பி. ரவிவர்மன்
முழுவதுமாய் வெறுமை படிந்து ஒரு மழைக்காலத்தின் வெப்புவானமாய் பீறிட்டு வழியும் துயரினையெல்லாம் அள்ளியெடுத்து தொடுவானின் உள்ளடங்கல்களில் கொட்டித் தொலைத்துக்கொண்டிருந்தது அந்த மாலைப்பொழுது.
இப்போதெல்லாம் எதனிலும் முழுவதுமாய் உள்நுழைந்து வாழ்க்கை பற்றிய படிப்பினை அறிதல், இல்லையேல் அதனை அனுபவிக்க வேண்டுமென்ற ஆர்வமென்பது துளியளவும் இல்லையென்பதைக்கூட எப்படி உணர்த்துவது.
வெகுகாலத்திற்கு முன்னரே தோன்றி மனப்பெருவெளியெங்கும் உடைந்து கொட்டுண்டு கூட்டிப்பெருக்கிய கூழங்களாய் பெருகிய எதை எதையெல்லாமோ போட்டுப்புதைத்த பெருங்கிடங்காய் உள்நிறைந்து கிடக்கிறது.
ஒருதரமல்ல பலநூறு தடவைகளுக்குமேல் பட்டுத்தேறிய அனுபவக்கிடக்கைள். முழுவதும் முள்தரித்துப்போன நட்புகள். மெல்ல மெல்ல விடுபட்டே தலைகுனியும் துரோக நிகழ்வுகள் அப்பிய முகங்கள் எல்லாம் கனவுகளாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.
காலம் கடத்தலிலும் மூட்டைப்பூச்சிகளைப்போல் வாழ்வினை நசுக்கி மணத்தலிலும், ஆயிரமாயிரம் பொய்களை ஒவ்வொரு வார்த்தையிலும் பூசிமெழுகி வீரம் பேசியதிலும் வாழ்வுகடத்திப் பொய்த்துப்போன நாட்களிடம் என்ன சொல்வது?
வேரிடம் நம்பிக்கையற்றுப்போன பெருவிருட்சங்களின் கோபாவேசங்களாய், எண்ணங்களில் பட்டுத்தெறித்த பார்வைகளின் தோல்விகளும் நம்பிக்கையீனங்களும் சேர்ந்தேயெழுகிறபோது எதைத்தான் உள்ளடங்கல்களில் போட்டு அடைத்துவைப்பது?
துயரங்கள் பீறிட்டு வழிகிற இரவுகளில் மட்டுமல்ல எல்லாப் பொழுதுகளிலும் எதையோ என்னிலிருந்து இழப்பதாய் உணர்கின்றபோது வீட்டிலிருந்து விடைபெற்ற ஒரு மார்கழியின் ஈரம் கசிகின்ற நாளொன்றின் உடைந்து நொறுங்கிப்போன நம்பிக்கைகளை இனி எங்கு பொறுக்கியெடுப்பது?
சைக்கிள் மிதித்து மிதித்து அவர்களைத் தேடி அலைவதே பெரும்பாடாய் இருந்தது ஒரு காலம். என்னிலிருந்த எல்லா முகங்களும் எப்படியோ போயிற்று.
வெட்கித் தலைகுனியட்டும், வேரோட அழியட்டும், வேண்டாம் இனியும் அந்த நட்புகள். மனம் கூனிக்குறுகி விரிகிறதுளூ ஊரில் தொடங்கி அண்டார்டிக்கா வரை இடம் தேடி, தனிமை வேண்டி அலைகிறது.
ஊர்பற்றிய நினைவுகளும் அவர்கள் பற்றிய பிரமைகளும் தோன்றியெழும்போதெல்லாம் வெப்புசாரம் கொள்கிறது. சிலவேளைகளில் வேண்டாவெறுப்பாய் அருவருப்புக் கொட்டுகிறது.
பள்ளிக்கூடத்தில் பாடங்கள் ஓடமறுத்த நாட்கள் புத்தக அட்டைக்குள்ளும் கொப்பி ஒற்றைக்குள்ளும் ஒளித்து வைத்திருந்த பிரசுரங்களை உட்சுற்று வட்டங்களுக்குள் ஓடவிடுவதிலேயே அனேகமான பாடநேரங்கள் கழிந்து போயின.
யாரை, யார், விட்டு விட்டு முந்தியோடுவது என்பதிலேயே முழுநேரச் சிந்தனைகளும் நரம்புமண்டலம் முழுவதிலும் சுற்றிச்சுற்றித் திரிந்தன.
ஷஷடேய் என்னையும் இந்த ஷபச்|சில எப்பிடியாவது அனுப்பிப்போடு.|| பதினைந்து வருடங்களிற்கு முந்திய ஏதோ ஓர் நாளில் கெஞ்சிக்கெஞ்சி கேட்பது இன்னமும் மனத்திரைகளில் விரிந்தோடிக் கண்முன்னே பளிச்சிடுகிறது.
கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளே கிளர்ந்த பொறிக்கிடங்கு ஒன்றாய்த் தீப்பற்றிக் கொண்டது. கண்களில் புதிய உலகு ஒன்று பிரகாசமாய் எழுந்தது. நரம்புகள் புடைத்துக்கொண்டு குறுகுறுத்தன.
ரத்தம் வேகமாய் ஓடியது. வெடித்துப் பிளந்துவிடுமாப்போல் இருந்தது. சிலவேளைகளில் யாரையாவது தேடிப்பிடித்து மண்டையில போடவேணும்போல் இருக்கும். ரத்தம் கருஞ்சிவப்பென்பதைத் தொட்டுப்பார்த்தே தெரிந்துகொள்ள வைத்த ஒரு வாழ்க்கை.
விடுதலையின் பேரால் நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் எத்தனை அற்புதமானவை. மின்கம்பங்களுக்கே அழுகையும் துயரையும் வெறுப்பையும் உண்டுபண்ணி, பங்கர்களில், இருட்டறையில் மனிதர்களையும் விஷ ஜந்துக்களையும் ஒன்றாகப்போட்டு அடைகாக்கவைத்த வாழ்க்கை எத்தனை அற்புதமானவை
முழுவதுமாய் இருண்டுபோன ஒரு மாலை நேரத்துக்குப் பிந்திய ராத்திரி. ஒருத்தரின் முகம் ஒருத்தருக்கு இதுவெனத் தெரியாத கரிய இருள்.
வங்காள விரிகுடா அலைகளை அள்ளியெறிந்து கரைமுழுவதும் நனைத்துக் கொண்டிருந்தது. உயர எழுந்து உடைகிற அலைகளின் பேரிரைச்சல் வங்காள விரிகுடா எப்போதுமே அயர்ந்து தூங்கியதாய் யாருமே கண்டதில்லை.
கொடூரம் கொண்டு ஆவேசமாய் எழுகிற அலைப்படுக்கைள் தொடுவானின் தொலைதூரம்வரை எழுந்தும் மடிந்தும் கண்ணுக்குள் மறைந்துபோகிற கரும் இருள்.
கருஞ்சுழியும் பேரலையும் அறியமுடியா ஆழமும் கொண்டே வயிறு பிளந்து வான் பார்த்தே மல்லாந்து கிடந்து மல்லுக்கட்டும் அதன் பெரும் துயரை யாரறிவார்? அழகென்பர் அற்புதமென்பர் அதையும் மீறி அதன் அலைகள் எழுப்பும் பெருங்குரல் யாரையாவது தொட்டதுண்டா?
கடற்கரையையொட்டிய அந்தத் தென்னந்தோப்புகளுக்குள்தான் ஷஷவகுப்புகள்|| நடக்கும். மந்திரத்தால் கட்டுண்டுபோக வைத்த அந்த வார்த்தைகள் எங்கிருந்து வந்தன. இப்போதெல்லாம் அவர்கள் எங்கே போனார்கள்?
ஒவ்வொரு வார்த்தையையும் உள்வாங்கி உள்வாங்கிப் பிடிப்புற்று அதீத நம்பிக்கைகொண்டு துரோணாச்சாரியார்களின் முன்னால் மண்டியிட்டு எழுகின்ற ஏகலைவன்களாக கட்டை விரலை மட்டுமல்ல உடலையும் உதிரத்தையும் உயிரையும் கொடுக்கச் சித்தமாயிருந்த நாட்கள்.
அந்தக் கடலின் பேரலைகளில் அடிபட்டு, சுவடே தெரியாமல்போன காலடிச்சுவடுகளில் எதுவுமற்று பெருங்குரலெடுத்து அழுகிறது வாழ்க்கை.
பேரலைகளின் பிடிமாணம் தளர்ந்துபோய், குளக்கட்டுகளில் பாசிபடிந்து, ஓடைகளில் நீர்வற்றி, ஆற்றங்கரைகளில் செத்து அழுகிய மீன்களும் கவிழ்ந்த தோணிகளும் கரையொதுங்கும். வாசற்படிகளில் தூசுபடிந்து, பூட்டிய வீடுகளின் முன்முகப்புகளில் ஒட்டறைபடிந்து சிலந்திக்கூடுகள் தொங்க, வெளிறிய முற்றத்து மணல்மேல் சருகுகள் நெரிபட, தீண்ட உயிர்தேடி கருநாகங்கள் நுழையும்வரை.... எல்லோரும் எங்கே போனோம்?
விடுபட்டோம்; விதைகளில் விஷம் பூசி ஒருத்தரில் ஒருத்தர் தொட்டுப்பார்த்தோம். உடன்பிறப்புகளின் ரத்தம் சுவையென்றோம்ளூ எரியும் டயர்கள் அழகென்றோம். எப்பிடிப்போயிற்று எங்கள் வாழ்க்கை? வாசலில் மழைக்குக் கொட்டிய பூவும் பிஞ்சுமாய் உதிர்ந்துபோயிற்று வாழ்க்கை.
என்ன நடந்தது? எல்லாம் வியப்பாகவே இருக்கிறது. உயிரின் நுனிவரையும் வேதனை வழிகிறது. இயலாமையின் நெகிழ்வுகளும், சுமைகளின் அழுத்தங்களும் எதிரும்புதிருமான மாற்றீடுகளின் பொய்மைகளும் எல்லா முன்நிகழ்வுகளும் தவறின் கசிவுகளாய் மேய்ப்பர்களால் வெட்டித்தறிக்கப்ட்ட மந்தைகளின் உயிர் ஒடுங்குதல்களாய் உள்நுழைகிறது.
தொண்டைக்குழியில் நீர்வற்றி எழுகிற வறண்ட வார்த்தைகளிலும் இன்னும் நம்பிக்கை கொள் என இனியாகிலும் யாரும் சொல்லாதீர்கள்.
இப்படித்தான் அனேகமான நாட்களில் உள்மனசு இன்னும் இன்னும் அடைந்துகொண்டே போகிறது. முகம் இறுகிக் கடுப்பாகிறது. எதிர்ப்படும் எல்லாமே பழைய ஞாபகங்களின் கொடுக்குகளாய் எதிர்கொள்கிறது.
சிரித்துக் கலகலப்பதென்பது சுகமான விடயமெனிலும் எல்லா நாட்களிலும் முடிவதில்லை ஆதிக்கம்கொள்ளும் நினைவுகளின் கணங்கள் எதிர்மாறானவையாகவே சுழல்கின்றன.
எத்தனையெத்தனை ஆயிரம் முகங்கள் எல்லாம் எங்கே போயின? நம்பிக்கைகொண்டு வாழ்வின் முகங்களில் மரணத்தை எதிர்கொண்டு நம்பிக்கைகளின் மேல் தீரா அவா கொண்டு இழந்துபோன முகங்களை எப்படி எம்மிலிருந்து பிரிப்பது? நரம்பு மண்டலங்களின் உள்சுற்றில் ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு குருதித்துணிக்கைளிலும் அந்த முகங்கள் அடைகாத்துக்கொண்டிருக்கின்றன.
அணைகளையும் உடைத்துக்கொண்டு ஓடுகின்ற பெருவெள்ளத்தின் ஆவேசமாய் எதிர்ப்பட்டதையெல்லாம் இழுத்துக்கொண்டோடிய கலங்கிய நீராய் அந்தக்கால வெள்ளம் வேகமாய் ஓடிற்று. உயிர்தப்பி கரைகளில் கிடந்து துடிக்கும் மீன்குஞ்சுகளின் ஞாபகங்களாய் எதைச் சொல்வது?
இயல்பாகவே வரம்புகளை மீறி உடைத்துக்கொண்டு கொட்டுகின்ற ஒரு கோடைகாலத்தின் கடும் மழையாய் உள்இறங்கிய நினைவுகளின் வெப்பம் பீறிட்டுக் கிளம்புகிறது.
உடைதலால் அடங்கிப்போகின்ற குரலின் உச்சஸ்தாயி அடங்கிப்போய் உயிரின் ஆன்மா களைப்புறுகிற இறுதிநேரமா இது எனக் கொள்ளமுடிகிறது.
தேகம் முழுவதும் துணுக்குற்று உடல்முழுவதும் வியர்த்துக் கொட்டுகிறது. கமக்கட்டுகளிலும் கழுத்துமடிப்புகளிலும் வெப்புவிசாரமாய் வியர்வை ஊற்றாய் வழிகிறது.
மயிர்க்கணுக்கள் ஈட்டிகளாய்க் குத்திட்டு நிற்கின்றன. உடல் முழுதும் அனல் பரவுகிறது. இதயம் அடித்துக்கொள்கிறது. கண்கள் தப்பிக்கொள்ளமுடியா குரூரமொன்றின் துயரையும் அச்சத்தையும் தவிப்பையும் உள்வாங்கி அசைவற்றுப்போயின. நாவறண்டு, உதடுகள் காய்ந்து ஒட்டிக்கொள்கின்றன.
இப்படித்தான் இருந்தது அந்தக் கணங்கள் ஒவ்வொன்றும் வேட்டைநாய்களின் கோரப்பிடி, பற்களில் கிழிபட்டெழும் தசையும் வழியும் ரணமுமாய் ஆன்மா தவிக்கிறது.
கண்பொட்டுக்குள் இன்னமும் அப்பிடியே உருகி வழிகிறது. அந்த ஒற்றை அலரிக்குக் கீழே சைக்கிள் சாத்திக்கிடக்கிறது.
மங்கல்பொட்டாய் முகம் தெரிகிற மாலைநேரம் மேசை விளக்கொளியில் படித்துக்கொண்டிருந்த அவனைச் சைகை கொடுத்துக் கூப்பிட்டு வெளியே வந்து ரகசியம் பேசி தொலைந்துபோன நாள் இன்னமும் கண்ணுக்குள் நினைவழியாத் தடங்களின் ஞாபகங்களாய் நீள்கிறது.
பஸ்ஸில் ஒருநாள் பொழுது கழித்து தெரியா ஊர்மனைகளின் ஒதுக்ககுப்புற மறைவிடங்களில் பேர்மாற்றி ஊர்மாற்றி வாழ்வின் முகங்களில் பொய்புனைந்து அவனும் நானும் பிரிந்தோம்.
கட்டையாய் முடிவெட்டி முகம் இறுகி, தசை முறுக்கேறி முழங்காலும் முழங்கையும் அரைபட்ட தோல்கிழிந்து தசைதெரிய, கருவேலங்கட்டைகளின் நிறமாய் சரீரம் மாறிப்போன ஒரு அரைவருடத்தில் சந்தித்துக்கொண்டோம். பழைய நட்பையும் பழைய பெயரையும் உருமாற்றிக்கொள்ள பெரும்பிரயத்தனப்பட்டோம்.
முகம் தெரிய இருளில் வழிகிற பனியில் உடல் நனைய ஓடிஓடிக் களைப்புற்றோம். கிறவல்மணல் தோல்கிழித்து தசையில் ஒட்டிக்கொள்ள முகத்தில் கொட்டுகிற பனிமறந்து வியர்வை நெடி உள்நுழையும்.
பகல் பொழுதுகளில் வகுப்புகள் நடக்கும். மக்ஸிம் கோர்க்கியும் தோல்ஸ்தோயும் படித்தோம். சிலநேரங்களில் நிரம்பிவடிந்தும் சிலநேரங்களில் கணுக்கால் தொடுகிறவரையும் ஓடிக்கொண்டிருக்கிற காட்டாறுகளில் உடல்நனைத்தும், நீரில் பீச்சல்களில் இழுத்துக்கொண்டோடுகிற குறுணிக் கற்களும் வெண்மணல் துளிகளும் உரஞ்சிக்கொண்டு நழுவும்.
மகிழ்ச்சியும் உறுதியும் மனப்பிரவாகமெங்கும் பளிச்சிட்ட நாட்கள் ஓடிமறைந்து பழைய குற்றங்களின் நம்பிக்கையீனங்களின் வெறுப்பூட்டல்களாய் ஒவ்வொரு கண நினைவுகளும் கொத்திப்பறக்கிற காகங்களாய் கண்ணுக்குள் எழுகின்றன.
ஓடிக்களைத்து உருண்டு பிரண்டு எல்லாம் முடிந்து கடலை கொறித்து சக்கரையோடு கடித்துக்கொண்டு தேத்தண்ணி குடித்துக் கொஞ்சம் களைப்புத் தணிந்து மீண்டும் எல்லோரும் ஒதுங்கிக்கொள்ள ஷசற்| வடிவில் வெட்டிய பங்கர் இருபக்கமும் சிதறிக்கிடக்கும் காட்டுக்கொடிகள் இலையுதிர்;த்தி அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிற்கும் கருவேல மரங்கள் கண்ணுக்கெட்டிய தொலைவு வரையும் ஓடி மறைகிற சிற்றாறு, புழுதி பறக்கிற காற்றில் செம்மண் தூசுகள் சருகோடு சேர்ந்தே பறக்கும்.
பங்கருக்குள் பாய்ந்து இறங்கிய அவன் எதிரிகளை எவ்வாறு எதிர்கொண்டு தாக்குவது என விளக்கினான். எதிர்ப்புறமும் பின்பக்க வாட்டிலும், எதிர்கொள்ளும் எந்தத்திசையெனிலும் எதிரிகளை எவ்வாறு இனங்கண்டு தாக்குவது என்பது பற்றி செய்து காட்டினான்.
பங்கருக்குள் பாய்ந்து உருண்ட அவன் மீண்டும் எழுவதற்கு அவகாசமில்லாத கணங்களில் பங்கருக்ககுள் இருந்து பலத்த சத்தத்துடன் கருந்தீப்பிளம்பாய் பெரும்புகை கிளம்பியது.
பெரும்புகையும் கந்தக நெடியும் செம்மண்புழுதியும் மண்ணும் சேர்ந்தேயெழ செவிப்பறைகள் பிளந்தன. நிலம் அதிர்ந்து குலுங்கியது. ஆயிரமாயிரம் எண்ணங்களில் துளிர்கொண்ட ஒரு வாழ்வு ஒருசில கணங்களில் முடிந்துபோயிற்று.
இருகைகளும் பிய்த்து வீசுண்டு முகமும் கழுத்தும் கிழிபட்டுத் தசைகள் தொங்க தேகம் முழுதும் ரத்தம் கொட்ட செம்மண் புழுதியில் அவன் கிடந்தான்.
சுற்றி நின்ற எல்லோரும் ஓவென்று அலறிப்பிடித்து பாய்ந்து விழுந்து அவனைத் தூக்கிக்கொண்டோம். கந்தக நெடியும் கரும்புகையும் கண்ணுக்குள் புகுந்து இருண்டுகொண்டு வந்தது. எல்லோருடைய உடம்பிலும் சின்னக்கீறல்கள் என்ற எந்த உணர்ச்சியுமற்று அவனிலேயே முழுமனது கொண்டிருந்தோம்.
கரும்புகை மேலே மேலே போய் வானெங்கும் படிந்துபோயிருந்தது. கிழிபட்ட தசைகளிலிருந்து கருஞ்சிவப்பாய் ரத்தம் கொட்டியது. தலைமயிர் முழுதும் கருகிப்போயிருந்தது.
அவனுடைய ஒற்றைக்கண் மட்டும் லேசாய் திறந்திருந்தது. ஏதோ பேசவேண்டும் போலிருந்திருக்கும். வாயைத் திறந்து பிராயத்தனப்பட்ட போதெல்லாம் குபுகுபுவென கருஞ்சிவப்பாய் ரத்தம் கொட்டியது.
சற்று நேரத்திற்குள்ளேயே அந்த ஒற்றைக் கண்ணையும் மூடிக்கொண்டான். காந்தன் என்ற ஆதம்பாவா ஷாஜகான். அந்தக் கணங்களில் கரும்பாறையாய் திரண்டுபோயிருந்த மனசு வெடித்துப்பிளந்து துயர்கொண்டது.
கருவேல மரங்களுக்கும் பற்றைக்கொடிகளுக்கும் சற்றே தள்ளியுள்ள பெருவெளியொன்றில் அவனைப் புதைத்தபோது வானம் இருண்டு கிடந்தது. அந்த இரவுகளில் யாரும் தூங்கியதாய் ஞாபகமில்லை.
திசையற்று சிறுகுருவிகளாய் சிதறுண்டு கலைந்தோம். அவனை நினைக்கும்போதெல்லாம் சோனிகளைத் துரோகிகளென்று சொல்லும் இந்நாளொன்றில் வெட்கித் தலைகுனிய இறுகிய மனப்பெருவெளி வெடித்துச் சிதறிவிடுமாப்போல் கனம் கொள்கிறது.
உள்நிறைந்து கிடக்கும் அவனின் நினைவுகளை ஒவ்வொன்றாய் அசை போட்டுப் பார்க்கும்போது மனசு வெட்கித் தலைகுனிகிறது. துயர்கொண்டு காலம் நழுவுகிறது.
பேரலையெனப் பெருந்துயர்கொண்டு மனப்பெருவெளியெங்கும் வங்காள விரிகுடா கருஞ்சுழி கொண்டேயெழுகிறது.
No comments:
Post a Comment