தமயந்தி
மணி காலை ஐந்து.
மாறித் ஹிப்சன் எழுந்து, தனது பிடரியைத் திருகும்வரை கட்டில் பீடத்திலிருந்து மணி ஐந்து என்பதைச் சொல்லிக்கொண்டேயிருந்தது அந்தச் சிறிய, சதுர வெள்ளை மணிக் கூடு. அது எதிர்பார்த்ததுபோலவே மூன்று சத்தத்தின்பின் மாறித் ஹிப்சன் அதன் பிடரியைத் திருகி சத்தத்தை நிறுத்தினாள்.
சன்னல் திரைச்சீலையை மெதுவாக நீக்கி தெருவை நோட்டமிட்டாள் கிழவி. இருள் கலையாத காலை. ஆனாலும் தெருவிளக்குகளின் மெல்லிய வெளிச்சத் துண்டுகளை பன்மடங்காக்கி கண்களுக்கெட்டிய தூரம்வரை பட்டப்பகல்போல் மிளிரச் செய்து கொண்டிருந்தது படர்பனி. மார்கழிப்பனி இந்தமுறை நத்தாருக்கு முன்பே தாராளமாய் கொட்டியிருந்தது. தெருக்கள், இலைகளைத் தொலைத்த மரக் கிளைகள், வீட்டுக் கூரைகள், தெருவோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனக்கூட்டத்தின் மொட்டந் தலைகள் எல்லாம் பனி படர்ந்திருந்தது.
கிழவியின் வீடு பழையவீடாதலால் சன்னல், கதவுத் துவாரங்களால் மெல்லிய குளிர் உள்ளே வரத்தான் செய்தது. கிழவிக்கு அதெல்லாம் ஒரு பொருட்டல்ல. கம்பீரமாகவே எழுந்து தனது பணியில் இயங்கலானாள். கிழவியின் சுறுசுறுப்பைப் பார்க்கும் எவரும் அவள் அறுபத்தைந்து வயதைக் கடந்துவிட்டவளென்பதை நம்ப மறுப்பார்கள். போர்க் காலக் குமரியாய் அவள் இருந்தபோது எப்படி சுறுசுறுப்பாய் இயங்கினாளோ, அதே கதியில் இப்போதும் இயங்கிக் கொண்டிருந்தாள்.
விவிலியத்தைத் திறந்து அன்றைய வாசகத்தை மவுனமாய் வாசித்தபின் அதனை முத்தமிட்டு மூடி வைத்தாள். பின் தனது கட்டாயமான காலைப் பணியை கிழவி விரை வாகத் தொடங்கினாள். அளவான தண்ணீரை அடுப்பில் கொதிக்க வைத்தாள். கொதித்த தண்ணீரில் சிற்றரிசியை கழுவிப் போட்டாள். பதமாய் வந்தபின் குளிர்ப் பெட்டியிலிருந்த பால்ப்பெட்டியை எடுத்தாள். அளவாய் விட்டாள். சிறிது நேரத்தில் இறக்கி குடுவைக் கிண்ணத்திலிட்டாள். அதனை தூக்குப் பையிலிட்டு, குளிருடைக்குள் தன்னைப் புகுத்திக்கொண்டு, பனிக்காலச் சப்பாத்தையும் கொழுவிக்கொண்டு தெருவில் இறங்கி நடக்கலானாள்.
அவர்கள் எந்தெந்த வீடுகளில் இருக்கிறார்களென அறிந்து முன்னமே ஒவ்வொரு வீட்டு
வாயிற்படியருகில் ஒவ்வொரு கிண்ணத்தை வைத்திருந்தாள். அந்தக் கிண்ணங்களிலெல்லாம் சிற்றரிசிக் கஞ்சியை அளவளவாய் இட்டபடி அவளது அன்றைய பணி தொடரலானது.
கற்குடாத்தெருவிலிருந்து தனது பணியைத் தொடங்கியவள், சின்னக்கோயில்த்தெரு, குரவர்வீதி, மேட்டுத்தெரு, பூங்காவீதி, பேத்தர் வீதியென நீண்டு, கடற்கரைவீதி, சந்தைத்தெரு, குறுக்குவீதியென சென்று, ஊலாவ் வீதி, துரொண்ணிங் வீதியென முடித்துவிட்டாள். இறுதித் தெரு கீழ்த்தெரு. வந்தவள் திகைத்தாள். நேற்று கோப்பையிலிட்ட கஞ்சி அப்படியே இருந்தது. பன்னிரு தெருக்களிலும் மொத்தம் நாற்பத்தியேழு கோப்பைகள். கீழ்த்தெருவிலிருக்கும் இந்த கோப்பையில் மட்டும் நேற்றைய கஞ்சி அப்படியே இருக்கிறது. அப்படியானால்....? மறைச்சிக்கு
என்ன நடந்தது....?
மறைச்சி, கறுப்பி, கறுப்பன், பஞ்சு, கற்கண், வெள்ளைப்புலி..... இப்படி அந்த பன்னிரு
தெருக்களிலுமுள்ள அனைத்துப் பூனைகளுக்கும் தன்னிஸ்டம்போல் ஒவ்வொரு பெயராய் இட்டு, அழைத்து வந்தாள் கிழவி.
இன்று இந்த மறைச்சிக்கு என்ன நடந்தது...? சிந்தித்தவளாய் கிழவி மறைச்சியின் தட்டிலிருந்த பழையதைக் கொட்டிவிட்டு, தட்டைத் துடைத்து இன்று கொண்டுவந்த கஞ்சியில் மீண்டும் புதிதாய் இட்டாள். அவளது இதயம் படபடத்தது. நேற்றைய கஞ்சி அப்படியே இருக்கிறதென்றால் மறைச்சிக்கு எழுந்து நடக்க முடியாத சுகயீனமாயிருக்க வேண்டும், அல்லது மறைச்சி வாழ்ந்த வீட்டுக்காரர் எங்காவது நெடுநாள் பயணித்ததால் மறைச்சியையும் கொண்டுபோயிருக்க வேண்டும். அதுவுமில்லையேல்....?! கிழவியால் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியவில்லை. மணி ஒன்பதை நெருங்கிக்கொண்டிருந்தது. பனிக்காலச் சூரியன் தனது தலையை காட்டாமலும், மேலெழுந்து வராமலும் இன்று மெல்லிய வெய்யிலை விசிறி எறிந்து
கொண்டிருந்தான்.
வீடு வந்து குடுவைக் கிண்ணத்தைக் கழுவி வைத்தாள். அடுக்களைக்குள்ளிருந்த
நாற்காலியிலே அப்படியே அமர்ந்தாள். அடுக்களைச் சன்னலூடாக வெளியே விழியெறிந்தாள். பச்சையப்பிள் மரத்தின் இலைகளற்ற கிளைகளில் கவிந்திருந்த பனி உருகி சொட்டுச் சொட்டாய் நிலத்தை நோக்கி விழுந்துகொண்டிருந்தது. கீழே விழும் ஒவ்வொரு துளியும் நிலத்தில் படர்ந்திருந்த பனிப்படையின்மேல் ஓட்டைகளிட்டு தம்மை அதனுள் புதைத்துக்கொண்டிருந்தன. கிழவியின் விழிகளும் அவளையும் அறியாமல் பனித்து உதிர்த்தன. இருக்கையை விட்டெழுந்து அறைக்குள் சென்றவள் விவிலியத்தை எடுத்து இன்றைய வாசகத்தை மீண்டும் வாசித்தாள். கண்களால் நீர் சொரிந்தது.
வீட்டில் இருப்புக்கொள்ள முடியவில்லை அவளால். மறைச்சியின் வீட்டுக்குச் சென்றாள். நேற்றையிலிருந்து தங்கள் பூனையைத் தாங்களும் காணவில்லைத்தான் என்ற மறைச்சி வீட்டுக்காரரின் பதில் பொறுப்பற்ற பதிலாய் கிழவிக்குப் பட்டதுடன், கோபமும் வந்தது. அவர்களிடம் விடைபெற்று நடக்கலானாள்.
சாயங்காலம் மூன்றுமணி. மறைச்சியை எல்லா இடமும் தேடிக் களைத்து மாறித் கீழ்த்தெருவின் சிறுவர் விளையாட்டுத் திடலின் அருகாமையிலுள்ள பஸ்தரிப்பு நிலையத்தினுள் இருக்கும் இருக்கையில் வந்தமர்ந்தாள். விளையாட்டுத் திடலின் கரையோரமாய் நீளத்துக்கும் வேலிபோல் அமைந்திருந்த பனி உருகிய புதருக்குள்ளிருந்து கிழவி மாறித்தின் கண்களில் தற்செயலாய்ப் பட்ட ஒன்று அவளை கதி கலங்க வைத்தது.
மெல்ல எழுந்து சென்றாள். அண்மித்தாள். அறிந்துகொண்டாள். அதிர்ந்தாள். அழுதாள். இரு கைகளாலும் தனது கன்னங்களிரண்டிலும் பலமுறை அறைந்தாள். அழுதாள். அழுதாள்.
வீதியைக் கடக்கும்போது ஏதோ வாகனம் மறைச்சியைத் தாக்கியிருக்கவேண்டும்.
கடுங்காயங்களோடு ஓடிவந்து புதருக்குள் படுத்த மறைச்சி அப்படியே உயிரையும் விட்டது.
சமாதி. ஹிப்சனின் சமாதி. அதனருகில் மறைச்சிக்கும்.
புத்தம்புது றோசாப்பூ வளையம் மறைச்சியின் குட்டிச் சமாதியின் நெஞ்சில்
சிரித்தழுதபடியிருந்தது.
மாறித் தனதொரு குழந்தையை கணவனுக்கருகில் புதைத்த துக்கத்தோடு......
சார்.. இவங்க ஆனந்த விகடன் ல எழுதும் தமயந்திதானே..?
ReplyDeleteThamayanthi from Norway.
ReplyDelete