச்சி ஐந்து பத்து நிமிடங்கள் காத்துக் கொண்டு நிற்பது வழக்கம். அப்படி நிற்கும் போது சில தமிழ்ச் சனங்கள் பேரப்பிள்ளைகளைக் கூப்பிட வருவார்கள். அவர்களின் நடை உடை பாவனையைப் பார்க்கும் போதும் கதைகளைக் கேட்கும் போதும் தான் கொத்தடிமையோ என்ற எண்ணம் கூட ஆச்சிக்கு ஏற்படுவதுண்டு.

வந்த புதிதிலே விசயம் தெரியாமல் ஆச்சியும் கொஞ்சம் முரண்டு பிடித்தவள் தான். சத்தமாகக் கதைத்தவள் தான். அதற்காக மாதக் கணக்கிலே மகள் கதைக்காமல் இருந்ததும் மருமகன் காசு கொடுத்துப் பிள்ளைகளைப் பக்கத்து வீட்டிலே பார்க்க விட்டதும் ஆச்சிக்குப் பெரிய துன்பமாகப் போய் விட்டது. எல்லாவற்றையும் விடப் பேரப்பிள்ளைகளைத் தன்னுடன் கதைக்க விடாமல் தடுத்து வைத்திருந்த அந்த நாட்களை இன்றைக்கு நினைத்தாலும் ஆச்சிக்குத் தேகமெல்லாம் நடுங்கும்.

 இப்போதெல்லாம் ஆச்சி அவர்கள் சொல்லுவதை மட்டும் செய்துவிட்டு இருந்து விடுவாள்.
மோனே! கிரைண்டர் வேலை செய்யேல்லையடா! பேரன் சாப்பிடும் வரை பொறுமையாக இருந்த ஆச்சி சொன்னாள். கையைத் துடைத்துக் கொண்டு கிரைண்டரை என்னவோ செய்யும் பேரனை ஆசையோடு பார்த்தாள்.

அம்மம்மா! நீங்கள் கிரேஸி. சுவிச்சைப் போட்டால் தானே பவர் வரும். கிச்சின் லைட்டைப் போடுங்கோ. இப்ப பாருங்கோ கிரைண்டரிலும் சிவப்பு லைட் எரியுதல்லோ இனி வேலை செய்யும் அம்மம்மா!

எட கடவுளே நான் அதை யோசிக்கவில்லை அப்பு. பகலிலே லைட்டு எரிஞ்சால் கொம்மா பேசுவாள் என்று பயந்து நான் தான் நிப்பாட்டினனான். பிறகு மறந்து போனன். உப்பிடித்தான் சில வேளை கேத்திலையும் வைத்துப்போட்டு இருந்து கொதிக்குது கொதிக்குது என்று இருந்து ஏமாறுறது.

அம்மம்மா! நான் கிரைண்ட் பண்ணித் தரட்டோ? குஞ்சு! பிள்ளைக்கு மிளகாய் கண்ணெரியும். தும்மும்! நீ விடு ராசா நான் உன்னைக் கொண்டுபோய் விட்டுப்போட்டு வந்து செய்யுறன்.

ஆச்சி பள்ளிக்கூடத்தில் இருந்து ஓட்டமும் நடையுமாக வந்தாள். வரும் போதே குழந்தை வழியில் நித்திரையாகி விட்டது. மெதுவாகக் கொண்டுபோய் மேலே கிடத்திவிட்டு பூனை போல இறங்கி வந்தாள். அடுப்பிலே தண்ணீரைக் கொதிக்க வைத்தாள். சிறிது உப்பும் போட்டாள். கிரைண்டரை இழுத்து இடக்கையால் வயிற்றோடு அணைத்துக் கொண்டு வலது கையால் மூடியைப் போட்டு அழுத்தினாள். சத்தத்துக்குப் பிள்ளை எழும்பி விடுகிறதோ தெரியாது. அது வேலை செய்யவில்லை. கிரைண்டர் தட்டுப்பட்டு மின் தொடர்பை இழந்திருந்து.


மூடியை எல்லாப் பக்கத்துக்கும் திருப்பிப் பார்த்தாள் ஆச்சி. ஒரு பலனும் இல்லை. கிடக்கட்டும். தற்செயலாக உடைந்தாலும் அது பிறகு கரைச்சல் பிடிச்ச வேலையாகப் போய்விடும். பொடியனே வரட்டுக்கும்.

ஆச்சி குக்கரைக் கழுவி அரிசி போட்டாள். அடுப்பை நிறுத்திவிட்டு நிலமெல்லாம் கூட்டி அள்ளினாள். குழந்தை அஜி சிதற அடித்திருந்த விளையாட்டுச் சாமான்களை எல்லாம் பொறுக்கி ஒழுங்கு படுத்தினாள். இரவு புட்டு அவிக்கத் தேங்காய் திருவி வைத்தாள். குழந்தை எழுந்து விட்டது. சாப்பாடு தீத்தினாள். ஆச்சிக்கும் பசிப்பது போல இருந்தது. என்றாலும் பொடியனும் வரட்டும் என்று நினைத்துக் கொண்டாள். மூன்றேகால் ஆனது. ஆச்சி திரும்பவும் பள்ளிக்கூடத்துக்கு இறங்கினாள்.

தம்பீ! நான் இன்னமும் குடிநீர் வைத்துக் குடிக்கவில்லை ராசா! அம்மம்மாவுக்கு நீ ஒருக்கால் அரைத்துத் தா தம்பி!


வாங்கோ அம்மம்மா நான் கிரைண்ட் பண்ணித் தாறன். நீங்கள் இன்னமும் ஒன்றும் சாப்பிடல்லையா? பசிக்கலையா? உங்களுக்கு காச்சலா? அம்மான்ரை டாக்டரிட்ரை பஸ்சிலே போவமா? வாறீங்களா?
கேள்விகளாகவே கேட்டுக்கொண்டு பக்கத்தில் நடந்துவந்த பேரனின் தலையைத் தடவினாள் ஆச்சி. நீ எங்களின்ரை அடி மோனை! அதுதான் உனக்கும் சரியான இரக்க குணம் ராசா! உன்னைப் போலத்தான் செத்துப்போன அப்பப்பாவும்! ஆருக்காவது வருத்தம் துன்பம் என்றால் மனுசன் உயிரை விட்டுப்போடும். அந்தாளின்ரை ஞாபகத்துக்கு நீ இருக்கிற படியால் தான் இந்த வீட்டிலே எனக்கு இன்னமும் பைத்தியம் பிடிக்காமல் இருக்குது.

அம்மம்மா அழுகிறியளா? ஏன் தலை இடிக்குதா?  இல்லைக்குஞ்சு நீ நட!
ஆச்சி திரும்பவும் அடுப்பைப் போட்டாள். பேரன் அரைத்துத் தந்த குடிநீர்ப் பொடியை பழைய பேப்பரில் கொட்டினாள். தேயிலை வடியையும் தேடி எடுத்தாள். ஒரு கிண்ணத்தில் பழப்புளியையும் ஊறவிட்டாள். கிரைண்டரை ஈரத்துணியாலே துடைத்து மூடியையும் கழுவி வைத்தாள். கொதிக்கும் தண்ணீரில் அரைத்தெடுத்தவற்றைக் கொட்ட இருந்த சமயம் அம்மம்மா ஓடிவாங்கோ அஜியின்ரை ஒரு தோட்டைக் காணவில்லை என்றான் பேரன்.

ஆச்சிக்கு வருத்தம் எங்கு போனதோ தெரியவில்லை. அடுப்பை நீறுத்திவிட்டு ஓடி வந்தாள். வலக்காதுத் தோட்டைக் காணவில்லை. ஆச்சிக்குத் தேகம் நடுங்கியது. குழந்தையின் உடுப்பெல்லாம் கழட்டி உதறிப்பார்த்தாள். தனது தாவணிச் சேலை மடி எல்லாம் உதறிப் பார்த்தாள். இல்லை.

வீட்டிலே விழுந்துதோ வெளியிலே விழுந்துதோ கடவுளே நான் எங்கே தேட? வுந்து ஏசப் போறாளே. இன்றைக்கு வேலைக்குப் போன காசு அநியாயமாகப் போட்டுது என்று சொல்லப் போறாளே!  நான் எங்கே போய்த் தேட? குட்டில் தொட்டில் கட்டிவைத்த குப்பை எல்லாம் கிளறி ஆச்சி ஏமாந்து விட்டாள். ஆச்சிக்கு வியர்த்தது. முகம் கழுவின போது பைப்புக்குள்ளே விழுந்துதோ தெரியவில்லையே!

மூன்று தடவைகள் ஆச்சி பள்ளிக்கூடத்துக்கும் வீட்டுக்கும் நடந்து பார்த்தாள். கிடைக்கவில்லை. ஆச்சிக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வந்தன. எவ்வளவு கவனமாகப் பார்த்தும் கடைசியிலே இப்படி ஒரு குறை கேட்க வேண்டியதாயப் போட்டுது. என்ரை தலை விதி! பேசினால் பேசட்டும். வீட்டு வாசலிலே குழந்தையை வைத்துக்கொண்டு இருந்தாள்.

ஏனம்மா உதிலே இருக்கிறியள்?
என்னைப் பேசாதே பிள்ளை. இதின்ரை ஒரு காதுத் தோடு எங்கையோ விழுந்து போச்சுது மோனை. எல்லா இடமும் தேடிக் களைத்துப்போய் இதிலே இருக்கிறன்.

அது தொலையேல்லை. நான் தான் கழட்டி வைச்சனான். உங்களுக்கச் சொல்ல மறந்து போனன்.

நான் குடிநீர் வைக்க வெளிக்கிட்டுப் போட்டு தோட்டைக் காணவில்லை என்று நீ வந்து பேசப் போறாய் என்ற பயத்திலே இதிலே குந்திக்கொண்டு இருக்கிறன்.

உங்கே மல்லி ஒன்றும் அவிக்க வேண்டாம். மல்லி மணம் ஒரு கிழமை சென்றாலும் போகாது. பிறகு மனுசன் என்னோடைதான் கத்தும்.

ஆச்சி ஒன்றும் பேசவில்லை. பரிமளம்! நீ இங்கே வாம்மா! எனக்குப் பக்கத்திலே வா! என்று ஆகாயத்தில் இருந்து விசுவலிங்க அப்பு அவர்தான் பரிமளம் ஆச்சியின் கணவர் கூப்பிடுவது மட்டும் ஆச்சிக்குக் கேட்கின்றது.

No comments:

Post a Comment