Tuesday, February 8, 2011

மோகம்

ஜோர்ஜ் சந்திரசேகரன்









'மோகத்தைக் கொன்றுவிடு - அல்லாலென்றன் மூச்சை நிறுத்திவிடு.'

இரண்டு நாட்களுக்கு முன் பாரதி விழாவில் யாரோ ஒரு மெலிந்த சொற்பொழிவாளர் பாடிக் காட்டிய அந்தப் பாரதி பாடலின் வரிகள் அவனையுமறியாமல் அவனுள் மிக ஆழத்திலிருந்து வெளிவந்தன. அந்த வரிகளுக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதாக அவன் உணர்ந்தான். முன்பெல்லாம் அந்த நினைவு வரும்போது, அவன் அதிலேயே அமிழ்ந்து லயித்து விடுவான். ஆனால் இன்று, ஓடிக்கொண்டிருக்கும்  டிராலி பஸ்ஸில் தனக்கு முன் அமர்ந்திருக்கும் பெண்ணைப் பின்புறமாகப் பார்த்து நினைவால் தழுவு முன்பே ஏதோ ஒன்று தடுத்தது.

'சே, என்ன கேவலமான பழக்கம். முன்னால் உட்காhந்திருப்பது நம் அக்காவாக இருந்தால், தங்கையாக இருந்தால், அண்ணியாக இருந்தால் இப்படியெல்லாம் நினைக்கத் தோன்றுமா? நாமே ஏன் நம்மை ஏமாற்றிக் கொள்ள வேண்டும்? இனிமேல், காணும் பெண்களையெல்லாம் அக்காவாய், தங்கையாய், அண்ணியாய் எண்ணிக் கொள்ளவேண்டும். அப்போதுதான் இந்த மாதிரிக் கீழ்த்தரமான சிந்தனைகள் எல்லாம் வராது.'

ஓடிக்கொண்டிருக்கும் டிராலி பஸ்ஸில் லொட லொடத்த ஒலியினூடே மீண்டும் சுருதியோடு முணுமுணுத்துத் தலையை ஆட்டிக் கொண்டான் செல்வராஜன்.

பஸ்ஸின் ஆட்டத்தில் குலுங்கி ஆடிய அவன் வலது காலில் சுற்றியிருந்த பண்டேஜீக்குள் தற்காலிகமாக மூடிக்கிடந்த காயத்தினூடே எலும்பில் ஏறிய மெல்லிய வலிகூடத் தெரியவில்லை. அந்த வரிகளை அவன் மீண்டும் மீண்டும் தனக்குள் பாடிக் கொண்டே இருந்தான். அந்த வரிகளைப் பாடப்பாட அவன் ஆன்மாவில் கவிந்து கிடந்த பாலுணர்வுகளெல்லாம் கரைந்து, மங்கி மறைவதுபோல் அவனுக்குத் தோன்றியது. மீண்டும் அந்த ராட்சத எண்ணங்களுக்குத் தன் மண்டையில் இடம் கொடுக்கக் கூடாதென்ற உறுதியோடு அந்த இரண்டு வரிகளை மட்டும் பாடிக்கொண்டே இருந்தான்.

கொட்டாஞ்சேனையிலிருந்து பொரளைக்கு அலறிக் கொண்டோடிய டிராலி பஸ் ஆமர் வீதி ஸ்ராண்டிலே வந்து நின்றது. மேல் தட்டில் கடைசிச் 'சீட்'டில் உட்கார்ந்திருந்த செல்வராஜன் கண்ணாடியோடு தலையைச் சாய்த்துக் கண்களைத் தாழ்த்திக் கீழே நிற்கும் 'கியூ'வைப் பார்த்தான்.

'சுள்'ளென்றடிக்கும் காலை வெய்யிலில் 'கியூ' வரிசை நீண்டு வளைந்து கோட்டை பஸ்ஸை எதிர் நோக்கி நிற்கும்  ஸ்ராண்டையும் கடந்து போய்க் கொண்டிருந்தது. எல்லோர்முகங்களிலும் பஸ்ஸில் ஏறிவிட வேண்டுமென்ற ஆவல் துடித்துக் கொண்டிருந்தது. ஒருவர் பின்னால் ஒருவர் நெருக்கி நின்று கொண்டார்கள்.

பஸ்ஸில் ஏறிக் கொண்டிருந்த ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். மேலே இருந்து கீழே நிற்கும் மனிதர்களைப் பார்ப்பது வேடிக்கையாக இருந்தது. குட்டையான உருவங்கள் ஏறும்போது சாதாரணமாகத் தெரியாத அவர்களின் தலை உச்சி நன்றாகத் தெரிந்தது. எத்தனையோ விதமான - இதுவரை அவன் பார்த்திராதவிசித்திரமான வகிடுகள், நேர் வகிடுகள், வகிடுகளே அற்ற சூரிய ஒளியில் மின்னி ஒளிரும் வழுக்கைத் தலைகள்.....


திடீரென, பஸ்ஸில் ஏறிக் கொண்டிருந்த மனிதருக்கு மூன்றாவதாக வந்து கொண்டிருந்த ஒரு பெண்ணின் மேல் அவன் கண்கள் இழுபட்டன.

பஸ்ஸிலேயே காலெடுத்து வைத்தவர் உள்ளே போய் விட்டார். அவருக்குப் பின்னால் நின்றவர் ஏதோ ரூபாய் நோட்டைக் கொடுத்து மாற்றிக் கொண்டிருந்தாரோ.... அந்தப் பெண் டிராலி பஸ்ஸில் ஏறாமல் அப்படியே நின்றாள், செல்வராஜனின் கண்கள் அவளை 'முழுக்காட்டி' யெடுத்தன.

கருவானைக் கிழித்துக் கொண்டு பாயும் மின்னலைப் போல் அவள் சுருண்ட கேசங்களைப் பிரித்துக் கொண்டு பளிச்சிட்டது நேர்வகிடு. அதற்குப் பிறகு, அவள் தலைக்குக் கீழே அவனுக்குத் தெரிந்ததெல்லாம் நீலச் சோளியை நிரப்பிநிற்கும் அவள் மார்பகங்கள் தான்.

அவன் பார்வை, அவள் சட்டையின் பென்னம் பெரிய கழுத்திற்கு வெளியே பிதுங்கி நின்ற தசைக் கோளத்தை வட்டமிட்டு மொய்த்தது, கருநீலச் சட்டை, அவள் மார்பகங்கள் இரண்டும் பிரியும் அந்தத் தசைப் பிரதேசத்தை இன்னும் பொன்னிறமாக்கிக் காட்டியது.

ஒரு கணத்தின் பாதிக்குள் அவள் பஸ்ஸில் ஏறிவிட்;டாள்.

செல்வராஜன் இன்னும் கீழே பார்த்துக் கொண்டிருந்தான், கண்கள் பார்ப்பவற்றைப் பதிவு செய்ய மறுத்தன. மண்டை ஓட்டுச் சுவர்களுக்குள் அதே காட்சி முட்டி மோதி எதிரொலித்துக் கொண்டிருந்தது. டிராலிபஸ் புறப்பட்டது.

பெண் மார்பின் ஒரு சிறு பாகம் தன்னைக் கலக்கிவிட்டது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது: வெட்கமாகவும் இருந்தது. தலையை ஒரு முறை மெல்ல ஆட்டிக் கொண்டான்.

'மோகத்தைக் கொன்று விடுஅல்லாலென்றன் மூச்சை நிறுத்திவிடு.'

இம்முறை வார்த்தைகள் உதடுகளை மிகவும் வேகமாக அசைத்தன. சுருதியற்ற ஒலி, யாரையோ பார்த்துக் கெஞ்சுவது போல் அழுத்தமாக வெளிவந்தது.

அவன் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்தான். ஆனால் சிறிது நேரத்திற்கு முன் கண்; அந்தக் காட்சியை அவனால் ஒரேயடியாக வெளியே பிடித்துத் தள்ளிவிட முடியவில்லை.

டிராலி பஸ் மருதானைக்கு வந்துவிட்டது. கீழே பார்க்கக் கூடாதென்று மனம் சங்கற்பம் செய்துகொண்டாலும், தலை கீழ் நோக்கித் திரும்புகிறது. கீழே நிறையப் பேர் நெருங்கி ஏறுகிறார்கள். – எல்லோரும் ஆண்கள். அவன் தலையைத் திருப்பிக் கொள்கிறான்:

டிராலிபஸ் புறப்பட்டது.

மருதானையில் ஏறி அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்த கால் சட்டைக்காரர் தன் கையிலிருந்த ஆங்கிலச் சினிமாப்பத்திரிகையைப் பிரித்தார். அவனும் திரும்பி அதைப் பார்த்தான்.

இரண்டு மூன்று பக்கங்களை அசுவாரஸ்யமாகத் திருப்பியவர், திடீரென ஒரு பக்கத்தை திருப்பிப் பிடித்துக் கொண்டார். அந்தப் பக்கத்தின் பாதியை விழுங்கி நின்றாள் அரைநிர்வாணமான ஒரு சினிமா நடிகை. அவன் ஆவலோடு படத்தைக் கவனித்தான். அந்த நடிகையை எங்கோ, எப்போதோ பார்த்ததாக ஞாபகம், பெயரைக் கவனிப்பதற்கு முன்பதாகவே பக்கத்தைப் புரட்டிவிட்டார் உடையவர். அதற்குப் பிறகு அத்தனை சுவாரஸ்யமான படம் ஒன்று கூட அந்தப் பத்திரிகையில் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை. திடீரென்று அவனுக்கு ஞாபகம் வந்தது.

'பிரிஜட் பாடொட்'

ஐம்பது சதத்தைக் கையிலே பிடித்துக்கொண்டு 'செவோய்' தியேட்டருக்குச் சைக்கிளில் ஓடிய ஓட்டம் ஞாபகத்திற்கு வந்தது. அத்தோடு அந்தப் படமும் அதன் காட்சிகளும் மனத் திரையில் வெகு வேகமாக ஓட ஆரம்பித்தன. அந்தப் பிரெஞ்சு நடிகையின் அரை நிர்வாணத்தோற்றம். குளித்துவிட்டு வந்த கோலத்தில் நிர்வாணமாக நின்று தன் பின்புறத்தைக் காட்டும் போதையூட்டும் காட்சி, படத்தில் வந்த முரட்டுக் கதாநாயகன் அவளை அள்ளியெடுத்து இறுக படுக்கையில் புரண்டது.

டிராலிபஸ் சின்ன பொரளையில் ஆடி நின்றது.

பதறியடித்துக் கொண்டு, பண்டேஜ் போடப்பட்டிருந்த காலையும், அதில் மாட்டியிருந்த செருப்பையும் இழுத்துக் கொண்டே அவன் இறங்கினான். இறங்கிய வேகத்தில் கால் எலும்பிற்குள் இலேசாக வலி கண்டது.

'ஒரு சிகரெட் பற்றவைத்தால் ஆஸ்பத்திரிக்குப் போய் விடலாம்.'

எதிரே உள்ள கடைக்குப் போய் சிகரெட் ஒன்றை வாங்கி உதடுகளில் இடுக்கிப் பற்றவைத்துக் கொண்டு திரும்பியவனின் பார்வை, பக்கத்துத் துணிக்கடையின் கண்ணாடி Nh-ரூமிற்குள் வைக்கபட்டிருந்த பிளாஸ்டிக் மார்பகங்களில் சுருண்டது. அந்தப் போலி மார்பகங்களில் 'பிரஸ்ஸியர்கள்' மாட்டப்பட்டிருந்தன. பக்கத்தில் ஒழுங்காக வைக்கப்பட்டிருந்த சேர்ட்கள் களுசான்கள் ஒன்றுமே அவன் கண்களுக்குத் தெரியவில்லை. ஒரு நிஜப் பெண்ணின் விம்பிய மார்பகங்களும், அவற்றை இறுக்கிப் பிடித்திருக்கும் பிரஸ்ஸியருமே அவன் நினைவை நிரப்பி நின்றன.

ஆஸ்பத்திரியிலிருந்து, மருந்து நெடியோடும் விண் விண்ணென்று தெறிக்கும் பண்டேஜிட்ட காலுடனும் திரும்பவும் சின்ன பொரளை டிராலிபஸ் ஸ்டாண்டிலே வந்து நின்றான் செல்வராஜன்.

பால் நினைவுகளையெல்லாம் வலி ஒருவாறாகக் கரைத்திருந்தாலும், பஸ்ஸிலே வரும்போது கண்ட பெண்ணும், நடிகை பிரிஜட் பாடொட்டும், துணிக்கடை 'N கேசி'ற்குள் பார்த்த போலி மார்பகங்களும் லேசாக நினைவைத் தொட்டு மீண்டன.

டிராலிபஸ் வந்து நின்றது. 'கியூ'வில் கூட்டம் அதிகமில்லா விட்டாலும் பஸ்ஸில் பெரியதொரு கூட்டம் புழுங்கிக் கொண்டிருந்தது.

மேல் தட்டிற்கு ஏற முடியவில்லை. புதிதாகத் தோலுரித்துக் கழுவி, மருந்து வைத்துக் கட்டப்பட்ட புண்ணின் எரிச்சல் மேலே ஏறினால் அதிகரித்து விடுமோ என்ற பயம் அவனைக் கீழ்த் தட்டிற்கு ஏற்றி விட்டது. ஆனால் உட்காருவதற்குத் தான் இடமில்லை.

நின்று கொண்டே வந்த செல்வராஜனுக்கு அடுத்த ஸ்ராண்டிலே ஒரு பெண்ணுக்குப் பக்கத்தில் உட்காரும் வாய்ப்புக் கிடைத்தது. கற்பனைகள் மண்டையை உடைத்தெறிய அந்தப் பெண்ணோடு உரசிக்கொண்டு உடகார்ந்தான். பஸ் குலுங்கிக் குலுங்கிப் போகும்போது, அவள் மென்மையான உடல் தன்மேல் பஞ்சுபோல் படுவதை அவன் உணர்ந்தான், அவன் மேனியில் அவள் உடல் பட்டபோது, மயிர்க்கால்கள் நிமிர்ந்து நின்றன. போதை தலையைக் கிறக்கியது. அவன் இன்னும் சற்று அந்தப் பெண்னோடு உராய்ந்து கொண்டு நெருங்கி உட்கார்ந்தான்.

ஆமர்வீதியில் டிராலிபஸ் நிற்கும்வரை, பெண்மையின் மென்மையில் இதம் கண்டு கொண்டிருந்தவனை ஏமாத்தி விட்டு இறங்கிப் போய்விட்டாள் அந்தப் பெண்.

அவள் இறங்கிப் போனதன் பின்தான் அவன் தன் உணர்வு பெறலானான். இரண்டு வாரங்களுக்குப் பிறகு எழுத வேண்டிய சோதனை ஞாபகத்திற்கு வந்தது. 'இந்த முறையாவது பாஸ் பண்ணிவிட வேண்டும். இல்லையென்றால் அண்ணாவின் கோபத்திற்கு ஆளாகவேண்டி வரும்.'

திடீரென அவன் உலர்ந்த உதடுகள் பிரிந்தன.

'மோகத்தைக் கொண்றுவிடுஅல்லாலென்றன்
மூச்சை நிறுத்திவிடு.'

ஏதோ, புதியஒளி, மூளையில் கவிந்து கிடந்த இருளைத்துரத்துவது போன்ற பிரமை, உடம்பில் சற்று தெம்பு பிறந்தது.

'இத்தனை வீண் சிந்தனைகளுக்கும் பதிலாக 'பொடனி'யல் 'டிஸ்பேர்ச'லைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாலாவது பரீட்சைக்கு உதவியாக இருந்திருக்கும்.'

நேரத்தை வீணாக்கி விட்டதாக அவன் தன்னைத்தானே நொந்து கொண்டான்.

'பக்கத்தில் உட்கார்ந்திருந்த பெண் அண்ணியாக இருந்தால் இப்படியெல்லாம் சிந்தித்திருப்பேனா? அப்படி நினைத்திருந்தால் எவ்வளவு பெரிய பாவம். முன்னம் எத்தனை முறை அண்ணிக்குப் பக்கத்தில் இருந்து கொண்டு பஸ்ஸில் போயிருக்கிறேன். அப்போதெல்லாம் இந்த எண்ணம் ஏற்பட்டதே கிடையாதே. பிறகு, வேறு பெண்களைக் கண்டால் மட்டும் ஏன் இந்தத் தகாத எண்ணம் ஏற்படுகிறது? இனிமேல் இதற்கெல்லாம் ஒரு கட்டுப்பாடு வைத்துக் கொள்ள வேண்டும். திடசித்தம் இல்லாதவன் ஒரு மனிதனா? மனதை கட்டுப்படுத்தாதவன் மிருகம்.'

டீராலி பஸ்ஸை விட்டு இறங்கி, வீட்டை அடையும்வரை வாய் பாரதி பாடலின் அந்த முதல் வரிகளையே முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

பால் நினைவுகளையெல்லாம் வெற்றிகொண்டு விட்டதாக அவனுக்கு ஒரே பெருமிதம்.

வலிக்கும் காலை தூக்கி வந்த அலுப்பினாலும், மண்டையை உடைத்த சிந்தனையோடு போராடிய சோர்வினாலும், அவிழ்ந்து தொங்கிய பண்டேஜைக் கவனியாது, வீட்டிற்குள் வந்ததும் வராததுமாகச் சாய்வு நாற்காலியில் சாய்ந்தான் அவன்.

சோர்ந்து போய் சாய்வு நாற்காலியில் சாய்ந்துவிட்ட செல்வராஜனைக் கண்டு கையிலிருந்த வேலைகளையெல்லாம் போட்டு விட்டு ஓடிவந்தாள் கமலா.

'செல்வா, என்ன செய்யுது... களைப்பாய் இருக்கா....' தலை மயிரை மெல்லக் கோதிவிட்டாள் அவள்.

கண் மூடிக் கிடந்தவன் மெல்லக் கண் திறந்து பார்த்தான்.

'இரு, கோப்பி கொண்டு வாறன்' என்று திரும்பியவள், அவிழ்ந்து தொங்கும் பண்டேஜைக் கண்டு, குனிந்து அதனக் கட்ட ஆரம்பித்தாள்.

செல்வராஜன் சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தான்.

கழுத்தருகே இரண்டு பொத்தான்கள் பூட்டப் படாததால் பெருதாகக் காட்சியளிக்கும் 'டிரசிங் கவு'னின் கழுத்திற் கூடாக அவள் மார்பகங்கள் தெரிந்தன.

மறுகணம், எழுந்த வேகத்தோடு தலையைத் திருப்பிக் கொண்டு சாய்ந்தான். எலும்பிற்குள் மெல்ல வலித்தது.

2 comments: