Tuesday, May 17, 2011

கொக்குக் குஞ்சுகள்

அகளங்கன்












பம்பைமடு ஓர் அழகிய கிராமம்.

வவுனியா வாவட்டத்தில் வவுனியாவின் மேற்கே ஏழுமைல் தொலைவில் உள்ளது.

வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியில் ஐந்து மைல் தூரம் சென்று பம்பைமடுச் சந்தியை அடையலாம்.

சந்தியிலிந்து வடக்கு நோக்கி இரண்டு மைல் தூரம் காட்டுக்குள் சென்றால் அந்த அழகிய கிராமத்தைக் காணலாம்.

இது கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முந்திய நடைமுறை இப்பொழுது சந்தியில் பெரிய இராணுவ முகாம் இருப்பதால் அதைத் தாண்டிப் புதுப் பாதை வழியே செல்ல வேண்டியிருப்பதால் இன்னும் ஒரு மைல் தூரம் அதிகம்.

நகரை நோக்கிய நகர்வை விரும்பும் மக்களுக்கு ஒரு மைல் பின்னடைவு, வாழ்க்கையில் நீண்ட காலம் பின்னடைவு.

இதுதான் வளர்ச்சி.

பம்பைமடுவில் ஒரு பெரிய குளம் இருக்கிறது.

ஐம்பது குடும்பங்கள் வரைதான் அக்கிராமத்தில் வாழ்ந்தனர். இப்பொழுதும் சில குடும்பங்கள் வாழ்கின்றன.

வாழ்கின்றனவா. இல்லை. இல்லை. இருக்கின்றன.

குளம் பெரிய நீர்ப்பாசனத் திட்டத்தில் உள்ளது.

குளம் நிறையத் தண்ணீர் இருக்கும்போது பார்க்கவேண்டுமே.

அழகு என்றால் அது தான் அழகு.

குளக்கட்டில் நின்று இரவு நேரத்தில் கிழக்கே பார்த்தால் வவுனியா நகரின் மின்சார வெளிச்சம் தெரியும்.

கிழக்குப் பார்த்த குளம்.

பொதுவாகவே வவுனியாவிலுள்ள பெருங்குளங்கள் எல்லாம் கிழக்குப் பார்த்தவைதான்.

குளக்கட்டிலிருந்து குறுக்காக நேரே வவுனியாவிற்குச் செல்வதாயின் நான்கு மைல்கள் தான் இருக்கும்.

ஆனால் செல்ல முடியாதே.

குளம் நிரம்பியிருக்கும் போது காலையில் குளக்கட்டில் நின்று பார்த்தால் சின்னஞ்சிறு அலைகளில் சூரியக் கதிர்கள் பட்டுத் தெறிக்கின்ற காட்சியைக் கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

குளம் நிரம்பியதும் தாமரைகள், ஒலுக்கள், கொட்டி, ஆம்பல் எனப் பலவகைப் பூக்களால் குளம் நிறையும். 'பொய்கை எனும்நீர் மகளும் பூவாடை போர்த்திருந்தாள்' என்று புலமைப் பித்தன் இந்தக் குளத்தைப் பார்த்துத்தான் எழுதினானோ,

குளத்தில் விரால், வாளை, ஜப்பான், பொட்டியன், கணையன், கெளிறு, கொக்கச்சான், மண்விரால், குறவை, அயிரை, மாங்கன், ஒட்டி, விலாங்கு, உழுவை எனப் பலவகை மீனினங்கள் உண்டு.

குளம் வற்றி வறண்டு போவது மிகக்குறைவு.

முன்பெல்லாம் வவுனியா நகரிற்கு உத்தியோகம் பார்க்க வரும் பிற பிரதேச நண்பர்களை எங்கள் ஊரிற்கு அழைத்துச் சென்று குளத்தின் அழகையும் வயல் வெளிகளையும் காடுகளையும் காட்டுவோம்.

காட்டுப் பழவகைகளை உண்ணக் கொடுப்போம்.

எனது பிறந்த ஊர்தான் இந்தப் பம்பைமடு.

கடுங் கோடைக் காலத்தில் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை எப்போதாவது குளம் வற்றிப் போகும். குளம் வற்றிப் போனால் அலைகரை வெட்டையாகி விடும். நீர் ஏந்தும் பகுதியை மரநிழல்களுக்கூடாகச் சுற்றி வருவதே பெருஞ் சுகமான மகிழ்ச்சிதான்.

மருத மரங்கள், அடம்பு மரங்கள் பொருந்திய வெட்டையாக அலைகரை இருக்கும்.

விளாத்தி மரங்கள் பழங்களைக் கொட்டும்.

பொறுக்கி மகிழ்வோம்.

முள்ளுப் பற்றைகள் கிடையாது.

யாரிடம் செருப்பு இருந்தது அணிவதற்கு.

மழை மேகம் வானத்தில் கூடிவிட்டால் குளத்து அலைகரையில் நூற்றுக்கணக்கான மயில்களைக் காணலாம்.

மயில்களின் நடனத்தைக் காணாத கண்ணென்ன கண்ணே. மாலை வேளையில் மழை மேகத்தைக் கண்டு மகிழ்ந்து சிலிர்த்துத் தம் தோகைகளை விரித்து மயில்கள் சுழன்று சுழன்று ஆட, மயில்களின் தேகைகளிலே, கரு முகிலை ஊடறுத்து வரும் சூரியக் கதிர்கள் பட்டுத் தெறிக்க, அந்த அற்புதத்தை எப்படி வர்ணிப்பது?

குளம் நிரம்பியிருக்கும்போது காலையிலே குளிக்கச் செல்வோம்.

காலையிலே மட்டுமென்ன, காலை, மதியம், மாலை என வசதிப்பட்டால் மூன்று நேரமும் குளத்தில் முழுகுவதுதானே எமது வேலை.

நீச்சலிலே உடல் வியர்க்க குளத்தை விட்டு வெளியேறுவோம்.

தட்டைக் கல்லை எடுத்து தண்ணீரிலே படும்படி சரித்து எறிந்து அக்கல் தத்தித்தத்திப் போவதைப் பார்த்து மகிழ்வதும், அதையே போட்டியாக்கி எறிவதும் இனிக் கிடைக்காத மகிழ்ச்சியே.

ஊரில் பணக்காரர் என்று யாரும் இல்லை.

பிச்சைக்காரர் என்றும் யாரும் இல்லை.

வீட்டுக்கு வீடு பசுமாடுகளாலும் பிள்ளைகளாலும் நிறைந்தே இருக்கும்.

ஒரு வேளைச் சாப்பாடு சாப்பிடாத குடும்பம் என்று எந்தக் குடும்பத்தையும் சொல்ல முடியாது.

மீனும், இறைச்சியும், பாலும், தேனும், நெய்யும், மரக்கறிகளும், அரிசியோடு சகலதும் கிடைக்கும்.

விலைக்கு அல்ல.

ஊரில் கடையே இல்லை.

கீரை வகைகள், பிரண்டத் தண்டு, வட்டுக்காய் போன்றவைகள் வீதியோரத்துச் செல்வங்கள்.

பன்றி இறைச்சிக் கருக்கல், மான் மரை இறைச்சி வத்தல்கள், குளத்து விரால், ஜப்பான் மீன் கருவாடு, பாலைப்பாணி, இலுப்பைப்பூப்பாணி, உலுவிந்தப் பழப்பாணி, சாத்துப் பூசணிக்காய், நீத்துப் பூசணிக்காய், தீன் பிலாக்காய், கெக்கரிக்காய், வெள்ளரிப் பழம், வத்தகப் பழம் என சேமித்து வைத்து வாழ்ந்த எம் மக்களுக்கு பஞ்சம் எப்படி வரும்.

அரிசிக்குப் பஞ்சம் இல்லை.

தேங்காய், மிளகாய், மரக்கறி வகைகள் வீட்டிலேயே கிடைக்கும். கோழி வளர்க்காத குடும்பங்களே இல்லை.

சீனி, உப்பு, மண்ணெண்ணெய், சவர்க்காரம் முதலான சில பொருட்கள் தான் வாங்க வேண்டிய பொருட்கள்.

கிராமத்து வாழ்க்கையின் சுகத்தை வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும்.

எங்கள் குளம் நிரம்பி கலிங்கு (வான்) பாய்ந்து கொண்டிருந்த நேரம் அது.

அயிரை வாருபவர்களும், மீன் அடிப்பவர்களும், தூண்டில் போட்டு மீன் பிடிப்பவர்களும் என ஆண், பெண் இரு பாலாராலும் குளத்தின் பல பாகங்களும் நிரம்பியிருந்த நேரம் அது.

ஊரிலே ஒரு பிரமுகர்.

நாற்பது வயதைத் தாண்டியவர்.

அவரை ஊர்த் தலைவர் என்று சொல்ல முடியாது.

அவர் வவுனியாவிற்கு வெளியே சென்று படித்தவர்.

கொஞ்சம் விசய ஞானம் உள்ளவர்.

இளைஞர்களோடும், சிறுவர்களோடும் கிளித்தட்டு, கோப்பைப்பந்து, வொலிபோல் முதற்கொண்டு கிட்டிப்புள், வார்ப்பாய்தல், கடுதாசி விளையாட்டுவரை சேர்ந்து விளையாடுவார்.

குடும்பஸ்தர், எட்டுப்பிள்ளைகளைப் பெற்றவர்.

வயது முதிர்ந்தவர்களோடும் அவர்களுக்கு ஏற்ற வகையிலே பழகுவார்.

அவர் நல்லவரா கெட்டவரா என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது.

எனது நெருங்கிய உறவுக்காரர்.

மத்தியான நேரம் பக்கத்து ஊர் உறவினர் ஒருவரையும் தனது ஒத்த வயது நண்பர் ஒருவரையும் அழைத்து வந்தார்.

வந்தவர்கள் இருவரும் கொஞ்சம் ஊரடி பட்டவர்கள்.

சிறுவர்கள் குளத்திலே நீச்சலடித்துக் கொண்டிருந்தனர். பெண்களும் ஆண்களும் சேர்ந்து குளிக்க முடியாது. வேறு வேறு இடங்களில்தான் குளிக்க வேண்டும். குளக்கட்டில் ஏறும்போது, பெண்கள் குளித்துக் கொண்டிருந்தால் ஆண்கள் புறக்கட்டினூடாகச் சென்று கொஞ்சம் தள்ளித்தான் குளக்கட்டில் ஏறுவார்கள்.

பெண்கள் குளிப்பதை யாரும் பார்;க்க மாட்டார்கள்.

குளக்கட்டில் நடந்து செல்வதே நாகரிகமற்ற செயல் எனக் கருதிய காலம் அது.

குளத்து அடம்பு மரங்களில் ஏராளமான கொக்குக் கூடுகள். ஒரே இரைச்சல்.

அலைகரையில் தான் கொக்குகள் அடம்பு மரங்களில் கூடுகளைக் கட்டியிருந்தன.

கொக்குக் குஞ்சுகளின் இறைச்சி மிகவும் சுவையானது.

யாரும் சிலர் எப்போதாவது கொக்குக் குஞ்சுகளைக் கூட்டுக்குள்ளேயிருந்து பிடித்து வந்து சாப்பிட்டிருப்பார்கள்.

பெருமளவில் ஊரார் அந்தப் பாவச் செயலை விரும்புவதில்லை.

மரங்களில் கூடுகட்டி, முட்டையிட்டு அடைகாத்து குஞ்சுகள் பொரித்துப் பறக்கும் வரையில் உணவூட்டி தாய்க் கொக்குகள் நடாத்துகின்ற குடும்ப வாழ்க்கை அற்புதமானது.

சிறகுகள் முளைக்காத பிஞ்சுக் குஞ்சுகளை, எதிர்த்துப் போராட வல்லமை இல்லாத கொக்குகளிடமிருந்து பிரித்தெடுத்துக் கொண்டு வந்து பொரித்து, கறிவைத்து சாப்பிடுவது என்பது மிகமிகக் கொடுமையான பாவச் செயல்தானே. இப்பொழுதுகூட நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த அந்தச் சம்பவத்தை நினைக்க என் மனம் பதறுகிறது.

குளக்கட்டில் நின்று அலைகரையிலே தெரிந்; கொக்குக் கூடுகளையும் இரைச்சலையும் பார்த்த பக்கத்து ஊர் உறவினர்,

'கொக்குக் குஞ்சு இறைச்சியப் போல ருசியான இறைச்சியக் காணேலாது. உந்த அடம்பு மரங்களில் இருக்கிற கூடுகளில் இருக்கிற குஞ்சுகளைப் பிடிச்சு வந்தா இறைச்சி அந்த மாதிரி இருக்கும். நல்லா உறைப்புப் போட்டு பொத்த மிளகாயும் வெட்டிப்போட்டு, கண்ணில கண்ணீர் வாற மாதிரி உறைப்போட கொக்குக் குஞ்சு இறைச்சியச் சாப்பிட்டுப் பாத்தாத்தான் தெரியும் இறைச்சியின்ர அருமை. எலும்பும் இருக்காது எல்லாம் கடிச்சுத் தின்னலாம்.'

ஊர் பிரமுகருக்கும் ஆசை வந்துவிட்டது.

குளத்தில் நிறை தண்ணீர்.

எப்படி மரங்களிருக்கும் அலைகரைக்குச் செல்வது? 'அது சரி என்னண்டு காணும் அடம்பு மரத்தடிக்குப் போறது. நிறை தண்ணியில்லே. நீந்திப் போறதெண்டாச் சும்மாவே கொஞ்சத் தூரமே. ஏலுமே ஆராலயும்'

'ஏன் காணும் நீந்துவான், கட்டுமரம் கட்டினால் போகலாந்தானே.'

'என்னண்டு கட்டுறது'

'இலவ மரத்தப் பிளந்து அதில் கமுகஞ் சிலாகையள வரிஞ்சு கட்டி வலிச்சுக் கொண்டு போகலாம். இதென்ன பெரிய கஸ்ரமே...'

'அது சரி.... அங்க மரத்தில இருந்து கொக்குக் குஞ்சுகள் தவறி விழுந்தா முதலயள் கிடக்கும் பார்த்துக் கொண்டு கௌவிறதுக்கு. அதுக்குள்ள போய் முதலயளுக்க அம்பிட்டிட்டா...'

'என்ன பெரிய முதல, முதல என்ன கொக்குக் குஞ்சுக்காகவே கிடக்குது. ஆக்கள் போற அசுமாத்துக் கேட்டா ஓடிப்போகுது...'

'சீ... சீ... அப்பிடிச் சொல்லேலாது. முதல கடிச்சாத் தப்பேலாது. அதுக்கொரு வழி பண்ணவேணும்'

'உந்தக் குளக்கட்டுக்குக் கீழ் உள்ள வயிரவருக்கு நேத்திவைச்சா முதல கடிக்காது. வயிரவர விட முதல என்ன பெரிசே'

'ஓம் ஓம் அதுதான் சரி'

குளித்துக்கொண்டிருந்த இளைஞர்களை அழைத்துத் திட்டத்தைச் சொல்லி ஆசை காட்டினார் அந்தப் பிரமுகர். அவர் சொல்வதை வேத வாக்காகக் கருதிச்  செயற்படும் சிலர் அங்கே இருந்தார்கள்.

பாவம் புண்ணியம் பார்க்கும் பருவமல்ல அவர்களது பருவம்.

கொக்குக் குஞ்சு இறைச்சியை ருசிக்க வேண்டும் என்பதும் விளையாட்டுக் குணமுமே அவர்களிடம் இருந்தன.

அவர்களது பயம் முதலை பற்றி மட்டுமே தான்.

நீந்தத் தெரிந்தவர்கள். அதனால் தண்ணீர் என்ற பயமும் இல்லை.

கட்டு மரத்தைக் கட்டினார்கள்.

நாலுபேர் இரண்டு சாக்குகளோடு கட்டு மரத்தில் ஏறியிருந்து வலிக்கத் தொடங்கினார்கள்.

அதைக் கேள்விப்பட்ட ஊர்ப் பெரியவர்கள் சிலர் தடுத்துப் பார்த்தார்கள்.

'டேய்... பாவமடா குஞ்சுகளையும் ஆரும் கொல்லுவாங்களோடா... அதுவும் கூட்டுக்க இருக்கிற சிறகு முளைக்காத குஞ்சுகள... பாவமடா, பறந்து தப்ப வழிதெரியாத குஞ்சுகளக் கொல்லுறதோ, நாங்களும் குழந்த குட்டியளோட வாழுற நாங்கள். வீணா ஊர்ப் பழியத் தேடாதேங்கடா...'

எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள்.

பிரமுகரோ விடுவதாயில்லை. அவரோடு நின்றவர்கள் உசார்க் கொடுத்து நின்றார்கள்.

பாவம் அப்பாவி இளைஞர்கள் நால்வர், ஏதும் அறியாத ஒரு உணர்ச்சியில் விளையாட்டாக கட்டு மரத்தை வலித்துக்கொண்டு அலைகரையை அடைந்தார்கள்.

ஊர்ப் பிரமுகர் ஒரு தேங்காயைக் கொண்டுவந்து குளத்திலே கழுவி கும்பிட்டுவிட்டு வைரவருக்கு நேர்த்தி வைத்து விட்டுக் குளக் கட்டில் தன் சகாக்களோடு நின்று மகிழ்ச்சியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

ஊரெல்லாம் குளக்கட்டில் கூடிவிட்டது.

அலைகரையிலிருந்து அடம்ப மரங்களில் கூடு கட்டி இருந்த கொக்குகளெல்லாம் தம் குஞ்சுகளைக் காப்பாற்ற முடியாமல் பதகளித்துப் பறந்து இரைந்து அலறிச் சத்தமிட்டன.

மரங்களுக்கு மேலே வெள்ளைக் கொக்குகளின் அவல ஓலம்.

கட்டு மரத்திலிருந்த இருவர் மரங்களிலே மளமளவென ஏறி கூடுகளுக்குள்ளே இருந்த குஞ்சுகளைப் பிடித்துக் கீழே எறிய, சாக்குக்குள்ளே குஞ்சுகளை ஏந்தத் தொடங்கினார்கள் இருவர்.

சில குஞ்சுகள் பறக்க முயன்று தவறி வீழ்ந்து தண்ணீரில் தத்தளித்தன. அவற்றையும் எட்டி வாரிப்பிடித்து கழுத்தைத் திருகியும், சிறகுகளை ஒடித்தும் சாக்குக்குள் போட்டனர்.

இரண்டு சாக்குகளும் நிறையும் வரையில் பல மரங்களிலும் ஏறி இறங்கி கொக்குக் குஞ்சுகளை வேட்டையாடின அந்த வெறிநாய்கள்.

சிறகு முளைக்காத குஞ்சுகளையும், கொஞ்சம் சிறகு முளைத்துப் பறக்க முயன்ற குஞ்சுகளையும் வேறாக்கியிருக்கலாம் என்று தங்களுக்குள்ளே கதைத்துக் கொண்டு சாக்குகளை இறுக்கிக் கட்டினார்கள்.

'அட படுபாவியளே மனுசன் செய்யிற வேலயாடா இது...' என்று திட்டித் தீர்த்துவிட்டுச் செய்வதறியாத ஊர்ப் பெரியவர்கள் திரும்பிவிட்டார்கள்.

சின்னஞ்சிறுசுகளைக் கையைப் பிடித்து இழுத்தாலும் அச்சிறிசுகள் கைகளை உதறிவிட்டு வேடிக்கை பார்த்து மகிழ்ந்தன.

கட்டு மரம் திரும்பிக்கொண்டிருந்தது. நடுக்குளத்துக்கு வந்துவிட்டார்கள்.

கட்டு மரத்திலே வந்துகொண்டிருந்த இரண்டு முரட்டு இளைஞர்கள் தண்ணீரில் குதித்து நீந்திக் கரைக்கு வந்திட்டார்கள்.

மற்றைய இருவரும் மௌ; மௌ; கட்டு மரத்தை வலித்துக்கொண்டு கரை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

'டேய்! முதலயால தப்பிச்சாச்சு. இனி என்னத்துக்கிடா வைரவருக்கு நேத்தி...'

ஒருவன் ஓடிப்போய் மரத்தின் கீழே வைரவருக்கு நேர்த்திக் கடனுக்காக வைத்திருந்த தேங்காயை எடுத்து அடித்து உடைத்தான்.

குஞ்சு குருமன்கள் எல்லாம் ஓடிப்போய் பொறுக்கித் தேங்காய்ச் சொட்டுக்களைத் தின்னத் தொடங்கிவிட்டன. நடுக் குளத்தைத் தாண்டியது கட்டுமரம்.

இன்னும் சிறிது தூரம்.

குளக்கட்டிலிருந்து ஒரு ஐம்பது அடிதான் இருக்கும்.

கட்டுமரத்திலே இருந்த இன்னொருவன் குதித்து நீந்திக் கரைக்கு வந்தான்.

கட்டு மரத்திலிருந்தவன் சத்தம் போட்டான்.

'அண்ண! சாக்கு மூட்டையளக் காணேல்ல அண்ண...'

'டேய்! வடிவாப் பாரிடா..'

'இல்லயண்ண. கட்டு மரத்தில நான் மட்டுந்தான் இருக்கிறன் அண்ண. வேற ஒண்டும் இல்லயண்ண.'

'அட நாசம் விழுவானே. எங்கடா சாக்குகள்? எங்கடா கொக்குக் குஞ்சுகள்?'

'ஒண்டயும் காணேல்ல அண்ண...'

'மூதேவி. குதிச்சுச் சுழியோடிப் பாரிடா...'

'எங்கேண்டண்ண பாக்கிறது. எவளவு ஆழம் தெரியுமே...'

'டேய், உவடத்திலதான் விழுந்திருக்கும் சுழியோடிப் பாரிடா...'

'கொஞ்ச ஆழமே அண்ண. ரெண்டாள்த் தாழ்ப்பம் இருக்கும். என்னண்டு சுழியோடுறது'

'நானென்னண்ண செய்யிறது...'

'வேசமோனே! கரைக்கு வந்தியோ வெறுங்கையோட, கொல்லுவேன்...'

'டேய் அங்க பார்ரா திரும்பி, ஏதோ மிதக்குதடா...'

'சாக்குத் தானோ பார்ரா...'

'அய்யோ முதல அண்ண....'

தேங்காய்ச் சிரட்டையைக் கோதிக் கொண்டு சிறுவர்கள் குளக்கட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

1 comment:

  1. கிராமத்தின் அழகு மனதில் நிற்கிறது.

    ReplyDelete