Tuesday, March 8, 2011

அவர்கள் வருவார்கள்

முல்லைக் கோணேஸ்

மடியும் ஒவ்வொரு நிமிசங்களிலும் பாதாளத்தின் நடுவே மெல்லிய கயிற்றில் தொங்குவதானதொரு உணர்வையே தருகிறது.  வாழ்வின் இழையங்கள் அறுந்துபோனதாகவும் எதிலுமே பிடிப்பில்லாததான விசனமுற்ற நாட்களாகவுமே கழிகின்ற பொழுதுகள்தான் தொடருகின்றன.

யாருடனும் கொஞ்சநேரமாவது மகிழ்ச்சியாகப் பேசவே இயலாத இந்தப் பொழுதுகளில் இப்போதே மரித்துவிட வேணுமென்பதாய் மனசு அலைகிறது.  நிம்மதியைத் தொலைத்த நீளும் இரவுகளில் சிலுவை சுமக்கும் கல்வாரிப் பயணமெனத் தைக்கிறது படுக்கை.

இப்படித் தூக்கத்துக்காய் கிடந்து தவிக்கும்போதெல்லாம் தொலைந்துபோன அந்த இனிமையான பொழுதுகள்தான் நினைவுக்குமிழ்களாய் நெஞ்சில் கசிகிறது.

.எல். பரீட்சை எழுதிவிட்டு றிசல்ற்றுக்காய் காத்திருந்த அந்த நாட்களில் கூடிக்கூடித் திரிந்து களைத்துப்போனபோது கடலையும் பனங்கிழங்கும் வாங்கிக்கொண்டு வந்து, நீண்டு நிமிர்ந்த அந்தப் பனைகளின் நடுவே வளைத்திருந்து சாப்பிடும் அலாதி சுகம் எப்போது எங்களை விட்டுப்போனது என்பதை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்ளூ கனத்துப் போகும் நெஞ்சில் இரத்தம் கசிவதாய் எங்கோ தாளாத வலிதான் ஏற்படுகிறது.

கிராமக்கோட்டுச் சந்திக்குப்போகும் மெயின் ரோட்டில் இருந்து இருநூறு யார் தள்ளிக் கிடக்கும் வெட்டைவெளியில் வெயில் வெயிலாய் கிறிக்கற் ஆடியபடி சிறுவர்கள் குதூகலிப்பர்.  பனைகளின் கீழே விரிந்து போய்க்கிடக்கும் நிழலில் நாங்கள் ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக் கொண்டே நீண்ட நேரமாக உட்கார்ந்திருப்போம்.  மாலை வரும்வரை யாருமே அந்த இடத்தை விட்டு நகரவே முடியாதளவுக்குச் சுவாரஸ்யமான விடயங்களெல்லாம் சம்பாஷனைகளில் வந்து போகும்.

சீலன் தன் சிநேகிதி பற்றி எந்தநேரமும் கதைத்துக் கொண்டேயிருப்பான். அவள்மீது தான் உயிரையே வைத்திருப்பதாகவும், அவளையே கல்யாணம் செய்துகொள்வதாகவும் கூறிக்கொண்டிருந்தான்.  பீற்றரின் கனவெல்லாம் விழுந்துபோய்க்கிடக்கும் தனது குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதாகவே இருந்தது.  என்னென்ன தொழில் செய்தால் முன்னேறலாம் என்பதை ஆலோசித்தபடியே இருப்பான்.  றிசல்ற்றைப் பார்த்து விட்டு ஏதாவது சொந்தமாய் தொழில் தொடங்கப்போவதாக அவனுக்கு எண்ணம் இருந்தது.  சுரேசுக்கு எந்த விதமான ஐடியாக்களும் இல்லாமல் எதற்கெடுத்தாலும் சிரித்தபடியே இருப்பான்.  அப்பாவி.

ஆனால் பின்னாளில் கூட்டைப்பிய்த்தெறிந்து குருவிகள் கலைந்து பிரிந்து போனது மாதிரி எவ்வாறெல்லாம் ஒருவரை ஒருவர் அறியாதபடிக்கு கண்காணாத தூரங்களிலெல்லாம் தொலைந்துபோனார்கள்.

இப்போதும் அந்த வெளியில் அடித்த பந்தை எடுக்கச் சிறுவர்கள் ஓடுவதாகவும் கிராமக்கோட்டுச் சந்திக்குப் போகும் தெருவில் சந்தையால் போகும் கதிரேசு மாமா கள்ளுக்குடித்த உற்சாகத்தில் காத்தவராயன் பாட்டுப் பாடிக்கொண்டு போவதுபோலவும் 'கீக்கிறீக்.. கீக்கிறீக்...' என்று அவரது சைக்கிள் சத்தம் காதில் ஒலிப்பதாகவுமே படுகிறது!

மீண்டும் மீண்டும் அந்தப் பனைகளும் அவற்றுக்கப்பால் விரியும் வெளியும்தான் ஞாபகத்தில் படர்கிறது.

இப்போது அந்தக் கிறிக்கற் சிறுவர்கள் எங்கெல்லாம் சிதறிப் போனார்களோ..? அதில் எத்தனை பேர் காணாமல்போனோர் பட்டியலில் இடம் பிடித்தார்களோ..?

எங்கள் ஊருக்கு இராணுவம் வந்தபோது முதன் முதலில் அந்தப் பனைகளின் நடுவேதானாம் சென்றி போட்டு உட்கார்ந்தது.  பின் ஒவ்வொரு பனையாய்த் தறித்து பெரிய பண்டும் பங்கரும் அமைத்து நிரந்தரமாய் தன் இருப்பைப் பலப்படுத்தியபோது அந்த இராணுவ மினி முகாமைச் சுற்றியிருந்த ஏராளமான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.

இதைக் கேள்வியுற்றதும் தான் சிறுகச் சிறுகச் சேமித்துக் கட்டிய வீடு இப்படிப் போனதே என்று அப்பா அதிர்ந்து போனார். அவரைப் பழைய நிலைக்குக் கொண்டுவருவதற்கு நாங்கள் ஏகப்பட்ட பிரயத்தனங்கள் செய்ய வேண்டியிருந்தது.

வெளியில் உயிரை உறைய வைக்கும் பீதியைத் தருவதாய் இருள் கவிந்து கிடக்கிறது.  எங்கும்; நிசப்தமே நிலவுகிறது.  இந்த நாய்கள் கூட இப்போது குரைப்பதை நிறுத்தி விட்டனவோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.  சரி, இந்த முற்றத்து வேப்பமர வெளவால்கள் எங்கே போய்த் தொலைந்தன.  முந்தியெண்டால் வேம்பம்பழக் காலத்துக்கு எங்கிருந்துதான் அப்படி வருகின்றவோளூ கொள்ளை கொள்ளையாய் வந்து மரத்தில் மொய்த்துக்கிடந்து கத்தலும் சடசடப்புமாகவே இரவிரவாகத் தொல்லைகள் கொடுப்பன.

இப்போது எங்கேயும் அவற்றின் அசுகைகூடத் தெரிவதில்லை. அதுகள்கூட எங்காவது தொலைதூரங்களுக்குப் புலம்பெயர்ந்து போய்விட்டனவா? அல்லது ஓசைபடாமல் வந்து தங்களின் கருமங்களை முடித்துக்கொண்டு போய்விடுகின்றனவா?

எதுவுமே நிலையற்றதாகிப்போன துயர்தரும் வாழ்வு. நாளைய இருத்தல் என்பது நிச்சயமில்லாதபோது எதிலுமே லயிப்பற்ற ஜடமாகத்தானே நடமாடமுடிகிறது.

முன்னரென்றால் எங்கள் ஊர் ஆழ்வார் கோயில்  ஆவணி மாதத்தில் வரும் கடைசி மூன்று தினங்களும் விடிய விடியத் திருவிழாவில் மூழ்கிக் கிடக்கும்.  சுற்றுப்புறமெல்லாம் ஒளி வெள்ளத்தில் பளிச்சிடப் பட்டுச் சாறிகள் மினுங்கும். நாலுமுழ வேட்டிகளோடு நாலைந்து பேராய் அந்த ஜன நெரிசலில் உலாவருவதே சுவர்க்க சுகம்.  அவ்வாறான ஒரு வருடத் திருவிழாவில்தான் மனேச்சற்ற மகள் வசந்தனோடு ஓடிப் போனாள்.  கனகம் மாமியின் மகளை வரணியில இருந்து வந்த மாப்பிளை பகுதி இந்தத் திருவிழாவில்தானாம் பெண் பார்த்தார்கள். இன்னம் என்னென்னமோ சங்கதிகள் எல்லாம் அங்கு நடந்து முடியும்.

மூன்றாம் நாள் பொங்கல் வைத்து திருவிழா நிறைவெய்தும்போது மூன்று நாளும் இளசுகள் தாம் பரிமாறிக்கொண்ட பார்வைகளையும், பறிகொடுத்த மனசுகளை மீளப் பெறமுடியாத துயரங்களையும் மீட்டியவாறு வீடு நோக்கிப் போய்க்கொண்டிருப்பர்.

மூன்று நாளும் மாமிசம் உண்ணாது விரதமிருந்து பூசை முடித்த கனபேர் வெறும் மேலுடன் நேரே கள்ளுக்கடை நோக்கித் திருவிழாவில் நடந்த குற்றம் குறைகளைப் பற்றிக் கதைத்தவாறு நடப்பர்.  வீடு திரும்பும்போது மீனோ இறைச்சிப் பார்சலோ கையில் இருக்கும். இன்னும் சிலர் வெறிச்சோடிப்போன வெளிமண்டபத்தில் இருந்து கூடிக்கதையளப்பர்.  சிலவேளைகளில் அதில் ஐயரின் தலையும் தெரியும்.

இவையெல்லாம் எம்மை விட்டுப்போய் நெடுநாளாயிற்று.

எங்குபோனாலும் ஐந்து மணிக்குள் வீடு திரும்பும் அவசரம்.  ஒப்பாரி கேட்டால் உறவுக்காரரெண்டாலும் விடிந்த பின்பே துக்கம் விசாரிக்கும் துர்ப்பாக்கியம்.

இந்த முன்னிரவில் நிம்மதியற்றுத் தூக்கம் வர மறுக்கும் இந்நிமிசங்களில் யாருமே அறியமுடியாதபடிக்கு என் ஜீவன் கதறுகிறது.  .. .. என்றிரையும் காற்று பனையோலைகளில் பட்டுச் சரசரக்கிறது.  இப்படி வீசும் இந்தக் காற்று மனித வெறியர்கள் குறிவைத்துக் காத்திருக்கும் அந்த முகாமினுள்ளும் உக்கிரமாய் பெரும்புயலென அவர்களை அள்ளுண்டு அடிபட்டுத் திணறடிக்கப் பண்ணுவதாய் வீசவேண்டுமென மனம் அவாவுகின்றது.

இந்த இரவின் அந்தகார இருளில் அந்த முகாமினுள்ளே புகை பிடித்தவாறோ - குரூரம் கொப்பளிக்கும் தொனியில் ஏதாவது கதைத்தும் சிரித்தும்கொண்டே அவர்கள் இருப்பார்கள்.  சென்றியில் நிற்பவனின் துப்பாக்கி அப்பிராணி ஒருவனைத் தீர்;த்துக்கட்டிய பெருமிதத்தில் ஓய்ந்துறங்கும்ளூ அல்லது யாரையாவது குறி வைத்தபடி வெடித்துச் சிதற இருக்கும் அந்தக் கொடூர கண நேரத்துக்காகக் காத்துக்கிடக்கும்.

இன்னும் உள்ளே கிருஷாந்தியைப் போலோ ராஜினியைப் போலோ யாராவது அவர்களின் காம இச்சைக்குக் கதறிக் கதறித் தங்களை இழந்துகொண்டிருக்கலாம்.

இரண்டு நாட்களுக்கு முன்பும்கூட முகாமினுள்ளே யாரோ ஒரு பெண் அலறும் சத்தம் கேட்டதாக ஊருக்குள் பேசிக்கொண்டார்கள்.  அந்த முகாமிற்கு அவர்கள் வந்த புதிதில் ஊரில் உள்ள சனங்களோடு மிகவும் பண்பாகவே நடந்துகொண்டதாகப் புளுகித் திரிந்தவர்களில் அநேகம் பேரினது உறவினர்கள் அவர்களைத் தேடி ஒரு நாளைக்குப் பல தடவை முகாமை நோக்கி அலைந்து திரிவதுதான் மிகவும் மனவேதனையைத் தருகிறது. சனங்கள் அவர்கள் மேல் எவ்வளவு நம்பிக்கை கொண்டு நடந்தார்கள்.

உயிர்கரையும் இந்த அர்த்த ராத்திரியிலும் சென்றியில் இருந்தவாறு அந்தக் கொடிய விழிகள் யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனவோளூ அவர்கள் இந்த இருளை ஊடறுத்துக் கிழித்தவாறோ - இந்த இருளோடு இருளாய்க் கலந்தவாறோ வருவார்கள்.

அவர்களது வரவுக்காய் அந்த மீட்பர்களின் வருகைக்காய் இங்கு எத்தனை பேர் காத்துக்கிடக்கிறார்கள்.

அவர்கள் வருவார்கள் என்கிற நினைவே நெஞ்சில் நிறைவைத் தருகிறது.

2 comments:

 1. Dear Ahil sir, vanakkam, Really the story inspired me very much the writer has exposed the reality of human instinct in normal views. As such every one of us someway or other are with the same spirit of green memories of our home land. Though I tried to congratulate him with my comments, the e mail is not going, which I attach herewith, so please send it at your end. Thanks for your communication. Keep it up. Good Night.
  Yours Pudhuvai 647 701 7075

  ReplyDelete
 2. நன்றி. புதுவை ராமன். தங்களுடைய விமர்சனத்துக்கு.


  பிரியமுடன்,
  அகில்.

  ReplyDelete