Saturday, February 5, 2011

புதியவன்

மணியம்

உடலிலோ வெயில் புழுக்கம், உள்ளத்திலோ வேதனைப் புழுக்கம். இந்த இரு புழுக்கங்களையும் தன்னடக்கிய என்னுடலைச் சுமந்து கொண்டிருந்தது அந்தச் சாய்மனை. நீட்டிய சட்டங்களில் காலைப் பின்னிப்போட்டுக் கொண்டு, உள்ளிழுத்த சிகரட் புகையை வெளியே தள்ளிக் கொண்டிருந்தேன். 'வட்டம் வட்ட' மாக, 'சுருள் சுருளா' மேலேழுந்து செல்லும் அந்தப்புகை நெளிவுகளில் மனதிற்கு அமைதி தரும் ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டிருந்தேன்.

'அமைதி', நான் 'கிட்டக்கிட்ட' செல்கிறேன். அது 'எட்ட எட்ட' விலகிச் செல்கிறது.

தவறுதல் மனித இயல்பு. மேலும் தவறு செய்யாமல் பார்த்துக் கொள்வது மனித அறிவு. செய்த தவறை உணர்ந்து திருந்தி வாழ வேண்டும். அருமையான வாக்கியம். இதைத் தெரிந்தும் தவறினேன்.

பள்ளி வாழ்க்கையிலும் சரி, பிறவாழ்விலும் சரி 'கவலை' என்றால் என்ன எனத்தெரியாது வாழ்ந்த எனக்கு இது ஓர் சோதனையா? அல்லது தண்டனையா?

அது ஓர் கல்யாண வீடு. அன்றுதான் அவளைச் சந்தித்தேன். அவளை முன்பே தெரியும் ஆனால் சந்திப்பில்லை. இருவருக்கும் வேண்டியவர் வீட்டுத்திருமணம் அதனால் இருவரும் கதாபாத்திரங்களானோம். வந்த கடமைக்காக 'ஓடி ஆடி'ப் பணியாற்றினோம். அவ்வளவுடன் அது நின்றால்தானே அதுமேலும் தொடர்ந்தது. நினைவுக்கப்பால் சென்றது. சென்றேவிட்டது.

பேசினோம்: கதைத்தோம்: சிரித்தோம்.

அவளுடைய 'குளு குளுப் பார்வை, கிளு கிளுப் பேச்சு, கல கல'ச் சிரிப்பு என்னைத் 'தளதள'க்கச் செய்தது.

ஒருவன் எத்தனையோ பெண்களைப் பார்க்கிறான். பேசுகிறான். எல்லோரோடும் அன்பாகப் பழகுகிறான். பொதுவாக அன்பு சிறப்பாக யாரோ ஒருத்தியிடம் காதலாக மாறுகிறது.

அவளைக் கண்டதும் நான் காதல் கொள்ளவில்லை. எங்களுக்கிடையில் ஏற்பட்டது காதலென்றும் நாம் சொல்லவில்லை. காரணம் அவள் இன்னொருவன் மனைவி அப்போது எங்களிடை இருப்;பது...?

காதலோ? கத்தரிக்காயோ? எனக்குத் தெரியாது. ஆனால் ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்தது.

பிறன் தாரத்தை தாயெனவும், அந்நியர் மங்கையைச் சகோதரி போலவும் மதித்து நடக்க வேண்டும். பல நூல்களில் படித்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். போதித்துமிருக்கிறேன். ஆனால் உணர்ச்சிக்கு அறிவு அடிமைப்படும் பொழுது அறிவுரைகள் தடைபோட முடியுமா?

காற்றும், சூரிய வெளிச்சமும் கிடைக்கப்பெறும் பண்பட்ட நிலத்தில் விதை முளைவிடுகிறது. ஆசை என்பதும் ஓர் விதை. சந்தர்ப்ப சூழ்நிலையைச் சாதகமாக வைத்து அது வளர்கிறது இதில் நாம் வேறா?

அன்றைய சந்திப்பு முதலும் முடிவுமாக இருந்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும் என நான் சிந்தித்ததுண்டு. பல சந்தர்ப்பங்கள் கிடைத்தும் அதை நான் பயன்படுத்தவில்லை.

ஆனால் நான்  விட்டாலும் அவள் விடுகிறவளாக இல்லையே? ஒருநாள் ஓரிடத்தில் தற்செயலாக என்னை அவள் கண்டுவிட்டாள். கண்டே விட்டாள்.

நான் கேட்டேன், மறுப்பிள்ளை, கேட்டுக்கொண்டே நின்றேன். ஏதோ பேசினாள். என்னென்னவோ சிந்தித்தேன்.

வீட்டுக்கு வரும்படி அழைத்தாள். மறுக்கமுடியாமல் பின் தொடர்ந்தேன். 'பேசிப் பேசி' சென்றுகொண்டிருந்தாள். நடந்து நடந்து பேசிக்கொண்டு சென்றாள். நடந்துகொண்டே கேட்டேன் முடிவு - என்ன பேசினாள் என்பது எனக்கே தெரியவில்லை. என் நெஞ்சில் அலை மோதியது. 'ஒன்றே ஒன்று தான். எதற்காக என்னை அழைக்கிறாள்?'

வீடு வந்தோம். ஏதோ நடந்தது. நடந்தேவிட்டது. விடைபெற்றேன்.

விடை தந்தாள். இன்னொன்றும் தந்தாள். நான் சொல்லவே மாட்டேன். எனக்கு வெட்கமாயிருக்கிறது.

நடந்தேன். நடப்பது நானா, அல்ல மனித யந்திரமா?

சிந்தித்தேன் சிந்தித்தேன். முடிவு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தும்படி கட்டளை வந்தது. நல்ல முடிவுகளுக்குக் காலை வாரிவிடும் சிந்தனை. கெட்டவைகளுக்கு துரித விரைவில் வருவதேன்?

இப்போது துணிந்து விட்டேன் சீ.... துணிவா அது? ஒரு வெறி, பின் சொல்லவா வேண்டும். அவள் வீட்டில் நான்.

நிலவைக் கண்ட சந்திரகாந்தக் கல் நீரைப்பொழியுமாம்.

அவளைக் கண்ட என் இதயம் கசிந்து உருகியது.

உடலிலோ என்ன நடுக்கம். இப்போது குளிர் காலம் அல்லவே. உடல் தகித்தது.

பிறர்பொருளைப் பறிப்போன் இவ்வுலகிலேயே தன் வேரைக்கிள்ளி எறிகிறான். அதேபோல் பிறன் மனைவியை இச்சிப்பதைப் போன்ற பேதமை உலகில் இல்லை. அட, புத்தரின் போதனை இந்த வேளையிலா?

வண்டு வருகின்றது. மலரில் அமர்கின்றது. உண்டு திரும்புகிறது. பெண்மையைக் காக்க வேண்டியவள், ஆண்மையைப் பேண வேண்டியவன், இருவரும் குற்றவாளிகள்.

'அகந்தையின்றி, அன்புள்ளவளாக, தாய்மைப்பண்பும், கற்பும் உடையவளாகக் கொண்ட கணவனையே தெய்வமாகப் போற்றி, போதும் என்ற மனம் பொருந்தி, மனம், வாக்குக் காயங்களினால் தூய்மையுடையவளாகப் பெண் இருக்க வேண்டும்' எனப் பெண் வர்க்கத்துக்கு மட்டுமல்ல அவளுக்கும் தான் உபதேசம் செய்தார் புத்தர்.

நடந்தது இனிமைதான். முடிந்தது வேதனை தான்.

என் மனம் ஏனோ அமைதி கொள்ளவில்லை. என் மனதைக் குடைவது என்ன? கடி எறும்பு கடித்த வேதனை உள்ளத்தில். எதற்கும் அவளிடம் நேரில் சென்று மன்னிப்புக் கேட்க வேண்டும் போல் எனக்குப்பட்டது.

நடை 'விறுவிறு'த்தது.

சுவை கண்ட பூனை திரும்பியிருக்கிறது என அவள் நினைத்திருக்கிறாள் போலும். நினைக்கட்டும் ஆனால் என் நிலை இஞ்சிச் சாற்றுடன் விளக்கெண்ணை கலந்து மருந்து குடித்தவன் மாதிரி.

'இரவு நடந்தது நடந்துவிட்டது. தயவுசெய்து மறந்து மன்னித்து விடவும். இத்துடன் எங்கள் உறவு நின்றால் அதுNவு போதும்'. என் இருதயம் 'படபட'த்தது. நா 'தடதட'த்தது. குரல் 'கரகர'த்தது உடல் 'வியர்வியர்'த்தது அவளிடம் அவை கிடையா.

சர்வசாதாரணமாகப் பேசினாள்.

'நீர் புதிசு, இரவுச் சம்பவம். நீர் நினைப்பது போல் பெரிய தவறல்ல. அப்படி நான் கருதவில்லை. இரவில் பயமுறுத்தும் இருள் பகலவனைக் கண்டதும் பறந்துவிடும். மறைந்துவிடும். நானோ அன்றிரவு - அதே நிமிடம் மறந்துவிட்டேன். எனக்கு நினைவில் இல்லை. இருளில் நடந்தது ஊம்.... ம்...... நீர் புதிசு'

எனது மண்டை ஓடு கழன்று பறப்பதுபோல் இருந்தது. முடுக்கிவிட்ட பொம்மையைப்போல், நடந்துகொண்டிருந்தேன். நானும் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். காலத்தின் சுழற்சியில், ஆனால் ஒன்றுமட்டும் இன்னும் என் இதயத்தில் எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது. 'நீர் புதிசு'.

No comments:

Post a Comment