Monday, May 16, 2011

இரவு பகல் நான் நீங்கள்


சாந்தினி.வரதராஐன்

எல்லா சிறைகளையும் உடைத்துக்கொண்டு எண்ணங்கள் ஒரு முற்றுப்புள்ளியின்றி நீண்டு கொண்டே போகின்றது. வாழ்வு பற்றிய நினைவுகள் வெறுப்பும், சோதனைகளும் நிறைந்ததாகவே காணப்படுகின்றன. இரவும் பகலும் அமைதியை இழந்து தவித்துக்கொண்டிருக்கும் காலம் நீண்டுகொண்டே போகின்றது. அப்போதைய பிணங்களின் வாடையும் அழுகையும் இன்னமும் அகலாது காற்றில் ஒட்டியிருக்கும் மண்ணில் அன்று பிணம் புசிப்பதற்காய் பக்கத்திலிருந்துவந்த கழுகுகளும் ஓநாய்களும் இன்னொருதருணத்திற்காய் ஏங்கிக்கொண்டு காடுகளிலும் மரங்களிலும் ஒழிந்திருந்திருக்கின்றன   என்பதை அறியாத அப்பாவிகள் யுத்தம் அற்றுப்போன காற்றை அவசர அவசரமாய் சுவாசித்து திரிந்தற்கான அடையாளங்களாய் எழும்பிய வீடுகளும், கோயில்களும், பாடசாலைகளும், வயல்களும், தோட்டங்களும் இன்னும் எத்தனை எத்தனை அத்தனையும் இன்று கரிபடிந்த முகத்தோடு வீழ்ந்து கிடக்கின்றது. சிரித்தும் கதைத்தும் கதைசொல்லியும் திரிந்த வீதிகள் சருகுகளால் மூடிக்கிடக்கின்றன. மூடின சருகுகளின் கீழ் இங்கு வாழ்ந்தவர்களின் அடையாளங்கள் அத்தனையும் அழுதுகிடக்கின்றது என்பதை யார்ரறிவார்?    

கால காலமாய் கதை சொல்லியும் கதை கேட்டும் வளர்ந்தவர்கள் நாங்கள். கதைகளும்  பாத்திரங்களும் எந்தகாலத்திலும் மாறியதே இல்லை. ஆனால் இன்று கதைசொன்னவர்களும் கதைகேட்டவர்களும் மரணத்தையல்லவா சுவாசித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களோடு சேர்ந்து எத்தனையோ கதைகளைக்கேட்டு கேட்டு வளர்ந்த நான் இன்று உங்களோடு பேச வரவில்லை. கதைசொல்லியாகவும் வரவில்லை. நான் மரணத்துடன் பேசிக்கொண்டிருக்கின்றேன். அவர்களுடையதும் என்னுடையதுமான மரணத்துடன் பேசிக்கொண்டிருக்கின்றேன்

இப்போது துயரத்தின் சாம்பலை தன் முகத்தில் அப்பிக்கொண்ட இந்த கிரமம்பற்றிய என்னைக்கடந்து போன நாட்களை எண்ணிப்பார்க்கின்றேன். பொழுதெல்லாம் புன்னகையை அள்ளி அள்ளித் தூவிய நாட்கள் அவை. அப்பாச்சியும், அம்மாவும், அப்பாவும், தங்கையும், தம்பியும், நானும். அவர்கள் என்னையும் தங்கள் பிள்ளையைப்போல்தான் நேசித்தார்கள். அவர்கள் வாழ்க்கையை ஒரு தேன்கூட்டைப்போல் பொத்தி பொத்தி வாழ்ந்த வீட்டிலும், மண்ணிலும் இப்போ பெரிதும் சிறிதுமாய் மண் மூட்டைகள் அடுக்கி கிடக்கின்றன. எங்கும் பதுங்குகுழிகள் வாயை ஆவென்று பிளந்தபடி அதுக்குள் விழுந்து பதுங்கிக்கிடக்கும் சனியன்கள். எதையோ எதிர்பார்த்துக்கிடப்பதுபோல் அப்பாச்சி அடிக்கடி சொல்லுவா முந்தி வன்னியெண்டா சிலருக்கு ஏதோ காஞ்சுபோனகாடும், நுளம்பும்
மலேரியாவும், குளமும், இதுமட்டும்தான் நினைவிலவருமாம். அம்மாவீட்டாக்களைப் பற்றி நினைக்கிற பொழுதெல்லாம் இப்படித்தான் அப்பாச்சி தன் கோபத்தை வெளிப்படுத்துவா.

பின் ஒரு இரவில் காலம் எல்லாவற்றையும், எல்லோரையும் மாற்றிப்போட்டபோது அப்பாச்சியும் எல்லாவற்றையும் மறந்து காடுகளைப்போல சிரித்து அணைத்தா. எனக்கு விளங்கவேயில்லை ஏன் எல்லா நிகழ்வுகளும் இரவில நடக்கிது? இரவு சாத்தான்களுக்காவே பிறந்ததுபோல அவர்களோட சேர்ந்து எங்களைப்பார்த்து கைகொட்டிச் சிரிக்கிது.                                                 
அந்தத்  துயர் நிறைந்த நாளும் அதுவும் ஒரு இருண்ட இரவுதான். எத்தனை கெஞ்சல்கள், அழுகைகள், மன்றாட்டங்கள் அப்பாச்சி எது சொன்னாலும் சிரித்த முகத்தோடு இந்த வீட்டை நிறைத்து நிற்கும் அம்மா இரும்பு சப்பாத்தினொலிகளோடு வந்தவர்களின் கால்களை பிடித்துக் கெஞ்சி அழுதா எதற்கும் இரங்காத பிணம்தின்னிகள் அம்மாவை எட்டி உதைத்துவிட்டு அப்பாவை இழுத்துச்சென்றார்கள். அவர்களின் சிரிப்பொலியையும் அப்பாச்சியினதும் அம்மாவினதும் கதறல்களையும் அள்ளிக்கொண்டு கறுப்பு புகையை கக்கியபடி அந்த வெள்ளைவான் பறந்தது. மண்ணில் உருண்டு உருண்டு அழுதவர்கள் முடிவில் மண்ணை அள்ளி அள்ளித்திட்டினார்கள், சாபம் போட்டார்கள். இந்த உலகத்தினுள்ள அத்தனைகடவுள்களையும் திட்டினார்கள். சாபங்கள் பலிக்குமாமே? அப்படியானால் எத்தனைகோடி சாபங்கள் அவர்களின் தலையில் கூடுகட்டி இருக்கும்? அப்பாவை அவர்கள் இழுத்துச்செல்லும்போது அவரின் கண்களில் மரணபயம் தெரிந்தது. அவர் என்னைப் பார்த்த பார்வை என்னிடம் ஏதோ சொல்லத்துடிப்பது போலிருந்தது. பாவிகள் எதையுமே சொல்லவிடவில்லை.  அப்பா என்ன சொல்ல நினைத்திருப்பார்.? சொன்னவார்த்தைகளைவிட சொல்லாமல்போன வார்த்தைகளை தேடுவது இயல்புதானே. என் நெஞ்சறை காய்ந்துபோனது. எதுவுமே செய்ய இயலாது எல்லாவற்றையும் பார்த்தபடி நான் நானாகவே நின்றேன்

எங்களுக்காவே வாழ்ந்த அப்பாவைப்பற்றிய எந்தச்செய்தியும் தெரியாத நிலையில் இந்த வீடும் எல்லாவற்றையும் பார்த்தும் பார்க்காததுபோல் ஊமையாகி நின்றது.  போர் என்றுவந்தால் புல்லும் புழுக்கழும் நசிபடுவது இயற்கைதானே என்று வீடும் நினைத்திருக்குமோ?  வீடு மட்டும்தான் ஊமையாகி நின்றது. துப்பாக்கிகளின் ஒலிகளும் ஒளிகளும் புரியாத மொழிகளில் கேள்வி கேட்டகத்தொடங்கிவிட்டன. அதற்கான பதில்களும் அவசர அவசரமாய் வந்து கொண்டே இருந்தன. ஒளியற்ற இரவுகளுக்கும் ஓலங்களுக்கும் வாழ்க்கை பழக்கப்பட்டுக்கொண்டிருந்தது

முன்பும் அப்படித்தான் இடப்பெயர்வு அப்பாச்சியை மட்டும்தான் சந்தோஷப்படுத்தியது. பின் எல்லாமே குரங்குகளும், யானைகளும், வயல்களும், வெளிகளும், பள்ளிக்கூடமும், கள்ளாமில்லாத கண்களோடு நிறைந்து வழிந்த பிள்ளைகளும் பழகிப்போக இதுவே இவர்களுக்கு நிரந்தர இடமானது. சில வேளைகளில் தம்பியும், தங்கச்சியும் அப்பாச்சியோடு யாழ்ப்பாணக்கதைகளை தம்மை மறந்து சொல்லத்தொடங்குவார்கள். நானும் ஆசைஆசையாய் கேட்டுக்கொண்டே இருப்பன். அந்த அழகிய பட்டினத்தில் உங்களை யாழ்ப்பாணம் வரவேற்க்கிறது என சிரித்த முகத்தோடு இருந்த எல்லைகள் ஒவ்வொன்றும் தொப்பிபோட்டு தூப்பாக்கி ஏந்திய ராணுவ எல்லைகளாய் மாறிய பின் அதன் கண்கள் ஒரு நாள்கூட தூங்கியதே இல்லையாம். அதுக்கு கண்களும், வாயும் மட்டும்தான் இருந்திருக்கிறது.  ஒரே கதையைதிரும்ப திரும்பச்சொல்வார்கள். சொல்லி முடித்த பின்னும் அவர்களின் கண்கள் பழைய நினைவுகளில் வீழ்ந்து கிடப்பதை பலமுறை பார்த்திருக்கின்றேன்

குழந்தைகளின் சிரிப்பொலி நிறைந்து வழிந்த பாடசாலையில் இப்போது அழுகை சத்தத்தை தவிர வேறெதுவுமே இல்லை. இங்கு அத்தனை புன்னகைகளும் நிலத்தினுள் புதையுண்டு கிடக்கின்றன. சூரியனின் வருகையை கடல்போன்ற கைகளால் மறைத்தபடி இந்த இருட்டு ஏன் திரும்பத்திரும்ப வருகிறது? முன்பெல்லாம் காலை எட்டுமணியானால்போதும் இந்த வீதியெல்லாம் குழந்தைகள்  பூக்கள் நடந்து வருவதுபோல் வருவார்கள். மணி அடித்தவுடன் தேவாரம் திருவாசகம் என்று ஒரே குரலில் ஒரே மொழியில் சங்கீதமாய் பாடுவார்கள். முடிவில் எல்லோரும் வாழ்க இன்பமே சூழ்க என்றுதானே ஒவ்வொரு நாளும் சொன்னார்கள். சுயநலமாக சிந்திக்கக்கூட தெரியாத குழந்தைகளின் பாடப்புத்தகத்தில் இலங்கையில் எத்தனை இனம் உண்டு?  நீங்கள் என்ன இனம் ? என்ற கேள்வி கேட்க்கப்பட்டிருக்கும். நாங்கள் தமிழர்கள் என்ற பதில் சத்தமாக உறுதியாக வந்து விழும். அதிலும் தம்பியின் குரல் மிகச்சத்தமாக கேட்கும்.  அந்தகுஞ்சுக் குழந்தைகள் வழக்கம்போல் எல்லோரும் வாழ்க இன்பமே சூழ்க என்று சொல்லிக்கொண்டிருந்த காலைப்பொழுதொன்றில்தான் ஏன் எங்களை கொல்கிறார்கள்? என்று தெரியாத பிஞ்சுகளின் தொண்டையிலிருந்து குடித்த தண்ணீரும், உண்ட உணவும் இறங்கக்கூட இல்லை

வெள்ளைப்புறாக்களை சிவப்பு நிறமாக்கிய பெருமிதத்தில் விமானம் மேலெழுந்து பறந்தது.அது அடையாளம் காட்டமுடியாத மரணம். தமிழ் பேசியதை தவிர அந்தக்குழந்தைகள் வேறு என்ன பாவம் செய்தார்கள்? மரணம் என்றால் என்னவென்று தெரியாத குழந்தைகள். அதை நினைத்துக்கூட பார்க்கத்தெரியாதவர்கள் அவர்களது சந்தோஷங்களை கனவுகளை அந்த ஒரே நாளில் கீபீர் குண்டுகள் அள்ளிக்கொண்டு போயின.   

நீளக்கிடந்த நிலமெல்லாம் துயர் படர்ந்து கிடந்தது. வெளிகளிலும் வயல்களிலும் உயிரற்ற உடல்கள் அண்ணாந்தும் குப்புறவும் கிடந்தது நாங்கள் என்ன செய்தோம்?  என்று கேள்வி கேட்கத்தொடங்கின. தலையில்லாத மனிதர்களும், கோழிகளும், ஆடுகளும் நிறைந்து  வழிந்தன. மரணத்தின் நிழல் தங்கள் மீதும் படரத்தொடங்கிவிடும் என்ற அச்சத்தில் ஊர் நடுங்கியது. பின் மெல்ல மெல்ல நகரத்தொடங்கியது. தங்கச்சியும் இப்போது என்னிடம் எந்தப்பதிலும் தேவையில்லை என்பதுபோல் தானே கேள்வியைக்கேட்டு தானே பதிலும் சொல்லிக்கொண்டிருந்தாள்.

"அண்டைக்கு அவங்கள் என்னைத்தான் தேடிவந்தவங்கள் நான் இல்லாததால்தானே என்ரை அப்பாவை கொண்டுபோனவங்கள். இனியும் வருவாங்கள் நீயே சொல்லு நான் போகாம இருக்கிறதுக்கு சில காரணங்கள்தான் இருக்கிது. ஆனா போறதுக்கு நிறைய இருக்கிது. ஓவ்வொன்றாய் அடுக்கிக்கொண்டே போகலாம் ஆனா எனக்குத்தான் நேரமில்லை ஏனெண்டா அதுக்கான காரணமும் அதிகமாகிக்கொண்டே போகுது. ஆனா ஒண்டுமட்டும் சொல்லிறன் கேள் என்ரை குழந்தைப்பருவத்தை பாவிகள் தங்கட சப்பாத்துக்காலாலும், துப்பாக்கியின்ர ஒலியாலையும் நசுக்கிவிட்டிட்டினம். என்ரை குழந்தை நினைவுகளில மரணமும், பயமும் இதைத்தவிர வேறெதுவுமேயில்லை. விளையாட்டைத்தவிர எதுவுமே தெரியாத அந்தப்பருவத்தை  அவையளால இனி திரப்பிதர ஏலுமே சொல்லு? ஆனா அவையளின்ர பிள்ளைகள் மட்டும் விளையாடினம், அவையளின்ர அம்மா அப்பாவோடு சேர்ந்து பள்ளிக்கூட விளாயாட்டுப்போட்டியிலும் விளையாடினம். ஆனா நாங்கள் பிளேனைக்கண்டால் ஓடிவந்து அண்ணாந்து பார்க்கிற வயதிலயிருந்து இண்டைக்குமட்டும் ஓடிப்போய் பதுங்குகுழிக்குள்ள கிடக்கிறம். எங்களுக்கு தெரிய விமானம் எண்டால் பிராயணம் செய்யிற வாகனம் எண்டு பாடப்புத்தகத்தில படிச்சதோட சரி. ஆனா எங்களைப்பொறுத்தவரை எங்களுக்கு மேல குண்டுபோட வாற ஒரு எமன் எண்டுமட்டும்தான் தெரியும்".  தங்கச்சி போய்விட்டாள். அவளும் என்னை சாட்சியாக வைத்துவிட்டுத்தான் போனாள்.

அவளின் கால்தடயங்களின் பக்கத்தில் எத்தனையோ காலடிகள் தொடர்ந்தவண்ணமிருந்தது. இப்படியே தொடர்ந்தால் இந்த தேசத்தின் துயர் நிறைந்த வரலாற்றை யார் கூறப்போகிறார்கள்? எந்தக்குழந்தை கண்கலங்க கதை சொல்லப்போகிறது? அவள் போனபின்னும் விதியே விதியே தமிழ்சாதியை என்ன செய்ய நினைத்திட்டாய்? என்ற பாட்டு மட்டும் அவளின் குரலில் என்னைச் சுற்றி சுற்றிக் கேட்டுக்கொண்டே இருக்கிது.

வழக்கம்போல் முற்றம் கூட்டும்பொழுது என் பக்கத்தில் வந்த அம்மா எதையெல்லாம் சொல்ல நினைக்கின்றாவோ அவ்வளவையும் ஒரு பார்வையால் ஒரு துளி கண்ணீரால் மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்தா. அப்பாவின் பிரிவுக்கு பின் அம்மாவின் குரலை நான் எப்பவும் கேட்டதேயில்லை. மரணம் பின்வேலியால் வந்து கொண்டிருந்த காலம் மாறி முன்னாலும் கால்களுக்கிடையிலும் வளர்ந்து கொண்டேயிருந்தன. சபிக்கப்பட்ட அந்த இரவைப்போலவே மறுபடியும் ஒரு இரவு பேயைப்போல், பிசாசைப்போல் அவர்களோடு கைகோர்த்து இயற்கையும் என் மக்களை ஓட ஓட விரட்டியது. மனிதர்கள் கட்டிய கட்டிடங்களை மனிதர்களே இடித்தார்கள் மனிதர்களை மனிதர்களே கொன்றும் குவித்தார்கள். கனவு காண்பதற்கு நேரமே இல்லாமல் இரவும் பகலும் உழைப்போடு வாழ்ந்த மக்கள்.  இயற்கைக்கும் நன்றி சொல்லி விழா எடுத்தவர்கள். எத்தனை கடவுளை நம்பினார்கள். எல்லாக்கடவுள்களையும் தோளில் சுமந்து ஊர் காட்டினார்களே. ஆண்டவரே ஆண்டவரே யாரை நாம் சபிப்பது? எந்தச்சூனியக்காரியின் கண்பட்டு கருகிக்கிடக்கிறது இந்த மண்?  குடுகுடுப்பைக்காரன் சொன்னதைக்கூட நம்பினார்களே. நம்பி ஏமாந்த மக்களை இன்று மரணம் துரத்தி துரத்தி கொல்கிறதே. இந்த துயர் நிறைந்த வாழ்க்கையை சொல்ல என்னிடமும் எந்த மொழியும் இல்லை.

இரவானால் போதும் அப்பாச்சி தம்பிக்கும் தங்கச்சிக்கும் கதை சொல்லத் தொடங்குவா பாரதக்கதை சொல்லும்போது தங்கச்சிக்கு கோபம் வரும்." ஐந்து வீடும், ஐந்து ஊரும் பிச்சையாவோ கேட்கவேணும்".? இராமயாணக்கதை சொல்லும்போது தம்பிக்கு கோபம்வரும்" அந்தக்குரங்கு எப்படி எங்கட நாட்டை எரிக்கும்? அதுதானே எண்டு எனக்கும் சொல்லவேனும்போலயிருக்கும்". ஆனால் இன்று கொட்டும் மழையில் பொதிகளை சுமந்தபடி தாம் வாழ்ந்த மண்ணை, மனையை எல்லாவற்றையும் இழந்து போகும் பொழுது இந்த ஊரே அழுதது. ஆரும் ஆருக்கும் ஆறுதல் சொல்லமுடியாத அழுகை அது.

அப்பாச்சியும் அழுதா தனக்காக இந்த வீட்டையும் மகனையும் மட்டும் விட்டுப்போக தனிச்சு நிண்டு போராடி ஆரம்பிச்ச வாழ்க்கையை ஆரோ முடிச்சுவைக்கின்றானே என்று ஒப்பாரிவைத்து அழுதா. அம்மா எதுவுமே சொல்ல முடியாமல் என்னையும் தோட்டத்தையும் ஆட்டையும் வீட்டையும் கண்ணால் தடவி தடவிப் பார்த்தா பாவம் அம்மா. தான் வாழ்ந்த அந்த காதல் வாழ்க்கையையும் ஆருக்கும் சொன்னதில்லை துயரத்தையும் சொல்வதில்லை. ஆனால் அத்தனையையும் அம்மாவின் கண்கள் சொல்லிக்கொண்டேயிருக்கும்

ஊரே ஓடியது நிழல்தரும் மரங்களெல்லாம் வேரோடு பிடிங்கி எறியப்பட, சில மரங்கள் தானே காணமல் போயின காற்றும் தன்பாட்டில் கதைகளை பரப்பிக்கொண்டிருந்தது. மரங்களற்ற வெளி வியாபித்துக் கொண்டுபோக ஊர் வெக்கை தாங்க முடியாமல் அந்தரித்தது.  முன்புபோல் சாவுக்கு ஓடி ஒளிந்து கொள்வதற்கு எந்த அவசாகமும் கொடுக்காது சத்தமில்லாது என்ன நடக்கின்றது? என்று யோசிக்கவும் விடாது உச்சந்தலையில்வந்து சிதறடிக்கும் குண்டுகள் புதிது புதிதாக எம்மக்களில் மீது பரிசோதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. மக்கள் வெள்ளமென திரண்டார்கள். அவர்கள் மனதில்மட்டும் பெரும் தீயொன்று மெலெழுந்து எரிந்து கொண்டிருந்தது. ஆயிரம் ஆயிரம் காலமாக பாடுபட்டு சேர்த்த எல்லாவற்றையும் ஒரே நாளில் விட்டு விட்டு ஒரு பைக்குள் உயிரைமட்டும் பொத்திப்பிடித்தபடி வாழ்வு சமைத்திட்ட மக்கள் கண்ணீரால் முகம் கழுவி வாழ்விடம் தேடி ஓடினார்கள்.  சாவுக்கும் வாழ்வுக்கும் சாட்சியாக என்னை மட்டும் விட்டுவிட்டு.

இந்த துயர்பீறிட்டு வருகின்ற பொழுதுகளில் மட்டுமல்ல இப்போது எல்லாப் பொழுதுகளிலும் என்னிலிருந்து எல்லாவற்றையும் இழப்பதாய் உணர்கிறேன். என்னைப்பொறுத்தவரை எனக்கும் என்ரமக்களுக்கும் இது இலையுதிர்க்காலம்.

இப்போ விடிந்ததும் வெளிச்சத்தை முந்திக்கொண்டு வெறும் காடாக மௌனித்து நிற்கும் என்ரை மண்ணில் எங்கு பார்த்தாலும் புரியாத பாஷையும் பழக்கப்பட்ட அழுகுரல்களும், சிங்கங்களின் சிரிப்பொலியும்.  வாழ்ந்த மக்களை தொலைத்த ஊரில் துயர் நிரம்பி நிரம்பி வழிந்து கொண்டேயிருந்தது.  

சிறிசேனாவும், நிமலும் பதுங்கு குழிக்குள் தங்கள் வாழ்க்கையை ஒழித்துவைத்துக்கொண்டு எந்த நிமிடமும் மரணம் காலடிக்குள் வரலாம் என்ற பயத்தோடு துவக்கை கட்டிப்பிடித்தபடி இருக்கிறார்கள். சிறிசேனாவின் விரல்களிலிருந்த வயர்மோதிரங்கள் எங்கேயோ தொலைந்து போயிருந்தன. அவனுக்கு சம்பந்தமே இல்லாத எழுத்துக்களில் மோதிரங்கள் அவன் விரலை நிறைத்திருந்தது. துவக்கை துடைப்பதைவிட அவன் மோதிரங்களை துடைக்கும் நேரம் அதிகரித்துக்கொண்டே போனது.

இவன் நிமல் பரவாயில்லையோ என சில சமயம் நினைக்கவைப்பான். தனக்குவரும் கடிதங்களை தனியாக இருக்கும்பொழுதுகளில் எழுத்துக்கூட்டி சத்தமாகப் படிப்பான். கடிதம் எழுதும் பொழுதும் சொல்லிச்சொல்லி எழுதுவான். மகே அம்மே இப்போவெல்லாம் இந்தச்சொல்லைத்தான் அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கிறன். சிறிசேனாவின் ஓலைவீடு ஓட்டுவீடானகதையும் அவர்கள் இப்போ கக்கூஸ்சும் கட்டிவிட்டார்கள் என்ற வரிகள் கடிதத்தை நிறைத்து நிற்கும். அம்மே சிறியின் ஓலைவீடு ஓட்டு வீடாமாறுவதுக்கு இங்கு காலம் காலமாக வாழ்ந்த எத்தனை தமிழர்களின் வீடு மண்ணோடு மண்ணாய் போனது உனக்கு தெரியுமா அம்மே? அவையளின்ர ஒவ்வொரு சுவரிலும் நிலத்திலும் தமிழரின்ர இரத்தமும் கண்ணீரும் படிந்துபோயிருக்கும்.  சிறிசேனவின் வீட்டுச்சுவரிலை காதை வைச்சு உன்னிப்பாக கேள் அம்மே அதிலையிருந்து அழுகுரல்களும் சாபங்களும் உனக்கு கேட்கும் எனக்கு இவர்களின்ர சாபத்திலையும், கண்ணீரிலையும் எந்தவீடும் வேண்டாம். கக்கூசும் வேண்டாம். எனக்கு பன்சலையிருந்து பிரித்ஓதி ஒரு கூடு வாங்கி அனுப்பு சிலவேளை அதுதான் ஒருநாள் என்னை உனக்கு அடையாளம் காட்டும் அம்மே. அவன் அழுதான். எனக்கும் அழுகைவந்தது.   

பாதுகாப்பு வலையமென சொல்லப்படும் பொறிக்குள் அகப்பட்ட எங்கட பிள்ளைகளின்ர அழுகுரல்கள் பழுக்கக்காய்ச்சிய இரும்பாக காதுகளில் இறங்கும். அப்போது நிமல் மெல்ல சாய்ந்து கண்களை மூடிக்கொள்வான். சிறிசேனாவின் காதுகள் யானையின் காதுகளைப்போல் விரியும் அவனின் முகம் பிரகாசிக்கும். என்னைச்சுற்றி பாம்புகளும், ஓநாய்களும், கழுகுகளும் பெருகிக்கொண்டே போகின்றது. மரங்களில்லா ஊரை நிரப்ப மரங்களை பிடிங்கிவந்து நட்டார்கள்.எல்லா மரங்களின் கீழும் புத்தர் தோன்றினார். மரணக்கிடங்குகளின்மேல் பூச்செடிகளை நட்டு நீர்வார்த்தார்கள். யாரோ சில அரசர்களின் நகர்வலத்துக்காய் அழுகை அழித்து சிரிப்பது எப்படி? என துவக்கோடு பயிற்சி கொடுக்கிறார்கள். இரவு மட்டுமல்ல பகலும் அவர்கள் கையில் சரணடைந்து கிடக்கின்றது

சூறாவளியாய் சுழன்று கொண்டிருக்கும் போர் மேகத்தினுள் சிக்குண்டு சருகாய்கிடக்கும் இந்த வளம்கொழித்த மண்ணில் பூத்த என்ரை குஞ்சுகளின் முகம் பார்க்க வருகைதரும் அரசர்களுக்காய் இரத்தம் ஆறாய்பெருகி ஓடிய மண்ணெல்லாம் பூக்களின் இதழ்களைத் தூவினார்கள். புதைத்த புன்னகைகளை தோண்டி எடுத்து எல்லோர் முகங்களிலும் ஒட்டினார்கள். அவர்களும் வந்தார்கள் வேலிகள் தூப்பாக்கி ஏந்த புத்தரின் சீடர்கள் உடைமாற்றி பூச்சிகளின் காருண்யம் பரப்ப கையில் விசிறியுடன் அவர்களும் வந்தார்கள். எங்கும் வெக்கை தாங்கு முடியாத அந்தரிப்பு. கேள்விகள் துவக்கின் வாயிலிருந்து வெளிவந்தன. ஆனால் பொய்யாக ஒட்டிவைத்த புன்னகைகள் என்னிலிருந்து உதிர்ந்து விழுந்த இலைகளைப்போல் உதிர்ந்து விழுந்தன அந்த பொய்யான புன்னகைகள். ஆனால் கண்ணீர் மட்டும் வழிந்தோடிக்கொண்டிருந்தன அவை பொய்யில்லாத கண்ணீர்.

2 comments:

  1. ஈழத்தில் நடந்த போரின் அழிவுகளை ஒரு கணம் கண் முன் நிறுத்தியுள்ளார் சாந்தினி வரதராஜன்.இதுபோன்ற வரைவுகளை அவரிடம் இருந்து இன்னும் பல எதிர்பார்க்கின்றோம்

    ReplyDelete
  2. உங்கள் கருத்துப்பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete