அல் அஸூமத்
போர் நிலத்தவர்கள் தங்களின் அனுபவங்களைப் பற்றி என்னிடம் கூறும் போதெல்லாம், ‘அடடா! அப்படியொரு மண்ணில் இல்லாமல் இருக்கிறேனே’ என்றொரு கொடுத்துவைக்காத ஏக்கம் சீண்டிக்கொண்டே இருந்தது.
குறைந்த பட்சம் ஒரு பத்திரிகையாளனாகவாவது இருந்திருக்கலாம்;....
இதில் வேறு எனக்கு அடையாள அட்டையும் இல்லை. ஜேவீப்பீக்காரர்கள் பிடுங்கிக்கொள்ளவுமில்லை. ஜேப்படிக்காரர்கள் தடவிக்கொள்ளவுமில்லை. அடையாள அட்டைக்கு எழுதாமலேயே விட்டவன் நான்.
நாட்டின் ஒரு பகுதியினருக்கு - குறிப்பாக எனக்குப் பிரஜாவுரிமையே இல்லாதபோது இந்த அடையாள அட்டையா ஒரு கேடு?
இந்த அட்டை விஷயத்தில் எனக்குத்தான் நஷ்டம் என்பது இவளின் கண்டுபிடிப்பு!
ஏதோ போன மாதம்தான் எனக்கும் பிரஜாவுரிமை வந்திருக்கிறது - கத்தியின்றி இரத்தமின்றி! அடையாள அட்டையைப்பற்றி இனி யோசிக்கலாம் - சாவதற்காகவாவது!
போர்க்களத்துக்குப் போகும் பாக்கியம் திடீரென்று எனக்கும் ஏற்பட்டது. என் மனஏக்கம் மானசீகமாக சத்தியநாதனுக்குள் புகுந்திருக்க வேண்டும். எழுதியிருந்தான்.
நூற்றெழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பேயே இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த பரம்பரையைச் சேர்ந்தவர்கள் நாங்கள். அது இன்னும் தொடர்கிறது. 'இடமிலர்'- அதாவது ‘இடம் இல்லாதவர்கள்’ என்பதுதான் ‘தமிழர்’ என்று மருவியதோ என்ன இழவோ தெரியவில்லை.
‘அன்லக்கி டபள் செவ’னுடைய திருஷ்டிபட்டுப் புலம் பெயர்ந்து கிழக்கே போன மலையகத்தான் சத்தியநாதன். அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நான் கொழும்புப் பக்கமாக ஓடி வந்திருந்தேன்.
நான் மூட்டை முடிச்சில்லாமல் ஓடி வந்தவன். சத்தியநாதன் குடும்ப மூட்டையோடு லொறிபிடித்துப் போனவன்.
செங்கலடியில் நிம்மதியாக இருந்தான். அமைதி மைந்தனின் அமைதிப்படை தமிழர்களின் சில விஷயங்களுக்குச் சமாதி கட்ட இங்கே வரும்வரையில்.
யார் எப்படியானாலும் தன் ஒரே மகளைக் காப்பாற்ற வேண்டிய கடமை அவனுக்கு இருந்தது.
எக்கச்சக்கமாகக் கடன்பட்டு பதுளையில் ஒரு மாட்டை - மன்னிக்கவும் மாப்பிள்ளையை வாங்கினான்.
மாட்டை வண்டியில் பூட்டும் வைபவத்திற்கு என்னாற் போக முடியவில்லை. தந்தியைத்தான் அனுப்பி வைத்தேன். ஏனென்றால் அவன் கேட்டிருந்த ஐம்பதினாயிரம் அதுவரை என்னிடம் வந்திருக்கவில்லை.
தோட்டத்தில் இருந்த காலத்தில் இவனுடைய பணப்பெட்டியின் மீதுதான் நான் படுத்துக்கிடந்ததே. இப்போது கொஞ்சம் சரிவு. நிமிர்த்த வேண்டியது என் கடன். பணம் புரண்டபோது கல்யாணம் முடிந்து இரண்டு மூன்று மாதமாகி இருந்தது. அவனுக்கு அறிவிக்காமலேயே புறப்பட்டேன்.
சத்தியநாதன் மகிழ்ச்சியால் நெகிழ்ந்துபோனான். தடல்புடலாகத் தன் கண்ணாடிக் கடையை மூடிவிட்டு வீட்டுக்குக் கூட்டிப்போனான்.
வீடு வெறிச்சிட்டுக் கிடந்தது. பாதுகாப்புக் கருதி இவனைத் தவிர எல்லாருமே மாப்பிள்ளையின் ஊருக்குப் போயிருந்தார்கள்.
சமையல், அது - இதென்று சத்தியநாதன் இயங்கிக்கொண்டே கதைத்தான். மாலை மூன்று மணிக்குச் சாப்பிட்டோம். கதைத்தபடியே ஓய்வு. கதைத்தபடியே ஐந்து - ஐந்தரைக்கு ஒரு டீ. கதைத்தபடியே சினிமா. கதைத்தபடியே ஒரு கடையில் இட்லி. கதைத்தபடியே வீடு. கதைத்தபடியே படுக்கை.
பன்னிரண்டு வருஷத்திய கதைகள்!
ஏறக்குறையக் குடும்பக் கதைகள் தீர்ந்து வந்தபோது, இரத்தமே இல்லாதவர்களுக்குச் சொல்லப்பட வேண்டிய கதைகளைக் கொலை கொலையாக, கொள்ளை கொள்ளையாக, கற்பழிப்புக் கற்பழிப்பாகக் கனல் கனலாகக் கோர்த்துக்கொண்டே போனான்.
விடிந்து வந்தபோது கண்கள் செருகின.
எழும்பியபோது எட்டைத் தாண்டியிருந்தது. அவனைப் படுக்கையில் காணோம். விறாந்தைக்கு வந்தேன். எழுவான் கதிர்கள் அப்போதே விறாந்தையை வறுக்கத் தொடங்கியிருந்தன. மூன்று பக்கமும் கிராதி அடித்திருந்தான். ஒரு ஜன்னலடியிற் போய் அதைத் திறந்துவிட்டேன்.
பரந்த தென்னந் தோப்பு. தென்னைகளோடு சில பனைகள், பற்றைகள், பல குடிசைகள், சில கல் வீடுகள். அரைக் கிலோ மீட்டருக்கப்பால், வலது பக்கமாகக் கூடாரமொன்றின் மிலிட்டறிப் பச்சை குனிந்துபோய்த் தெரிந்தது.
“எழும்பிட்டியா?” என்றவன், “இரு, டீ கொண்டாறேன்” என்று உள்ளே திரும்பினான்.
“பிளேன் டீ தாடா,” என்றுவிட்டுத் தோப்பில் ஊடுருவி நித்திரைக் களைப்பைத் தொலைக்க முற்பட்டேன்.
குடிசைப் பக்கமிருந்து ஐந்தாறு பையன்கள் ‘லெஃப்ட் றைட்’களில் தோப்பை நோக்கி வருவது தெரிந்தது. எதிர்ப் பக்கமிருந்தும் ஏழெட்டுப் பையன்கள்.
'ட்றே'யை ஜன்னலோர மேசைமீது வைத்தான் சத்தியநாதன். தண்ணீரை எடுத்து வாய் கொப்புளித்துத் துப்பினேன்.
“இப்ப பாரு ஓய் வேடிக்கய!” என்றான் நண்பன் கிளுகிளுப்பை மாதிரிச் சிரித்தபடியே. “யுத்தம் பாக்க ஆசயா இருக்குன்னு சொன்னீயே, இப்ப நேர்ல்யே பாத்துக்க! பையன்க வெளயாடுறதா நெனைக்காத! இன்றைய யதார்த்தம் நாளைய ஒரிஜினல்!”
தேநீரை உறிஞ்சத் தொடங்கினேன்.
இருபக்கத்துப் பையன்மார் ஒன்றாகினார்கள். பிறகு இரண்டு நிரைகளில் நின்றார்கள். உயரமான ஒருவன் கமாண்டராகத் தனியாக நின்று ‘வெட் வெட்’ டென்று ‘கத்தளை’ இட்டுக்கொண்டிருந்தான்.
ஒவ்வொருவரின் தோளிலும் ஒவ்வொரு தடி. தும்புத்தடியாகவும் இருக்கலாம்! இடுப்பைச் சுற்றிப் பனங்காய், குரும்பட்டிக் குண்டுகள். மார்புக்குக் குறுக்கே நிற நிறமான - டோர்ச் லைட் :பெட்றிகளின் கோர்வை. பல நிறங்களில் விறைத்த தொப்பிகள், விறைத்த உடைகள், விறைத்த உடல்கள், விறைத்த பார்வைகள்.
“இந்தூர்ப் புள்ளைகளுக்குப் பொழுது விடிஞ்சாப்போதும்டாப்பா! வீட்டுகள்ல ஒரு பெட்றித் துண்டு வைக்க விடமாட்டானுக! பிச்ச எடுக்கிற மாதிரி வீடு வீடாக் கேட்டு வருவானுகன்னா பாரேன்!.. இப்பப் பாரு, இன்னுங் கொஞ்ச நேரத்தில மெஷின் கன் சத்தமும் குண்டுச் சத்தமும் இந்தத் தோப்பே கிடு கலங்கப் போகுது!” என்று சிரித்தான் சத்தியநாதன்.
கால்களைத் தூக்கி அடித்தும் திரும்பியும் ஓடியும் நடந்தும் சரிந்தும் உருண்டும் புரண்டும் - தோப்பில் ஒரே வியர்வைக் கூத்து.
தேநீர்க் கோப்பையை ட்றேயில் வைத்துவிட்டுச் சத்தியநாதன் நீட்டிய சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டேன்.
சத்தம் அதிகரித்தபோது மேலும் பத்திருபது தறுதலைகள் குடிசைகளிலிருந்து ஓடி வந்தன.
தேகப்பயிற்சி பிரமாதமாகத்தான் இருந்தது. மிலிட்டறிக் கேம்பில் நடப்பவற்றைப் பையன்கள் எவ்வளவுக்கு ஊன்றிக் கவனித்திருக்கிறார்கள் என்பதை அது நிரூபித்தது.
“ஐப்பீக்கேயெஃப் பத்தியும் புலிகளைப் பத்தியும் நமக்குத் தெரியாததெல்லாம் இந்த வாண்டுகளுக்குத் தெரிஞ்சிருக்குடாப்பா!” என்று சிரித்தான் அவன்.
வயிற்றைக் கலக்கியதால் நான் பாத் றூம் போய் உட்கார்ந்தேன்.
கமாண்டர்ப் பயலின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.
‘மக்களைக் கொல்ல இவ்வளவு பயிற்சிகளா?’ என்றொரு வினாவும் எனக்குள்!..
நான் மறுபடியும் ஜன்னலடிக்கு வரும்போது, “இனித்தான்டா 'அட்டாக்'கே தொடங்கப்போகுது வா!” என்று அதே கிளுகிளுப்புச் சிரிப்பை உதிர்த்தான் சத்தியநாதன்.
கமாண்டர் கத்திக்கொண்டிருந்தான். பையன்கள் இருவரிருவராகவோ மூன்று - நான்கு பேர்களாகவோ பிரிந்துபோய் நின்றுகொண்டும் கிடந்து கொண்டும் துப்பாக்கிகளை நீட்டிக்கொண்டுமிருந்தார்கள்.
இடது புறமாகத் தெரிந்த குடிசைகளின் பக்கமிருந்து, இலை - குழைகளால் செய்யப்பட்ட ஒரு வாகனம் வரத்தொடங்கியது!
“வாகனத்தில் வாறது பொடியங்க!” என்றான் சத்தியநாதன் தானும் அவர்களுள் ஒருவனான குதூகலத்தில்.
வாகனத்தில் மூன்றே மூன்று புலிகள். வாகனம் நின்றது.
புலிகள் கீழே இறங்கிப் பதுங்கி முன்னேறினார்கள்.
வசதியான ஓரிடத்தில் கால்களை அகட்டி நின்றார்கள்.
சரமாரியாக அவர்களின் மெஷின் கன்களிலிருந்து சன்னங்கள் கிளம்பும் ஓசைகள் கேட்டன! ஏற்கெனவே பயிற்சி செய்துவிட்டு நிலைகளில் நின்றிருந்த ஐப்பிகேயெஃப், பதுங்கி ஒதுங்கிப் புரண்டு கிடந்து எதிர்த் தாக்குதலில் இறங்கியது.
மூன்று புலிகள், இருபது முப்பது அமைதிப்படை.
கூச்சல், குழப்பம், வெடியோசைகள்!
மூன்று புலிகளும் கம்பீரமாகச் சுட்டுக்கொண்டே இருக்கச் சாகவே பிறந்தவர்கள் மாதிரி இராணுவத்தினருள் பலர் பட்பட்டென விழுந்து கொண்டிருந்தார்கள்!
சுடுவதை நிறுத்திய புலிகள், தங்கள் இடைகளில் தொங்கிய பனங்காய்களையும் குரும்பட்டிகளையும் பிடுங்கி எறிந்தார்கள்.
‘குண்டு’ போய் விழுந்த பக்கங்களில், இராணுவத்தினர் சிலர் மேலே எகிறிக் கீழே விழுந்து துடித்ததையும் செத்ததையும் பார்த்தபோது, அந்தத் தத்ரூபக் காட்சி என்னை நிஜமான ஒரு போர்க்களத்திலேயே ஒரு கணம் நிறுத்திவிட்டது!
அமைதிப்படை அமைதி இழந்தது!
“அட, எப்படி நடிக்கிறானுகன்னு பாரேன்!”என்று வாயூறினான் இவன்.
புலிகளோ தங்கள் வேலை முடிந்துவிட்டதைப்போல வண்டியில் ஏறி ஒரு வட்டமும் அடித்துவிட்டுப் பறந்துபோனார்கள்!
சாகாமற் சமாளித்துக் கிடந்த ஜவான்கள் சிலரே. அவர்களுக்குள்ளும் யார் பிழைப்பது என்பதைப் போன்ற குழப்பம்! அவர்களது மொழிக் கச கசாப்பு வேறு!..
“இது புலிகளுக்கு சப்போர்ட்டா நடக்கிற நாடகம்னு நெனைக்காத! உண்மையே இதுதான்! லானா பூனா சொல்றதத்தானே நீங்க நம்பிக் கெட்டுப் போறீங்க” என்று மறுபடியும் அவனிலிருந்து சிரிப்பு.
“இன்னும் பத்து வருஷங் கழிச்சி வாற பரம்பரை யுத்த தாகத்தோடதான் இருக்கப்போகுது பாரு!”
“எங்க இலக்கியமே யுத்த தாகம்தானே!” என்றேன் நான். “எந்த மதம் யுத்த தர்மத்தப் பத்திச் சொல்லாம இருக்கு? எந்த இலக்கியம் சொல்லாம இருக்கு? இவ்வளவு காலமும் நம்ப நாட்ல யுத்தமே இல்லாததால கோழைகளா வளந்துட்டோம்! அதனாலதான் அமைதி அமைதின்னு கத்த வேண்டியதா இருக்கு! அமைதியும் வேணும், யுத்தமும் வேணும்!”
‘நீ எப்பவுமே தறுதலத்தனமாகத்தானே கதைப்ப! நாடகத்தப் பாரு!’
பிணத் தறுதலைகள் இன்னும் செத்தே கிடக்க, உயிரோடு எழும்பியவர்கள் அட்டகாசத்தில் இறங்கியதோடு, விளையாட்டின் - நாடகத்தின் - போரின் - மூன்றாங்கட்டம் ஆரம்பமாகியது.
மிரண்டவன் கண்களுக்கு உருவோடிருந்த அனைத்துமே புலிகளாகத் தெரிந்தன!
“யா ஹரே அச்சா ஹை” போன்றவை ஒலி ரூபங்களானாலும் “சுடு - கொளுத்து - வெடி - எறி - கொல்லு – “ போன்றவை மனத்திலாகின!
விபரமற்ற ஒரு யுத்த முனையின் உதாரணம்!
பொறுப்பற்ற ஓர் இராணுவத்தின் செயற்பாடு!
எங்கள் ஜன்னலுக்குள்ளும் ஒரு குரும்பட்டி எறிகுண்டு வந்து விழுந்தது!
“கண்ணாடி தப்பிச்சதே போதுண்டாப்பா, சனியன்!” என்று கை கொட்டிச் சிரித்தான் இவன்.தொடர்ந்து ஜவான்களின் கைக்குண்டுகளும் குறிகளும் குடிசைகள் மீது திரும்பின.
அகாலம் புரியாத அகதிகள் மூட்டை முடிச்சுகளோடு அந்தப் பக்கமாக வரலானார்கள்!
வந்தவர்கள் அமைதிப் படையைக் கண்டு மூக்கையும் பிடித்துக்கொண்டு தறிகெட்டு ஓடத் தலைப்பட்டபோது, ஒரு ஜவான் என்னவோ சொல்லிக் கத்த, அவர்கள் நின்று கும்பிட்டுக் கூத்தாடி நடுங்க, நாலைந்து துப்பாக்கிகள் அவர்களின் பக்கமாக உயர்ந்தன.
கிழவிகள், கிழவர்கள், முஸ்லிம் வாலிபர்கள், குமர்கள், இரு பையன்கள்! அங்குலம் அங்குலமாக நகர்ந்து அப்பட்டமான ஒரு காட்சியை உருவாக்கினார்கள்!
ஒரு கிழவி பலியாகி விழுந்தாள்.
“அடப் பாவீ, அந்தக் கெழவியும் புலியாடா!” என்று சிரித்தான் சத்தியநாதன்.
ஒருவனின் துப்பாக்கி அங்கு நின்ற அத்தனை பேரையுமே புலிகளாக்கிச் சுட்டு வீழ்த்தியது! “கொஞ்சக் காலமா எங்களுக்கு இதுதான்டா பைஸ்கோப்பு!” என்று இன்னொரு சிகரட்டைத் தந்து தானும் ஒன்றைக் கொளுத்தினான்.
“வாண்டுப் பயலுகளோட வெளயாட்டுனு நெனைச்சீன்னா இதுல ஒண்ணுமே இல்ல. இதையும் பாத்துட்டு நாளைக்கி நாளாண்டைக்கி லானா பூனா என்னா சொல்றான்னும் கேட்டீன்னாத்தான் எது நெசம்னு ஒனக்குப் புரியும்!.”
இந்த ஜவான்களுக்குத் துணையாக மேலும் பத்துப் பதினைந்து பேர்கள் வந்து சேர்ந்த பிறகு, எல்லாருமாகக் குடிசைப் புறத்தை நோக்கி ஓடினார்கள்.
“ரவுண்டப் - எய்ம் - ஷுட் - கில் –“என்றெல்லாம் கமாண்டர் கத்தினான்.
சுட்டுக்கொண்டே ஓடியவர்கள் குடிசைகளை வளைத்தார்கள். குண்டுகளும் சன்னங்களும் சடுசடு விளையாடின.
குடிசைகளிலிருந்து ஒரு பத்திருபது வாண்டுகள் உயிர் தப்பும் கோஷங்களோடு தோப்புக்குள் ஓடிவரும் ஒரு செட் - அப்! சூடுபட்டுச் சிலர் விழச் சிலர் துப்பாக்கி முனைகளில்!
ஒருவனுடைய வயிற்றில் துப்பாக்கி குத்துகிறது. “அம்மா!” என்று அவன் விழுகிறான். இன்னொருவனுக்கு மண்டையில் துப்பாக்கி அடி. அவன் “கடவுளே!” என்று விழுந்து துடிக்கிறான்...
கமாண்டர் கத்தினான்.
எல்லாருமே மளமளவென்று குப்புறக் கிடக்கத் தொடங்கினார்கள்.
ஒரு ஜவான் தன் துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டுக் குப்புறக் கிடந்த ஒரு பெண்ணை இழுத்து, மல்லாக்கக் கிடத்தி, அவள் மீது –
“அதென்னா இன்னைக்குப் புது..” என்ற சத்தியநாதன் விளங்கிப்போய் அதிர்ந்தவனாக,”டேடேய்!” என்று கத்தியவாறே வெளியே பாய்ந்தான். “அந்த விளையாட்டுக்கெல்லாம் போகாதீங்கடா! அத விட்டுட்டு மத்ததுகள விளையாடுங்க!”
அதிர்ந்துபோய் நின்றிருந்தேன் நான்.
இதுவரையில் சிரித்துக்கொண்டிருந்த சத்தியநாதனின் முகத்தில் திடீரென ஒரு வகைக் கிழடுதட்டியிருந்தது.
No comments:
Post a Comment